தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, November 6, 2017

இறைவனது சந்திப்பிற்கு நாம் தயாரா???



ஒரு மனிதன் இறைவனை சந்திக்க வேண்டும் என்றால் அதற்குண்டான வழிமுறை நமது வாழ்வு முடிவுக்கு வர வேண்டும் என்பதே ஆகும். நம்மில் எவரும் மரணம் என்ற வழியின் மூலமாகவோ அல்லது யுகமுடிவு நாளின் மூலமாகவோ அன்றி தமது ரப்பின் சந்திப்பை அடைந்துகொள்ள முடியாது.

இறைவனது சந்திப்பு நிச்சயமாக நிகழும். இதைப்பற்றி நாம் சிந்திக்கின்றபொழுது நாம் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்தால் தான் இறைவனது சந்திப்பை பெற முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆனால் நம்மில் பெரும்பான்மை மக்களுக்கு மரணம் என்றாலே ஒருவிதமான பயஉணர்வு. யாராக இருந்தாலும் மரணம் பற்றிய பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் மரண பயத்திற்கும் இறைமறுப்பாளனின் மரண பயத்திற்கும் ஆகப்பெரிய வித்தியாசம் உண்டு. என்றுமே இறைமறுப்பாளர்கள் அஞ்சுவதை போன்று மரணத்தை எண்ணி ஒரு இறைவிசுவாசி அஞ்சிவிடக்கூடாது.

இறைமறுப்பாளனின் பயமோ இவ்வுலக வாழ்வை சார்ந்து இருக்கும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் மரண பயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கோர் முன்மாதிரியாக நபியவர்களின் காலத்தில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள்!!!

நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்' என்று கூறினார்கள். அப்போது 'ஆயிஷா(ரலி) அவர்கள்' அல்லது 'நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்' 'நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கெளரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள் பாலி)ப்பதை வெறுப்பான்' என்று (விளக்கம்) சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபாதத்திப்னுஸ் ஸாமித் (ரலி), நூல் : புகாரீ 6507.

இறைஅச்சத்திற்கு முன்மாதிரிகளாக விளங்கிய நபித்தோழர்களின் மரண பயத்தை நபியவர்கள் எவ்வாறு விளக்குகிறார்கள் என்று பாருங்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், இறைவனது சந்திப்பை தாம் விரும்புகிறோம் ஆனால் மரணம் என்றால் பயம் அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின் நாங்கள் இறைவனது சந்திப்பை வெறுத்தவர்கள் ஆகிவிடுவோமோ என்று நபியிடம் கேள்வி எழுப்ப, ஒரு முஃமினுக்கு மரண வேளையில் பயம் தோன்றினாலும் அந்த பயத்திலிருந்து அல்லாஹ் அவர்களை மீட்டுவான். சுவனம் குறித்த நன்மாராயம் அவருக்கு கூறப்படும். இறைவனது நன்மாராயத்தை பெற்றுக்கொண்ட ஒரு முஃமின் இவ்வுலகில் இருக்க விரும்ப மாட்டான். தமது இறைவனை உடனே சந்திக்க வேண்டும் என ஆசை கொள்வான். அவ்வாறே இறைவனும் அந்த அடியானை சந்திக்க ஆசை கொள்வான் என்று நபியவர்கள் அழகியதொரு விளக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மரணம் குறித்த பயம் ஏற்பட்டாலும் மரணத்தை அடையும் இறுதியான கட்டத்தில் ஒரு முஃமினுக்கு நிகழ்பவைகளைப் பற்றி நபியவர்கள் எடுத்து சொன்னதும் அழகிய முறையில் அவர்கள் சாந்தமானார்கள்.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நமது நிலை என்னவாக இருக்கும்????

மரணத்திற்கும் பயம்!!!!
மரணவேளையை அடைந்தால் நபிகளார் சொன்ன இந்த நன்மாராயங்கள் எமக்கு கிடைக்குமா என்பதை எண்ணியும் பயம்!!!! 
நம் வாழ்க்கைதான் நமது மறுமை வாழ்வை பற்றி இப்பொழுதே பேசுகிறதே.......

மரணம் என்ற இறைவனது அழைப்பு! அது எந்த நொடியில் எம்மை சந்தித்தாலும் அதை இன்முகத்தோடு நான் ஏற்கத் தயார் என்ற வாழ்வாக நமது வாழ்வு மாற வேண்டும். நாம் எவ்வாறு வாழ்ந்தால் அப்படியான ஒரு தருணம் நமது வாழ்வில் குடிகொள்ளும் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதற்குண்டான போராட்டம் நம் வாழ்வில் எப்பொழுதும் தொய்வடைந்து விடக்கூடாது.

எவரும் பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த அறிவுரையை எம் தோழர்களுக்கு எழுதுகின்ற வேளையில் என் உள்ளமும் சொல்கிறது நானும் அந்த மரணத்தை சந்திக்க இன்னும் தயாராகவில்லை என்று.....

எதுவாக இருந்தாலும் இறைவனது வெறுப்பை பெற்ற நிலையில் நமது உயிர் இவ்வுலகைவிட்டு பிரித்துவிடக் கூடாது. கருணையாளன் அல்லாஹ் நமது பிழைகளை பொருந்திக்கொண்டு வெற்றியாளர்களாக இறுதி நேரத்தில் நம்மை அரவணைப்பானாக....!!!

No comments:

Post a Comment