தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, July 1, 2018

சிந்தனையை மழுங்கடித்த சமூக வலைத்தளம்



உலகத்தில் எத்தனை வகையான நவீன கண்டுபிடிப்புக்கள் தோன்றினாலும் அவற்றில் நன்மைகள் இருப்பதை போன்று ஏராளமான பாதகங்களும் பாதிப்புக்களும் சேர்ந்தே வரும் என்பது நிதர்சனமாக நாம் கண்டுவருகின்ற உண்மை. நன்மைக்காக பலவகை சாதனங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை எவ்வாறு தீமைக்காக பயன்படுத்த தூண்டுவது என்ற முயற்சியில் இப்லீசும் அவனது சந்ததிகளும் மறுமை நாள் வரை ஒய்ந்துபோகப் போவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்த வகையில் நன்மைக்காக பல வகைகளிலும் பயன்படும் சமூக வலைதளமான (Facebook) முகநூலில் நம்மை அறியாமலேயே பலவகை பாவக் காரியங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே போதை வசப்பட்டவர்களை போல முகநூல் தளத்தில் பலரும் செயல்பட்டு வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.

தீய பதிவுகள், வதந்திகள், பொய் பித்தலாட்டங்கள், அவதூறுகள், வரம்புமீறிய விமர்சனங்கள், உறுதி படுத்தப்படாத செய்திகளை பரப்புதல், பிறர் சுயமரியாதையை சீர்குலைத்தல், இஸ்லாம் தடுத்த வரம்புகளை மீறிய ஆண் பெண் பழக்கவழக்கங்கள் போன்று ஏராளமான பாவக்காரியங்கள் நிகழ்ந்து வரும் இந்த முகநூல் தளத்தில் புதிதாக ஒரு மிகக்கொடிய பாவமும் ரசனையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பாவத்தை பொறுத்த வரைக்கும் நான் மேலே குறிப்பிட்ட எல்லா பாவங்களைக் காட்டிலும் முதன்மையான இடத்தை தொட்டுவிடும் இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மிகக்கொடிய பாவமாகும். இதில் ஆச்சரியமும் வேதனையும் என்னவெனில் தவ்ஹீதை விளங்கிய மக்கள் கூட இந்த செயலை முகநூலில் பகிர்கிறார்கள். அடையாளத்திற்கு தான் தவ்ஹீதை விளங்கியவர்கள் என்று கூற வேண்டும் என்று நினைக்கிறேன், காரணம் அவர்களது இந்த செயல்களின் மூலமாக தவ்ஹீதை இன்னும் அவர்கள் முறையாக விளங்கவில்லை என்றே நாம் சொல்ல வேண்டியுள்ளது.

சமீப காலமாக முகநூலில் "நீங்கள் சில வருடங்களுக்கு பின்னால் எவ்வாறான தோற்றம் உள்ளவராக இருப்பீர்கள்???" என்று கேள்வி எழுப்பிய வண்ணமாக தமது புகைப்படங்களை முதிய தோற்றத்தோடு சித்தரித்து பிரதிபலிக்கும் ஒரு பதிவு அதிகமான மக்களால் ஷேர் செய்யப்பட்டது. அதேபோன்று "நீங்கள் எது போன்ற குணங்களை உடையவர்???" என்று கேள்வி எழுப்பி யார் அதை ஏற்று பகிர்கிறார்களோ அவர்களது குணாதீசியங்களாக சில குணங்கள் பட்டியலிடப்பட்டு மக்கள் பார்வைக்கு பகிரப்படும்.

இதுபோன்று நமது எதிர்கால நிகழ்வுகளையோ அல்லது நம்மை யார் என்றே அறியாத ஒரு இனையதளம் மூலமாக நமது பண்புகளை யூகத்தில் பட்டியலிட்டு பகிரும் நிகழ்வுகளோ பலராலும் பொழுதுபோக்கை போன்று பகிரப்பட்டு வருகிறது.

