தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, June 11, 2016

நோன்பு தொடர்பான பலவீனமான செய்தி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரொருவர் ரமழான் மாதத்தில் தக்க காரணமின்றி ஒரு நோன்பை விடுகின்றாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அவர் (விட்ட) அந்த நோன்புக்கு (சிறப்புக்கு) அது ஈடாகாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
நூற்கள்: அபூதாவுத் 2396, இப்னு மாஜா 1672).

இந்த இரண்டு அறிவிப்புகளிலும் அபுல் முதவ்விஸ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். காரணம் இவரையும் யாரென்று தெரியாது, இவரது தந்தையையும் யாரென்று தெரியாது என ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
மீஸானுல் இஃதித்தால் (574/4).

இமாம் அஹ்மத் அவர்கள் இவரை யாரென்றே தெரியாது என்று குறிப்பிடுகிறார்கள்.
தஹ்தீபுத் தஹ்தீப் 12/ (1081).

இதே தகவல்களோடு இமாம் அல்பானி அவர்கள் தமது லஈஃப் அபூதாவுதில் (273/2)-ம் பக்கத்தில் இது பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.


Tuesday, June 7, 2016

மறதி இறைவனது அருட்கொடை!




இந்த உலகில் மனிதன் உணர்ந்து கொள்ளாத எண்ணற்ற இறைவனது அருட்கொடைகள் உள்ளன. அவற்றில் பிரதானமான ஒன்று தான் மறதி ஆகும். பொதுவாகவே மறதி என்ற பண்பை பொருத்தவரைக்கும் நாம் அதை ஒரு பலவீனமான நிலையாகத்தான் பார்க்கிறோம். காரணம் உண்மையில் மறதி என்ற பண்பால் நமது வாழ்வில் ஏராளமான நஷடன்களை நாம் அடைந்திருக்கிறோம், இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.

உதாரணமாக, சிறு வயதில் தாய் ஒரு வேலை சொல்லி கடைக்கு அனுப்ப, விளையாட்டு மோகத்தில் அந்த வேலையை மறந்துவிட்டு பலமணி நேரம் கழித்து அந்த வேலையை முடிக்காமலேயே வீடு வந்து, அதனால் தாயிடம் செமத்தியாக அடி உதைகளை வாங்கி இருப்போம்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கொடுத்த வீட்டுப்பாடத்தை முறையாக செய்யாமல் மறந்து விட்டு, அடுத்த நாள் பள்ளி ஆசிரியையிடம் அடி வாங்கி இருப்போம்.

கல்லூரியில் நடக்கும் பிராக்டிக்கல் பரீட்சைக்காக தயார் செய்ய வேண்டிய பிராக்டிக்கல் நோட்டு புத்தகத்தை சரியான நேரத்திற்குள் தயார் செய்யாமல் மறந்து விட்டு, கடைசி நேரத்தில் தேர்ச்சியா தோழ்வியா என்ற பதட்டத்தோடு ஆசிரியை முன்னாள் நின்றிருப்போம்.
வேலை நிமித்தமாக இன்டர்வியூ செல்ல நேரிடும்போது ஏதாவது முக்கியமான பிரதிகளை நாம் எடுத்துச்செல்ல மறந்திருப்போம். அந்த ஒரு காரணத்தால் நமக்கு அத்தகைய சிறந்த வேலை கிடைக்காமல் போயிருக்கலாம். இன்னும் பல....

இப்படியாக நமது வாழ்வில் சிறு வயது முதல் பெரிய வயது வரைக்கும் அந்தந்த பருவத்திற்கு ஏற்றவாறு மறதியால் பல சோதனைகளை நாம் கண்டிருப்போம். ஆகவே மறதி என்றாலே அது ஒரு பெரிய சோதனை என்பது மட்டும் தான் நமது நினைவில் பெரும்பாலும் நிற்கும்.

ஆம்! மறதி என்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒருவகையான சோதனைதான். என்றாலும் இது மனிதனுக்கு அருட்கொடையாகவும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மனிதன் சிந்திப்பதில்லை.

