தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, November 28, 2017

சகோதர முஸ்லிமிற்காக பிரார்த்தனை செய்வதால் இறைவன் தரும் அளப்பரிய நன்மை என்னவென உங்களுக்கு தெரியுமா????



நமது வாழ்வின் எந்தப்பகுதியை நாம் எடுத்துக் கொண்டாலும் "நேரமின்மை" என்றதொரு தோழன் நம்மை இடைவிடாமல் துரத்திக்கொண்டு இருப்பதை நாம் உணர முடியும். உண்மையாகவே அதிகமான ஒய்வு நேரம் கிடைக்காத நபர்களும் இவ்வுலகில் உண்டு, நேரம் கிடைத்தும் கூட எதற்குமே நேரம் ஒதுக்க மனமில்லா நபர்களும் இவ்வுலகில் உண்டு.

இன்றைய நமது வாழ்க்கையின் பொருளடக்கத்தை சுருக்கமான வார்த்தைகளில் கூற வேண்டும் எனில், "நாம் (நாம், மனைவி, பிள்ளைகள்) வாழ வேண்டும்!!! நாம் (நாம், மனைவி, பிள்ளைகள்) வாழ்வதற்கு இவ்வுலகில் என்ன வேண்டும்!!! என்று சொல்லி முடித்துவிடலாம். இவ்வுலகில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதவீதமான மக்கள் இவ்வாறு தான் வாழ்கின்றனர்.

சமீபத்தில் சென்னையை கதிகலங்க செய்த வெள்ளப்பெருக்கு நிகழ்வை நாம் மறக்க முடியாது. இந்த வெள்ளப்பெருக்கு தொடர்பாக மீடியாக்களில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தை பார்க்கும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆசிரியர் அழகாக மனிதனின் இன்றைய சூழலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்ரினார்போல சுட்டிக்காட்டினார். வெள்ளப்பெருக்கினால் வீட்டை விட்டு வெளியேற முடியாது தவித்த மக்கள் தமது வீட்டின் மாடியில் நின்று கொண்டு தமது அண்டை வீட்டாரை பார்த்து சொன்னார்களாம் ஹாய்! நீங்க இந்த வீட்லதான் இருக்கீங்களா??? என்று. அவர் நையாண்டியாக எடுத்து வைத்த இந்த வாதம் அருமை!!!

இதை ஏன் அவர் சொன்னார் என்பதை விளங்கி இருப்பீர்கள். அண்டை வீட்டில் வசிப்போர் யார் என்று கூட தெரியாத நிலையில் தான் இன்றைய மனித சமூகம் உருவாகிக்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் கூறப்படும் காரணம் நேரமின்மை!!! மனித உணர்வுகளை மதித்தல், மனிதர்களோடு மனிதர்களாய் அன்பு காட்டி வாழுதல் போன்ற மனிதாபிமான செயல்கூட மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமான செயல்கள், சகோதரத்துவ உணர்வுகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் இடம் என்பது மிக உயர்வானது ஆகும்.

இவைகளை நான் ஆரம்பமாக கூறக் காரணம், இதுபோன்று நாம் பலவீனப்பட்டு இருக்கும் ஒரு முக்கியமான இடம் தான் தம்மோடு வாழும் சகோதர முஸ்லிமின் துன்பங்கள் சோதனைகளில் பங்கெடுக்காமை என்ற மோசமான இடம் ஆகும். சோதனைகளில் பங்கெடுக்காமை என்ற நிலை என்பதோடு பிறரது சோதனைகளை கண்டு மகிழும் இரக்கமற்ற குணமும் சேர்ந்தே பலரிடம் வளர்ந்து வருகிறது. மக்காவில் வசித்த முஷ்ரிக்குகள் மற்றும் மதினாவில் வசித்த முனாஃபிக்குகளின் குணமும் இதுவாகத்தான் இருந்தது. ஒரு முஸ்லிமின் துன்பம் அவர்களுக்கு இன்பமாகவே இருந்தது. நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்பதை சற்றே சிந்தித்து பார்ப்போமாக!!!!

தம்மோடு வாழும் ஒரு முஸ்லிம் ஏதேனும் சோதனையில் சிக்கினால் அவருக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற சகோதரத்துவ உணர்வை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்தார்கள். இதுபோன்ற உணர்வு நம்மில் எத்தனை நபர்களிடம் உள்ளது???? ஒரு முஸ்லிம் தமது சோதனைகளை கண்ணீர்மல்க நம்மிடம் கூறிவிட்டு ரப்பிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னால் நமது நிலை அந்த இடத்தில் கூட நேரமின்மையாகவே உள்ளது!!!

