தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Friday, June 22, 2018

பிறர் உள்ளத்தை தீர்மானிப்போரே.... எச்சரிக்கை!!!



இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவன் என்றால் யார், அவனது ஆற்றல்கள் என்ன, இறைவனது ஆற்றல்கள் என்று கூறப்படும் பகுதிகளில் நாம் எவ்வாறு கவனமாக செயலபட வேண்டும் என்பது தொடர்பான அனைத்து கொள்கை விளக்கங்களும் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இது தொடர்பான முறையான விளக்கம் இல்லாத மக்கள் அல்லது விளக்கம் இருந்தும் மனோஇச்சைகளை முன்னிலைப் படுத்தும் மக்கள் தமது மறுமை வாழ்வை தவிடுபொடியாக்கும் பல செயல்பாடுகளை மிகச்சாதரணமாக செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதில் ஒரு பகுதிதான் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான இல்முல் ஃகைப் எனப்படும் மறைவான ஞானம் ஆகும். இந்த மறைவான பகுதியில் மறுமை சுவர்க்கம் நரகம் போன்ற எண்ணற்ற பல பகுதிகள் உள்ளன. அவற்றுள் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது மனிதனின் உள்ளம் ஆகும். ஒரு மனிதனின் உள்ளம் எதை சார்ந்துள்ளது என்பதும் முழுக்க முழுக்க இறைவன் மட்டுமே அறிந்துகொள்ள முடியுமான ஒரு பகுதியாகும். நபியாக இருந்தாலும் பிற மனிதர்களின் உள்ளத்தை அறிந்து கொள்ள முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அகீதாவாகும்.

ஒரு மனிதரை பற்றி நாம் மதிப்பிடுவதாக இருந்தால் மார்க்கம் அனுமதித்த வகையில் வெளிப்படையான செயல்பாடுகளை வைத்து இவ்வுலகம் சார்ந்த விஷயங்களில் மட்டும் நாம் மதிப்பிடலாம் அதில் குற்றமில்லை.

அதேபோன்று ஒரு மனிதர் தெளிவாகவே இறைவனுக்கு இணைவைக்கிறார் என்று தெரிந்தால் அவர் இணைவைப்பாளராக இருக்கிறார் என்றும் சொல்லலாம்.

ஆனால் இவை அல்லாத காரியங்களில் மறுமையோடு தொடர்புபடுத்தி மதிப்பிடுவதற்கோ அல்லது தீர்ப்பு வழங்குவதற்கோ எவருக்கும் உரிமை இல்லை அதற்குண்டான சக்தியும் நமக்கு இல்லை.

ஆனால் இன்றைய சூழலை நாம் பார்க்கிறோம், தமக்கு விருப்பமில்லாத நபர் இணைவைப்பை விட்டு ஒதுங்கியவராக இருந்தாலும்கூட அவர் குறித்து விமர்சனம் செய்யும்பொழுது அவரது மறுமை வாழ்வு சார்ந்த சாடலே பெரும்பாலும் நம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

நரகவாதி, சுவனவாதி, நயவஞ்சகன், விளம்பர மோகம் உள்ளவன், தூய்மையான எண்ணம் உள்ளவன் என்றெல்லாம் கோபத்திலும் நல்லெண்ணத்திலும் நமக்கு அறிவு கொடுக்கப்படாத விஷயங்களில் எல்லை மீறி தீர்ப்பளித்து திரிகிறோம். நன்மையோ தீமையோ ஒரு மனிதனின் உள்ளம் சார்ந்த விஷயங்களில் எவரும் ஆர்வக்கோளாறில் மூக்கை நுழைக்க கூடாது. அதனால் முதலில் நமக்குத்தான் பாதிப்பு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதனை புரிந்துகொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவத்தை நாம் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.
வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.'
நூல் : புகாரீ 1243.

உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) அவர்கள் ஒரு மிகச்சிறந்த நபித்தோழர். இந்த நபித்தோழர் சிறந்த தியாகத்திற்கு சொந்தக்காரர் என்பதனை உம்முல் அலா என்ற நபித்தோழியர் அவரது ஜனசாவை பார்த்து சொன்ன வார்த்தைகளை வைத்தே நாம் புரிந்துகொள்ள முடியும். சிறந்த மனிதர் என்பதின் காரணத்தினால் தான் உம்முல் அலா (ரலி) அவர்கள் அல்லாஹ் உம்மை கண்ணியப்படுத்தி விட்டான் என்று உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) அவர்களின் ஜனாஸாவை நோக்கி சொன்னார்கள்.

