தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, April 6, 2019

சுட்ட களிமண் பாத்திரம் தடை செய்யப்பட்டதா?




கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நம்மில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் மண் பானையில் நீர் ஊற்றி வைத்து பயன்படுத்தும் வழமை உள்ளது. இதுபோன்ற களிமண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீர் வைத்துப் பருகுவதை நபியவர்கள் தடை செய்துள்ளதாக ஸஹீஹுல் புகாரி மற்றும் முஸ்லிமின் குடிபானங்கள் என்ற பாடத்தில் ஏராளமான ஆதாரப்பூர்வமான செய்திகள் இடம்பெறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்கவேண்டாம் எனத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) , நூல் : முஸ்லிம் 4046.

இந்த செய்திகளை நாம் மேலோட்டமாக படிக்கின்றபொழுது இதுதான் முழுமையான சட்டமோ என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆகவே இது சம்மந்தமான முழுமையான விவரங்கள் நமக்கு தேவை.

சுட்டக் களிமண் பாத்திரங்கள் தடை செய்யப்பட்டது என்பது உறுதியான தகவல் தான். ஆனால் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை நாம் தேடிப்பார்க்கும்போது தடை செய்யப்பட்டிருந்த சுட்டக் களிமண் பாத்திரங்கள் மக்களின் சிரமங்களை பொறுத்து ஒரு நிபந்தனையோடு பின்னர் அனுமதிக்கப்பட்டு விட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோல் பாத்திரங்(களைத் தவிர மற்றவை)களில் (பானங்களை) ஊற்றிவைப்பதற்குத் தடைவிதித்தபோது, "மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே?" என்று மக்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர், நூல் : புகாரி 5593, முஸ்லிம் 4069.

மேற்கண்ட இந்த செய்திதான் சுட்ட களிமண் பாத்திரம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட கூடுதல் தகவலுடைய செய்தியாகும். பொதுப்படையாக சுட்ட களிமண் பாத்திரங்கள் முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தார் பூசப்பட்ட சுட்ட களிமண் பாத்திரம் மட்டும் தடுக்கப்பட்டு ஏனைய களிமண் பாத்திரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்பதை இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

ஆகவே தார் பூசப்பட்ட களிமண் பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றிப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டதாகும். தார் பூசப்படாத வெற்றுக் களிமண்ணால் செய்யப்பட்ட, தற்போது நாம் பயன்படுத்துகின்ற மண்பானை போன்றவை அனுமதிக்கப்பட்டது ஆகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்....