தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, July 1, 2018

சிந்தனையை மழுங்கடித்த சமூக வலைத்தளம்



உலகத்தில் எத்தனை வகையான நவீன கண்டுபிடிப்புக்கள் தோன்றினாலும் அவற்றில் நன்மைகள் இருப்பதை போன்று ஏராளமான பாதகங்களும் பாதிப்புக்களும் சேர்ந்தே வரும் என்பது நிதர்சனமாக நாம் கண்டுவருகின்ற உண்மை. நன்மைக்காக பலவகை சாதனங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை எவ்வாறு தீமைக்காக பயன்படுத்த தூண்டுவது என்ற முயற்சியில் இப்லீசும் அவனது சந்ததிகளும் மறுமை நாள் வரை ஒய்ந்துபோகப் போவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்த வகையில் நன்மைக்காக பல வகைகளிலும் பயன்படும் சமூக வலைதளமான (Facebook) முகநூலில் நம்மை அறியாமலேயே பலவகை பாவக் காரியங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே போதை வசப்பட்டவர்களை போல முகநூல் தளத்தில் பலரும் செயல்பட்டு வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.

தீய பதிவுகள், வதந்திகள், பொய் பித்தலாட்டங்கள், அவதூறுகள், வரம்புமீறிய விமர்சனங்கள், உறுதி படுத்தப்படாத செய்திகளை பரப்புதல், பிறர் சுயமரியாதையை சீர்குலைத்தல், இஸ்லாம் தடுத்த வரம்புகளை மீறிய ஆண் பெண் பழக்கவழக்கங்கள் போன்று ஏராளமான பாவக்காரியங்கள் நிகழ்ந்து வரும் இந்த முகநூல் தளத்தில் புதிதாக ஒரு மிகக்கொடிய பாவமும் ரசனையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பாவத்தை பொறுத்த வரைக்கும் நான் மேலே குறிப்பிட்ட எல்லா பாவங்களைக் காட்டிலும் முதன்மையான இடத்தை தொட்டுவிடும் இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மிகக்கொடிய பாவமாகும். இதில் ஆச்சரியமும் வேதனையும் என்னவெனில் தவ்ஹீதை விளங்கிய மக்கள் கூட இந்த செயலை முகநூலில் பகிர்கிறார்கள். அடையாளத்திற்கு தான் தவ்ஹீதை விளங்கியவர்கள் என்று கூற வேண்டும் என்று நினைக்கிறேன், காரணம் அவர்களது இந்த செயல்களின் மூலமாக தவ்ஹீதை இன்னும் அவர்கள் முறையாக விளங்கவில்லை என்றே நாம் சொல்ல வேண்டியுள்ளது.

சமீப காலமாக முகநூலில் "நீங்கள் சில வருடங்களுக்கு பின்னால் எவ்வாறான தோற்றம் உள்ளவராக இருப்பீர்கள்???" என்று கேள்வி எழுப்பிய வண்ணமாக தமது புகைப்படங்களை முதிய தோற்றத்தோடு சித்தரித்து பிரதிபலிக்கும் ஒரு பதிவு அதிகமான மக்களால் ஷேர் செய்யப்பட்டது. அதேபோன்று "நீங்கள் எது போன்ற குணங்களை உடையவர்???" என்று கேள்வி எழுப்பி யார் அதை ஏற்று பகிர்கிறார்களோ அவர்களது குணாதீசியங்களாக சில குணங்கள் பட்டியலிடப்பட்டு மக்கள் பார்வைக்கு பகிரப்படும்.

இதுபோன்று நமது எதிர்கால நிகழ்வுகளையோ அல்லது நம்மை யார் என்றே அறியாத ஒரு இனையதளம் மூலமாக நமது பண்புகளை யூகத்தில் பட்டியலிட்டு பகிரும் நிகழ்வுகளோ பலராலும் பொழுதுபோக்கை போன்று பகிரப்பட்டு வருகிறது.

குறி சொல்பவனிடம் சென்று தமது எதிர்காலம் பற்றி குறிகேட்பதற்கும் முகநூலில் இதுபோன்று பகிர்வதற்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது? செயல்படுத்தும் விதம்தான் நவீன முறையில் உள்ளதே தவிர இரண்டிற்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

நமது வயதான காலத்தில் நாம் என்ன தோற்றத்தில் இருப்போம் என்று இந்த இணையதளம் கணித்து (குறிபார்த்து) சொல்கிறதே, நாளை நாம் உயிரோடு இருப்போம் என்று உத்தரவாதம் சொல்ல முடியுமா??? 

பின்னர் எவ்வாறு பல வருடங்களை கடந்தபின் நாம் இப்படி இருப்போம் என்று ஒரு இனையத்தள குறிகாரன் சொல்வதை ரசித்து பகிர்கிறோம்???

ஏகத்துவம் பேசும் நமது அறிவு ஏன் இதனை சிந்திக்க மறுத்தது??? 

