தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, February 29, 2016

கல்விக்கூடங்கள் எதற்காக???



அன்புள்ள இஸ்லாமிய சொந்தங்களே! நமது பிள்ளைகள் பயிலும் பள்ளிகூடங்கள் மற்றும் கல்லூரிகளின் நிலைப்பற்றி இந்த கட்டூரையின் மூலம் சிறியதொரு நினைவூட்டுதல் வழங்கலாம் என்று நான் விரும்புகிறேன்!

நாம் வாழும் தற்போதைய காலச்சூழலில் எல்லாத்துறைகளும் மிக மோசமானதாகவே சென்று கொண்டிருக்கிறது. இறை நினைவோடு சதா வாழ வேண்டும் என்று எண்ணக்கூடிய ஒரு இறைவிசுவாசி கூட தமது நஃப்சை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டத்தை தம் வாழ்வில் தொடுக்க வேண்டியுள்ளது!!!

நிலைமை இவ்வாறு இருக்க, இதுபோன்ற அனாச்சாரங்களையெல்லாம் பிஞ்சுள்ளங்களில் இருந்து வேரோடு களையெடுத்து, பிற்காலத்தில் சிறந்த மனிதர்களாக நமது குழந்தைகளை உருவாக்க வேண்டிய கடமைபட்ட கல்விக்கூடங்களும் கூட பெரும்பாலும் பிள்ளைகளுக்கு நஞ்சூட்டித்தான் இறுதியில் வெளியேற்றுகின்றனர்.

பாடசாலைகள் என்றால் பிள்ளைகளுக்கு கல்வியோடு வாழ்வியல் ஒழுக்க வழிகாட்டுதலும் கொடுக்கப்படும் இடமாகும். ஆனால் இன்றைய நிலைமை அப்படியல்ல. உலகக் கல்வி என்று முழுக்க முழுக்க பொருளாதாரத்தை எதிர்நோக்கிய கல்வி ஒருபக்கமும், மார்க்க சிந்தனைகளை ஊட்டுவதற்காக மார்க்க கல்வி போதிக்கப்படும் பாடசாலை என்று மற்றுமொரு பக்கமுமாக கல்விகள் பிரிந்து கிடக்கின்றன.

இஸ்லாமியக் கல்விக் கூடங்களில் கூட உலகக் கல்வியின் தரம் மட்டும் தான் பார்க்கப் படுகின்றனவே தவிர, அந்த கல்விக் கூடங்களும் மார்க்க விழுமியங்களை மாணவர்களுக்கு போதிப்பதில்லை. பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதும் இல்லை.

இந்த வேதனையை நாம் எங்கு சொல்வது????

நபிகளார் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்களில் அதிகமானோரும் கல்வி பயின்றவர்கள் தான். ஆனால் அங்கு கல்விகள் பிரிக்கப்பட்டு இருக்கவில்லை. இரண்டும் இணைந்தே இருந்தன. இணைத்தே போதிக்கப்பட்டன!

மார்க்கத்தின் வழிகாட்டலை போதிக்கும் திருமறைக்குர்ஆன், விஞ்ஞானிகளே வியந்துபோகும் எண்ணிலடங்கா உலக இயல்புகளைப் பற்றி பேசுகிறது. இது இஸ்லாம் மனிதர்களுக்கு போடும் அறிவு விருந்து இல்லையா??? இது உலகக் கல்வி இல்லையா???

ஆனால் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? உலகக் கல்விக்கும் மார்க்க கல்விக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்! உலகக் கல்வி ஏறாத கூமுட்டைகளை அள்ளி வந்து மார்க்கம் போதிக்கப்படும் மதரசாக்களில் தள்ளுகிறோம். இதுதான் இந்த கல்விகளைப் பற்றி நாம் வைத்திருக்கும் மடத்தனமான எண்ணங்கள்.

இந்த எண்ணங்களால் தான் வாழ்விற்கு அத்தியாவசிய தேவையான ஒழுக்க விழுமியங்களைப் போதிக்கும் கல்வி நம்மை விட்டும் நம் பிள்ளைகளை விட்டும் வெகு தூரத்திலேயே இருக்கிறது.

