தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, November 28, 2017

சகோதர முஸ்லிமிற்காக பிரார்த்தனை செய்வதால் இறைவன் தரும் அளப்பரிய நன்மை என்னவென உங்களுக்கு தெரியுமா????



நமது வாழ்வின் எந்தப்பகுதியை நாம் எடுத்துக் கொண்டாலும் "நேரமின்மை" என்றதொரு தோழன் நம்மை இடைவிடாமல் துரத்திக்கொண்டு இருப்பதை நாம் உணர முடியும். உண்மையாகவே அதிகமான ஒய்வு நேரம் கிடைக்காத நபர்களும் இவ்வுலகில் உண்டு, நேரம் கிடைத்தும் கூட எதற்குமே நேரம் ஒதுக்க மனமில்லா நபர்களும் இவ்வுலகில் உண்டு.

இன்றைய நமது வாழ்க்கையின் பொருளடக்கத்தை சுருக்கமான வார்த்தைகளில் கூற வேண்டும் எனில், "நாம் (நாம், மனைவி, பிள்ளைகள்) வாழ வேண்டும்!!! நாம் (நாம், மனைவி, பிள்ளைகள்) வாழ்வதற்கு இவ்வுலகில் என்ன வேண்டும்!!! என்று சொல்லி முடித்துவிடலாம். இவ்வுலகில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதவீதமான மக்கள் இவ்வாறு தான் வாழ்கின்றனர்.

சமீபத்தில் சென்னையை கதிகலங்க செய்த வெள்ளப்பெருக்கு நிகழ்வை நாம் மறக்க முடியாது. இந்த வெள்ளப்பெருக்கு தொடர்பாக மீடியாக்களில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தை பார்க்கும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆசிரியர் அழகாக மனிதனின் இன்றைய சூழலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்ரினார்போல சுட்டிக்காட்டினார். வெள்ளப்பெருக்கினால் வீட்டை விட்டு வெளியேற முடியாது தவித்த மக்கள் தமது வீட்டின் மாடியில் நின்று கொண்டு தமது அண்டை வீட்டாரை பார்த்து சொன்னார்களாம் ஹாய்! நீங்க இந்த வீட்லதான் இருக்கீங்களா??? என்று. அவர் நையாண்டியாக எடுத்து வைத்த இந்த வாதம் அருமை!!!

இதை ஏன் அவர் சொன்னார் என்பதை விளங்கி இருப்பீர்கள். அண்டை வீட்டில் வசிப்போர் யார் என்று கூட தெரியாத நிலையில் தான் இன்றைய மனித சமூகம் உருவாகிக்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் கூறப்படும் காரணம் நேரமின்மை!!! மனித உணர்வுகளை மதித்தல், மனிதர்களோடு மனிதர்களாய் அன்பு காட்டி வாழுதல் போன்ற மனிதாபிமான செயல்கூட மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமான செயல்கள், சகோதரத்துவ உணர்வுகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் இடம் என்பது மிக உயர்வானது ஆகும்.

இவைகளை நான் ஆரம்பமாக கூறக் காரணம், இதுபோன்று நாம் பலவீனப்பட்டு இருக்கும் ஒரு முக்கியமான இடம் தான் தம்மோடு வாழும் சகோதர முஸ்லிமின் துன்பங்கள் சோதனைகளில் பங்கெடுக்காமை என்ற மோசமான இடம் ஆகும். சோதனைகளில் பங்கெடுக்காமை என்ற நிலை என்பதோடு பிறரது சோதனைகளை கண்டு மகிழும் இரக்கமற்ற குணமும் சேர்ந்தே பலரிடம் வளர்ந்து வருகிறது. மக்காவில் வசித்த முஷ்ரிக்குகள் மற்றும் மதினாவில் வசித்த முனாஃபிக்குகளின் குணமும் இதுவாகத்தான் இருந்தது. ஒரு முஸ்லிமின் துன்பம் அவர்களுக்கு இன்பமாகவே இருந்தது. நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்பதை சற்றே சிந்தித்து பார்ப்போமாக!!!!

