தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, October 22, 2013

சுயமரியாதையை விரும்புவோரே!

அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

அல்லாஹ் படைத்திருக்கும் இந்த நிலையில்லா உலகத்தில் நாம் செய்யக் கூடிய பாவங்கள் ஏராளம் ஏராளம். இந்த பாவங்களை இரண்டு வகைப்படுத்தி அல்லாஹ் கூறுகிறான். 
ஒன்று வெளிப்படையாகச் செய்யும் பாவம், மற்றொன்று மறைவாகச் செய்யும் பாவம்.
இந்த இரண்டு வகைப் பாவங்களிலும் நம்மில் அதிகமானோர் முதலிடத்தில் தான் இருக்கிறோம். 
அதிலும் குறிப்பாக அல்லாஹ் கூறும் இரண்டாம் வகைப் பாவமான மறைவாகச் செய்யும் பாவத்தில் 
நாம் யாரும் யாருக்கும் சலைத்தவர்கள் அல்ல, அனைவருமே உய்ர்ந்த இடத்தில் தான் இருக்கிறோம் அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர்.
இருப்பினும் அதிகமான மக்கள் இந்த சமூகத்தில் கண்ணியமாக வாழவே விரும்புகின்றனர். தான் மறைவில் எத்துனைப் பாவங்களைச் செய்தாலும், வெளி உலகிற்கு நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற கேவலமான எண்ணம் கொண்ட மக்கள் பலர் நம் சமூகத்தில் வாழ்வதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, ஒவ்வொருவரும் இதை நடைமுறை வாழ்வில் உணர்ந்திருப்பர்.
உதாரணத்திற்கு சிலவற்றைக் கூறுகிறேன். 
வெளி உலகிற்கு தம்மை ஒரு சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொண்டிருக்கும் பலர், தனிமை என்ற அமைதியானச் சூழல் அமையும் போது அசிங்கமான ஆபாசமானச் செயலில் ஈடுபடுகின்றனர். 
சினிமா சீரியல்களைப் பற்றி ஆவேசமான எதிர்ப்புப் பேச்சுக்கள் பேசும் பலர் தனிமையிலோ அல்லது வீடுகளிலோ தாமே அந்தச் செயலில் ஊரிக் கிடக்கின்றனர்.
அந்நியப் பெண்களிடம் பேசுவதோ பழகுவதோ தவறு என்று பலருக்கு உபதேசம் செய்யும் பலர் தனிமையில் தாமே அந்தச் செயலுக்கு முழு சொந்தக் காரர்களாக இருக்கின்றனர்.
மது அருந்தக் கூடாது புகைப்பது கூடாது என்று கூறும் பலர் தனிமையில் அதே செயலைத் தாமே செய்கின்றனர்.
வரதட்சனை வாங்கக் கூடாது, நானும் ஏகத்துவவாதி என்று கூறும் பலர் மறைவில் வரதட்சனை வாங்கி விடுகின்றனர்.
சமூகத்தில் மிகப் பெரிய செல்வந்தர்களாகவும், கொடை வள்ளல்களாகவும் வாழும் பலர் மறைவில் அல்லாஹ் தடுத்த ஹராமான பொருளீட்டலை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறாக, மறைவில் மகா மோசமானவர்களாகவும் மக்கள் மத்தியில் கண்ணியமிக்க ஒருவனாக நடிப்பவர்களாகவும் பலர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலை யாரிடமெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் சிந்தனைக்காக இதைச் சமர்ப்பிக்கிறேன்.

உண்மையாகவே நீங்கள் சுய மரியாதையை விரும்பக் கூடியவராக இருந்தால், அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ்வைத் திருத்த முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் உங்களுடைய மறைவான செயல் இறுதி வரைக்கும் மறைவாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் எந்தப் பாவங்களை அசிங்கங்களை எல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டோம் என்று நினைக்கிறீர்களோ, அது உண்மையாகவே நீங்கள் மறைத்தது கிடையாது. உங்களைப் பாதுகாக்கும் விதமாக அல்லாஹ் மறைக்கிறான் இவற்றையெல்லாம்.
மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்த அல்லாஹ்விற்கு 
மற்றவர்களிடம் இவற்றை வெளிப்படுத்தி நம்மைக் கேவலப் படுத்த ஒரு நொடி ஆகாது சகோதரர்களே!
பலரை அல்லாஹ் இந்த உலகத்திலும் கண்ணியப் படுத்துகிறான், மறுமையிலும் கண்ணியப் படுத்துவான்.
பலரை இந்த உலகத்திலும் கேவலமடையச் செய்கிறான் நாளை மறுமையிலும் கேவலமடையச் செய்வான். இதில் யார் எந்தத் தரம் என்று யாராலும் சொல்ல இயலாது. நான் உதாரணத்திற்கு சில செயல்களைக் குறிப்பிட்டேன். இது போன்ற செயலுள்ளோர் சிந்தியுங்கள், உங்களுடைய இறுதி நேரம் இந்தச் செயலோடு அமைந்து விட்டால்! யாரிடம் எல்லாம் மறைத்து வாழ்ந்தீர்களோ அவர்களிடம் எந்தவொன்றையும் மறைக்க முடியாத நிலை உண்டாகிவிடும். 
ஆபாசப் படம் பார்த்த நிலையிலேயே மரணம்,
விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே மரணம், 
மது அருந்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே மரணம்,
அந்நியப் பெண்ணோடு தனிமையில் இருக்கும் நிலையிலேயே மரணம்,
திருடிக் கொண்டிருக்கும் போதும் ஹராமான வழியில் பொருளீட்டிக் கொண்டிருக்கும் போதும் மரணம்! இப்படி ஒரு நிலை நமக்கு உண்டாகாது என்று யாரால் உத்தரவாதம் அளிக்க முடியும்?
உங்களில் ஒவ்வொருவரும் அவரவரின் இறுதி நிலைக்கேற்ப தான் மறுமையில் எழுப்பப் படுவீர்கள் என்ற நபியின் வார்த்தைக்கிணங்க மறுமை வாழ்வும் கேள்விக்குறி ஆகிவிடுமே சகோதரர்களே!
அல்லாஹ் பாதுகாப்பானாக....

இந்த சமூகத்தில் தனது கண்ணியமும் தன்னைப் பற்றிய நல்லெண்ணமும் இறுதி வரை நிலைக்க வேண்டுமென்று நினைப்போர்,
இறுதி நேரம் இஸ்லாமாக அமைய வேண்டுமென்று நினைப்போர்
தமது வாழ்வை இஸ்லாமாக ஆக்கிக் கொள்ள முன்வர வேண்டும். தனிமையில் அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணமில்லாமல் அற்ப மனிதர்களிடம் மறைத்து கண்ணியம் தேடும் கேவலமானச் செயல் நம்மை விட்டு அகற்றப்பட வேண்டும்.
சுய மரியாதையை விரும்புபவர்கள், தம்மை ஒரு கணம் சுயபரிசோதனை செய்து பார்க்கட்டும்.

"அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவணிக்காதவன் என்று எண்ணி விடாதீர். பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தி இருக்கிறான்."
திருக்குர்ஆன் (14:42)