மறதி என்ற ஒரு பண்பு மட்டும் நமது வாழ்வில் இல்லையென்றால், நாம் இழந்த இழப்புக்களை மறந்துவிட்டு இயல்பு வாழ்வில் ஒருபோதும் செயல்பட முடியாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே தான் இயற்கையாகவே சில நாட்களில் மறந்துபோகும் இழப்புக்களின் நினைவுகளை, சில நபர்கள் தொடர்ந்து நியாபகப்படுத்திக் கொண்டே இருந்து இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். பொறுமையோடு இருந்தால் இழப்புக்கள் மறைந்து போகும். இவ்வாறு உள்ளத்தில் பெரும் பாரமாக இருக்கும் இழப்புக்கள் மறந்து போவதற்கு எல்லாம் வல்ல இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் பேரருள் மறதி ஆகும். இந்த வகையில் மறதி என்பது இறைவனின் மிகப்பெரிய அருளாகவும் மாறிவிடுகிறது.

ஆசையோடு ஈன்றெடுத்து பாசத்தையும் நேசத்தையும் அதனின் மீது பொழிந்து வளர்க்கப்படும் தமது ஆருயிர் குழந்தை இறைவன் நாட்டமிருந்தால் மரணித்து விடும். தொடைக்குழியை அடைத்துக் கொள்ளும் மிகப்பெரிய துக்கம் இது. பெற்றோர்களால் சகித்துக் கொள்ள முடியாத மிகப்பெரிய வேதனை இது. ஆகவே தான் அல்லாஹ் இதுபோன்ற சூழலில் பொறுமை காக்கும் நல்லுள்ளங்களுக்கு பரிசாக சுவர்க்கத்தை அறிவிக்கிறான். இப்படிப்பட்ட சூழலை இந்த உலகில் சந்தித்த பல கோடி பெற்றோர்கள் உண்டு. சில நாட்கள் கடந்த பின்னர் அந்த துக்கத்தை எல்லாம் மறந்துவிட்டு இயல்பு வாழ்வில் செயல்பட்டு கொண்டிருக்கும் பெற்றோர்களை நாம் காண்கிறோமே! இவைகள் நமக்கு உணர்த்துவது என்ன???
(இதுபோன்ற இழப்புக்களை சொல்ல ஏராளமான உதாரணங்கள் உள்ளன, எழுத்து அதிகமாவதால் சுருக்கிக் கொள்கிறேன்).

ஒரு மனிதன் என்னதான் சோதனையில் சிக்கித் தவித்தாலும் பொறுமையோடு அதனை சகித்துக் கொண்டால், அந்த சோதனைகளை அல்லாஹ் அவனது உள்ளத்தில் மறதி என்ற குணத்தின் மூலம் அப்புறப்படுத்துகிறான் என்ற விவரத்தை புரிகிறோம் அல்லவா???

எனதருமை சகோதர சகோதரிகளே! மறதியும் ஒரு வகையில் இறைவனின் அருள் தான் என்பதை நம்மில் சிலர் இன்றைக்குத்தான் புதுமையாக கேள்வி பட்டிருக்கக்கூடும். இது போன்ற எண்ணிலடங்கா இறைவனது அருட்பாக்கியங்கள் நம்மை சூழ இருக்கின்றன. ஆனால் அவற்றையும் நாம் முறையாக உணராமல் தான் வாழ்ந்து வருகிறோம்!

அல்லாஹ் நமது இந்த மோசமான நிலையை மாற்ற வேண்டும். இறைவனது அருள்களை முழுமையாக சிந்தித்து உணர்ந்து, சதாவும் அவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய நற்சிந்தனையுடைய உள்ளங்களை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள வேண்டும் என பிரார்த்தித்து முடிக்கிறேன்.

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ண முற்பட்டால் அதை உங்களால் எண்ணி முடிக்க முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.
சூரா இப்ராஹீம் 14:34.

Monday, June 6, 2016

தவிர்ப்போம் தலைப்பிறை கொண்டாட்டத்தை!



அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சொந்தங்களே! இன்ஷா அல்லாஹ் ஷஅபான் 29 அன்று ரமளானின் முதல் பிறை தேட வேண்டிய நாள்.  நமது சமூக மக்கள் மத்தியில் ரமலான் முதல் பிறை பார்க்கப்படுவது என்பது தலைப்பிறைஎன்கிற பெயரால் சில பகுதிகளில் கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைப்பிறை அன்றைக்கு வீடுகள் அனைத்தும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வீட்டிற்கு பரக்கத் கிடைக்காது என்பதைப் போன்ற ஒரு தோரனையை ஏற்படுத்தி கொண்டு, ரமளானின் முதல் பிறையை அடையும் நாளில் வீட்டை சுத்தம் செய்கின்ற மக்களை பார்க்கிறோம்.

இன்னும் சில இடங்களில், மாற்று மத மக்கள் பொங்கல் விழாவின் போது வீதிகளில் பொங்கல் வைப்பதைப் போன்று பொங்கல் வைத்து சப்தமிட்டு குலவையிடுவதையும் பார்க்கிறோம்.

முதலில் இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நம் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மார்க்கத்தின் பெயரால் நாம் ஒன்றை செய்வதாக இருந்தால் நாம் யாரிடம் இருந்து இந்த மார்க்கத்தை பெற்றோமோ அந்த அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டலில் அவைகள் இருக்க வேண்டும். நாமாக ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்லாமிய சாயம் பூசுவதென்பது ஒருபோதும் இஸ்லாமியக் கலாச்சாரம் ஆகாது.

ரமலான் மாதம் என்பது புனிதமான மாதம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த மாதத்தின் முதல் நாள் இவ்வாறு தான் நமது வீடு இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நம் வீடு புனிதத்தை இழந்துவிடும், தரித்திரம் பிடித்துவிடும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ரமலான் மாதத்தின் சிறப்புக்கள் அனைத்தும் நமக்காகத்தானே தவிர உயிரற்ற வீட்டிற்காக கிடையாது. ரமலான் மாதம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம் நாம் பாவங்களை விட்டு சுத்தமாக வேண்டும் என்பதற்குத்தானே தவிர வீட்டை சுத்தப்படுத்துவதற்காக கிடையாது. அவ்வாறு ஒருவர் வீட்டை சுத்தப்படுத்தாவிட்டாலும் எந்த குற்றமும் கிடையாது. அவர் செய்யக்கூடிய செயல்களுக்கான நன்மைகள் அவருக்கு கிடைத்தே தீரும். சுத்தம் என்பது எல்லா காலத்திலும் பேண வேண்டிய ஒரு பகுதியாகும். ஆகவே தான் அதை ஈமானோடு நபியவர்கள் இணைத்து சொன்னார்கள். பொதுவாக எல்லா நேரங்களிலும் சுத்தம் அவசியம் என்பதே மார்க்கத்தின் வழிகாட்டல் ஆகும். ஆகவே ஏதேனும் ஒரு நாளை வைத்து சடங்குகளை உண்டாக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவ்வாறு நபியவர்கள் செய்யவும் இல்லை.

அதேபோன்று தெருத்தெருவாக பொங்கல் வைத்து குலவையிடுவதும் இன்னொரு மதம் சார்ந்த வழிபாட்டுக் கலாச்சாரம் ஆகும். இதுபோன்று நபியவர்கள் ரமலான் முதல்பிறை அன்று, தாம் வாழ்ந்த காலகட்டத்தில் செய்ததே கிடையாது.

வருடா வருடம் இவ்வாறு நடந்து கொள்ளும் தாய்மார்கள் தமது செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஒரு காரணமே போதும் நம்மை கொடிய நரகில் வீழ்த்துவதற்கு!

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்"
முஸ்லிம்  (1573).

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456).

அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா?" என்று கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர" என்று கூறிவிட்டு, ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்.
முஸ்லிம் (4003). 

அல்லாஹ் மிக அறிந்தவன்....!

Wednesday, June 1, 2016

சூரா ஃபாத்திஹா மற்றும் சூரா பகராவின் இறுதி வசனங்களின் சிறப்பு!



இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார்.

முஸ்லிம் 1472.