எனதருமை சகோதர சகோதரிகளே! கல்விக்கூடங்களில் நாம் நமது பிள்ளைகளை சேர்க்கும்போது, நமது பிள்ளை நன்கு சம்பாதித்து நம்மை கவனிக்க வேண்டும் என்பது மட்டும் நமது நோக்கமாக இருந்து விடக்கூடாது.

அப்படி நமது நோக்கம் இருக்குமாக இருந்தால்...

நாம் கண்கூடாகப் பார்க்கிறோம், எந்தக் கல்வியைப்(மார்க்கக் கல்வியைப்) பற்றி நாம் சிறிதும் அக்கறை கொள்ளாமல்  நமது பிள்ளைகளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைத்தோமோ,

அதன் விளைவு....

பிள்ளை கை நிறைய சம்பாதிக்கிறான்!!!

ஆனால் பொருளாதாரம் வரும் வழியோ ஹராமானவையாக இருக்கின்றன!!!

எந்தக் கல்வியைப்(மார்க்கக் கல்வியைப்) பற்றி நாம் சிறிதும் அக்கறை கொள்ளாமல் நமது பிள்ளைகளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைத்தோமோ,

அதன் விளைவு,

பிள்ளை மருத்துவராகி விட்டான்,

இன்ஜினியராகி விட்டான்,

கலெக்டராகி விட்டான்......

ஆனால்,

எந்த நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க வைத்தனரோ

அந்த நோக்கம் அவனோடு நின்று விட்டது....

பெற்றோர்கள் தங்குவதற்காக புதியதோர் இல்லம் தேடப்படுகிறது.

முதியோர் இல்லங்கள்!!!???

வாடகை வீட்டில் வாடும் எனக்கு எனதருமை மகன் வீடு கட்டிக் கொடுப்பான் என்ற கனவுகள் மண்ணாய் போகிறது.

மண்ணறைக்கு செல்லும் வரைக்கும் மகனுடைய தொடர்பு அறுந்து போய்விடுகிறது!!!!

இந்த நிலை நம் சமூகத்தில் இல்லை என்று கூற முடியுமா என் அன்பு சொந்தங்களே?

இவைதான் நாம் நமக்கும் நமது பிள்ளைக்கு மறுமைக்காக சேமிக்கும் சொத்தா என் அருமை சகோதர சகோதரிகளே???

பிள்ளைகள் இறந்து போன வீடுகளில், வயதான நிலையில் வாடும் பெற்றோர்களை அரவணைக்கத்தான் முதியோர் இல்லங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் இன்றோ, பிள்ளைகளால் விரட்டியடிக்கப்படும் பெற்றோர்களை அரவணைக்க முதியோர் இல்லங்கள் உருவாக்கப்படுகின்றன!

பிள்ளையின் சம்பாத்தியத்தில் தனியொரு முதியோர் இல்லமே அமைத்து விடலாம் என்ற நிலைக்கு பிள்ளையிடம் சொத்துக்கள் இருந்தாலும், பெற்றோர்கள் நாயை விட கேவலமான நிலையில் வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்படுகின்றனர்.

இந்த நிலை உருவாக யார் காரணம்???

உலக நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து பிள்ளைகளை கல்விக் கூடங்களில் சேர்த்து விட்டு மகிழ்வடைந்த நாம் இதற்கு காரணம் இல்லையா???

தொழுகையை கற்றுக் கொடுக்கும் கல்விக் கூடங்களில் கல்வித்தரம் முறையாக இருக்காது, ஜும்ஆ தொழுகைக்கு கூட அனுமதிக்காது விட்டாலும் பரவாயில்லை கல்வித்தரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று கிருத்தவ கல்விக் கூடங்களில் பிள்ளைகளை கையில் பிடித்துக்கொண்டு வரிசையில் நின்ற நாம் இதற்கு காரணம் இல்லையா???