தம்மோடு வாழும் ஒரு முஸ்லிம் ஏதேனும் சோதனையில் சிக்கினால் அவருக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற சகோதரத்துவ உணர்வை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்தார்கள். இதுபோன்ற உணர்வு நம்மில் எத்தனை நபர்களிடம் உள்ளது???? ஒரு முஸ்லிம் தமது சோதனைகளை கண்ணீர்மல்க நம்மிடம் கூறிவிட்டு ரப்பிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னால் நமது நிலை அந்த இடத்தில் கூட நேரமின்மையாகவே உள்ளது!!!

தாமாக பிரார்த்தனை செய்வதும் இல்லை! தம்மிடம் நெருங்கிப்பழகும் உறவுகள் தமது சோதனைகளை ஒப்புவித்து இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று வாய் திறந்து கூறினாலும் கூட அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய நேரமுமில்லை!!! நமக்காக பிரார்த்தனை செய்யவே நேரமின்மை என்ற வியாதி நம்மை தொற்றிக்கொண்டிருக்கும்போது பிறரை எவ்வாறு நாம் கவணத்தில் எடுப்பது. இது மிகப்பெரிய பலவீனமான நிலை தோழர்களே! நமது நிலை மாற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் தமது சகோதர முஸ்லிமிற்காக தனிமையில் அமர்ந்து பிரார்த்திக்கிறாரோ அவருக்காக ஒரு வானவர் "உமக்கும் அவ்வாறு உண்டாகட்டுமாக" என்று பிரார்த்திக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம் 2732 (அரபு இலக்க எண்).

வானவர்களை பொறுத்தவரை இறைவனது அனுமதி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யவும் அவர்களால் இயலாது. மேற்கண்ட ஹதீஸை கவணியுங்கள். நாம் பிறருக்காக தனிமையில் பிரார்த்தனை செய்யும்போது வானவர் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றால் அந்த வானவர் இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறார் என்பதை முதல் பகுதியாக விளங்க வேண்டும்.

இரண்டாவது பகுதி, இறைவன் வானவர்களை அனுப்பி வைக்கிறான் என்றால் நாம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை என்ற சமூக உணர்வை இறைவன் உயர்வாக கருதுகிறான் என்பதாகும்.

மூன்றாவது பகுதி, இவ்வாறு பிரார்த்திப்போருக்கு அந்த வானவர் உமக்கும் அதுபோன்று உண்டாவதாக என பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் அந்த நபருக்கு உதவுவதற்காக உத்தரவாதம் கொடுத்துவிட்டான் என்பதாகும். ஏனெனில் ஒரு வானவரின் பிரார்த்தனை என்பது இறைவனின் கட்டளை மூலம் வெளிப்படுவதாகும். இறைவன் நிச்சயமாக இந்த செயல் உடையோருக்கு உதவப்போகிறான் என்பதனால்தான் தமது அடியார்களான வானவர்களிடம் இந்த நபருக்காக இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறான்.

இந்த சிறப்பான அம்சங்களை ஒரு இறைவிசுவாசி முறையாக விளங்கிக்கொண்டால் பிறரின் சுமைகளை தமதாக எண்ணி அவருக்காக பிரார்த்தனை செய்வதை ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். அவ்வாறு ஒரு இறைவிசுவாசி செயல்படுவதின்மூலம், நாம் யாருக்காக பிரார்த்தனை செய்தோமோ அவரைப்போன்ற சோதனைகள் இறைவன் நாடி நாளை நமக்கு ஏற்படும்போது, வானவர் நமக்காக கேட்ட பிரார்த்தனையின் மூலம் இறைவனது உதவி அப்போது நமக்கு கிடைக்கும். இதைவிட வேறு என்ன தேவை சொந்தங்களே!!!

