தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, December 21, 2016

SLTJ அபூபக்ர் (ரலி) அவர்களின் தனிப்பட்ட கூற்றை மார்க்க ஆதாரமாக எடுத்ததா???




சமீபத்தில் இலங்கையை சார்ந்த சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் ஜானசார தேரரை தைரியாமாக விமர்சித்த காரணத்தினால் அதற்கு மதச்சாயம் பூசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.

இந்தச்சூழ்நிலையில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல, நாங்களும் கருத்து சொல்ல இலங்கையில் இருக்கிறோம் என்று சில நபர்கள் அப்துர்ராசிக் அவர்கள் நடந்துகொண்டமை தவறு என்பதை போன்று பூசலாக பேசி வீடியோ கிளிப்களை யூடியூபில் பதிவேற்றி இருந்தார்கள்.

அதில் இலங்கையை சார்ந்த சகோதரர் நியாஸ் சிராஜி அவர்கள் சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் செய்த செயல் தவறானது என்று விமர்சித்ததோடு நமது கொள்கையோடு தொடர்புடைய சில விஷயங்களையும் விமர்சித்திருந்ததை நான் பார்க்க கிடைத்தது. 

அவரது அந்த விளக்க உரைக்கான தலைப்பாக

ஸஹாபாக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளாத SLTJ-யினா் ஏன் அபூபக்ர் (ரலி) அவா்களின் கூற்றை ஏற்றுக்கொண்டனா்?
என்று இட்டிருந்தனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நேரத்தில் உர்வா என்பவன் நபித்தோழர்களை பார்த்து பயந்து ஓடும் கோழைகள் என்று நபியிடம் விமர்சித்து விடுகிறான். ஆகவே அங்கிருந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கோபத்தில் امْصُصْ بِبَظْرِ اللَّاتِ என்று உர்வாவை கடும் வாசகத்தை கொண்டு திட்டி விடுகிறார்கள்.

ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்களே இவ்வாறு திட்டி உள்ளார்கள் தானே. பிறகு அல்லாஹ்வை கடுமையாக விமர்சிக்கும் ஞானசார தேரரை நாம் திட்டுவதில் என்ன தவறு உள்ளது என்று SLTJ வாதம் வைக்கிறது. நபித்தோழர்களை பின்பற்றக் கூடாது என்று சொல்லும் இவர்கள் ஏன் இந்த இடத்தில் மட்டும் தங்கள் செயலை நியாயப்படுத்த அபூபக்ர் (ரலி) அவர்களின் தனிப்பட்ட கூற்றை ஆதாரமாக எடுத்தார்கள்???
என்பதுதான் அவரது உரையில் அவர் வைத்த பிரதான வாதம்.

நமது பதில்:

வஹியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் அது அல்லாத ஒன்றை நாம் பின்பற்றக் கூடாது என்ற கொள்கையில் இவர்களை விட நாம் ஆழமாகவே செயல்பட்டு வருகிறோம். சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் ஞானசார தேரரை விமர்சித்தமை தவறு என்று நியாஸ் சிராஜி போன்றவர்கள் விமர்சித்த காரணத்தினால் தான், ஒரு சந்தர்ப்பத்தில் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களும்கூட இதைவிட கடும் சொற்களை பயன்படுத்தி உர்வா என்ற ஒருவனை திட்தியுள்ளார்கள். அந்த வார்த்தை இன்று வரைக்கும் மூல மொழியில் மட்டும் தான் இருக்கிறதே தவிர அதற்கு மொழிப்பெயர்ப்பு கூட செய்யாமல் விட்டுள்ளனர். அது அந்த அளவிற்கு கடுமையான வாசகம். ஆகவே இந்த இடத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களை குறை சொல்வீர்களா? என்று நாம் கேட்டோம்.

