தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, November 14, 2017

மரணித்தோரை மறந்துவிட வேண்டாம்!!!



இறைவன் மனிதர்களுள் ஏற்படுத்திய அதிசயமான ஒரு உணர்வு தான் மறதி என்கின்ற உணர்வாகும். இந்த உணர்வு அவசியம் சில நிலைகளில் நமக்குள் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நாம் இயல்பாக இந்த உலகத்தில் நடைபோட முடியும்.

ஆனால் சில விஷயங்களை நாம் மறக்க கூடாது அதிகம் அதிகம் நினைவுபடுத்த வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் ஆகவே முக்கியமான ஒன்று தான் மரணம். நமது வாழ்வு பரிசுத்தமாவதற்கு மரண சிந்தனை என்பது மிகப்பெரிய ஆயுதமாகும்.

இதேபோன்று நாம் மறக்கக்கூடாத ஒரு முக்கியமான செயல் ஒன்று உள்ளது. நபியவர்கள் தாம் வாழ்ந்த காலம் வரைக்கும் மறக்காமல் செயல்படுத்தி வந்த ஒரு அழகிய செயல் அது. அதுதான் தம்மோடு வாழ்ந்து மரணித்த அன்புத்தோழர்களை தாம் மரணிக்கின்ற வரை மறவாமை இருந்த குணமாகும்!!!

தம்மைவிட்டு மறைந்து விட்டார்கள் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மக்களை மறக்கவில்லை. ஜன்னத்துல் பகீ எனும் அடக்கஸ்தலத்திற்கு அதிகமாக நேரம் ஒதுக்கி செல்லும் வழக்கம் நபியவர்களிடம் இருந்தது. அங்கு சென்று அந்த தோழர்களுக்காக அதிகமாக பிரார்த்தனை செய்வார்கள். நபியின் இந்த வழிகாட்டல் நம்மில் அதிகமானோரின் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. இறைவன் கூட நல்ல மனிதர்களின் குணங்களில் ஒன்றாக கீழ்காணும் பிராத்தனை இருந்ததாக கூறுகிறான்....

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ

"எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!
திருக்குர்ஆன் 59:10

ஆனால் இன்றைய நமது நிலையை உரசிப்பார்க்கும் பொழுது ஊரில் எவரேனும் மரணம் என்றால் மட்டும்தான் மண்ணறை சந்திப்போ பிரார்த்தனையோ வெளிப்படுகிறது????!!!!! இந்த நிலை இப்படியே தொடருமாக இருந்தால் நாளை நாம் மண்ணறைக்குள் வைக்கப்படும் பொழுது கூட இதே பலவீனமான நிலையே மக்கள் மத்தியில் தொடரும். நமக்காக பிரார்த்தனை செய்ய எவரும் இருக்க மாட்டார்கள்.

மரணித்த நபர்களை எண்ணி மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க கூடாது என்றுதான் மார்க்கம் சொல்கிறதே தவிர அவர்களை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று மார்க்கம் போதிக்கவில்லை.

நமது தவறுகளுக்காக மண்ணறையில் நம்மை இறைவன் தண்டிப்பானாக இருந்தால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) உயிரோடு இந்த உலகத்தில் வாழும் நமது சன்மார்க்க உறவுகள் நமக்காக கேட்கும் பிரார்த்தனைகள் பயனளிக்க வாய்ப்புள்ளது அல்லவா??? ஆகவே தான் நபிகளார் இதனை நமக்கு வழிகாட்டினார்கள்.

நம்மோடு வாழ்ந்து மரணித்த நபர்களை ஒருகணம் எண்ணிப்பாருங்கள். அவர்களது குற்றத்திற்காக அவர்களை இறைவன் தற்போது தண்டித்து கொண்டிருந்தால்???!!!

நாம் அவர்களுக்காக இறைவனிடம் கண்ணீர் வடித்தால் இறைவன் நிச்சயமாக அந்த நபர்களை மன்னிப்பான் (அவர்கள் இணைவைக்காது மரணித்து இருந்தால்). அவ்வாறு மன்னிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதற்காகவே திருமறையில் நாம் மேலே சுட்டிக்காட்டிய பிரார்த்தனையை இறைவன் பதிய வைத்துள்ளான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நம்மோடு வாழ்ந்த ஈமானிய உறவுகளை நினைவு படுத்துங்கள்!!! அவர்களது பாவக்கறைகளை கருணையாளன் மன்னிப்பதற்காக உங்கள் பிரார்த்தனைகளில் அவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!!!

நம் வாழ்வு பரிசுத்தமாவதற்காகவும், மறுமையின் முதல் எட்டை தொட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணறைவாசிகளின் வாழ்வு பரிசுத்தமாவதற்காகவும் நேரம் ஒதுக்கி அடக்கத்தலங்களை சந்திப்போமாக!!!!

இந்த செயலுக்கு உயிரோட்டம் கொடுக்காததன் விளைவு நாளை நம்மையும் பாதித்து விடும் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.

செயல்படுத்துவோம்....! செயல்பட தூண்டுவோம்....!

No comments:

Post a Comment