தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, February 28, 2018

சிரிய தேச எம் சொந்தங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்



ஒவ்வொரு கால சூழலிலும் ஏதாவதொரு மூலைகளில் இஸ்லாமிய உறவுகள் மதச்சாயம் பூசப்பட்டு அழிக்கப்படும் நிகழ்வுகள் சதாவும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. தற்போதைய சூழலில் கூட எம் சிரிய தேசத்து உறவுகள் அநியாயமான முறையில் கொன்றொழிக்கப்படும் நிகழ்வுகளை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

இரட்டை வேடமிடும் மீடியாக்கள் மூலமாக இதுபோன்ற அநியாயமான நிகழ்வுகள் உலகிற்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்டாலும் இறைவன் அவற்றை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறான்.

ஒன்றும் அறியா பச்சிளம் சிறார்கள் கொடூர அணு ஆயுதங்களுக்கு இறையாக சிதரிக்கிடப்பதை பார்க்கின்றபொழுது கற்பாறை உள்ளங்கள் கூட கனிந்து ஓடும் அளவிற்கு கவலையால் உள்ளம் பாதிப்படைகிறது. இதுபோன்ற சூழலை ஒரு இறை விசுவாசி எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிலரது பதிவுகளை பார்க்கும்பொழுது இறைவன் இவை அனைத்தையும் கண்டும் காணமல் இருப்பது போன்றும் நம் மக்கள்தான் இறைவனுக்கு இவைகளை நினைப்பூட்டுவதைப் போன்றும் அமைந்திருப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

முதல் அடிப்படையை இஸ்லாமிய சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு முஃமினை பொறுத்தவரையில் தம் வாழ்வில் பல்வேறு வகையான சோதனைகளை சந்தித்துத்தான் இவ்வுலகில் வாழ முடியும். இவை இறைவனது வழிமுறையால் விதியாக்கப்படவை ஆகும்.

சுகபோக வாழ்வோடுதான் நம் வாழ்க்கை நிறைவுபெற வேண்டும் என்று நாம் சிந்திப்போமாக இருந்தால் ஒன்றோ தவறான சிந்தனை என்பதை உணர்ந்து அதற்கேற்ப நம் வாழ்வை பக்குவப்படுத்த வேண்டும். அல்லது நம் வாழ்வு ஈமானியப்பாதைகளில் இருந்து தடம்புரள வேண்டும். நமது உயிர் பிரிந்து செல்லும் வரை ஈமானுக்கும் நமக்கும் உண்டான சோதனை போர்கள் தொடந்து கொண்டே தான் இருக்கும் என்பதை முதன்மை அடிப்படையாக ஆழப்பதியவைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இதுபோன்ற அநியாயமான நிகழ்வுகளின் பொழுதெல்லாம் கீழ்கண்ட இறைவனது வார்த்தைகள் தான் நமது சிந்தனையின் உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே1 அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.
(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.
மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப்  பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) "எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் குடியிருப்புகளில் நீங்களும் குடியிருந்தீர்கள். அவர்களை எவ்வாறு நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பல (முன்) உதாரணங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறினோம். (என்று அவர்களுக்குக் கூறப்படும்)
அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் சூழ்ச்சி மலைகளைப் புரட்டுவதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அல்லாஹ்விடமே உள்ளது.
தனது தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை அல்லாஹ் மீறுபவன் என்று நீர் எண்ணாதீர்! அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
அந்நாளில்  பூமி, வேறு பூமியாகவும், வானங்களும்  (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்.  ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
அந்நாளில்  குற்றவாளிகள் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருப்பதை நீர் காண்பீர்!
அவர்களின் சட்டைகள் தாரினால் தயாரிக்கப்பட்டவை. அவர்களின் முகங்களை நெருப்பு மூடிக் கொள்ளும்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பட்டதற்கேற்ப அல்லாஹ் கூலி கொடுப்பான். அல்லாஹ் விரைவாக விசாரிப்பவன்.
இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும்.  இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) திருக்குர்ஆன் (14: 42 - 52)
இறைவனது வார்த்தைகளோ வாக்குறுதிகளோ பொய்யானவை அல்ல. அதை ஏற்றுக்கொண்ட ஒரு முஃமினுடைய நாவோ உள்ளமோ இதற்கு மாற்றமாக ஒருபோதும் செயல்படாது சிந்திக்காது.
அநீதிகள் எங்கு நிகழ்ந்தாலும் அவற்றை இறைவன் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான். அநீதம் இழைக்கப்பட்டோரின் உள்ளங்கள் குளிர்ந்துபோகும் அளவிற்கு அநீதம் இழைத்த குற்றவாளிகளை இறைவன் தண்டிக்கவும் செய்வான். ஆனால் மனிதனின் அவசர சிந்தனைகளை இறைவன் கொண்டிருந்தால் என்றோ உலகம் அழிந்துபோய் இருக்கும். அனைத்திலும் இறைவன் அவகாசம் எடுத்து செயல்படுத்தக்கூடியவன்.
இந்த அநீதங்கள் குறித்து அவைகள் நடந்தேறும் பொழுது என்ன உணர்வலைகள் உள்ளத்தை அடைந்திருந்ததோ அதே உணர்வுகளோடு இறைவன் விசாரித்து நியாய தீர்ப்பு வழங்கும் நாள் ஒன்று உள்ளது. அந்த நாளுக்காகவே தாம் இவற்றை எல்லாம் தாமதப்படுத்துவதாக இறைவன் நமக்கு போதனை செய்கிறான். அந்த தீர்ப்புநாளை சந்திக்கும் வரை நாமும் சில விஷயங்களில் பொறுமை காக்கவே வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் எமது இஸ்லாமிய உறவுகள் எத்தகைய சோதனைகளில் சிக்கித் தவித்தாலும் அவர்களுக்காக நாம் ரப்பிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தம் சகோதர முஸ்லிமின் சோதனை நீங்குவதற்காக நாம் கேட்கும் பிரார்த்தனை என்பது மிகச் சிறப்பான நன்மைகளை நமக்கு பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். அந்தப் பிரார்த்தனை உளத்தூய்மையோடு அமைந்துவிடுமாக இருந்தால் நிச்சயமாக இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்பதையும் நாம் நபியவர்கள் கற்றுத்தந்த ஒரு பொன்மொழி மூலமாக விளங்கிக்கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் தமது சகோதர முஸ்லிமிற்காக தனிமையில் அமர்ந்து பிரார்த்திக்கிறாரோ அவருக்காக ஒரு வானவர் "உமக்கும் அவ்வாறு உண்டாகட்டுமாக" என்று பிரார்த்திக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம் 2732 (அரபு இலக்க எண்).