அதற்கு நியாஸ் சிராஜி அவர்கள் பதில் சொல்லும்போது அன்றையக்கால வழக்கப்படி அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் திட்டினார்கள் என்று தான் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அது கடும் வாசக அமைப்பு இல்லை என்பதை போன்று அவரது உரையில் வளைத்தார். மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் அவ்வாறு மொழிப்பெயர்த்து உள்ளார்களே தவிர, இமாம் புகாரி அவர்கள் அன்றைய கால வழக்கப்படி என்று குறிப்பிடவில்லை என்பதை இவர்களுக்கு நாம் சுட்டிக் காட்டிக் கொள்கிறோம். (எது எப்படியோ  அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கோபப்பட்டு ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் இவ்வாறு திட்டியிருப்பதை வைத்து நாம் அவரின் மீது தவறான எண்ணம் கொள்ளப்போவதில்லை).

அதுமட்டுமல்லாமல் இது அபூபக்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று ஆகும். இதை நாம் பின்பற்ற முடியாது என்றும் வாதம் வைத்தார்.

உண்மையில் அது நபித்தோழரின் சொந்தக் கூற்றாக இருக்குமானால் நாம் அதை எந்த ஒன்றிற்கும் மார்க்க ஆதாரமாக எடுக்கவே மாட்டோம். நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் உள்ள இவர்களும் கூட SLTJ-யை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அபூபக்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றை மார்க்கமாக எடுக்க முடியாது என்று சொன்னது தான் நமக்கு ஆச்சரியம். இதுபோன்ற உண்மை நிலைப்பாடுகளை நாம் வரவேற்கிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்! நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இவை மூன்றும் தான் சுன்னாஹ் எனப்படும் நபியின் வழிமுறைக்கான வரைவிலக்கணம் எனபது அனைத்து தரப்பு மெளலவிமார்களும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். இது அல்லாத ஒன்று இவற்றுள் இணையுமென்றால் அதை நாம் சுன்னாஹ்வாக எடுத்துக்கொள்ள முடியாது.

உதாரணமாக நபியின் சொல், செயல், அங்கீகாரம் இவை மூன்றும் இல்லாத நிலையில் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் மார்க்கம் தொடர்பாக ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை விளக்கினார்கள் என்றால் அது வஹி கிடையாது. அது அவரது தனிப்பட்ட கூற்று என வரையறை செய்யப்படும்.

ஆனால் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் உர்வாவை திட்டிய சம்பவமோ நபியின் பார்வைக்கு முன்னாள் நடந்த நிகழ்வாகும். நபியின் பார்வைக்கு முன்னாள் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதை அவர்கள் கட்டாயம் அடையாளப்படுத்த வேண்டும். காரணம் நபியவர்களுக்கு முன்னாள் ஒருவர் ஒரு செயலை செய்து அதை அவர்கள் கண்டிக்காமல் அமைதி காத்துவிட்டால் அந்த செயலுக்கு நபியின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்பது பொருள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நாளில் உர்வா என்பவன் நபித்தோழர்களை புறமுதுகிட்டு ஓடிவிடும் கோழைகள் என்பதை போன்று விமர்சித்தமை பொறுக்காமல் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் உர்வா என்பவனை நபியவர்களுக்கு முன்னாள் தான் கடுமையான வாசக அமைப்பை பயன்படுத்தி திட்டுகிறார்கள். அந்தச் செயலை நபியவர்கள் கண்டித்தார்கள் என்று எந்த அதிகப்படியான ரிவாயத்துக்களும் நாம் அறிந்தவரை இல்லை. நபியின் பார்வைக்கு முன்னாள் நடந்த இந்த சம்பவம் நபியால் கண்டிக்கப்படவில்லை என்றால் அது நிச்சயமாக நபியின் அங்கீகாரம் என்ற வட்டத்தில் உள்ளது ஆகும். இதை அபூபக்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று என்று எவ்வாறு இவர்களால் சொல்ல முடிந்தது என்பது வியப்பாக உள்ளது.