நமது குணங்கள் இவ்வாறானவை என்பதை நம்மோடு பழகிய ஒருவர் நமது வெளிப்படையான தோற்றத்தை வைத்து சொல்கிறார் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் நம்மை பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு (Server) இணையதளம் நமது பண்புகளை சொல்கிறது என்றால் இது ஜோசியம் அல்லாமல் வேறு என்ன???

குறிபார்ப்பவனுக்கு நம்மை பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் பல பொய்களையும் யூகங்களையும் இணைத்து புனைத்துத்தான்  குறியாக சொல்கிறான் என்பதை விளங்கிய நாம் அதே செயலைப் பெற்றிருக்கும் இந்த இணையதளத்தின் பாதகத்தை ஏன் உணர மறந்தோம்???

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
(
நூல் : முஸ்லிம் 4488)

நவீன குறிகாரனிடம் குறிகேட்டு அதை பரப்பிய நபர்கள் தமது நாற்பது நாட்களின் தொழுகையை இழந்து விட்டார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழுகையில் இருந்து மட்டுமே அல்லாஹ் இந்த நாற்பதை கணக்கிடுவான். இது முதலாவது கைசேதம்!!!

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனுமொருவர் குறிசொல்பவனிடம் வந்து அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ் இறக்கியதை (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.
(
ஆதாரம் : அபூதாவுத் 3904, திர்மிதி 135, இப்னுமாஜா 936)

நவீன குறிகாரன் சொன்னவைகளை பரிப்பியதோடு மட்டுமல்லாமல் அதனை உண்மையாகத்தானே உள்ளது என்று எண்ணி ருசித்தவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை மறுத்த காஃபிராகி விடுகிறார்கள். இதையும் கூடுதலாக நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். இதுதான் இஸ்லாமை முறிக்கும் மிக பாதகமான செயல். இது ஜீரணிக்கவே முடியாத மிகப்பெரிய கைசேதம்!!!

தவறுகளை உணர்ந்து ரப்பை நோக்கி மீளுவோரை அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன். இதுபோன்ற தவறுகளை யாரெல்லாம் விளங்காமல் செய்து வந்தீர்களோ, அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் விசாலமாக மனம் வருத்தி மன்னிப்பு தேடுங்கள். அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிப்பவன்.

கொள்கையை உடைத்துவிடும் இதுபோன்ற ஈமானிய பலகீனம் நமக்கு ஏற்பாடாமல் இருக்க தவ்ஹீதை முழுமையாக நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கும் மேலாக நம்மை அறியாமல் இதுபோன்ற கடும் குற்றங்கள் நமது வாழ்வில் வந்துவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேட வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரது பாவங்களையும் மன்னிப்பானாக!!! கொள்கை விளங்கி செயல்படும் தெளிவான சிந்தனைகளை தருவானாக....!

Friday, June 22, 2018

பிறர் உள்ளத்தை தீர்மானிப்போரே.... எச்சரிக்கை!!!



இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவன் என்றால் யார், அவனது ஆற்றல்கள் என்ன, இறைவனது ஆற்றல்கள் என்று கூறப்படும் பகுதிகளில் நாம் எவ்வாறு கவனமாக செயலபட வேண்டும் என்பது தொடர்பான அனைத்து கொள்கை விளக்கங்களும் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இது தொடர்பான முறையான விளக்கம் இல்லாத மக்கள் அல்லது விளக்கம் இருந்தும் மனோஇச்சைகளை முன்னிலைப் படுத்தும் மக்கள் தமது மறுமை வாழ்வை தவிடுபொடியாக்கும் பல செயல்பாடுகளை மிகச்சாதரணமாக செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதில் ஒரு பகுதிதான் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான இல்முல் ஃகைப் எனப்படும் மறைவான ஞானம் ஆகும். இந்த மறைவான பகுதியில் மறுமை சுவர்க்கம் நரகம் போன்ற எண்ணற்ற பல பகுதிகள் உள்ளன. அவற்றுள் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது மனிதனின் உள்ளம் ஆகும். ஒரு மனிதனின் உள்ளம் எதை சார்ந்துள்ளது என்பதும் முழுக்க முழுக்க இறைவன் மட்டுமே அறிந்துகொள்ள முடியுமான ஒரு பகுதியாகும். நபியாக இருந்தாலும் பிற மனிதர்களின் உள்ளத்தை அறிந்து கொள்ள முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அகீதாவாகும்.

ஒரு மனிதரை பற்றி நாம் மதிப்பிடுவதாக இருந்தால் மார்க்கம் அனுமதித்த வகையில் வெளிப்படையான செயல்பாடுகளை வைத்து இவ்வுலகம் சார்ந்த விஷயங்களில் மட்டும் நாம் மதிப்பிடலாம் அதில் குற்றமில்லை.

அதேபோன்று ஒரு மனிதர் தெளிவாகவே இறைவனுக்கு இணைவைக்கிறார் என்று தெரிந்தால் அவர் இணைவைப்பாளராக இருக்கிறார் என்றும் சொல்லலாம்.

