தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, October 7, 2017

இறைவன் வெறுக்கும் பொறாமைகளும், அங்கீகரித்த பொறாமைகளும்!!!



இவ்வுலக வாழ்வில் எந்தவொரு மனிதனும் இன்னபிற மனிதன்மீது பொறாமை கொள்ளக்கூடாது என இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டுகிறது. மனிதனின் பொறாமைக் குணத்திற்கு அளவுகோல் வடிக்கவே முடியாத அளவிற்கு எதை எடுத்தாலும் அதில் பிறரோடு பொறாமை கொண்டு தீங்கு செய்வதை பரவலாக காண முடிகிறது. 

இறைவன் இது பற்றி திருமறையில் கூறுகின்றபொழுது, "பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!" (113:5) என நபிக்கு இறைவன் கூறுகிறான். இதற்கான காரணம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மீது கொள்ளும் போட்டி பொறாமையால் உயிர் இழப்புக்கள் கூட இன்று சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. 

தான் விரும்பிய ஒரு பெண் தன்னை விரும்பவில்லை இன்னொருவனை நேசிக்கிறாள் என்பதை ஒருவன் பார்க்கும்பொழுது அவனுக்குள் எழுகின்ற பொறாமை எனும் கொடிய தீ அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்யத்தூண்டுகிறது. (ஹலாலான உறவு அல்லாமல் அந்நியர்களை காதலித்தல் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது, உதாரணத்திற்காகவே இவை கூறப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்) 

அதேபோன்ற செல்வத்தில், அழகில், குணத்தில், பலத்தில் என்று எல்லா வகையிலும் பொறாமை வளர்கிறது. வளர்வதற்கேற்ப பொறாமைக் குணத்தை உள்ளத்தில் வளர்த்துவரும் நபர்களிடம் ஏதோ ஒரு வகையில் கெடுதல் செய்யும் குணமும் கூடவே வளர்ந்து வருகிறது. இதுபோன்று நாமாக வளர்த்துக்கொள்ளும் பொறாமை எனும் கொடிய குணத்தால் சம்மந்தமில்லாது ஒரு நபர் பாதிப்படைந்து நிற்பதை இறைவன் ஒருபோதும் ஏற்க மாட்டான். 

ஆகவே தான் பொறாமை கொள்ளும் நபர்களின் தீங்கிலிருந்து எம்மிடம் நீங்கள் பாதுகாப்பு தேடுங்கள், நாம் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் எனும் அடிப்படையில் பொறாமைக்காரனுக்கு எதிராக இறைவனே பொறுப்பேற்பதை நாம் இந்த வசனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆக ஒரு மனிதன் தமக்கு இறைவன் அளித்தவைகளைக் கொண்டு திருப்தியடைந்து கொள்ள வேண்டுமே தவிர, பிறருக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளை பார்த்து பொறாமை எனும் கொடிய வியாதியை நமது உள்ளத்தில் வளர்த்துக்கொள்ள கூடாது. அது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் பாவம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் அடிப்படையாக புரிந்துகொள்ள வேண்டும். 

இவ்வாறு பொறாமை அறவே கூடாது என்று நமக்கு கட்டளையிட்ட இறைவன், ஒரு இரண்டு விஷயங்களில் மட்டும் நீங்கள் பொறாமை கொள்ள அனுமதி உண்டு என தம் தூதர் மூலமாக இந்த சமூகத்திற்கு கற்றுக்கொடுக்கிறான். 

இந்த இரண்டு விஷயங்களை பொருத்தவரைக்கும் பொறாமை என்ற குணத்தை நிச்சயமாக இவற்றோடு பொரும்பாலும் உரசவிட்டிருக்க மாட்டோம் என்று தான் நான் சொல்வேன். இவற்றிற்காக நம் சமூகத்தில் பொறாமை கொள்ளும் மக்கள் விரல்களால் எண்ணி முடிக்க முடியுமான அளவே இருக்கக்கூடும்!!! (அல்லாஹ் மிக அறிந்தவன்) அவைகள் இரண்டும் எவை என்பதை நபியவர்கள் கூறுகிறார்கள்

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 5025. 

ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்குகிறான், அதைகொண்டு அவர் இரவில் ஓதுகிறார் என்பதோடு நபியவர்கள் நிறுத்தவில்லை, மாறாக அதனை ஓதி அதன்மூலமாக வழிபடுகிறார் என்று சொன்னார்கள். அதாவது வேதத்தை படித்து அதன் அடிப்படையில் செயல்படும் ஒரு சிறந்த வணக்கசாலியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார்கள். 