இவ்வாறு அனைவரும் திட்டிக்கொண்டு திரியலாமா என்பதற்கு அடுத்து வருவோம். இது நபியின் அங்கீகாரத்தில் உள்ளதா இல்லையா என்பதை சகோதரர் நியாஸ் சிராஜி அவர்கள் விளக்க வேண்டும். நபியவர்களே அந்த சந்தர்ப்பத்தை பார்த்து மெளனம் காத்த நிலையில் நியாஸ் சிராஜி அவர்கள், அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அவ்வாறு உர்வாவை திட்டியது தவறு என்று விமர்சிக்கிறார். இதுபோன்று கொள்கை விளக்கத்தில் கோளாறு உள்ளவர்கள் தான் பேசுவார்கள்.

மேலும் இவர் அந்நிய பெண்ணை முத்தமிட்ட நபித்தோழரின் செய்தியைக் குறிப்பிட்டு இந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஆண் அந்நிய பெண்ணை முத்தமிடலாம் என்பீர்களா? எது அழகிய முன்மாதிறியோ அதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அபூபக்ர் (ரலி) அவர்கள் உர்வாவை திட்டியதை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் வாதம் வைத்தார். இதுபோன்ற வாதங்களை இவர் வைப்பதில் இருந்து இவருக்கு ஹதீஸ்களை முறையாக அணுகி விளங்க தெரியவில்லை என்பதைத்தான் நான் புரிந்து கொண்டேன்.

என்றைக்குமே ஒரு தீய செயலை நாம் முன்மாதிரியாக எடுக்கக் கூடாது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அந்நிய பெண்ணை முத்தமிட்ட நபித்தோழரை பொருத்தவரைக்கும் அவர் அந்தப் பெண்ணை முத்தமிட்டு விட்டு அல்லாஹ்வின் தூதரிடம் அதை முறையிட வந்ததன் காரணமே விபச்சாரக் குற்றத்திற்கு எவ்வாறு தண்டனைகள் நிறைவேற்றப் படுகிறதோ அதுபோன்று முத்தமிட்ட பாவத்திற்கும் ஏதாவது தண்டனை இருக்கும், அதைப்பெற்று அதன் மூலம் பாவப்பரிகாரம் செய்து கொள்ளலாம் என்பதற்காகத்தான் அல்லாஹ்வின் தூதரிடம் அவர் வருகிறார். இதிலிருந்தே அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதையும் அவர் எதிர்பாராத விதமாகத்தான் உணர்வுகள் முற்றி தவறுதலாக நடந்திருக்கிறார் என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆகவே இந்த செய்தியின் பாடம் நற்குணங்கள் கொண்ட ஒரு நல்ல மனிதருக்கே அன்றி, சதாவும் அந்நிய பெண் பின்னால் அழைந்துத் திரியும் கேடிகளுக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சூழலை அடைந்த நல்ல மனிதர்களுக்கு அவரது செயல் குற்றமாக ஆகாது, அதை இறைவன் மன்னித்து விடுவான் என்று எவ்வாறு நாம் சொல்கிறோமோ அதேபோன்ற சம்பவம் தான் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் உர்வாவை கடுமையாக திட்டிய சம்பவமும் ஆகும். அந்த வார்த்தைக் கடுமையானதாக இருந்தாலும் திட்டியவர் என்ன சூழ்நிலையில் இருந்தார் என்பதே இறைவனால் கவணிக்கப்படும். ஆகவே தான் நபியவர்களும் கூட கடுமையான வார்த்தையை பயன்படுத்தி உர்வாவை திட்டிய அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை அந்த இடத்தில் கண்டிக்கவில்லை.

அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் திட்டியதைப் போன்று நாமும் திட்டித் திரியலாமா என்றால் கண்டிப்பாக அனைத்து சந்தர்ப்பத்திலும் இதுபோன்று திட்டுவதற்கு மார்க்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் சந்தித்த அந்த சூழல் போன்ற நிலையில் நாம் இருந்து உணர்ச்சிவசத்தால் கடுமையாக திட்டி விடுகிறோம் என்றால் அதற்கு மார்க்கத்தில் எந்தக் குற்றமும் இல்லை என்பதைத் தான் நபியவர்களின் மெளனம் நமக்கு சொல்லித் தருகிறது.