ஆனால் இவை அல்லாத காரியங்களில் மறுமையோடு தொடர்புபடுத்தி மதிப்பிடுவதற்கோ அல்லது தீர்ப்பு வழங்குவதற்கோ எவருக்கும் உரிமை இல்லை அதற்குண்டான சக்தியும் நமக்கு இல்லை.

ஆனால் இன்றைய சூழலை நாம் பார்க்கிறோம், தமக்கு விருப்பமில்லாத நபர் இணைவைப்பை விட்டு ஒதுங்கியவராக இருந்தாலும்கூட அவர் குறித்து விமர்சனம் செய்யும்பொழுது அவரது மறுமை வாழ்வு சார்ந்த சாடலே பெரும்பாலும் நம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

நரகவாதி, சுவனவாதி, நயவஞ்சகன், விளம்பர மோகம் உள்ளவன், தூய்மையான எண்ணம் உள்ளவன் என்றெல்லாம் கோபத்திலும் நல்லெண்ணத்திலும் நமக்கு அறிவு கொடுக்கப்படாத விஷயங்களில் எல்லை மீறி தீர்ப்பளித்து திரிகிறோம். நன்மையோ தீமையோ ஒரு மனிதனின் உள்ளம் சார்ந்த விஷயங்களில் எவரும் ஆர்வக்கோளாறில் மூக்கை நுழைக்க கூடாது. அதனால் முதலில் நமக்குத்தான் பாதிப்பு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதனை புரிந்துகொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவத்தை நாம் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.
வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.'
நூல் : புகாரீ 1243.

உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) அவர்கள் ஒரு மிகச்சிறந்த நபித்தோழர். இந்த நபித்தோழர் சிறந்த தியாகத்திற்கு சொந்தக்காரர் என்பதனை உம்முல் அலா என்ற நபித்தோழியர் அவரது ஜனசாவை பார்த்து சொன்ன வார்த்தைகளை வைத்தே நாம் புரிந்துகொள்ள முடியும். சிறந்த மனிதர் என்பதின் காரணத்தினால் தான் உம்முல் அலா (ரலி) அவர்கள் அல்லாஹ் உம்மை கண்ணியப்படுத்தி விட்டான் என்று உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) அவர்களின் ஜனாஸாவை நோக்கி சொன்னார்கள்.

உண்மையில் அவர்கள் தியாகச்சீலராக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது ஒருவரது உள்ளம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இதை சொன்ன உம்முல் அலா (ரலி) அவர்களை கண்டிக்கிறார்கள். அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான் என்பது உமக்கு எப்படி தெரியும்? என்று அவர்களது தவறான போக்கை அங்கேயே உணர்த்துகிறார்கள்.

காரணம் இது இறைவனுக்கு மட்டும் தெரிந்த ஒரு விஷயம் ஆகும். இந்த மறைவான ஞானத்தில் நாம் கைவைக்க கூடாது அது நமது மறுமை வாழ்வை பாழ் படுத்திவிடும் என்பதால் தான் அல்லாஹ்வின் தூதரது முகத்திற்கு முன்னாள் நடந்தேறிய இந்த செயலை அங்கேயே கண்டித்து இருக்கிறார்கள்.

நாம் ஒரு மனிதரை நல்லவராக நினைத்திருப்போம் ஆனால் நாளை மறுமையில் அவர்களது நிலை மோசமாக மாற வாய்ப்புண்டு. அதே போல நாம் சிலரை மோசமானவராக நினைத்து பலரிடம் பலவாறாக அவரைப்பற்றி பேசித் தீர்த்திருப்போம் ஆனால் நாளை மறுமையில் அவரது நிலை கண்ணியமானதாகவும் மாற வாய்ப்புண்டு. எதை வைத்தும் எவரது நிலையையும் நாம் தீர்ப்பளித்து விடக்கூடாது.

மக்கள் சிலரைப்பற்றி இறைவழிப் போராட்டத்தில் இறந்துபோன ஷஹீத் என்றும், இறை மார்க்கத்தை எடுத்து சொல்வதில் சிறந்த மார்க்க அறிஞர் என்றும், அல்லாஹ்வின் பாதையில் பொருளாதாரத்தை வாரி இறைக்கும் வள்ளல் என்றும் தவறாக எண்ணியிருப்பார்கள். இம்மூன்று வகையான நபர்களும் முகஸ்துதிக்காக செயல்பட்டு இருந்ததால் நாளை மறுமையில் முகம் குப்புற நரகில் வீசப்படுவார்கள் என்று நபியவர்கள் சொன்ன நபிமொழிகளை எல்லாம் நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். நம் பார்வையில் நல்ல மனிதர்கள் ஆனால் அவர்களது உள்ளமோ பிறர் தம்மை புகழ வேண்டும் என்று செயல்பட்டுள்ளது என்பதால் அல்லாஹ் அவர்களை நரகில் வீசுகிறான்.