பிற சகோதர முஸ்லிமின் சோதனையை கண்டு மகிழும் இறைவன் வெறுக்கும் குணம் நமது வாழ்வில் வந்துவிடக்கூடாது. நாம் நமது சோதனை நேரங்களை எவ்வாறு உணர்கிறோமோ அதுபோன்று பிற முஸ்லிம்களின் சோதனைகளை உணர்வோமாக!!!! எல்லாம் வல்ல இறைவன் சகோதரதத்துவ உணர்வுகளை நம் உள்ளத்தில் அதிகரிக்கச் செய்வானாக!!!! பிறரின் சோதனை கண்டு கண்ணீர் வடிக்கும் உயரிய குணத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்பாலிப்பானாக!!!

(இன்னும் ஏராளம் இது தொடர்பாக பேச வேண்டியுள்ளது. பதிவு நீழ்வதால் சுருக்கி முடிக்கிறேன்)

Saturday, November 25, 2017

நெருக்கமான உறவுகளின் மரணத்தின்போது நபியவர்கள் கற்றுக்கொடுத்த ஈமானிய பாடம்!!!



நாம் நேசிக்கும் நெருக்கமான உறவுகள் இவ்வுலகைவிட்டு பிரியும்போது அதன் சோகத்தையும் அதனால் உள்ளம் அனுபவிக்கும் வேதனைகளையும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

என்றாலும் ஒரு இறைவிசுவாசி இதுபோன்ற சூழலில் எவ்வாறு மனதை ஈமானியப் பண்புகளால் பக்குவப்படுத்த வேண்டும் என்பதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.

நபியவர்களின் பேத்தியின் மரண வேளையில் நபிகளார் (ஸல்) அவர்கள் தம் மகள் ஜைனபுக்கு கற்றுக்கொடுத்த ஈமானிய பாடத்தை கேளுங்கள்....

மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!' என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். 
சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி), நூல் : புகாரி 1284.

மனதளவில் ஆழமான வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இவை இறைவனது நியதி, இவற்றை ஏற்று பொறுமை காப்பதே ஒரு முஃமினது செயலாக இருக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தம் செயல் மூலம் மகளுக்கு சொல்லி அனுப்புகிறார்கள்.
'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!'

நபியவர்கள் தம் மகளுக்கு சொல்லி அனுப்பிய இந்த ஈமானிய பாடம் நம் அனைவரது உள்ளத்திலும் வேரூன்றிப் பதிய வேண்டும். நேசமான உறவுகளே இன்றி இந்த உலகில் வாழ்வோர் எவரும் இல்லை. ஒன்றோ நாம் பிரிய வேண்டிய சூழல் உண்டாகும் அல்லது நம்மைவிட்டு நாம் நேசித்த உறவுகள் பிரிய வேண்டிய சூழல்கள் உண்டாகும்.

எந்நிலையாக இருந்தாலும் அதை ஈமானிய உணர்வுகளோடு எதிர்கொள்ள பழக வேண்டும். அந்த உணர்வுகளை நம்மை படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் நமக்கு ஏற்படுத்த முடியாது. இதற்காக இறைவனிடம் அதிகம் உதவி தேட வேண்டும்.

இதுபோன்ற சூழல்களை சந்திக்கும் நேரத்தில் மறதி எனும் சிறந்த அருட்கொடையை அல்லாஹ் நம்மீது விரைவாகப் பொழிந்து நமது உள்ளங்களை அமைதியுறச் செய்வானாக!!!!

Monday, November 20, 2017

இப்லீசிடம் அதிகம் மதிப்பிற்குரிய ஷைத்தான் யார் என்று உங்களுக்கு தெரியுமா???



இந்த தகவலை தெரியப்படுத்தும் முன் ஒன்றை அவசியமாக மக்களுக்கு பதிய வைத்துவிட வேண்டும். இப்லீஸ், ஷைத்தான் ஆகிய இருவரும் ஒருவர் தான் என்ற சிந்தனையில் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஆனால் இஸ்லாமிய அகீதா அவ்வாறு கிடையாது. இருவரும் ஒரே வேலையை செய்யக்கூடியவர்கள் தான் என்றாலும் இருவரும் வெவ்வேறானவர்கள் ஆவர். இப்லீஸ் என்பவன் மனிதனை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்விடம் நேரடியாக அனுமதி பெற்றவன் ஆவான். அவனது சந்ததிகள் தான் ஷைத்தான்கள் என்று அழைக்கப்படுவர். இப்லீஸ் என்பவன் ஷைத்தான்களின் தலைவனும் ஆவான். இந்த தகவலை ஆரம்பமாக தெரிந்து கொண்டால் தான் கீழ்காணும் செய்தியை இலகுவாக விளங்க முடியும்.