ஆகவே அல்லாஹ்வை கடும் வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்து வரும் ஞானசார தேரருக்கு எதிராக கொதித்தெழுந்து கொஞ்சம் காரமான வார்த்தையைக் கொண்டு விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை. மிகச் சாதாரண வார்த்தைகளால் தான் சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் ஞானசார தேரரை விமர்சித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஈமானிய உணர்வுள்ளவர்கள் அவ்வாறு தான் தூண்டப்படுவார்கள். அல்லாஹ்வை கொச்சை கொச்சையாக ஒருவன் விமர்சிக்கின்ற பொழுது இது இந்தியாவை போன்றல்ல, இலங்கை ஒரு மதம் சார்ந்த நாடு, இங்கு நாம் விரும்பியதைப் போன்று பேச முடியாது செயல்பட முடியாது என்றெல்லாம் மறுமையை இலக்காக கொண்ட ஒரு ஈமானிய உணர்வுள்ளவன் பேசமாட்டான் என்பதை இலங்கை வாழ் எதிர்தரப்பு சகோதரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

SLTJ ஒருபோதும் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றை ஆதாரமாக முன்வைக்கவில்லை. அது நபியால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என்பதை தெளிவாக நாம் விளக்கியிருக்கிறோம்.

விமர்சனம் என்ற பெயரில் தோன்றியதை எல்லாம் அள்ளித்தூவிக் கொண்டு திரியாமல் நியாமாக செயல்படுமாறு இதுபோன்று விமர்சிக்கும் நபர்களுக்கு அறிவுரை சொல்லி முடிக்கிறேன்.

முஹம்மது மஷாரிக் (தொண்டி)


Saturday, December 17, 2016

ஏழ்மையின் இலக்கணம்!



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப் பெறுவதற்காக இவ்வாறு மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்" என்று கூறினார்கள். 

மக்கள், "அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள) எந்தச் செல்வத்தையும் அவன் பெற்றிருக்கமாட்டான்

அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச்சென்று மக்களிடம் கேட்கமாட்டான் (அவனே உண்மையான ஏழை)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் 1879.

Tuesday, November 15, 2016

நபியவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனைகள் - 3



'தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓதவேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்கக் கற்றுத் தாருங்கள்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது

'அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுழ்மன் கஸீரன். வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃஹ்ஃபிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்'

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ "

என்று கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

(பொருள்: இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவராலும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனுமாவாய்).
அறிவிப்பவர் : அபூபக்ர்அஸ்ஸித்தீக்(ரலி) 
நூல் : புகாரி 6326

Sunday, November 13, 2016

நபியவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனைகள் - 2




கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் சொல்லிக் கொள்ள எனக்கு ஏதேனும் (துதி) வாக்கியத்தைக் கற்றுத்தாருங்கள்" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 


"லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு,அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹகீம்


لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، سُبْحَانَ اللهِ رَبِّ الْعَالَمِينَ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَزِيزِ الْحَكِيمِ " 

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அல்லாஹ் மிகவும் பெரியவன். அவனைப் பெரியவன் எனப் பெருமைப்படுத்துகிறேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என அதிகமாகப் புகழுகிறேன். அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ் (அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும்) தூய்மையானவன். மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அல்லாஹ்வின் உதவியின்றி யுக்தியுமில்லை; சக்தியுமில்லை.) என்று சொல்வீராக!" என்று கூறினார்கள்.

அதற்கு அந்தக் கிராமவாசி, "இவை என் இறைவனுக்குரியவையாகும். எனக்குரியவை என்ன?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

"அல்லாஹும் மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸுக்னீ"

 اللهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي 


என்று சொல்வீராக! என்றார்கள்.

(பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எனக்குக் கருணை புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக!")