நாம் நல்லவர்கள் என்று எண்ணியிருக்கும் பலரின் நிலையே இப்படி மாற்றப்படும் என்பதை குறித்து பேசும் இந்த நபிமொழி நமக்கு எதை உணர்த்துகிறது. உள்ளம் சார்ந்த ஒரு மனிதனின் செயல்பாடுகளை நாம் நல்லவையாகவோ தீயவையாகவோ தீர்ப்பளிக்கவே இயலாது. அது இறைவன் மறுமையில் வெளிப்படுத்தும்பொழுது தான் நமக்கு தெரியும் என்பதையே இவை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

என்றாலும் நமது நாவுகள் ஏன் பிறரது உள்ளம் சார்ந்த விஷயத்தில் அச்சமில்லாமல் அசைக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இறைவனுக்கு இணைவைக்க கூடாது என்று நன்கு விளங்கிய குர்ஆன் சுன்னாஹ் பேசக்கூடிய மக்களும்கூட இறைவனது ஷிஃபாத்களில் (பண்புகளில்) எப்படி கை வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.

மிகவும் கவனம் தேவை. எல்லாம் வல்ல இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

பிறர் உள்ளம் சார்ந்த விஷயங்களில் வரம்புமீறி குற்றம் இழைத்து திரிவதை விடுத்து மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் நம் உள்ளத்தை நாம் மதிப்பிட பழகினால் ஏரளமான மாற்றங்களை வாழ்வில் காண்பதற்கு அது உகந்ததாக இருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் மார்க்கத்தில் தெளிவை தந்து குற்றம் இழைக்கும் சூழல்களில் இருந்து நம்மை பாதுகாப்பானாக...!

Wednesday, May 16, 2018

Islamic_Whats_App_Status_Series_40

ரமளான் வருகிறது நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள்???!!!


ஒவ்வொரு ஆண்டும் நாம் ரமளான் மாதத்தை (இறைவன் நாட்டப்படி) அடைந்து கொள்வதற்கு முன்பாக வாட்ஸ்அப் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மன்னிப்புக் கடிதம் ஒன்று பெரும்பாலான இஸ்லாமியர்கள் வாயிலாக பரப்பப்படுவதை பார்க்க முடிகிறது.

அதில் தாம் யாருக்கேனும் அநீதமாக செயல்பட்டு இருந்தால் மன்னித்து விடுங்கள். அடுத்த ரமளானில் நான் இருப்பேனா என்பது தெரியாது என்பன போன்ற வாசக அமைப்புகள் இடம்பெறுகின்றன.

எண்ணமும் செயல்பாடும் சரிபோன்று தோற்றம் அளித்தாலும் அவைகள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் மட்டும் பேணப்படுவதை வைத்துத்தான் நாம் மார்க்கத்தோடு இணைத்து சட்டம் பெற வேண்டி உள்ளது.

தாம் அநீதம் இழைத்ததாக உணரும் தருணமும், பிற மனிதர்களிடம் மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஒரு முஃமினின் வாழ்வில் அனுதினமும் ஏற்பட வேண்டிய சிந்தனை ஆகும்.

மரண சிந்தனை எப்படி நம் வாழ்வில் அதிகம் அதிகம் உதிக்க வேண்டுமோ அதேபோன்று தாம் பிறருக்கு செய்த அநீதங்களோடு இவ்வுலகைவிட்டும் பிரிந்து விட்டால் மிகப்பெரிய இருள் சூழ்ந்த கைசேதத்தை மறுமையில் பெற வேண்டி வரும் என்ற சிந்தனையும் அன்றாடம் உதித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்று செயல்படும் நபர்களை காண்பது மிகவும் அரிது.

உம்ரா அல்லது ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது ரமளான் மாதத்தை அடைய நேரிட்டாலோ மாத்திரம் தான் இதுபோன்ற மன்னிப்புக் கடிதங்கள் அனைவரிடம் பரவிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இது மார்க்க அடிப்படையில் தவறான வழிமுறை ஆகும்.

குறிப்பிட்ட நாளிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாதத்திலோ இதுபோன்று நாம் செய்ய வேண்டும் என்று இருக்குமாக இருந்தால் அதனை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நமக்கு கற்றுக்கொடுத்து இருப்பார்கள். ஆனால் நபியவர்கள் ஹஜ் உம்ரா செய்யும்பொழுதோ அல்லது தாம் ரமளான் மாதத்தை சந்திக்கும்பொழுதோ யாரிடமும் மன்னிப்பு கேட்டு செல்லவில்லை. தம் தோழர்களை அவ்வாறு பணிக்கவும் இல்லை.

ரமளான் மாதம் என்பது ஏனைய மாதங்களை விட அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்படும் மாதம் ஆகும் என்று நபியவர்கள் சொன்னார்களா????

இஸ்லாத்தின் முக்கிய ஐந்து தூண்களில் இறுதியான கடமை ஹஜ் என்று நபியவர்கள் சொன்னார்கள். முஸ்லிமின் வாழ்விற்கே இறுதியான கடமை ஹஜ் தான் என்றா சொன்னார்கள்???