ஷைத்தான்களின் முழுநேரப்பணியே மனிதனை வழிகெடுப்பது தான். ஆனால் வழிகேடுத்தலில் பலவகையான அடிப்படைகள் உண்டு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும். நாம் எதை பெரிதாக நினைக்கிறோமோ அவை பெரும்பாலும் ஷைத்தான்களால் அளட்டிக்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை. எதனை அற்பமானதாக கருதுகிறோமோ அதில் தான் ஷைத்தான் அதிகம் கவணம் செலுத்துவான். உதாரணத்திற்கு பொய் பேசுதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல், பிறர் சொத்தை அபகரித்தல், பிறரது மானத்தில் சுயமரியாதையில் விளையாடுதல் போன்ற நம்மோடு கலந்துறவாடும் பல பாவங்களை நாம் கூறலாம். இவை அனைத்திற்கும் நாம் அற்பமான மதிப்பீடு உள்ளத்தால் கொடுத்து இருந்தாலும், இறைவனின் உபதேசங்களை படிக்கின்றபொழுது இவைகள் அனைத்தும் எத்தகைய கொடிய பாவங்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இவை போன்ற பாவங்கள் இறைவனது பார்வையில் கடுமையானது ஆகும். ஆகவே தான் இவற்றை அற்பமானதாக ஷைத்தான் நமக்கு சித்தரித்து இவற்றிலேயே முழுநேர கவணமும் செலுத்தி நம்மை நரக விழிம்பில் தள்ள முயற்சிகளை அவன் மேற்கொள்வான். அவ்வாறு ஷைத்தான் அற்பமானதாக நமக்கு சித்தரிக்கின்ற பாவங்களில் தலையாய பாவம் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விடுவதாகும்.

இந்த செயல் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரச்சனைகளை உள்ளத்தில் சுமந்தவராக ஆறுதல் தேடி கவலைகளோடு மனைவியை நோக்கி கணவர் வர, மனைவியோ தொலைக்காட்சியில் தொலைந்தவராய் கணவனின் அழைப்பிற்கு கர்வத்தோடு பதிலுரைக்க.... சண்டை சூடு பிடித்துவிடும். (உதாரணத்திற்காக ஒன்றை சொன்னேன்) இது இயல்பாக நடக்கும் விஷயமாகிப்போய் விட்டது!!!

கோபம் ஷைத்தானால் தூண்டப்படும் குணம் ஆகும். இதுபோன்ற புரிந்துணர்வு இன்மை காரணமாக கோபத்தை தூண்டிவிட்டு பலவகைப் பிரச்சனைகளை ஷைத்தான் கணவன் மனைவி உறவுக்குள் தூண்டிவிடுகிறான்.

இதேபோன்று சதாவும் பலவகையான பிரச்சனைகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்றாடம் நடப்பதும் அந்த பிரச்னைகள் சாதுவானவையாக இருந்தாலும் கூட அவற்றை விவாகரத்து வரைக்கும் இழுத்து கொண்டு செல்வதும் இன்றைய கால மக்களுக்கு மிகச் சாதாரணமாகி விட்டது.

இந்த செயலையும் நாம் பாவக்காரியமாக பார்ப்பதில்லை. ஆனால் கீழ்காணும் நபியின் வார்த்தைகளை கவணித்தால் இது எத்தகைய குற்றமாக இறைவனது பார்வையில் உள்ளது என்பதனையும், இப்லீஸ் இந்த வழிகேட்டை எத்தனை உயர்வாக பார்க்கிறான் என்பதனையும் விளங்கிக்கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்" என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை" என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, "நீதான் சரி(யான ஆள்)" என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5419.