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய நாம், ஆண் பெண் வித்தியாசம் பாராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழாக்கள் என்ற பெயரில், விபச்சாரத்தை சமூகத்திற்கு போதிக்கும் சினிமா கூத்தாடிகளின் சாயலை பிள்ளைகளுக்கு பூசி மேடையில் ஆடவிட்டு மகிழ்ந்த நாம் இதற்கு காரணம் இல்லையா???

இதுபோன்று ஏராளம் கூற முடியும். சுருங்க சொல்வதென்றால், உலகத்தின் மோகத்தை மட்டுமே உள்ளத்தில் ஆழப்பதித்து செயல்பட்ட நாம் தான் இதற்கு முதற்காரணமும் முக்கிய காரணமும்.....

நாம் விதைக்கும் வித்துக்கள் நமக்கு பலனளிக்க வேண்டும் என்றால் முறையான உரம் போடப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். விஷம் கலந்த உரம் தூவி விதைக்கப்படும் வித்துக்கள் விஷமாகத் தான் வளரும்.

உலகக் கல்வியை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் மறுமையில் வெற்றி பெற முடியாது. இவ்வுலக தற்காலிக வாழ்கை வசதிகளுக்காக மறுமையை நாம் இழந்து விடக்கூடாது.

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கொடுக்கும் சொத்துக்களில் மிக உயர்ந்த, உன்னதமான, விலை மதிப்பில்லாத சொத்து ஒன்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? 

இதோ கேளுங்கள்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதன் இறந்த பின்னும் அவரை பின்தொடரும் நன்மைகளின் பட்டியலில் ஒன்றாக சொன்னார்கள்:

ولد صالح يدعو له

தனது பெற்றோருக்காக சாலிஹான பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனை(இறந்துபோன பெற்றோரை வந்தடைந்து கொண்டே இருக்கும்).

அழிந்துபோகும் உலகத்தின் இன்பங்களை விடவும் நாம் இறந்த பின்னும் மறுமை வரைக்கும் நமது பிள்ளைகள் சேர்த்து கொடுக்கும் இந்த சொத்தல்லவா உன்னதமானது. 

இதை இழப்பவன் துர்பாக்கியசாலி அல்லவா?

பெற்றோரை உதாசீனப்படுத்தி விரட்டும் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கு செய்யும் உபகாரம் நமக்கு சுவர்க்கத்தை பெற்று தரும் என்று செயல்படும் பிள்ளைகளுக்கும் ஆகப் பெரிய வித்தியாசம் உண்டல்லவா?

இந்த இரண்டு நிலையில் எது நமக்கு தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆசிரியரை கத்தி எடுத்து குத்திய மாணவனைப் போன்றோ, 
ஆசிரியரோடு காதல் செய்து ஊரை விட்டு ஓட்டமெடுத்த மாணவனைப் போன்றோ, 
உலகமே காரி உமிழும் கேவலத்தை சுமக்கும் புகைக்கும் மதுவிற்கும் விபச்சாரத்திற்கும் அடிமையாகிக் கிடக்கும் மாணவர்களைப் போன்றோ,
சுருங்கச் சொல்வதென்றால், அல்லாஹ்வின் அதிருப்தியை பெற்ற மாணவனாகவோ 
நமது பிள்ளைகள் உருவாகி விடக்கூடாது.

விழிப்போடு செயல்படுங்கள்...!

உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும் போதிக்கப்படும் பாடசாலைகளை தேடுங்கள்.

கிடைக்கவில்லையானால் இருக்கும் இஸ்லாமிய பாடசாலைகளை அந்த நிலைக்கு உருவாக்க போராடுங்கள்.

நமது எண்ணம் வெற்றியடைய அல்லாஹ் போதுமானவன்!!!

லுக்மான் என்ற சிறந்த மனிதர் தமது மகனுக்கு செய்த உபதேசம்:

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).
வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக அல்லாஹ் பயன்படச் செய்ததையும், தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் காணவில்லையா? அறிவு, நேர்வழி, ஒளிவீசும் வேதம் எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்வோரும் மனிதர்களில் உள்ளனர்.
"அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா?
நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.
சூரா லுக்மான் (31 : 16 - 22).

