தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, December 21, 2016

SLTJ அபூபக்ர் (ரலி) அவர்களின் தனிப்பட்ட கூற்றை மார்க்க ஆதாரமாக எடுத்ததா???




சமீபத்தில் இலங்கையை சார்ந்த சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் ஜானசார தேரரை தைரியாமாக விமர்சித்த காரணத்தினால் அதற்கு மதச்சாயம் பூசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.

இந்தச்சூழ்நிலையில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல, நாங்களும் கருத்து சொல்ல இலங்கையில் இருக்கிறோம் என்று சில நபர்கள் அப்துர்ராசிக் அவர்கள் நடந்துகொண்டமை தவறு என்பதை போன்று பூசலாக பேசி வீடியோ கிளிப்களை யூடியூபில் பதிவேற்றி இருந்தார்கள்.

அதில் இலங்கையை சார்ந்த சகோதரர் நியாஸ் சிராஜி அவர்கள் சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் செய்த செயல் தவறானது என்று விமர்சித்ததோடு நமது கொள்கையோடு தொடர்புடைய சில விஷயங்களையும் விமர்சித்திருந்ததை நான் பார்க்க கிடைத்தது. 

அவரது அந்த விளக்க உரைக்கான தலைப்பாக

ஸஹாபாக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளாத SLTJ-யினா் ஏன் அபூபக்ர் (ரலி) அவா்களின் கூற்றை ஏற்றுக்கொண்டனா்?
என்று இட்டிருந்தனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நேரத்தில் உர்வா என்பவன் நபித்தோழர்களை பார்த்து பயந்து ஓடும் கோழைகள் என்று நபியிடம் விமர்சித்து விடுகிறான். ஆகவே அங்கிருந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கோபத்தில் امْصُصْ بِبَظْرِ اللَّاتِ என்று உர்வாவை கடும் வாசகத்தை கொண்டு திட்டி விடுகிறார்கள்.

ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்களே இவ்வாறு திட்டி உள்ளார்கள் தானே. பிறகு அல்லாஹ்வை கடுமையாக விமர்சிக்கும் ஞானசார தேரரை நாம் திட்டுவதில் என்ன தவறு உள்ளது என்று SLTJ வாதம் வைக்கிறது. நபித்தோழர்களை பின்பற்றக் கூடாது என்று சொல்லும் இவர்கள் ஏன் இந்த இடத்தில் மட்டும் தங்கள் செயலை நியாயப்படுத்த அபூபக்ர் (ரலி) அவர்களின் தனிப்பட்ட கூற்றை ஆதாரமாக எடுத்தார்கள்???
என்பதுதான் அவரது உரையில் அவர் வைத்த பிரதான வாதம்.

நமது பதில்:

வஹியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் அது அல்லாத ஒன்றை நாம் பின்பற்றக் கூடாது என்ற கொள்கையில் இவர்களை விட நாம் ஆழமாகவே செயல்பட்டு வருகிறோம். சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் ஞானசார தேரரை விமர்சித்தமை தவறு என்று நியாஸ் சிராஜி போன்றவர்கள் விமர்சித்த காரணத்தினால் தான், ஒரு சந்தர்ப்பத்தில் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களும்கூட இதைவிட கடும் சொற்களை பயன்படுத்தி உர்வா என்ற ஒருவனை திட்தியுள்ளார்கள். அந்த வார்த்தை இன்று வரைக்கும் மூல மொழியில் மட்டும் தான் இருக்கிறதே தவிர அதற்கு மொழிப்பெயர்ப்பு கூட செய்யாமல் விட்டுள்ளனர். அது அந்த அளவிற்கு கடுமையான வாசகம். ஆகவே இந்த இடத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களை குறை சொல்வீர்களா? என்று நாம் கேட்டோம்.

அதற்கு நியாஸ் சிராஜி அவர்கள் பதில் சொல்லும்போது அன்றையக்கால வழக்கப்படி அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் திட்டினார்கள் என்று தான் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அது கடும் வாசக அமைப்பு இல்லை என்பதை போன்று அவரது உரையில் வளைத்தார். மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் அவ்வாறு மொழிப்பெயர்த்து உள்ளார்களே தவிர, இமாம் புகாரி அவர்கள் அன்றைய கால வழக்கப்படி என்று குறிப்பிடவில்லை என்பதை இவர்களுக்கு நாம் சுட்டிக் காட்டிக் கொள்கிறோம். (எது எப்படியோ  அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கோபப்பட்டு ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் இவ்வாறு திட்டியிருப்பதை வைத்து நாம் அவரின் மீது தவறான எண்ணம் கொள்ளப்போவதில்லை).

