தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, April 15, 2020

முகநூல் ஜோதிடம் - நவீன வழிகேடு




அன்பான இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...). சமீப காலமாக முகநூல் பக்கத்தில் நமது தன்மைகள் எத்தகையது என்பதை யூகித்துச் சொல்லும் ஒருவகை மென்பொருள் ஜோதிடம் உருவாக்கம் எடுத்திருப்பதை நாம் அறிகிறோம். இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் கூட இதுபோன்ற நரகப் படுகுழிக்கு அழைக்கும் வழிகேட்டை நோக்கி மிகச் சாதாரணமாகவே சாய்ந்து விடுவதைப் பார்க்க முடிகிறது.

ஜோதிடம் கூடாது, எதிர்வரும் காலங்களில் நமக்கு என்ன நடக்கும் என்பதை நமது இறைவன் மட்டுமே துல்லியமாக அறிந்தவன், மனிதனுக்கு மறைவானவற்றை அறிந்து கொள்ளும் ஆற்றல் கிடையாது என்பதை பெரும்பாலான இஸ்லாமியர்கள் உணர்ந்திருந்தாலும் கூட, முகநூலில் பரவிவரும் இதுபோன்ற வழிகேட்டில் அவர்கள் சாதாரணமாக விழுந்து விடுகிறார்கள்.

ஒரு மனிதனிடம் சென்று நமது நிலை குறித்து குறிகேட்பது தான் ஜோதிடம், இது முகநூலில் ஒரு பொழுதுபோக்குக்காக செய்யப்படுவது தானே, இங்கு மனிதனால் குறிபார்த்து சொல்லப்படுவது கிடையாதே என்ற அலட்சியமான சிந்தனைப்போக்கு தான் இதுபோன்ற வழிகேட்டில் நம்மை வீழ்த்தக் காரணமாக அமைகிறது. இங்கு தான் நாம் இப்லீஸின் ராஜதந்திரத்தை புரிந்துகொள்ள வேண்டும் சகோதரர்களே.

இப்லீஸ் நேரடியாக நம்மை இணைவைப்பான காரியங்களில் வீழ்த்தப் போராடுவதை விட நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக மிகத் துல்லியமாகப் போராடுகிறான். மனிதர்களிடம் குறிகேட்டால் தான் குற்றம், மென்பொருள் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டால் குற்றம் இல்லை என்ற வாதம் சரியானதா? இந்த மென்பொருளை வடிவமைத்தவன் மனிதன் இல்லையா? உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் முகநூல் பக்கத்தில் பிரதிபலிக்கச் செய்பவன் மனிதன் இல்லையா? தானாகவா இந்த மென்பொருள்கள் இயங்குகின்றன? மனிதனுக்கு மறைவானவற்றைக் கண்டறிய இயலாது என்றால், மென்பொருளால் மட்டும் எப்படி இயலும்?

தற்போது வெளியாகியுள்ள மென்பொருள் எதிர்காலத்தைக் கூறுவதில்லை. மாறாக இன்று நான் எப்படி இருக்கிறேன், எனது பண்புகள் இன்று எப்படி இருக்கிறது என்பதைத்தான் கூறுகிறது. ஆகவே இது எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் ஜோதிடம் அல்ல என்றும் இப்லீஸ் சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடும். நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். உங்களோடு வசிக்கும் ஒரு மனிதர் உங்களை அறிந்து வைத்திருக்கும் வகையில் வெளிப்படையான அம்சங்களைப் பற்றி இன்னொருவரிடம் கூறுவது ஜோதிடம் கிடையாது தான். ஆனால் நீங்கள் உங்கள் தன்மைகளைப் பற்றிக் கேட்பதற்கு பயன்படுத்துவதோ முகநூலில் வெளியிடப்பட்டுள்ள ஒருவகை மென்பொருள். அந்த மென்பொருளுக்கு உங்களைப் பற்றிய எந்தவகையான அறிவும் கிடையாது. உங்கள் பெயரைத் தவிர நீங்கள் யார் என்றே அதற்குத் தெரியாது. நிலைமை இப்படி இருக்க யாரென்றே தெரியாத ஒருவரைப் பற்றி இவரது கேரக்டர் இதுதான் என்று கணித்துச் சொல்வதற்கு என்ன பெயர் தோழர்களே???

விளக்கத்தை நீட்ட விரும்பவில்லை. இப்லீஸின் சூழ்ச்சிகள் நவீனத்துவத்தால் வீரியமெடுக்கிறது. கவனமாக இருங்கள். பொழுதுபோக்குக்குத்தானே என்ற சிந்தனையில் நொடியில் நம்மை இப்லீஸ் வழிகெடுத்து விடுவான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது.
நூல் : முஸ்லிம் 4137

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவன் குறி கூறுபவனிடமோ, ஜோதிடனிடமோ சென்று அவன் கூறுபவற்றை நம்பினால் அவன் நிச்சயமாக முஹம்மதாகிய எனக்கு அருளப்பட்ட இம்மார்க்கத்தை நிராகரித்தவனே ஆவான்.
நூல் : அஹ்மத் 9171.