இதுபோன்று நம்மை அறியாமலேயே நாம் விளங்கிக்கொண்டதன் விளைவு தான் மிகவும் வயதான காலத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நிலையும் ரமளான் மாதம் வந்துவிட்டால் வாட்ஸ்அப் தகவல்களும் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

சில இடங்களில் மரண யாத்திரை என்ற கோணத்தில் ஹஜ் யாத்திரை பார்க்கப்படுகிறது. இதை காரணமாக வைத்துக் கொண்டு தான் நம் மக்கள் ஹஜ் செல்லும்பொழுது வீடு வீடாக சென்று தெரியப்படுத்தி மன்னிப்பு தேடிவிட்டு செல்கின்றனர்.

நாம் ஹஜ் சென்று திரும்பும்போது ஜனாஸாவாகத்தான் திரும்புவோம் என்று அல்லாஹ் நமக்கு ஏதேனும் அறிவித்துக் கொடுத்தானா?

ஹஜ் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிய மக்களை நாம் கண்களால் காணவே இல்லையா?

இல்லை இந்த ரமளானோடு நாம் இவ்வுலகைவிட்டு பிரிந்து விடுவோம் என்று அல்லாஹ் ஏதேனும் அறிவித்துக் கொடுத்தானா?

நாம் எப்பொழுது மரணமாகப் போகிறோம் என்பது நம்மை படைத்த இறைவனைத்தவிர வேறு எவருக்கும் தெரியாது. நிலைமை இவ்வாறு இருக்க நோன்பிற்கு நோன்பும், ஹஜ்ஜிற்கு ஹஜ்ஜும் மாத்திரம் பிற நபர்களிடம் மன்னிப்பு வேண்டி நின்றால் சரியா???

மரண சிந்தனையும் இறையச்சமும் நோன்பிற்கும் ஹஜ்ஜிற்கும் மட்டும் தான் வர வேண்டும் என்று கூற வருகிறோமா???

ஒவ்வொரு நாள் இரவிலும் நாம் உறங்கச் செல்லும் முன்னும் உறங்கி எழுந்த பின்னரும் ஓதுகிறோமே அந்த துஆவின் அர்த்தம் நம் உள்ளம்தொட்டு வெளியேறி இருக்குமானால் நிச்சயமாக நோன்புக்கு மட்டும் மன்னிப்புக் கடிதம் அனுப்பி வைக்கும் வழக்கத்தை நாம் கையாள மாட்டோம்.

நம் வாழ்வில் அதிகம் நாம் நினைவு படுத்தப்பட வேண்டியது மரண சிந்தனை ஆகும். அந்த மரண சிந்தனை எப்பொழுதெல்லாம் நமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் பிறருக்கு இழைத்த அநீதங்கள் நம் உள்ளத்தை அச்சத்தால் தட்டி எழுப்பும் உணர்வுகளாக இருக்க வேண்டும். நினைவுகள் உண்டாகும் அவ்வபொழுதே நாம் அதற்குண்டான பரிகாரங்களை செய்துவிட வேண்டும்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் வருடா வருடம் வரும் ரமளானையும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் அதில் பல மனிதர்கள் தோல்வியைத்தான் சந்திப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இறைவனது விஷயங்களில் எல்லை மீறுகின்ற பொழுது உடனுக்குடனே நாம் இஸ்திஃக்ஃபார் தேடுவதைப்போன்று, மனிதர்களுக்கு செய்யும் அநீதங்களுக்காகவும் இயன்றளவு சம்மந்தப்பட்டவர்களிடம் முறையிட்டு விரைந்து மன்னிப்பு தேடி விட வேண்டும்.

இதுபோன்ற சிந்தனைகள் நொடிப்பொழுதிலும் நம் வாழ்வில் உதிக்க வேண்டிய சிந்தனைகள் ஆகும். அதை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளுதல் என்பது தவறான வழிமுறை என்பதை புரிந்து இஸ்லாமிய சமூகம் செயல்பட வேண்டும்.

Tuesday, March 6, 2018

அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் அழகிய திருநாமங்கள்)



இறைவனின் திருநாமம் கொண்டு துவங்குகிறேன்.....!

இறைவன் தமது திருநாமங்களாக அவனது வேதத்தில் பயன்படுத்தியிருக்கும் அஸ்மாவுல் ஹுஸ்னா (அழகிய திருநாமங்கள்) என்று அழைக்கப்படும் பெயர்கள் பற்றிய தகவல்களை தொகுப்பாக தொடர்ந்து வழங்கலாம் என்ற முயற்சியை துவங்கி உள்ளேன். எனது நோக்கத்தை வல்ல நாயன் அழகிய முறையில் நிறைவேற்றித்தரப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இறைவனை பெரும்பகுதி நாம் அல்லாஹ் என்ற பெயர்கூறியே அழைத்து வருகிறோம். இதேபோல இறைவனது அழகிய குணாதீசியங்களை பிரதிபலிக்கும் பெயர்களும் இறைவனுக்கு உண்டு. இறைவனது ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான குணங்களை வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவை அனைத்தையும் ஒருவர் பொருளுணர்ந்து புரிந்து கொள்வாராக இருந்தால் நிச்சயமாக அவரது வாழ்வில் இறைவனைப்பற்றிய தாக்கம் அதிகரிக்கும். அதற்கேற்ப தமது வாழ்வில் சிறந்த மாறுதல்களும் உண்டாகும் (இறைவன் நாடினால்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல்: புஹாரி : 6410.