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),
நூல் : ஸஹீஹுல் முஸ்லிம் தமிழாக்க பிரதி எண் 5226, அரபு மூலப்பிரதி எண் 2696.

Wednesday, November 9, 2016

FACEBOOK வீடியோக்களை இலகுவாக டவுன்லோடு செய்வது எப்படி?



நம்மில் அதிகமான மக்களுக்கு முகநூல் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரியாது. காரணம் அந்த வீடியோக்கள் அனைத்துமே ஆன்லைனில் பிளே செய்து பார்க்கும் வண்ணமாகத்தான் இருக்கும்.

சில மனம் கவரும் வீடியோக்களை நாம் பார்க்க நேரிடும் பொழுது அதை உடனே டவுன்லோடு செய்ய வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனால் செய்வதற்கு ஆப்ஷன் இல்லை என்ற வருத்தத்தோடு அந்த வீடியோவை வெறுமனே பார்த்துவிட்டு மூடிவிடுவோம். அதுமட்டுமல்லாமல் முகநூல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் செய்யப்படுவதால் நாம் விரும்பிப் பார்த்த அந்த வீடியோ எங்கே சென்றது என்றே நினைவில் வைக்க முடியாத தூரத்தில் அவைகள் சென்று விடவும் வாய்ப்புகள் உள்ளது.

இனி கவலை வேண்டாம்! நீங்கள் விரும்புகின்ற வீடியோக்களை உங்களது கணினியில் பதிவிறக்கம் செய்துவிட இலகுவானதொரு வழி உள்ளது.

அது என்ன வழி என்பதை படங்கள் உதாரணங்களோடு பார்ப்போம் வாருங்கள்....

முதலில் நீங்கள் பதிவிறக்க விரும்புகின்ற விடியோவிற்கு செல்லுங்கள்.

பிறகு அந்த வீடியோவை பிளே செய்து பின்னர் அந்த வீடியோவில் வைத்து உங்களது மவுசில் ரைட் கிளிக்கை சொடுக்கவும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




ரைட் கிளிக் சொடுக்கிய உடன் மூன்று ஆப்ஷன்கள் வரும், அதில் கடைசியாக உள்ள show video URL என்பதை கிளிக் செய்யவும்.

URL பகுதியை கிளிக் செய்த உடன் அந்த வீடியோவிற்கான URL Address முழுமையாக தேர்வு செய்யப்பட்டே காட்சி தரும். அந்த ஊதா நிறத்தால் சூழப்பட்ட பட்டியின் மீது மீண்டும் ரைட் கிளிக் செய்யவும். அதில் காப்பி என்ற ஆப்ஷன் தோன்றும், அதை கிளிக் செய்து கொள்ளவும்.



பின்னர் உங்களது Browser-ல் புதிதாக ஒரு Tab-ஐ உருவாக்கி அதன் URL Address Bar-ல் நீங்கள் ஏற்கனவே காப்பி செய்த Address-Paste செய்யவும்.

உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பார்க்கவும்.



பிறகு அந்த URL-ல் உள்ள www என்பதை நீக்கி விட்டு அந்த இடத்தில் m என்று டைப் செய்து Enter பட்டனை தட்டவும்.




இப்போது கீழே உள்ளது போன்று புதிதாக ஒரு பக்கம் தோன்றும்.



அதில் உள்ள வீடியோவை பிளே செய்து விட்டு, அந்த வீடியோவில் வைத்து ரைட் கிளிக் சொடுக்கினால் அதில் save video as என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.

அதை கிளிக் செய்தால் போதும், நீங்கள் அந்த வீடியோவை உங்களது கம்ப்யூட்டரில் எந்த இடத்தில் பதிவிறக்க வேண்டும் என்று கேட்கும்.

தேர்வு செய்துவிட்டு save பட்டனை தட்டினால் நீங்கள் விரும்பிய வீடியோவின் பதிவிறக்கம் தயாராகிவிடும்.

அன்புடன்
முஹம்மது மஷாரிக்.

Thursday, November 3, 2016

Youtube வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?