Thursday, February 11, 2016

வேலூரில் சந்தித்த கலந்துரையாடல்!!!




அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! வேலூரில் சென்ற (2014) வருடம் ரமளான் உரைக்காக நாம் சென்றிருந்தபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல் பற்றி உங்களிடம் இந்த பதிவின் மூலம் நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

வேலூரில் சமீப காலமாக குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லக்கூடிய வழிகேடர்கள் அங்கங்கு முளைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களது வழிகெட்ட கொள்கையை ஒடுக்க வேண்டும் என்று அங்குள்ள நம் சஹாக்களில் சிலர்  மிகவும் ஆர்வத்தோடு அவர்களை எதிர்நோக்க காத்து இருந்தனர். மார்க்க சிந்தனை அற்ற நபர்களை சந்தித்து தம் பக்கம் அவர்களை இழுத்துப்போட்டு வழிகேடுப்பதைப் பார்க்கும் போது நம்மில் எவருக்குத்தான் ரோஷம் வராது? ஒருநாள் அந்தக் கொள்கையை பரப்பும் முக்கியமான நபரை சந்திக்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. களத்தில் சந்தித்தோம், அல்லாஹ்வின் அருளால் இறைவனது வேத வசனங்களில் இருந்தே, குர்ஆன் மட்டும் வஹியல்ல மாறாக நபியவர்களின் சுன்னாக்களும் பின்பற்றப்பட வேண்டிய வஹிதான் என்பதை அவரிடம்  எடுத்துரைத்தோம். 

அவரது கையில் ஒரு வித்தியாசமான குர்ஆன் ஒன்று இருந்தது. நாம் எடுத்து வைக்கும் அத்தனை வசனங்களையும் அந்த குர்ஆனின் வாயிலாகத்தான் அவர் பார்வையிட்டார். அவர் வைத்திருந்த குர்ஆனில் அதன் மூல மொழியான அரபி மொழி இல்லை! நாம் வைத்திருக்கும் அரபியுடன் கூடிய தர்ஜுமாவை அவர் பார்க்க விரும்பவும் இல்லை. 

அவர் வைத்திருந்த குர்ஆனில் மூல மொழி அரபு இல்லாததால் அந்தக் குர்ஆனை மொழிப்பெயர்த்துள்ள அவர்களின் கொள்கை சார்ந்த ஒரு அயோக்கியன் தனது சுய சிந்தனைகளை எல்லாம் அந்தக் குர்ஆனில் அள்ளித்தூவி இருந்தான். இதை நாம் அவதூறாக சொல்லவில்லை, அவரோடு வாதம் செய்து கொண்டிருக்கும் போது நாம் முன்வைத்த வசனங்களை அவர் வைத்திருக்கும் குர்ஆனோடு ஒப்பிடுகிறார். எப்படி ஒப்பிடுகிறார் என்றால் அந்த வசனங்களின் அருகில் அதற்கான விளக்கம் கூறப்பட்ட அடிக்குறிப்பு எண் ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த அடிக்குறிப்பை வாசித்து விட்டுத்தான் அவர் எங்களுக்கு பதில் கூறுகிறார். 

உதாரணமாக:
يُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ

"அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் அவர் கற்றுக் கொடுப்பார்" என்ற வசனத்தை நாம் மேற்கோள் காட்டி பேசும்போது அவரது குர்ஆனில் உள்ள அடிக்குறிப்பை பார்த்து விட்டு, இரண்டு வார்த்தைகளும் ஒன்று தான், அதை பிரிக்க முடியாது என்று வாதம் வைத்தார். 