தேவையற்ற குடும்ப பிரச்சனைகளின் காரணத்தால் இப்லீசிடம் ஷைத்தான்கள் உயர்ந்த மதிப்பெண்களை பெற்றுக்கொள்ள நாம் துணையாக இருக்கிறோம். இப்லீசிற்கு விருப்பமான செயல் இறைவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் செயல் ஆகும். ஆகவே இதில் கவணமாக நாம் செயல்பட வேண்டும். எப்பொழுதும் நாம் இறைவனின் அன்பை பெறவே இவ்வுலகில் செயல்பட வேண்டும், இப்லீஸை மகிழ்விக்க அல்ல.


எல்லாம் வல்ல இறைவன் இனியாவது நமது வாழ்வை திருத்தமாகவும் மகிழ்வாகவும் புரிந்துணர்வோடும் திருப்பிவிடுவானாக!!!

Tuesday, November 14, 2017

மரணித்தோரை மறந்துவிட வேண்டாம்!!!



இறைவன் மனிதர்களுள் ஏற்படுத்திய அதிசயமான ஒரு உணர்வு தான் மறதி என்கின்ற உணர்வாகும். இந்த உணர்வு அவசியம் சில நிலைகளில் நமக்குள் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நாம் இயல்பாக இந்த உலகத்தில் நடைபோட முடியும்.

ஆனால் சில விஷயங்களை நாம் மறக்க கூடாது அதிகம் அதிகம் நினைவுபடுத்த வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் ஆகவே முக்கியமான ஒன்று தான் மரணம். நமது வாழ்வு பரிசுத்தமாவதற்கு மரண சிந்தனை என்பது மிகப்பெரிய ஆயுதமாகும்.

இதேபோன்று நாம் மறக்கக்கூடாத ஒரு முக்கியமான செயல் ஒன்று உள்ளது. நபியவர்கள் தாம் வாழ்ந்த காலம் வரைக்கும் மறக்காமல் செயல்படுத்தி வந்த ஒரு அழகிய செயல் அது. அதுதான் தம்மோடு வாழ்ந்து மரணித்த அன்புத்தோழர்களை தாம் மரணிக்கின்ற வரை மறவாமை இருந்த குணமாகும்!!!

தம்மைவிட்டு மறைந்து விட்டார்கள் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மக்களை மறக்கவில்லை. ஜன்னத்துல் பகீ எனும் அடக்கஸ்தலத்திற்கு அதிகமாக நேரம் ஒதுக்கி செல்லும் வழக்கம் நபியவர்களிடம் இருந்தது. அங்கு சென்று அந்த தோழர்களுக்காக அதிகமாக பிரார்த்தனை செய்வார்கள். நபியின் இந்த வழிகாட்டல் நம்மில் அதிகமானோரின் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. இறைவன் கூட நல்ல மனிதர்களின் குணங்களில் ஒன்றாக கீழ்காணும் பிராத்தனை இருந்ததாக கூறுகிறான்....

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ

"எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!
திருக்குர்ஆன் 59:10

ஆனால் இன்றைய நமது நிலையை உரசிப்பார்க்கும் பொழுது ஊரில் எவரேனும் மரணம் என்றால் மட்டும்தான் மண்ணறை சந்திப்போ பிரார்த்தனையோ வெளிப்படுகிறது????!!!!! இந்த நிலை இப்படியே தொடருமாக இருந்தால் நாளை நாம் மண்ணறைக்குள் வைக்கப்படும் பொழுது கூட இதே பலவீனமான நிலையே மக்கள் மத்தியில் தொடரும். நமக்காக பிரார்த்தனை செய்ய எவரும் இருக்க மாட்டார்கள்.

மரணித்த நபர்களை எண்ணி மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க கூடாது என்றுதான் மார்க்கம் சொல்கிறதே தவிர அவர்களை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று மார்க்கம் போதிக்கவில்லை.

நமது தவறுகளுக்காக மண்ணறையில் நம்மை இறைவன் தண்டிப்பானாக இருந்தால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) உயிரோடு இந்த உலகத்தில் வாழும் நமது சன்மார்க்க உறவுகள் நமக்காக கேட்கும் பிரார்த்தனைகள் பயனளிக்க வாய்ப்புள்ளது அல்லவா??? ஆகவே தான் நபிகளார் இதனை நமக்கு வழிகாட்டினார்கள்.