பெரும்பாலும் Youtube வீடியோக்கள் பல மென்பொருட்களை பயன்படுத்தித்தான் மொபைலில் அல்லது கணினியில் டவுன்லோடு செய்யப்படுகிறது. இது போன்ற எந்த மென்பொருட்களும்(Softwares) இன்றி Youtube-ல் நாம் எந்த இடத்தில் வீடியோக்களை பார்க்கிறோமோ அங்கேயே எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நாம் பதிவிறக்க நினைக்கும் வீடியோக்களை Mp4 High, Mp4 Low, 3gp, Mp3 என்று நாம் விரும்புகின்ற அனைத்து வகையிலும் அந்தப் பகுதியில் பதிவிறக்கிக் கொள்ள முடியும்.

பயனுள்ள பல தகவல்களை நாம் Youtube-ல் நேரடியாக சென்று பார்வையிடுவதால் நமது டேட்டாக்கள் விரைவாக முடிந்து விடும். மீண்டும் அவற்றை பார்வையிட மீண்டும் மீண்டும் சென்று அதே வீடியோவை பார்க்கும் நபர்களும் நம்மில் இருக்கின்றனர். இதுபோன்ற நிலைகளை தவிர்த்து நமக்கு பயன்தரும் வீடியோக்களை நாம் விரும்பிய அளவில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் இலகுவாக பார்வையிடலாம், டேட்டாவும் மிச்சப்படும்.

இப்பொழுது எவ்வாறு Youtube-ல் நேரடியாக பதிவிறக்கம் செய்வது என்பதைப்பற்றி பார்ப்போம்.

முதலில் நீங்கள் ஏதேனும் ஒரு பிரவுசரை (Browser Like Chrome, UC Browser, Firefox) திறந்து அதன் மூலமாக Youtube செல்ல வேண்டும்.


பிறகு உங்களுக்கு தேவையான வீடியோவை கிளிக் செய்து கீழே உள்ள படத்தில் உள்ளதை போன்று தேர்வு செய்து கொள்ளவும்


பிறகு அந்த பக்கத்தின் மேலே உள்ள URL பக்கத்திற்கு சென்று அதில் இருக்கும் வார்த்தைகளில் https:// என்பதை மட்டும் அழித்து விடவும். அதாவது www என்ற வார்த்தைக்கு முன்னாள் உள்ள அனைத்தையும் அழித்து விட வேண்டும்.

புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை கவனிக்கவும்.


கம்ப்யூட்டர் மூலமாக பதிவிரக்குவதாக இருந்தால்


இந்த படத்தில் உள்ளதை போன்று தான் உங்களது வீடியோவின் URL-ம் இருக்க வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது www. என்ற வார்த்தைக்கு பின்னால் ss என்ற வார்த்தையை இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


அல்லது மொபைல் மூலமாக பதிவிறக்கம் செய்வதாக இருந்தால் m.youtube.com/watch?v=1wKcVOluCou என்று www இருக்க வேண்டிய இடத்தில் m இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

அங்கு m. என்ற வார்த்தைக்கு அடுத்ததாக ss என்ற வார்த்தையை இணைக்க வேண்டும். அதாவது m.ssyoutube.com/watch?v=1wKcVOluCou இதுபோன்று இருக்க வேண்டும்.

வேலை முடிந்தது, இனி ss என்று டைப் செய்த பின்னர் கம்ப்யூட்டராக இருந்தால் Enter பட்டனை தட்டவும். மொபைலாக இருந்தால் GO என்பதை  கிளிக் செய்யவும்.
இறுதியாக கீழே உள்ளதை போன்று ஒரு பகுதி திறக்கும்.


இதற்கு மேல் சொல்வதற்கென்ன, உங்களுக்கே தெரியும் அடுத்த நிலைப்பற்றி. ஆம் Download என்ற Box-ன் இறுதியாக உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும். என்னென்ன வகைகளில் அந்த வீடியோவை பதிவிறக்கலாம் என்ற விவரம் தோன்றும்.