நாம் சொன்னோம் الْكِتَابَ மற்றும் الْحِكْمَةَ என்ற வார்த்தைகளுக்கு இடையில் وَ என்ற இடைச்சொல் வந்துள்ளது. இலக்கண சட்டப்படி இவ்வாறு வந்தால் வேதம் மற்றும் ஞானம் என்றுதான் வரும். ஆகவே இரண்டும் ஒன்றாக வாய்ப்பே இல்லை. இரண்டும் வேறு வேறுதான் என்று நாம் எதிர் வாதம் வைத்தோம். அதற்கு முறையான பதில் சொல்ல அவரால் இயலவில்லை, காரணம் அவருக்கு இலக்கண ரீதியாக பேசும் அளவிற்கு அறிவு இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

இதற்கிடையில் கையில் சரக்கில்லை என்பதை உணர்ந்த அவர் தம்மிடம் இருக்கும் சரக்கை தள்ளிவிட தலைப்பை விட்டு தாவ முற்பட்டார். அதற்கேற்றார் போல் ஒரு விசித்திரமான வாதமும் வைத்தார். முக்கியமான தலைப்பைவிட்டு நீங்கள் தாவுகிறீர்கள் என்பதை அவருக்கு தெரியப்படுத்தி விட்டு, இது ஒரு முறையான ஒப்பந்தம் போடப்பட்ட விவாதம் இல்லை என்பதால் அந்த வாதத்திற்கும் நாம் அவரது பாணியிலேயே பதில் கொடுத்தோம்.

அவர் வைத்த வாதம் என்னவென்றால், நாங்கள் ஏன் தாடி வைப்பதில்லை தெரியுமா? (அவரது கன்னம் வழு வழுவென்று இருந்தது). சாமிரி என்பவன் காளைக் கன்றை செய்து மக்களை வழிகெடுத்த சம்பவத்தில் மூஸா நபியவர்கள் கோபப்பட்டு, தாம் பொறுப்பு சாட்டிச் சென்ற தம் சகோதரர் ஹாரூன் நபி அவர்களது தாடியைப் பிடித்து இழுத்தார்கள். அடிப்பதற்கு எத்தனையோ இடம் இருந்தும் ஏன் தாடியை பிடித்து அவர்கள் இழுக்க வேண்டும். காரணம் அவருக்கு தாடி பிடிக்காது, ஆகவே தான் மூஸா நபியவர்கள் ஹாரூன் நபியின் தாடியைப் பிடித்து இழுத்தார்கள். ஆகவே தான் நாங்கள் தாடி வைப்பதில்லை. இதுதான் அந்த மடத்தனமான விசித்திரமான வாதம்!!!

நாங்கள் திருப்பிக்கொண்டு கேட்டோம், அப்படியென்றால் உங்களுக்கும் இன்னொரு நபருக்கும் சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். எதிர் தரப்பில் இருப்பவர் உங்களது சட்டையை கிழித்து விடுகிறார். இப்போது அவருக்கு கோபம் உங்கள் மீதா அல்லது சட்டை மீதா??? ஒருவர் உங்கள் மீதுள்ள கோபத்தில் சட்டையை கிழிக்கிறார் என்றால் அதற்காக அவருக்கு சட்டை பிடிக்காது ஆகவே தான் சட்டையை அவர் கிழித்தார் என்று சொல்வீர்களா???? அவருக்கு பிடிக்காத ஒன்றை அவர் மட்டும் ஏன் தனது மேனியில் அணிந்துள்ளார்???? இது ஒரு மடத்தனமான வாதமும் விளக்கமும் என்பதை நாம் அவருக்கு சொன்னோம்.

இதற்கும் மழுப்பலே தொடர்ந்தது. தனக்கு தாடி வைக்க விருப்பம் இல்லை என்பதற்காக அல்லாஹ்வின் வேத வசனங்களை எந்த அளவிற்கு இந்த மதியில்லா கூட்டம் திரிக்கிறது பாருங்கள். எதை எதற்கு ஆதாரமாக காட்டுகிறது பாருங்கள்! இந்த வாதத்தையும் அவர் சுயமாக வைக்கவில்லை. அவர் வைத்திருந்த குர்ஆனில் இருந்த அடிக்குறிப்பை மேற்கோள் காட்டித்தான் அந்த வாதத்தை அவர் வைத்தார்.

அதன் பின்னர் இறைவன் திருமறையில் கூறும் நான்கு புனித மாதங்கள் எவை என்று குர்ஆனில் மட்டும் இருந்து நிரூபிக்க சொன்னோம். அவரால் இயலவில்லை. இதுபோன்று இன்னும் சில வாதங்களும் தொடர்ந்தன.