நம்மோடு வாழ்ந்து மரணித்த நபர்களை ஒருகணம் எண்ணிப்பாருங்கள். அவர்களது குற்றத்திற்காக அவர்களை இறைவன் தற்போது தண்டித்து கொண்டிருந்தால்???!!!

நாம் அவர்களுக்காக இறைவனிடம் கண்ணீர் வடித்தால் இறைவன் நிச்சயமாக அந்த நபர்களை மன்னிப்பான் (அவர்கள் இணைவைக்காது மரணித்து இருந்தால்). அவ்வாறு மன்னிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதற்காகவே திருமறையில் நாம் மேலே சுட்டிக்காட்டிய பிரார்த்தனையை இறைவன் பதிய வைத்துள்ளான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நம்மோடு வாழ்ந்த ஈமானிய உறவுகளை நினைவு படுத்துங்கள்!!! அவர்களது பாவக்கறைகளை கருணையாளன் மன்னிப்பதற்காக உங்கள் பிரார்த்தனைகளில் அவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!!!

நம் வாழ்வு பரிசுத்தமாவதற்காகவும், மறுமையின் முதல் எட்டை தொட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணறைவாசிகளின் வாழ்வு பரிசுத்தமாவதற்காகவும் நேரம் ஒதுக்கி அடக்கத்தலங்களை சந்திப்போமாக!!!!

இந்த செயலுக்கு உயிரோட்டம் கொடுக்காததன் விளைவு நாளை நம்மையும் பாதித்து விடும் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.

செயல்படுத்துவோம்....! செயல்பட தூண்டுவோம்....!

Tuesday, November 7, 2017

உணர்வுகளாலும் தண்டிக்க இயலும்....!!!




நாம் அதிகமாக நேசிக்கும் ஒன்றை இழந்து விட்டால் அதானல் ஏற்படும் வலி உணர்வுகளை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.

குறிப்பாக நாம், மனிதரக்ளுள் ஒருவர் இன்னொருவரை அளவுக்கதிகமாக நேசித்து விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அவர்களை பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகின்றபொழுது, அந்த வேதனையின் உச்சத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்.

அவ்வாறுதான் இறைவன் உறவுகளுக்குள் பிரிவு என்கின்ற புறச்சாதனமில்லா வேதனையை வடிவமைத்துள்ளான். இது புறச்சாதனம் மூலம் கொடுக்கும் வேதனைகளைக் காட்டிலும் கொடியது.

இறைவன் திருமறையில், இலகுவாக சுவனம் சென்று விடலாம் என்று என்னிக்கொண்டீர்களா??? என நம்மைப்பார்த்து கேட்கிறான். அதே இறைவன் இன்னொரு இடத்தில் பிரிவு எனும் சோதனையை இறைவனுக்காக நீங்கள் பொறுத்தால் உங்களுக்கு சுவனம் உண்டு என்றும் கூறுகிறான்.

ஆம், பிரிவு எனும் சோதனை என்பது இலகுவான ஒன்றல்ல!!! மிகப்பெரும் சோதனைகளில் இதுவும் ஒன்று என்பதனால் தான் இறைவன் அதற்குண்டான பரிசாக நமக்கு சுவனம் தருவதாக வாக்களிக்கிறான்!!!

பிரிவுகள் கொடிய வேதனை என்றாலும் இறைவனுக்காக அவற்றை சகித்துக்கொள்ள நாம் பழக வேண்டும்.

இதுபோன்ற எண்ணங்கள் என் உள்ளத்தில் உதிக்கின்றபோழுது என் ஆழ்மனதில் தோன்றிய சிந்தனை இதுதான்.....

இவ்வுலகில் நாம் அளவுக்கதிகமாக நேசித்த மனிதர்கள், நம்மை வெறுத்தாலோ, மௌனமாக நம்மைக் கடந்து சென்றாலோ, நம்மை காணாததுபோல் வெறுத்து ஒதுங்கி நின்றாலோ
உள்ளம் வெடித்துவிடுவது போன்ற கொடிய உணர்வை நாம் சுகிக்கிறோம்.....