தாமாக பிரார்த்தனை செய்வதும் இல்லை! தம்மிடம் நெருங்கிப்பழகும் உறவுகள் தமது சோதனைகளை ஒப்புவித்து இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று வாய் திறந்து கூறினாலும் கூட அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய நேரமுமில்லை!!! நமக்காக பிரார்த்தனை செய்யவே நேரமின்மை என்ற வியாதி நம்மை தொற்றிக்கொண்டிருக்கும்போது பிறரை எவ்வாறு நாம் கவணத்தில் எடுப்பது. இது மிகப்பெரிய பலவீனமான நிலை தோழர்களே! நமது நிலை மாற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் தமது சகோதர முஸ்லிமிற்காக தனிமையில் அமர்ந்து பிரார்த்திக்கிறாரோ அவருக்காக ஒரு வானவர் "உமக்கும் அவ்வாறு உண்டாகட்டுமாக" என்று பிரார்த்திக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம் 2732 (அரபு இலக்க எண்).

வானவர்களை பொறுத்தவரை இறைவனது அனுமதி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யவும் அவர்களால் இயலாது. மேற்கண்ட ஹதீஸை கவணியுங்கள். நாம் பிறருக்காக தனிமையில் பிரார்த்தனை செய்யும்போது வானவர் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றால் அந்த வானவர் இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறார் என்பதை முதல் பகுதியாக விளங்க வேண்டும்.

இரண்டாவது பகுதி, இறைவன் வானவர்களை அனுப்பி வைக்கிறான் என்றால் நாம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை என்ற சமூக உணர்வை இறைவன் உயர்வாக கருதுகிறான் என்பதாகும்.

மூன்றாவது பகுதி, இவ்வாறு பிரார்த்திப்போருக்கு அந்த வானவர் உமக்கும் அதுபோன்று உண்டாவதாக என பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் அந்த நபருக்கு உதவுவதற்காக உத்தரவாதம் கொடுத்துவிட்டான் என்பதாகும். ஏனெனில் ஒரு வானவரின் பிரார்த்தனை என்பது இறைவனின் கட்டளை மூலம் வெளிப்படுவதாகும். இறைவன் நிச்சயமாக இந்த செயல் உடையோருக்கு உதவப்போகிறான் என்பதனால்தான் தமது அடியார்களான வானவர்களிடம் இந்த நபருக்காக இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறான்.

இந்த சிறப்பான அம்சங்களை ஒரு இறைவிசுவாசி முறையாக விளங்கிக்கொண்டால் பிறரின் சுமைகளை தமதாக எண்ணி அவருக்காக பிரார்த்தனை செய்வதை ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். அவ்வாறு ஒரு இறைவிசுவாசி செயல்படுவதின்மூலம், நாம் யாருக்காக பிரார்த்தனை செய்தோமோ அவரைப்போன்ற சோதனைகள் இறைவன் நாடி நாளை நமக்கு ஏற்படும்போது, வானவர் நமக்காக கேட்ட பிரார்த்தனையின் மூலம் இறைவனது உதவி அப்போது நமக்கு கிடைக்கும். இதைவிட வேறு என்ன தேவை சொந்தங்களே!!!

பிற சகோதர முஸ்லிமின் சோதனையை கண்டு மகிழும் இறைவன் வெறுக்கும் குணம் நமது வாழ்வில் வந்துவிடக்கூடாது. நாம் நமது சோதனை நேரங்களை எவ்வாறு உணர்கிறோமோ அதுபோன்று பிற முஸ்லிம்களின் சோதனைகளை உணர்வோமாக!!!! எல்லாம் வல்ல இறைவன் சகோதரதத்துவ உணர்வுகளை நம் உள்ளத்தில் அதிகரிக்கச் செய்வானாக!!!! பிறரின் சோதனை கண்டு கண்ணீர் வடிக்கும் உயரிய குணத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்பாலிப்பானாக!!!

(இன்னும் ஏராளம் இது தொடர்பாக பேச வேண்டியுள்ளது. பதிவு நீழ்வதால் சுருக்கி முடிக்கிறேன்)

No comments:

Post a Comment