இந்த பட்டியலில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்தால் போதும்,  உங்களது பதிவிறக்கம் தயாராகிவிடும்.

நம்மையான விஷயங்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த தகவல் பகிரப்படுகிறது. அறியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்

Tuesday, October 18, 2016

நபியவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனைகள் - 1



நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள்

اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي. اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي

அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தாயாய, வ அம்தீ, வ குல்லு தாலிக இந்தீ.

(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து பாவங்களையும் மன்னித் தருள்வாயாக!
அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
நூல்: புஹாரி 6399.

Friday, October 14, 2016

Surah Arrahman Recited By Sister Barah (Dead)

மக்கள் கூடும் இடத்தில் தொழுகை - 1

மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பஜார்களுக்கு செல்கின்ற பொழுது அதிக பட்சமாக அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவது கிடையாது. தொழுகை நேரம் கடந்த பின்னர் மிகவும் உடல் சோர்வோடு அப்படியே வீடு சென்று உறங்கி விடும் நபர்கள் தான் நம்மில் அதிகம் உள்ளனர். 

நமது பலவீனத்தின் காரணத்தினால் இவைகள் ஏற்படுகின்றன என்பது உண்மை. ஆனால் இவற்றை சொல்லி நாம் இறைவனிடம் தப்பிக்க முடியாதல்லவா.

ஆகவே இதற்கான மாற்று வழியை அறிந்து அரபு நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள் தோறும் பாங்கு அழைப்பு கொடுக்கப்பட்டு தொழுகை நடத்தப்படுகிறது. அதிகமான மக்கள் அந்த தொழுகைகளில் கலந்தும் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஏற்பாடுகளை இயன்றால் நாமும் செய்யலாம் என்பது எமது அவா.

Tuesday, August 30, 2016

ஒட்டகம் குர்பானி கொடுப்போருக்கான சிறிய நினைவூட்டல்!



அன்பு இஸ்லாமிய சொந்தங்களே! நமது தமிழகத்தில் வழமையாக ஈதுல் அள்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தன்று வெளி மாநிலங்களில் இருந்து ஒட்டகம் கொண்டு வரப்பட்டு உள்ஹியா (குர்பானி) கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நான் பார்த்த வரையில் ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும் என்ற ஒரு சரியான முறைமை விளங்காமல் தான் மக்கள் பெருமளவில் உள்ஹிய்யா கொடுக்கிறார்கள். ஒட்டகத்தோடு தொடர்புடைய மாநிலமாக நமது மாநிலம் இல்லாமல் இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, இறைவனுக்காக நாம் நிறைவேற்ற இருக்கின்ற இந்த உள்ஹியா என்ற வணக்கம் இறைவன் கட்டளையிட்டதை போன்று தான் நிறைவேற்றப்பட வேண்டும்.

இங்கு உள்ஹியா கொடுப்பது தொடர்பான அனைத்து சட்டங்களையும் நாம் விளக்கப் போவதில்லை. அவைகள் பெரும்பாலான மக்களுக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதிகளவில் நினைவூட்டப்படாத ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும் என்ற சட்டத்தை மட்டும் நான் நினைவூட்ட ஆசைப் படுகிறேன்.

இது தொடர்பாக இறைவனே திருமறையில் தனி ஒரு பாடமாக மக்களுக்கு சொல்லித் தருகிறான். அந்த வசனம் இதோ:

“(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்க) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
திருக்குர்ஆன் (22:37).

மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம் ஒட்டகத்தை நிறுத்தி வைத்துத்தான் அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது.

ஆனால் நான் முன்பு சொன்னதைப் போன்று இந்த சட்டம் பலருக்கும் விளங்காமல், ஒட்டகத்தை தாறுமாறாக கட்டி, அதை தரையில் வீழ்த்தி, பல நபர்கள் சேர்ந்து அதனுடைய நீண்ட கழுத்தை முறுக்கி பிடித்துக்கொண்டு அல்லது கால்களால் அழுத்திக்கொண்டு அறுக்கின்றனர்.