இறைவனது தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் பொருளுணர்ந்து நம்பிக்கை கொண்டு மனனமிட்டவருக்கு இறைவன் சுவனத்தை தருவதாக வாக்களிக்கிறான் என்றால் பலனில்லாத ஒன்றுக்கு நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய நற்பாக்கியத்தை தர மாட்டான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாடசாலை மாணவனை போன்ற மனனமிடல் இல்லாமல் உளப்பூர்வமாக இறைவனது பண்புகளை புரிந்து உணர்ந்து மனனமிடுவோரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். இது முதலாவது அம்சம்.

இறைவன் கற்றுக்கொடுத்த இத்தகைய பெயர்களைக் கொண்டு அடியார்கள் தம்மிடம் பிரார்த்தனை செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். திருக்குர்ஆன் (7:180)

சில சந்தர்பங்களில் இறைவனது ஏனைய பெயர்கள் கூறி அவனிடம் பிரார்த்தனை செய்வதென்பது மிகவும் ஏதுவானதாகவும் மன அமைதியைப் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். இது எவ்வாறு என்பதனை இறைவனது பெயர்களை விவரங்களோடு நாம் அறிய முற்படும்பொழுது இலகுவாக விளங்கிக்கொள்ள இயலும் இன்ஷா அல்லாஹ்...!

இறைவனது பெயர்களை பயன்படுத்தி நாம் இறைவனை அழைத்துப் பிரார்த்தனை செய்வதை இறைவன் விரும்புவதைப்போல, இறைவனால் அறிவித்துத் தரப்படாத பெயர்களை நாமாக உண்டாக்கிக்கொண்டு இதுவும் இறைவனது பெயர்தான் என திரித்துக்கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் அதே வசனத்தின் வாயிலாக சொல்கிறான்.

இன்றைக்கு சில கூட்டம் இறைவனது தண்டனைக்கு உரிய இதே செயல்பாட்டினை மிகச்சாதாரணமாக செய்து வருவதைப் பார்க்க முடிகிறது. இறைவனது பெயர்களை வகை வகையாக திரித்து பிரித்து திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் இறைவனது கோபத்தை தட்டுகின்றனர். இது தவறான வழிமுறை. எது அனுமதிக்கப்பட்டதோ அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனைய செயல்களில் உள்ள அதிகப்பிரசங்கித்தனம் மார்க்கத்திலும் இணைக்கப்ப்படுமாக இருந்தால் செல்லும் இடம் நரமாகிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். இவற்றையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.

துவக்க உரைக்கான விளக்கமாக இந்த சிறிய விளக்க உரையை அமைத்து, எழுத்துக்களை நீட்டித்து விடாமல் இயன்றளவு சுருக்கமான விளக்கங்களை இறைவன் உள்ளத்தில் எழுப்பித்தர பிரார்த்தனை செய்து முடிக்கிறேன்.

எந்தவொரு நன்மையையும் நாம் இழிவாக கருதிவிடக் கூடாது. அனைத்து நன்மைகளிலும் நாம் முன்னின்று செயல்படுவதையே விரும்ப வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அத்தகைய உணர்வுகளை நம் அனைவருக்கும் தந்தருள்பாளிப்பானாக.....

(அடுத்ததடுத்த பதிவுகள் வாயிலாக இறைவனது பெயர்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....)

Monday, March 5, 2018

அளவுகடந்த புகழ்ச்சி அழிவுப்பாதைக்கு வித்திடும்



தம்மோடு வாழும் சக தோழர்களை புகழ்ந்து பேசியே ஆக வேண்டும் எனில் அதற்கென்று நபியவர்கள் அழகிய வழிகாட்டலை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். புகழ் வல்ல இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அடிப்படை. என்றாலும் இங்கு மனிதர்கள் சார்ந்த விஷயத்தில் கூட புகழ் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதற்கான காரணம் தமிழில் இதனை தெளிவுபடுத்த வேறு வார்த்தை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

புரிந்து கொள்வதற்காகவே சக மனிதர்களை புகழ்தல் என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் நம் சிந்தனையில் "பிறரைப்பற்றிய நல்லவிதமான பேச்சுக்கள்" என்று புரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே" என்று பலமுறை கூறினார்கள்.

பிறகு, "உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்று
கூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.

அறிவிப்பவர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 5727.

மேற்கண்ட இந்த செய்தியில் நபிகளார் (ஸல்) அவர்கள் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி போதனை செய்துள்ளார்கள்.