கலந்துரையாடல் இறுதியில் முடிவுக்கு வந்தது. நாம் சந்தித்ததில் இப்படி ஒரு அரைவேக்காட்டை நாம் பார்த்ததில்லை. தேய்ந்து போன ஆடியோ கேசட்டை போல் திரும்ப திரும்ப பேசியதையே பேசி எங்களது ஆரோக்கியத்தை கெடுத்ததுதான் மிச்சம். என்றாலும் எம்மோடு வந்த சஹாக்கள் உண்மையை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியும் ஒரு பக்கம் உற்சாகம் அளித்தது. 

இதுபோன்ற நபர்களைக் களத்தில் சந்திக்கும் போதுதான் அதன் உள்ளார்ந்த நிலைகளை நாம் உணர்கிறோம். நமது ஜமாஅத்தின் மூலம் அசத்தியத்தை நோக்கி தொடுக்கப்படும் விவாதக்களங்களில் அல்லாஹ் நமது அழைப்பளர்களுக்கு ஆரோக்கியம் அளிப்பானாக! 

இறுதியாக நாம் அந்த நபருக்கு சில உபதேஷங்களை கூறி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.

நாங்கள் வைக்கும் வாதங்களுக்கு நீங்கள் பதில் அளிக்க முற்படும்போது, நீங்கள் வைத்திருக்கும் குர்ஆனில் உள்ள விளக்கங்களை முன்வைத்து தான் பதில் அளிக்க முயற்சி செய்தீர்கள். தாடியைப் பற்றியெல்லாம் கூட அதிலுள்ள விளக்கத்தை எடுத்துதான் விசித்திரமாக பேசினீர்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எவனோ ஒரு மடையன் இறைவனின் வார்த்தைகளில் சிலவற்றிற்கு  விளக்கமாக எழுதிய விளக்கெண்ணை விரிவுரைகளை கண்மூடிக் கொண்டு பின்பற்றுகிறீர்கள், பரப்புகிறீர்கள். ஆனால் அல்லாஹ்வின் வஹியை சுமந்த, அவனோடு நேரடி தொடர்பில் இருந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கங்களை (ஹதீஸ்களை) ஏற்க மாட்டோம், அது அவசியமல்ல, குர்ஆன் மட்டுமே போதும் வழிகாட்டுவதற்கு என்கிறீர்கள்! இது எந்த விதத்தில் நியாயம்????

குர்ஆன் மட்டும் போதும் என்றால் நீங்கள் வைத்திருக்கும் குர்ஆனிற்கு ஏதோ ஒரு மடையன் எழுதிய விளக்கங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்???? அல்லாஹ்வின் தூதரை விட இந்த மடையன் சிறந்தவனா???? என்ற ஆலோசனையை அவருக்கு முன்வைத்தோம்! 

உண்மை என்னவென்றால் அந்த குர்ஆனை மொழிப்பெயர்த்த மடையனுக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட இந்த நபர் அல்லாஹ்வின் தூதருக்கு கொடுக்கவில்லை. அவ்வாறுதான் இந்த மடையர்  கூட்டத்தில் இருக்கும் அனைவரும் பயிற்றுவிக்கப் படுகின்றனர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!

அது மட்டுமல்லாமல் இவர்கள் வைத்திருக்கும் குர்ஆனில் மூல மொழியே இல்லை. ஆகவே தான் அதில் தனது மனோ இச்சைக்கேற்ப  மொழியாக்கம் செய்துள்ளனர். அல்லாஹ் திருமறையை பாதுகாக்கிறான் என்பதால் எல்லா காலத்திலும் இந்த வழிகேட்டை எளிமையாக நாம் கண்டறிந்து விட முடியும். ஆனால் அரபு அறிவு அறவே இல்லாத நபர்களிடம் தான் இந்தக் கொள்கையை இவர்கள் மேலேடுத்து செல்கின்றனர் என்பதையும் நாம் இந்த கலந்துரையாடல் மூலமாக அறிந்து கொண்டோம். 