நம்மை படைத்த ரட்சகன், நாளை மறுமையில் சில மனிதர்களை பார்க்க மாட்டான், அவர்களோடு பேசமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்த மாட்டான் என்று நாம் படித்த இறைவசனத்தையும் நபிமொழிகளையும் கண்முன்னே நிறுத்திப்பார்ப்போம்.

இறைவன் இவ்வாறு செய்வதற்கான காரணம் இந்த நிலையை அடைந்த நபர்களுக்கு வேதனையளிக்கவே என்பது ஒருபுறம் இருந்தாலும்,
ஒரு நல்ல இறைவிசுவாசி தாம் செய்த குற்றத்தால் இந்த நிலையை அடைந்து விடுவாராயின் ஏனையை வேதனைகளைவிட இதுவே அவரது வேதனையின் உச்சகட்டமாக இருக்கும்.

இறைவனை நேசிக்க தெரியாதவனுக்கோ இறைவனது புறக்கணிப்பு ஓர் பொருட்டல்ல. அவன் தமக்கு ஏற்படப்போகும் வேதனைகளை குறித்து மட்டுமே அஞ்சுவான் கவலைப்படுவான் கைசேதப்படுவான்.

ஆனால் இறைவனை நேசித்து வாழும் ஒரு இறைனம்பிக்கையாளரை பொறுத்த வரையில், இறைவனது மௌனத்தையோ, இறைவனது புறக்கணிப்பையோ அவரால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது.

இறைவன் தரப்போகும் உடல் சார்ந்த வேதனைகள் ஒன்றாகவும், இறைவன் தம்மை புறக்கணித்து விட்டான் என்ற உள்ளம் சார்ந்த வேதனை ஒன்றாகவும், மொத்தம் இருவகையான தண்டனைகளை இறைவனை நேசித்து வாழ்ந்த மனிதன் மட்டுமே அந்த இடத்தில் உணருவான்....

இத்தகைய நிலையில் இருந்து அல்லாஹ் நம்மை அவனது கருனைமூலமாக பாதுகாக்க வேண்டும்.....

இறைவன் மறுமையில் எதுபோன்ற பாவிகளை பார்க்க மாட்டன், அவர்களோடு பேசமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்த மாட்டன் என்ற மார்க்க விளக்கத்தை ஒரு முஃமின் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் அறியாமல்கூட அவற்றில் விழுந்து விடாமல் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.


நேரம் கிடைக்கின்றபொழுது இறைவனும் இறைத்தூதரும் சொல்லும் இத்தகைய தண்டனைக்குரியோர் யார் என்பதை தொடராக பதிவிடுவோம்....! இனஷா அல்லாஹ்....!

Monday, November 6, 2017

இறைவனது சந்திப்பிற்கு நாம் தயாரா???



ஒரு மனிதன் இறைவனை சந்திக்க வேண்டும் என்றால் அதற்குண்டான வழிமுறை நமது வாழ்வு முடிவுக்கு வர வேண்டும் என்பதே ஆகும். நம்மில் எவரும் மரணம் என்ற வழியின் மூலமாகவோ அல்லது யுகமுடிவு நாளின் மூலமாகவோ அன்றி தமது ரப்பின் சந்திப்பை அடைந்துகொள்ள முடியாது.

இறைவனது சந்திப்பு நிச்சயமாக நிகழும். இதைப்பற்றி நாம் சிந்திக்கின்றபொழுது நாம் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்தால் தான் இறைவனது சந்திப்பை பெற முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆனால் நம்மில் பெரும்பான்மை மக்களுக்கு மரணம் என்றாலே ஒருவிதமான பயஉணர்வு. யாராக இருந்தாலும் மரணம் பற்றிய பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் மரண பயத்திற்கும் இறைமறுப்பாளனின் மரண பயத்திற்கும் ஆகப்பெரிய வித்தியாசம் உண்டு. என்றுமே இறைமறுப்பாளர்கள் அஞ்சுவதை போன்று மரணத்தை எண்ணி ஒரு இறைவிசுவாசி அஞ்சிவிடக்கூடாது.