முதலாவது அம்சம், தம்மோடு வாழும் சக மனிதர்களை எல்லை தாண்டி புகழ்ந்து பேசுவதால் நஷ்டம் இரு தரப்பினருக்கும் தான் என்பதை கூறுகிறார்கள்.

புகழ்ந்தவரை நோக்கி உமக்கு நாசம்தான் என்றும் புகழப்பட்டவரது கழுத்தை நீ துண்டித்துவிட்டாய் என்றும் கூறுகிறார்கள். இந்த வாசகத்தின் மூலம் புகழ்ச்சியினால் உண்டாகும் பாதிப்புக்கள் இரு தரப்பினருக்குமே தான் என்பதை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். ஆகவே தம்மை ஒருவர் புகழ்வதில் எல்லை கடக்கிறார் எனில் கண்டும் காணாது நாம் இருந்து விடக்கூடாது. அதனுடைய பாதிப்பு நம்மையும் நாசத்தில் தள்ளிவிடும் என உணர்ந்துகொண்டு இதுபோன்று புகழ்பவர்களை இயன்றளவு வாயடைத்து இருக்கச் செய்துவிட முயற்ச்சிக்க வேண்டும். அதுவே நமக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தரும்.

இரண்டாவது அம்சம், தம்மோடு வாழும் நண்பரது அழகிய செயல்பாடுகளை பார்த்துவிட்டு புகழ்ந்தே ஆக வேண்டும் என்று உள்ளம் சொல்கிற நிலை இருந்தால் "நான் இன்ன மனிதரைப்பற்றி இவ்வாறு நல்ல விதமாய் எண்ணுகிறேன்", என்றாலும் அவரது செயல்பாடுகள் எத்தகையது என்பதை அல்லாஹ் ஒருவனே மிகத்தெளிவாக அறிந்தவன். நான் அதனை அறிய மாட்டேன்.

இறைவனது விசாரணையில் அவர்குறித்து நான் பேசிய வாசகங்கள் தவறானவையாகக்கூட மாறிப்போகலாம். காரணம் நான் வெளிப்படையாக அவரைப்பார்த்து புகழ்ந்து பேசும் செயல்பாடுகள் அவரது உள்ளத்தில் இஃக்லாஸ் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு இருக்குமேயானால் நிச்சயமாக அவை இறைவனால் அழிக்கப்பட்டுவிடும் என்ற அடிப்படையில்தான் அவரது புகழ் வார்த்தைகள்கூட அமைந்திருக்க வேண்டும் என்பதே நபியின் போதனை.

மூன்றாவது அம்சம், நாம் இவ்வாறெல்லாம் பிறரைப்பற்றி இஸ்லாம் கூறும் எல்லைகளோடு புகழும்பொழுது கூட, அதாவது இன்ன மனிதரைப்பற்றி நான் இவ்வாறு எண்ணுகிறேன் என்று சொல்லும் பொழுதுகூட நாம் சொல்கின்ற அவரது செயல்பாடுகள் அவரிடம் இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும். அவரிடம் இல்லாத ஒன்றை இணைத்து நாம் புகழ்ந்து விடக் கூடாது. அதாவது இவ்வாறு எண்ணுகிறேன் என்று சொல்லும் சாதாரண எண்ணுதலில் கூட அவரிடம் இல்லாத ஒரு செயலை இணைத்து இவ்வாறு எண்ணுகிறேன் என்று நாம் சொல்லக்கூடாது என்றும் நபிகளார் (ஸல்) அவர்கள் தடுக்கிறார்கள்.

இத்தனை வரம்புகளையும் பேணித்தான் நாம் நம்மோடு வாழும் சக மனிதர்களை புகழ வேண்டும். இவைகளை ஒரு நல்ல சிந்தனையுள்ள முஸ்லிம் சிந்திப்பாரெனில் கண்டிப்பாக நாம் ஏன் பிறரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இறைவனிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்றே ஒதுங்குவார்.

மேலே சொல்லப்பட்ட வரம்புகள் பேணப்படும் வகையில் பிறரது நற்செயல்களைப் பற்றி பேசுதல் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இறைவனை புகழ்கின்ற எல்லையை தொட்டுவிடாத அளவிற்கு இதனுள் நபியவர்களால் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இவைகளை பேண இயலாத நபர்கள் வாய் மூடி இருந்துவிட்டு போவதே சிறந்தது ஆகும். 

எல்லைக்கடக்கும் பட்சத்தில் சிக்குண்டு தவிப்பவர்கள் நாமும், நம் நேசத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மால் புகழப்பட்ட நம் தோழர்களும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (உலக மோகத்திற்காக புகழும் அரசியல்வாதிகள் போன்றோரை நாம் இங்கு குறிப்பிடவில்லை)

இறைவன் விதித்த வரம்புகளை பேணி நடக்கும் நற்பாக்கியத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருல்பாளிப்பானாக....!