குறி சொல்பவனிடம் சென்று தமது எதிர்காலம் பற்றி குறிகேட்பதற்கும் முகநூலில் இதுபோன்று பகிர்வதற்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது? செயல்படுத்தும் விதம்தான் நவீன முறையில் உள்ளதே தவிர இரண்டிற்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

நமது வயதான காலத்தில் நாம் என்ன தோற்றத்தில் இருப்போம் என்று இந்த இணையதளம் கணித்து (குறிபார்த்து) சொல்கிறதே, நாளை நாம் உயிரோடு இருப்போம் என்று உத்தரவாதம் சொல்ல முடியுமா??? 

பின்னர் எவ்வாறு பல வருடங்களை கடந்தபின் நாம் இப்படி இருப்போம் என்று ஒரு இனையத்தள குறிகாரன் சொல்வதை ரசித்து பகிர்கிறோம்???

ஏகத்துவம் பேசும் நமது அறிவு ஏன் இதனை சிந்திக்க மறுத்தது??? 

நமது குணங்கள் இவ்வாறானவை என்பதை நம்மோடு பழகிய ஒருவர் நமது வெளிப்படையான தோற்றத்தை வைத்து சொல்கிறார் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் நம்மை பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு (Server) இணையதளம் நமது பண்புகளை சொல்கிறது என்றால் இது ஜோசியம் அல்லாமல் வேறு என்ன???

குறிபார்ப்பவனுக்கு நம்மை பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் பல பொய்களையும் யூகங்களையும் இணைத்து புனைத்துத்தான்  குறியாக சொல்கிறான் என்பதை விளங்கிய நாம் அதே செயலைப் பெற்றிருக்கும் இந்த இணையதளத்தின் பாதகத்தை ஏன் உணர மறந்தோம்???

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
(
நூல் : முஸ்லிம் 4488)

நவீன குறிகாரனிடம் குறிகேட்டு அதை பரப்பிய நபர்கள் தமது நாற்பது நாட்களின் தொழுகையை இழந்து விட்டார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழுகையில் இருந்து மட்டுமே அல்லாஹ் இந்த நாற்பதை கணக்கிடுவான். இது முதலாவது கைசேதம்!!!

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனுமொருவர் குறிசொல்பவனிடம் வந்து அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ் இறக்கியதை (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.
(
ஆதாரம் : அபூதாவுத் 3904, திர்மிதி 135, இப்னுமாஜா 936)

நவீன குறிகாரன் சொன்னவைகளை பரிப்பியதோடு மட்டுமல்லாமல் அதனை உண்மையாகத்தானே உள்ளது என்று எண்ணி ருசித்தவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை மறுத்த காஃபிராகி விடுகிறார்கள். இதையும் கூடுதலாக நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். இதுதான் இஸ்லாமை முறிக்கும் மிக பாதகமான செயல். இது ஜீரணிக்கவே முடியாத மிகப்பெரிய கைசேதம்!!!

தவறுகளை உணர்ந்து ரப்பை நோக்கி மீளுவோரை அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன். இதுபோன்ற தவறுகளை யாரெல்லாம் விளங்காமல் செய்து வந்தீர்களோ, அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் விசாலமாக மனம் வருத்தி மன்னிப்பு தேடுங்கள். அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிப்பவன்.

கொள்கையை உடைத்துவிடும் இதுபோன்ற ஈமானிய பலகீனம் நமக்கு ஏற்பாடாமல் இருக்க தவ்ஹீதை முழுமையாக நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கும் மேலாக நம்மை அறியாமல் இதுபோன்ற கடும் குற்றங்கள் நமது வாழ்வில் வந்துவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேட வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரது பாவங்களையும் மன்னிப்பானாக!!! கொள்கை விளங்கி செயல்படும் தெளிவான சிந்தனைகளை தருவானாக....!