தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, March 18, 2015

முரணாக தோற்றமளிக்கும் குளிப்புக்கடமை சட்டம்!



ஒருவர் தமது மனைவியோடு இல்லறத்தில் ஈடுபட துவங்கி விட்டால் அவர் குளிக்க வேண்டுமா அல்லது இந்திரியம் வெளியாகாமல் இருக்கும் பட்சத்தில் அவர் குளிக்காமல் இருந்து விடலாமா என்பன போன்ற சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் இந்த சட்டத்தைப்பற்றி புகாரியில் பதியப்பட்டிருக்கும் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இது உண்மையில் முரண்தானா? அல்லது கூடுதல் தகவல் எங்கும் கிடைக்கிறதா? என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சாதாரணமாக படிக்கும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு செய்திகளும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.

முதலில் புகாரியில் இடம்பெறும் அந்த இரண்டு முரணான சட்டங்களையும் பார்ப்போம்!

செய்தி – 1 :  விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை:

ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஷுஅபா வாயிலா அம்ர் இப்னு மஸ்ரூக் என்பவர் இவ்வாறே அறிவித்துள்ளார். 
மூஸா மற்றும் ஹஸன் என்பவர்கள் இவ்வாறே அறிவித்துள்ளனர்.
நூல் : புகாரி 291. 

முஸ்லிமின்  525-வது அறிவிப்பில் “இந்திரியம் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை” என்று வருகிறது.

செய்தி – 2 : விந்து வெளிப்படாவிட்டால் குளியல் கடமையல்ல:

'ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளும்போது இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'தொழுகைக்குச் செய்வது போன்ற உளூவைச் செய்து கொள்ள வேண்டும்; தம் உறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) பதிலளித்தார். மேலும், இது விஷயமாக அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் கேட்டேன். அவர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) கேட்டதாக உர்வா கூறினார்" என ஜைத் இப்னு காலித் அல் ஜுஹைனி(ரலி) அறிவித்தார்.
நூல் : புகாரி 292. 

நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தங்களின் மனைவியிடம் உறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா? என நான் கேட்டதற்கு, 'மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்; பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். 
"குளிப்பதுதான் சிறந்தது. ஆனால் இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாக இருந்தது. இதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதற்காகத்தான் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டேன்" என்று அபூ அப்தில்லாஹ் (புகாரி) ஆகிய நான் கூறுகிறேன். 
நூல் : புகாரி 293. 

இந்த இரண்டு செய்திகளை படிக்கும் எவருக்கும் இவை முரணாகவே தெரியும். ஆனால் இது முரண்பாடான செய்திகளல்ல, மாறாக இவை மாற்றப்பட்ட சட்டங்களாகும்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபை இப்னு கஅப் (ரலி) அவர்களே அதை தெளிவு படுத்துகிறார்கள்.

“விந்து வெளிப்பட்டால் தான் குளியல் கடமையாகும் என்பது இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகையாக இருந்தது. பின்னர் இதற்கு தடை விதிக்கப்பட்டு (இன உறுப்புகள் சந்தித்து விட்டாலே குளியல் கடமையாகிவிடும்; விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே என்று சட்டமாக்கப்பட்டு) விட்டது”.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)
நூல் : திர்மிதீ  103.

ஆகவே, தாம்பத்தியத்தில் ஒருவர் ஈடுபட துவங்கி விட்டாலே அவர் குளிப்பது கடமையாகிவிடும், விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! இதுதான் இறுதியான மாற்றப்பட்ட சட்டம் என்பது இந்த ஹதீஸிலிருந்து மிகத் தெளிவாக விளங்குகிறது. இனி புகாரியில் இடம்பெறும் இந்த அறிவிப்புக்களை பார்த்து சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை.  புதிதாக இந்த தகவலை அறிந்து கொண்டவர்கள் பிற மக்களுக்கு இந்த தகவலை கொண்டு சேருங்கள்.



No comments:

Post a Comment