அதுமட்டுமல்லாமல் இது அபூபக்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று ஆகும். இதை நாம் பின்பற்ற முடியாது என்றும் வாதம் வைத்தார்.

உண்மையில் அது நபித்தோழரின் சொந்தக் கூற்றாக இருக்குமானால் நாம் அதை எந்த ஒன்றிற்கும் மார்க்க ஆதாரமாக எடுக்கவே மாட்டோம். நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் உள்ள இவர்களும் கூட SLTJ-யை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அபூபக்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றை மார்க்கமாக எடுக்க முடியாது என்று சொன்னது தான் நமக்கு ஆச்சரியம். இதுபோன்ற உண்மை நிலைப்பாடுகளை நாம் வரவேற்கிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்! நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இவை மூன்றும் தான் சுன்னாஹ் எனப்படும் நபியின் வழிமுறைக்கான வரைவிலக்கணம் எனபது அனைத்து தரப்பு மெளலவிமார்களும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். இது அல்லாத ஒன்று இவற்றுள் இணையுமென்றால் அதை நாம் சுன்னாஹ்வாக எடுத்துக்கொள்ள முடியாது.

உதாரணமாக நபியின் சொல், செயல், அங்கீகாரம் இவை மூன்றும் இல்லாத நிலையில் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் மார்க்கம் தொடர்பாக ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை விளக்கினார்கள் என்றால் அது வஹி கிடையாது. அது அவரது தனிப்பட்ட கூற்று என வரையறை செய்யப்படும்.

ஆனால் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் உர்வாவை திட்டிய சம்பவமோ நபியின் பார்வைக்கு முன்னாள் நடந்த நிகழ்வாகும். நபியின் பார்வைக்கு முன்னாள் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதை அவர்கள் கட்டாயம் அடையாளப்படுத்த வேண்டும். காரணம் நபியவர்களுக்கு முன்னாள் ஒருவர் ஒரு செயலை செய்து அதை அவர்கள் கண்டிக்காமல் அமைதி காத்துவிட்டால் அந்த செயலுக்கு நபியின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்பது பொருள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நாளில் உர்வா என்பவன் நபித்தோழர்களை புறமுதுகிட்டு ஓடிவிடும் கோழைகள் என்பதை போன்று விமர்சித்தமை பொறுக்காமல் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் உர்வா என்பவனை நபியவர்களுக்கு முன்னாள் தான் கடுமையான வாசக அமைப்பை பயன்படுத்தி திட்டுகிறார்கள். அந்தச் செயலை நபியவர்கள் கண்டித்தார்கள் என்று எந்த அதிகப்படியான ரிவாயத்துக்களும் நாம் அறிந்தவரை இல்லை. நபியின் பார்வைக்கு முன்னாள் நடந்த இந்த சம்பவம் நபியால் கண்டிக்கப்படவில்லை என்றால் அது நிச்சயமாக நபியின் அங்கீகாரம் என்ற வட்டத்தில் உள்ளது ஆகும். இதை அபூபக்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று என்று எவ்வாறு இவர்களால் சொல்ல முடிந்தது என்பது வியப்பாக உள்ளது.

இவ்வாறு அனைவரும் திட்டிக்கொண்டு திரியலாமா என்பதற்கு அடுத்து வருவோம். இது நபியின் அங்கீகாரத்தில் உள்ளதா இல்லையா என்பதை சகோதரர் நியாஸ் சிராஜி அவர்கள் விளக்க வேண்டும். நபியவர்களே அந்த சந்தர்ப்பத்தை பார்த்து மெளனம் காத்த நிலையில் நியாஸ் சிராஜி அவர்கள், அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அவ்வாறு உர்வாவை திட்டியது தவறு என்று விமர்சிக்கிறார். இதுபோன்று கொள்கை விளக்கத்தில் கோளாறு உள்ளவர்கள் தான் பேசுவார்கள்.

மேலும் இவர் அந்நிய பெண்ணை முத்தமிட்ட நபித்தோழரின் செய்தியைக் குறிப்பிட்டு இந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஆண் அந்நிய பெண்ணை முத்தமிடலாம் என்பீர்களா? எது அழகிய முன்மாதிறியோ அதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அபூபக்ர் (ரலி) அவர்கள் உர்வாவை திட்டியதை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் வாதம் வைத்தார். இதுபோன்ற வாதங்களை இவர் வைப்பதில் இருந்து இவருக்கு ஹதீஸ்களை முறையாக அணுகி விளங்க தெரியவில்லை என்பதைத்தான் நான் புரிந்து கொண்டேன்.