இதுபோன்றதொரு மனிதரை நாம் பார்க்கின்ற பொழுது நாமும் இவர் போன்று செயல்பட வேண்டும் அல்லது இவரை மிஞ்சுகின்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற பொறாமை உணர்வு இந்த விஷயத்தில் உண்டாக வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். 

ஆனால் இதுபோன்ற நபர்களை பார்க்கும் பொழுது நமக்குள் பொறாமை சிந்தனைகள் உதித்ததுண்டா???? இவற்றை சிந்தனைக்கே எடுக்காத நபர்கள் தான் நம்மில் அதிகம். 

உலகாதாய சிந்தனைகளில் ஒருவருக்கொருவர் முந்துவதற்காக பெரும்பகுதி போட்டி போடுகிறோம். நம்மைவிட அதிக இறைவசனம் தெரிந்த ஒரு நபரை பார்க்கும்பொழுது இவரை மிஞ்சும் வகையில் இவரைக்காட்டிலும் அதிக இறைவசனங்களை நான் மனனம் செய்வேன் என்ற போட்டி உணர்வு உதித்ததுண்டா???? 

சிறு வயது வாலிபன் அழகிய முறையில் மார்க்க அழைப்புப்பணியில் செயல்படுவதைப் பார்த்து இதைவிட அழகிய அழைப்பாளனாக எனது பிள்ளையை நான் உருவாக்க போகிறேன் என்று பொறாமை கொண்டதுண்டா???? 

இதுபோன்று ஏராளம் சொல்லலாம் தோழர்களே! நாம் இதில் பலவீனர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

மேலும் நபியவர்கள் சொன்னார்கள், ஒருவருக்கு அதிகமான செல்வம் வழங்கப்பட்டு அதைக்கொண்டு இறைவழிப்பதையில் அவர் இரவு பகலாக சதாவும் தர்மம் செய்கிறார். இவரைப் போன்றோரை நீங்கள் பார்க்கும்பொழுது இதுபோன்றோ அல்லது இதைவிடவும் அதிகமாகவோ தாமும் தர்மம் செய்ய வேண்டும் என பொறாமை கொள்வதற்கு இறைவன் அனுமதிக்கிறான். 

ஒரு சதவீதம்கூட முழுமையாக இதற்காக பொறாமை கொள்ளும் இஸ்லாமிய சமூகத்தை நாம் பார்க்க இயலாது. சில ஏழைகள் இதுபோன்று செல்வத்தை அல்லாஹ் தமக்கு தந்தால் தாமும் தர்மம் செய்வோம், நாங்கள் ஏழ்மையை உணர்ந்தவர்கள் என்றெல்லாம் எண்ணுவார்கள். இறைவன் சோதனைக்காக சில சந்தர்ப்பங்களில் அந்த ஏழையை மிகப்பெரிய செல்வந்தனாகவும் மாற்றிவிடுவான். இப்படி இறைவன் சோதித்து பார்த்த நிறைய ஏழைகளும் தமது கோரிக்கையில் பொய்யர்களாக மாறிவிடுகின்றனர். இறைவனது சோதனையில் தோற்றும் விடுகின்றனர்.

செல்வத்தை சேர்ப்பதில் தான் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டும் போட்டிபோட்டுக் கொண்டும் திறம்பட செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அந்த செல்வம் இறைவன் கொடுத்தவை, அவற்றில் இறைவனது பணிக்காக ஒதுக்கப்பட வேண்டிய பகுதிகள் உண்டு. அவை நமக்கு சொந்தமானவை இல்லை என்பதையெல்லாம் பெரும்பாலும் மறந்து இந்த உலக இனபங்களையும் ஆடம்பர வாழ்வையும் நோக்கி வீரியமாக எதைப்பற்றியும் கவலை இல்லாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இறைவன் பாதுகாக்க வேண்டும்!!! 

பொறாமை என்னும் குணம் எவற்றில் இருந்தால் நமது இம்மை மறுமை வாழ்வு செழிப்பாகும் என்று இறைவன் நமக்கு கற்றுக்கொடுத்தானோ அவற்றில் மாத்திரம் அளவுக்கதிகமாக பொறாமை கொள்வோம்!!! 

இறைவன் தடுத்திருக்கும் ஏனைய பொறாமைக் குணங்களை விட்டும் நமது வாழ்வை தூய்மைப்படுத்துவோம்!!! 

எல்லாம் வல்ல இறைவன் அதற்குண்டான அனைத்து பாதைகளையும் நமக்கு எளிதாக்கி தருவானாக என்று பிரார்த்தித்தவனாக இந்த சிறிய அறிவுரைக்கு திரையிடுகிறேன்!!!

No comments:

Post a Comment