இறைமறுப்பாளனின் பயமோ இவ்வுலக வாழ்வை சார்ந்து இருக்கும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் மரண பயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கோர் முன்மாதிரியாக நபியவர்களின் காலத்தில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள்!!!

நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்' என்று கூறினார்கள். அப்போது 'ஆயிஷா(ரலி) அவர்கள்' அல்லது 'நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்' 'நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கெளரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள் பாலி)ப்பதை வெறுப்பான்' என்று (விளக்கம்) சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபாதத்திப்னுஸ் ஸாமித் (ரலி), நூல் : புகாரீ 6507.

இறைஅச்சத்திற்கு முன்மாதிரிகளாக விளங்கிய நபித்தோழர்களின் மரண பயத்தை நபியவர்கள் எவ்வாறு விளக்குகிறார்கள் என்று பாருங்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், இறைவனது சந்திப்பை தாம் விரும்புகிறோம் ஆனால் மரணம் என்றால் பயம் அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின் நாங்கள் இறைவனது சந்திப்பை வெறுத்தவர்கள் ஆகிவிடுவோமோ என்று நபியிடம் கேள்வி எழுப்ப, ஒரு முஃமினுக்கு மரண வேளையில் பயம் தோன்றினாலும் அந்த பயத்திலிருந்து அல்லாஹ் அவர்களை மீட்டுவான். சுவனம் குறித்த நன்மாராயம் அவருக்கு கூறப்படும். இறைவனது நன்மாராயத்தை பெற்றுக்கொண்ட ஒரு முஃமின் இவ்வுலகில் இருக்க விரும்ப மாட்டான். தமது இறைவனை உடனே சந்திக்க வேண்டும் என ஆசை கொள்வான். அவ்வாறே இறைவனும் அந்த அடியானை சந்திக்க ஆசை கொள்வான் என்று நபியவர்கள் அழகியதொரு விளக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மரணம் குறித்த பயம் ஏற்பட்டாலும் மரணத்தை அடையும் இறுதியான கட்டத்தில் ஒரு முஃமினுக்கு நிகழ்பவைகளைப் பற்றி நபியவர்கள் எடுத்து சொன்னதும் அழகிய முறையில் அவர்கள் சாந்தமானார்கள்.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நமது நிலை என்னவாக இருக்கும்????

மரணத்திற்கும் பயம்!!!!
மரணவேளையை அடைந்தால் நபிகளார் சொன்ன இந்த நன்மாராயங்கள் எமக்கு கிடைக்குமா என்பதை எண்ணியும் பயம்!!!! 
நம் வாழ்க்கைதான் நமது மறுமை வாழ்வை பற்றி இப்பொழுதே பேசுகிறதே.......

மரணம் என்ற இறைவனது அழைப்பு! அது எந்த நொடியில் எம்மை சந்தித்தாலும் அதை இன்முகத்தோடு நான் ஏற்கத் தயார் என்ற வாழ்வாக நமது வாழ்வு மாற வேண்டும். நாம் எவ்வாறு வாழ்ந்தால் அப்படியான ஒரு தருணம் நமது வாழ்வில் குடிகொள்ளும் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதற்குண்டான போராட்டம் நம் வாழ்வில் எப்பொழுதும் தொய்வடைந்து விடக்கூடாது.

எவரும் பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த அறிவுரையை எம் தோழர்களுக்கு எழுதுகின்ற வேளையில் என் உள்ளமும் சொல்கிறது நானும் அந்த மரணத்தை சந்திக்க இன்னும் தயாராகவில்லை என்று.....

எதுவாக இருந்தாலும் இறைவனது வெறுப்பை பெற்ற நிலையில் நமது உயிர் இவ்வுலகைவிட்டு பிரித்துவிடக் கூடாது. கருணையாளன் அல்லாஹ் நமது பிழைகளை பொருந்திக்கொண்டு வெற்றியாளர்களாக இறுதி நேரத்தில் நம்மை அரவணைப்பானாக....!!!