நம்மில் பலரும் பெரும்பாலும் அரபு அறிவு இல்லாதவர்கள் என்பதை மறுக்க முடியாது. என்றாலும் இது தொடர்பாக பேசுவதற்கு பரந்த அரபு அறிவு தேவையில்லை. இதுபோன்ற வழிகேட்டை நாம் புரிந்து கொள்ள, இந்த வழிகேட்டில் இருக்கும் நபர்களுக்கு எடுத்துரைக்க சில எளிமையான வாசகங்களை பொருளோடு கற்றுக் கொண்டாலே  போதுமானது. கற்றுக்கொள்ள முற்படும் நபர்களுக்கு நமது அழைப்பாளர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் சிறந்த பலன்களும் முடிவுகளும் நம்மை சூழ வரும்.

இதுபோன்ற விஷக்கிருமிகள் பரவக்கூடிய இடங்களில், அதுசார்ந்த பிரச்சாரக் கலங்கள் அதிகம் அமைக்கப்பட்டு வழிகேடுகள் வந்த வழியே ஓடிவிட நாம் அதிகம் முயற்சிக்க வேண்டும் என்ற எமது ஆலோசனையோடு இந்த தகவல் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கிறேன்!

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

Sunday, February 7, 2016

தொழுகையாளிக்கு கிடைக்கும் சிறந்த கூலிகள்!



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன.

அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. 

இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 412.

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நம்மில் எத்துனை நபர்களுக்கு இந்த செய்தி தெரியும்????

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இந்த பாக்கித்தை தொழுகையாளியைத் தவிர வேறு ஒருவர் பெற முடியாது, என்றாலும் அந்த தொழுகையில் நாம் போடும்போக்காகத்தான் இருக்கிறோம். இதுபோன்ற அளப்பரிய நன்மைகளை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். காரணம் தொழுகையால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் சரியாக அறிந்து கொள்ளவில்லை.

வேதனை, திருமண மண்டபத்தில் போடப்படும் ஆஃபர் பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்து செல்லும் இஸ்லாமிய பெண்கள் கூட்டத்தை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் மிக மிக சிறியதொரு வணக்கத்திற்கு இறைவன் அள்ளித்தூவும் நன்மைகளை அள்ளிக் கொள்ள ஏன் என் இஸ்லாமிய பெண்களுக்கு மனம் வருவதில்லை????

10 நிமிட வணக்கத்திற்கு இறைவன் வழங்கும் மிக உயர்ந்த பாக்கியங்களை அடைந்துகொள்ள, ஒரு 10 நிமிடம் இறைவனை நினைவுகூர ஏன் வியாபாரிகளுக்கு மனம் வருவதில்லை????

உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்திருப்பது, நீங்கள் எதனை திரட்டுவதற்காக அற்ப 10 நிமிடம் கூட  இறைவனை நினைவுகூர மறக்கிரீர்களோ அதைவிட அற்பமானதா???? 

இல்லை என் அன்பு இஸ்லாமியர்களே! இறைவன் வாக்களிக்கும் ஒவ்வொன்றும் இந்த உலகிலுள்ள எதனோடும் ஒப்பிட முடியாதவைகளாகும். இந்த உலகின் அற்ப இலாபத்திற்காக நிலையான மறுமை வாழ்வை இழந்து நிற்காதே தோழா! 

எழுந்து வா! இறைவனின் பக்கம் மீண்டுவிடு!

Tuesday, February 2, 2016

சூரா பகரா பற்றிய பலவீனமான செய்தி - 2



ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ، وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ، وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ»

உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்கவேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரில் வைத்து அவரது தலைமாட்டில் சூரத்துல் பாத்திஹாவையும், கால்மாட்டில் பகரா சூராவின் கடைசியையும் ஒதுங்கள்.  
(தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்) 

இதில் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் இடம் பெறுகின்றார், இவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார்மேலும் இதன் தொடரில் வரும் முதல் அறிவிப்பாளரான யஹ்யா என்பவர் பலவீனமானவராவார்
(ஸில்ஸிலதுல் லஈபா)