Islamic_Whats_App_Status_Series_23 (Pray_For_Syria)

Sunday, March 4, 2018

Tamil Translation 01

முஃமினது வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களும் நன்மையானவையே




ஒரு இறைவிசுவாசியை பொருத்தவரை ஏனைய நம்பிக்கை கொண்ட மக்களை போன்று சோதனைகளை ஒருபோதும் அணுகக்கூடாது. இறைவன் தம்மை நம்பிய மக்களுக்கு சோதனை இல்லாமல் சுவனம் தரப்போவதில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை.

இதனை ஒரு இறை நம்பிக்கையாளன் தீர்க்கமாக புரிந்து இருந்தால் எந்தவொரு சோதனையும் நிச்சயமாக அவருக்கு சாதனையாக மாறிப்போகும். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சரியத்தோடு ஒரு செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
அறிவிப்பவர் : சுஹைப் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5726.

ஒரு முஃமினுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் நன்மையாகிறது. துன்பங்களும் நன்மையாகவே அமைந்து விடுகிறது. மகிழ்ச்சி நன்மையை பெற்றுத்தருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் பலரது உள்ளம் சோதனைகளை நன்மையாக எடுத்துக்கொள்வதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொன்னார்கள், சோதனைகளையும் நன்மைகளாக பொருந்திக்கொள்ளும் உள்ளம் முஃமினுக்கு மட்டுமே காணப்படும். அது அல்லாத நபர்களால் இவற்றை அடைந்து கொள்ள இயலாது. ஆகவே நாம் எந்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் ஒருகணம் சிந்தனை செய்வோம்.

சோதனைகள் கூட ஒரு முஃமினுக்கு நன்மை பயக்கக்கூடியதாக எவ்வாறு அமைகிறது??? இதற்கான விளக்கத்தை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் (2:155-157).

முஃமினது பண்பானது இழப்புக்கள் ஏற்படும்பொழுது இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்று இறைவன் கூறுகிறான். இந்த உலகத்தில் நாம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு கொடுத்தவை. அவற்றில் சிலவற்றை இறைவன் நம்மை சோதிப்பதற்காக எடுத்தும் கொள்கிறான். நாம் விரும்புகின்ற பல அம்சங்களை நம்மை நெருங்க விடாமல் ஒதுக்கியும் வைத்து விடுகிறான்.

ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் தோழர்களே! நம்மை படைத்த இறைவன் இவ்வுலகத்தில் எவர்களைக் காட்டிலும் நம்மீது இரக்கமுள்ளவன் அன்பானவன். நமக்கு எது தேவை, எவை நம்மைவிட்டு நீங்கினால் நமது பாதைகள் தெளிவாகும், எது நமக்கு சிறந்தது, எது நமக்கு ஏற்புடையதல்ல என்பதனை நம்மைக்காட்டிலும் இறைவன் மிகத்தெளிவாக அறிந்தவன்.

நாம் நேசித்த ஒன்று நம்மை விட்டும் விலகிச் செல்கின்றதெனில் இது இறைவனது நாட்டப்படி அமைந்துள்ளது, இதன் மூலம் இறைவன் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கக்கூடும், இதன் மூலம் இறைவன் ஏதேனும் படிப்பினைத்தரக்கூடும், அல்லது இதைவிட சிறந்ததை இறைவன் தரக்கூடும் என்று நமது உள்ளங்களை பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு பக்குவப்படுத்துவோரே இறைநம்பிக்கையாளர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

இழப்பின்பொழுது மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று கூற வேண்டும். நாமே ஒருநாள் இறைவனால் அழைக்கப்பட்டுவிடுவோம் எனும்பொழுது நாம் நேசிக்கிற நாம் அனுபவிக்கிற இவைகளெல்லாம் எம்மாத்திரம்???!!! என்ற உணர்வு நிச்சயமாக நம் உள்ளத்தை சாந்தப்படுத்தும்.

அதோடு மாத்திரம் இறைவன் நிறுத்திக்கொள்ளாமல் இதுபோன்ற நேரங்களில் பொறுமையோடு சகித்து கொள்வோருக்கு சுவனம் என்ற சிறந்த நற்செய்தியை அறிவிக்கிறான். மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்ற வார்த்தைகளைக் கூறுவோர் தான் நேர்வழி பெற்றோர் என்றும், அவர்களுக்குத்தான் இறைவனின் அன்பும் அருளும் உண்டு என்றும் இறைவன் அறிவிக்கிறான்.

ஆக ஒரு முஃமின் தனது வாழ்வில் அவர் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களுமே நன்மையானவை தான். அவைகள் ஆழ்ந்த சோகங்களை தந்தாலும் இறைவனது அன்பையும் அருளையும் பெற்றுத்தரக்கூடியவை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. கவலைகளால் உள்ளங்கள் கனத்திருந்தாலும் அவைகளை இயல்பு நிலைக்கு மாற்ற வல்ல நாயன் போதுமானவன். உள்ளங்களின் அதிபதி அவன் தான். துக்கங்களை மகிழ்வாக்க அவனால் மட்டுமே இயலும். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவனையே சார்ந்திருப்போமாக!!!

என் இறைவா! கவலைகளால் உள்ளங்கள் சோர்ந்து போவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!!!