உண்மையில் அவர்கள் தியாகச்சீலராக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது ஒருவரது உள்ளம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இதை சொன்ன உம்முல் அலா (ரலி) அவர்களை கண்டிக்கிறார்கள். அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான் என்பது உமக்கு எப்படி தெரியும்? என்று அவர்களது தவறான போக்கை அங்கேயே உணர்த்துகிறார்கள்.

காரணம் இது இறைவனுக்கு மட்டும் தெரிந்த ஒரு விஷயம் ஆகும். இந்த மறைவான ஞானத்தில் நாம் கைவைக்க கூடாது அது நமது மறுமை வாழ்வை பாழ் படுத்திவிடும் என்பதால் தான் அல்லாஹ்வின் தூதரது முகத்திற்கு முன்னாள் நடந்தேறிய இந்த செயலை அங்கேயே கண்டித்து இருக்கிறார்கள்.

நாம் ஒரு மனிதரை நல்லவராக நினைத்திருப்போம் ஆனால் நாளை மறுமையில் அவர்களது நிலை மோசமாக மாற வாய்ப்புண்டு. அதே போல நாம் சிலரை மோசமானவராக நினைத்து பலரிடம் பலவாறாக அவரைப்பற்றி பேசித் தீர்த்திருப்போம் ஆனால் நாளை மறுமையில் அவரது நிலை கண்ணியமானதாகவும் மாற வாய்ப்புண்டு. எதை வைத்தும் எவரது நிலையையும் நாம் தீர்ப்பளித்து விடக்கூடாது.

மக்கள் சிலரைப்பற்றி இறைவழிப் போராட்டத்தில் இறந்துபோன ஷஹீத் என்றும், இறை மார்க்கத்தை எடுத்து சொல்வதில் சிறந்த மார்க்க அறிஞர் என்றும், அல்லாஹ்வின் பாதையில் பொருளாதாரத்தை வாரி இறைக்கும் வள்ளல் என்றும் தவறாக எண்ணியிருப்பார்கள். இம்மூன்று வகையான நபர்களும் முகஸ்துதிக்காக செயல்பட்டு இருந்ததால் நாளை மறுமையில் முகம் குப்புற நரகில் வீசப்படுவார்கள் என்று நபியவர்கள் சொன்ன நபிமொழிகளை எல்லாம் நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். நம் பார்வையில் நல்ல மனிதர்கள் ஆனால் அவர்களது உள்ளமோ பிறர் தம்மை புகழ வேண்டும் என்று செயல்பட்டுள்ளது என்பதால் அல்லாஹ் அவர்களை நரகில் வீசுகிறான்.

நாம் நல்லவர்கள் என்று எண்ணியிருக்கும் பலரின் நிலையே இப்படி மாற்றப்படும் என்பதை குறித்து பேசும் இந்த நபிமொழி நமக்கு எதை உணர்த்துகிறது. உள்ளம் சார்ந்த ஒரு மனிதனின் செயல்பாடுகளை நாம் நல்லவையாகவோ தீயவையாகவோ தீர்ப்பளிக்கவே இயலாது. அது இறைவன் மறுமையில் வெளிப்படுத்தும்பொழுது தான் நமக்கு தெரியும் என்பதையே இவை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

என்றாலும் நமது நாவுகள் ஏன் பிறரது உள்ளம் சார்ந்த விஷயத்தில் அச்சமில்லாமல் அசைக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இறைவனுக்கு இணைவைக்க கூடாது என்று நன்கு விளங்கிய குர்ஆன் சுன்னாஹ் பேசக்கூடிய மக்களும்கூட இறைவனது ஷிஃபாத்களில் (பண்புகளில்) எப்படி கை வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.

மிகவும் கவனம் தேவை. எல்லாம் வல்ல இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

பிறர் உள்ளம் சார்ந்த விஷயங்களில் வரம்புமீறி குற்றம் இழைத்து திரிவதை விடுத்து மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் நம் உள்ளத்தை நாம் மதிப்பிட பழகினால் ஏரளமான மாற்றங்களை வாழ்வில் காண்பதற்கு அது உகந்ததாக இருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் மார்க்கத்தில் தெளிவை தந்து குற்றம் இழைக்கும் சூழல்களில் இருந்து நம்மை பாதுகாப்பானாக...!