தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, September 30, 2017

பலவீனமான செய்தி



الأدب المفرد مخرجا (ص: 187)
529 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُضَرَ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ، عَنْ حِبَّانَ بْنِ أَبِي جَبَلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: لَا تَعُودُوا شُرَّابَ الْخَمْرِ إِذَا مَرِضُوا
[قال الشيخ الألباني] :  ضعيف

மது அருந்துபவன் நோயுற்றிருக்கும் போது நலம் விசாரிக்க செல்ல வேண்டாம் என நபியவர்கள் சொன்னதாக இமாம் புகாரி அவர்கள் எழுதிய அதபுல் முஃப்ரத் என்ற கிரந்தத்தில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

இந்த செய்தி பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் உபைதுல்லாஹ் இப்னு ஸஹ்ர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என பல ஹதீஸ் துறை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

அதபுல் முஃப்ரதில் பதிவு செய்யப்பட்டுள்ள பலவீனமான செய்திகளை தொகுத்து ளஈஃப் அதபுல் முஃப்ரத் என்ற ஒரு கிதாபை இமாம் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தொகுத்துள்ளார்கள். அதில் மேற்கண்ட செய்தி பலவீனம் என்று இமாம் அல்பானி அவர்களால் விமர்சிக்கப்பட்டு 71-வது இலக்கத்தின் செய்தியாக பதியப்பட்டுள்ளது.

மேலும் இமாம் தஹபீ அவர்கள் உபைதுல்லாஹ் இப்னு ஸஹ்ரிடம் குழப்பம் உள்ளதாகவும், இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத்தக்கவை என்றும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் உபைதுல்லாஹ் இப்னு ஸஹ்ர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார் என்று விமர்சிக்கிறார். (அள்ளுஅஃபாவு வல்மத்ரூக்கீன் 327).
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அவர்களும் இவரை பலவீனமான அறிவிப்பாளர் என விமர்சிக்கின்றார். (அல்ஜர்ஹு வ தஹ்தீல் 5/1499)

இமாம் ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுள் பாரியில் இந்த செய்தி மற்றும் இதைவிட கூடுதல் தகவல்களுடன் இடம்பெறும் செய்திகளையும் அறிவிப்பாளர் தொடரோடு குறிப்பிட்டுவிட்டு அவை அனைத்து செய்திகளுமே பலவீனமானவை தான் என்று கூறுகிறார் (சுருக்கம்). ஃபத்ஹுள் பாரி 41/11.

ஆகவே இது பலவீனமான செய்தியாகும். இந்த பலவீனமான செய்தியைக்கொண்டு நாம் அமல் செய்ய முடியாது. இந்த செய்தி சமூக வலைதளங்கள் மூலமாக அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தி போலியானது என்பதை இதனை பரப்புகின்ற அனைத்து மக்களுக்கும் எத்தி வைய்யுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: நோயாளியை நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்பது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். பொதுவான கடமையாகத்தான் நபியவர்கள் இதனை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். அதனுள் இவ்வாறு இருந்தால் தான் நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்று ஷரத்துக்களை விதித்துள்ளதாக ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் நாம் காண கிடைக்கவில்லை.

சட்ட ரீதியாக இதுபோன்ற செய்திகளை நாம் அணுகுகின்ற பொழுதும்கூட இந்த செய்தி மத்ன் ரீதியிலும் பிழைகளை உள்ளடக்கி உள்ளதை நம்மால் கண்டறிய முடிகிறது (இறைவனே மிக அறிந்தவன்). அதாவது,

மது அருந்துபர் நோயுற்றால் நலம் விசாரிக்கக்கூடாது என்று இருக்குமேயானால், பாவங்களில் எல்லாம் மிகப்பெரும் பாவமான, அல்லாஹ்வின் மன்னிபை பெற்றுக்கொள்ளவே இயலாத பாவமான, நிரந்தர நரகத்தை பெற்றுத்தரும் பாவமான இணை வைப்பை செய்து வாழ்ந்த ஒரு யூதச் சிறுவன் நோயில் வீழ்ந்திருக்கும்போது நபியவர்கள் நலம் விசாரிக்க ஏன் சென்றார்கள்???

மது அருந்துதல் பெரும் பாவம் என்பதனால் தானே அதன் மூலமாக பாதிப்படைந்த ஒரு நபரை நலம் விசாரிக்க செல்லக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டியவை, மது அருந்தும் நபர் இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டால் இறைவன் நாடினால் அவர் மன்னிப்பை பெற ஒரு வாய்ப்பும் உண்டு. மது அருந்துபவர்களை நோக்கி அல்லாஹ் இவர்களை ஒருபோதும் நான் மன்னிக்கவே மாட்டான் என்று எங்குமே சொல்லவில்லை.

ஆனால் இணை வைப்பு என்ற மிகப்பெரும் அநியாயத்தை ஒருவன் செய்தால் அந்தக்குற்றத்தை  அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் என்று திருமறையில் நமக்கு போதனை செய்கிறான்.

ஆகவே பெரும் பாவம் என்று சொல்லப்பட்ட மது அருந்துதலை விட கொடிய பாவம் தான் இறைவனுக்கு இணை வைத்தல் என்ற பாவம். இதை செய்து வந்த ஒரு யூதச் சிறுவன் நோயுற்ற பொழுது நபியவர்கள் அந்த சிறுவனை நலம் விசாரிக்க சென்றுள்ளார்கள் என்றால் இதைவிட ஒரு உதாரணம் நமக்கு தேவை இல்லை, எத்தகைய நபராக இருந்தாலும் நாம் நலம் விசாரிக்க செல்லலாம் என்பதை புரிந்து கொள்வதற்கு.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!!!