தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, November 25, 2017

நெருக்கமான உறவுகளின் மரணத்தின்போது நபியவர்கள் கற்றுக்கொடுத்த ஈமானிய பாடம்!!!



நாம் நேசிக்கும் நெருக்கமான உறவுகள் இவ்வுலகைவிட்டு பிரியும்போது அதன் சோகத்தையும் அதனால் உள்ளம் அனுபவிக்கும் வேதனைகளையும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

என்றாலும் ஒரு இறைவிசுவாசி இதுபோன்ற சூழலில் எவ்வாறு மனதை ஈமானியப் பண்புகளால் பக்குவப்படுத்த வேண்டும் என்பதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.

நபியவர்களின் பேத்தியின் மரண வேளையில் நபிகளார் (ஸல்) அவர்கள் தம் மகள் ஜைனபுக்கு கற்றுக்கொடுத்த ஈமானிய பாடத்தை கேளுங்கள்....

மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!' என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். 
சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி), நூல் : புகாரி 1284.

மனதளவில் ஆழமான வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இவை இறைவனது நியதி, இவற்றை ஏற்று பொறுமை காப்பதே ஒரு முஃமினது செயலாக இருக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தம் செயல் மூலம் மகளுக்கு சொல்லி அனுப்புகிறார்கள்.
'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!'

நபியவர்கள் தம் மகளுக்கு சொல்லி அனுப்பிய இந்த ஈமானிய பாடம் நம் அனைவரது உள்ளத்திலும் வேரூன்றிப் பதிய வேண்டும். நேசமான உறவுகளே இன்றி இந்த உலகில் வாழ்வோர் எவரும் இல்லை. ஒன்றோ நாம் பிரிய வேண்டிய சூழல் உண்டாகும் அல்லது நம்மைவிட்டு நாம் நேசித்த உறவுகள் பிரிய வேண்டிய சூழல்கள் உண்டாகும்.

எந்நிலையாக இருந்தாலும் அதை ஈமானிய உணர்வுகளோடு எதிர்கொள்ள பழக வேண்டும். அந்த உணர்வுகளை நம்மை படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் நமக்கு ஏற்படுத்த முடியாது. இதற்காக இறைவனிடம் அதிகம் உதவி தேட வேண்டும்.

இதுபோன்ற சூழல்களை சந்திக்கும் நேரத்தில் மறதி எனும் சிறந்த அருட்கொடையை அல்லாஹ் நம்மீது விரைவாகப் பொழிந்து நமது உள்ளங்களை அமைதியுறச் செய்வானாக!!!!

No comments:

Post a Comment