என்றைக்குமே ஒரு தீய செயலை நாம் முன்மாதிரியாக எடுக்கக் கூடாது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அந்நிய பெண்ணை முத்தமிட்ட நபித்தோழரை பொருத்தவரைக்கும் அவர் அந்தப் பெண்ணை முத்தமிட்டு விட்டு அல்லாஹ்வின் தூதரிடம் அதை முறையிட வந்ததன் காரணமே விபச்சாரக் குற்றத்திற்கு எவ்வாறு தண்டனைகள் நிறைவேற்றப் படுகிறதோ அதுபோன்று முத்தமிட்ட பாவத்திற்கும் ஏதாவது தண்டனை இருக்கும், அதைப்பெற்று அதன் மூலம் பாவப்பரிகாரம் செய்து கொள்ளலாம் என்பதற்காகத்தான் அல்லாஹ்வின் தூதரிடம் அவர் வருகிறார். இதிலிருந்தே அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதையும் அவர் எதிர்பாராத விதமாகத்தான் உணர்வுகள் முற்றி தவறுதலாக நடந்திருக்கிறார் என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆகவே இந்த செய்தியின் பாடம் நற்குணங்கள் கொண்ட ஒரு நல்ல மனிதருக்கே அன்றி, சதாவும் அந்நிய பெண் பின்னால் அழைந்துத் திரியும் கேடிகளுக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சூழலை அடைந்த நல்ல மனிதர்களுக்கு அவரது செயல் குற்றமாக ஆகாது, அதை இறைவன் மன்னித்து விடுவான் என்று எவ்வாறு நாம் சொல்கிறோமோ அதேபோன்ற சம்பவம் தான் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் உர்வாவை கடுமையாக திட்டிய சம்பவமும் ஆகும். அந்த வார்த்தைக் கடுமையானதாக இருந்தாலும் திட்டியவர் என்ன சூழ்நிலையில் இருந்தார் என்பதே இறைவனால் கவணிக்கப்படும். ஆகவே தான் நபியவர்களும் கூட கடுமையான வார்த்தையை பயன்படுத்தி உர்வாவை திட்டிய அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை அந்த இடத்தில் கண்டிக்கவில்லை.

அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் திட்டியதைப் போன்று நாமும் திட்டித் திரியலாமா என்றால் கண்டிப்பாக அனைத்து சந்தர்ப்பத்திலும் இதுபோன்று திட்டுவதற்கு மார்க்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் சந்தித்த அந்த சூழல் போன்ற நிலையில் நாம் இருந்து உணர்ச்சிவசத்தால் கடுமையாக திட்டி விடுகிறோம் என்றால் அதற்கு மார்க்கத்தில் எந்தக் குற்றமும் இல்லை என்பதைத் தான் நபியவர்களின் மெளனம் நமக்கு சொல்லித் தருகிறது.

ஆகவே அல்லாஹ்வை கடும் வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்து வரும் ஞானசார தேரருக்கு எதிராக கொதித்தெழுந்து கொஞ்சம் காரமான வார்த்தையைக் கொண்டு விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை. மிகச் சாதாரண வார்த்தைகளால் தான் சகோதரர் அப்துர்ராசிக் அவர்கள் ஞானசார தேரரை விமர்சித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஈமானிய உணர்வுள்ளவர்கள் அவ்வாறு தான் தூண்டப்படுவார்கள். அல்லாஹ்வை கொச்சை கொச்சையாக ஒருவன் விமர்சிக்கின்ற பொழுது இது இந்தியாவை போன்றல்ல, இலங்கை ஒரு மதம் சார்ந்த நாடு, இங்கு நாம் விரும்பியதைப் போன்று பேச முடியாது செயல்பட முடியாது என்றெல்லாம் மறுமையை இலக்காக கொண்ட ஒரு ஈமானிய உணர்வுள்ளவன் பேசமாட்டான் என்பதை இலங்கை வாழ் எதிர்தரப்பு சகோதரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

SLTJ ஒருபோதும் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றை ஆதாரமாக முன்வைக்கவில்லை. அது நபியால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என்பதை தெளிவாக நாம் விளக்கியிருக்கிறோம்.

விமர்சனம் என்ற பெயரில் தோன்றியதை எல்லாம் அள்ளித்தூவிக் கொண்டு திரியாமல் நியாமாக செயல்படுமாறு இதுபோன்று விமர்சிக்கும் நபர்களுக்கு அறிவுரை சொல்லி முடிக்கிறேன்.

முஹம்மது மஷாரிக் (தொண்டி)


No comments:

Post a Comment