இப்படித்தான் அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்லிவிட்டான் என்றால், அதற்கு மாற்றமாக ஒட்டகத்தை நாம் எவ்வாறு அறுத்தாலும் அது இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யும் நிலையை நமக்கு உண்டாக்கி விடும். அதுமட்டுமல்லாமல் நிறுத்தி வைத்துத்தான் ஒட்டகத்தை அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்கிறான் என்றால் அதில் காரணம் இல்லாமல் இறைவன் சொல்ல மாட்டான். இறைவன் சொன்ன முறைமைக்கு மாற்றமாக ஒட்டகமும் செயல்படாது, நாமும் அதற்கு மாற்றமாக செயல்படவும் கூடாது. இறைவன் சொன்ன அடிப்படையில் ஒட்டகத்தை அறுப்பது தான் அந்த ஒட்டகத்திற்கு அமைதியளிப்பதாகும். மாறாக கட்டி வைத்து தாறுமாறாக மண்ணில் புரட்டி அறுப்பதென்பது நிச்சயமாக அந்த ஒட்டகத்திற்கு நோவினை ஏற்படுத்துவதாகும் என்பதை இஸ்லாமிய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் நமக்காகவே இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்துள்ளான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்காக நாம் இது போன்ற பிராணிகளை எப்படி வேண்டுமானாலும் வதை செய்து சாப்பிடலாம் என்று யாரும் எண்ணி விடக்கூடாது. இன்னும் சில நொடிகளில் இறந்து விடத்தானே போகிறது, இதனிடம் இனி தன்மையாக நடந்து என்ன நடக்க போகிறது என்ற எண்ணத்தில் ஆடு மாடுளை அறுக்கும் நபர்கள், மிகவும் கொடூரத் தன்மையோடு அந்த உயிரினங்களிடம் நடந்து கொள்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். இது தவாறான அணுகுமுறை ஆகும்.

உண்மையில் சொல்வதாக இருந்தால் நாம் அறுத்து சாப்பிடும் பிராணிகளை அல்லாஹ் தான் நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். பிராணிகளை அறுத்து சாப்பிடும் மனிதனை விட, பல மடங்கு பலத்தால் உயர்ந்த ஆடும் மாடும் அந்த மனிதனுக்கு பயந்து பணிகிறது என்றால் இதற்கு காரணம் இறைவன் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

பிராணிகளுக்கு அமைதியளிக்கும் வகையில் இலகுவாக அவைகளை கையாண்டு அறுத்து சாப்பிட வேண்டும் என்ற வரையறையை இஸ்லாம் நமக்கு விதித்துள்ளது.

உங்களில் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். (விரைவாக அறுப்பதன் மூலம்) தனது பலிப்பிராணிக்கு நிம்மதியை கொடுக்கட்டும்!
(முஸ்லிம், அபூதாவூத் 2817, திர்மிதி 1409)
ஆகவே இறைவனும் இறைத்தூதரும் பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்களோ, அந்த அடிப்படையில் பிராணிகளை அறுத்து இறைவன் கடமையாக்கிய உள்ஹியா என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுவோமாக! இறைவன் அதற்கு உதவுவானாக!

குறிப்பு: ஒட்டகம் அறுக்க நாடும் நபர்கள் ஒட்டகத்தை நிற்க வைத்து அறுக்க வேண்டும். மற்ற உயிரினங்களுக்கு இவ்வாறுதான் அறுக்க வேண்டும் என்ற சட்டம் சொல்லப்படவில்லை. ஆகவே நாம் இயல்பாக ஆடுகளையும் மாடுகளையும் எவ்வாறு படுக்க வைத்து அறுப்போமோ அவ்வாறே அறுக்கலாம். அறுப்பதற்கு முன்பாக கழுத்து முறிந்து போகும் அளவிற்கு வதை செய்து அறுப்பதை தவிர்த்து தன்மையான முறையில் அறுக்கவும்.