வானவர்களை பொறுத்தவரை இறைவனது அனுமதி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யவும் அவர்களால் இயலாது. மேற்கண்ட ஹதீஸை கவணியுங்கள். நாம் பிறருக்காக தனிமையில் பிரார்த்தனை செய்யும்போது வானவர் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றால் அந்த வானவர் இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறார் என்பதை முதல் பகுதியாக விளங்க வேண்டும்.
இரண்டாவது பகுதி, இறைவன் வானவர்களை அனுப்பி வைக்கிறான் என்றால் நாம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை என்ற சமூக உணர்வை இறைவன் உயர்வாக கருதுகிறான் என்பதாகும்.

மூன்றாவது பகுதி, இவ்வாறு பிரார்த்திப்போருக்கு அந்த வானவர் உமக்கும் அதுபோன்று உண்டாவதாக என பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் அந்த நபருக்கு உதவுவதற்காக உத்தரவாதம் கொடுத்துவிட்டான் என்பதாகும். ஏனெனில் ஒரு வானவரின் பிரார்த்தனை என்பது இறைவனின் கட்டளை மூலம் வெளிப்படுவதாகும். இறைவன் நிச்சயமாக இந்த செயல் உடையோருக்கு உதவப்போகிறான் என்பதனால்தான் தமது அடியார்களான வானவர்களிடம் இந்த நபருக்காக இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறான்.

இந்த சிறப்பான அம்சங்களை ஒரு இறைவிசுவாசி முறையாக விளங்கிக்கொண்டால் பிறரின் சுமைகளை தமதாக எண்ணி அவருக்காக பிரார்த்தனை செய்வதை ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். அவ்வாறு ஒரு இறைவிசுவாசி செயல்படுவதின்மூலம், நாம் யாருக்காக பிரார்த்தனை செய்தோமோ அவரைப்போன்ற சோதனைகள் இறைவன் நாடி நாளை நமக்கு ஏற்படும்போது, வானவர் நமக்காக கேட்ட பிரார்த்தனையின் மூலம் இறைவனது உதவி அப்போது நமக்கு கிடைக்கும்.
இன்று சிரிய தேசத்து மக்கள் அனுபவிக்கும் சோதனை நாளை நமக்கும் வரலாம். அந்த சந்தர்ப்பத்தில் இறைவனது உதவி நமக்கு மிக அவசியமான ஒன்றாகும். ஆகவே அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய மறவாதீர்கள் அவை நமக்கும் பலன்தரும் ஒன்றாகும்.
இச்சிறிய உபதேசத்தை கனத்த உள்ளத்தோடு முதலில் தமக்குரியதாக்கி நிறைவு செய்கிறேன்....!