தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, December 4, 2017

மந்திரிக்கும் நபரை மனம் மாறவைத்த இன்னல்ஹம்தலில்லாஹ்......!!!



ஒவ்வொரு பயான்களின் துவக்கத்திலும் நாம் கேட்டு வரும் அழகிய வாசகங்கள்

«إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ»

முஷ்ரிக்காக வாழ்ந்த மந்திரிப்பவன் ஒருவனின் நேர்வழிக்கு வித்திட்டதை கீழே உள்ள நபியின் காலத்தில் நடந்த செய்தியின் மூலம் நாம் அறியலாம்.

அன்றாடம் கேள்விப்படும் வாசகங்கள், அன்றாடம் பேசுகின்ற வாசகங்கள்!!!! நபிக்கு பைத்தியம் என்று மக்கத்து முஷ்ரிக்குகள் பரப்பிவிட, ளிமாத் பின் ஸஅலபா என்ற மந்திரிப்பவன் நபியின் பைத்தியத்தை நீக்க சென்று அவனுக்கு நடந்த எதிர்பாராத நிலையை கவணியுங்கள்.

"அஸ்து ஷனூஆ" எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் "முஹம்மத் ஒரு மனநோயாளி" என்று கூறுவதை அவர் செவியுற்றார். "நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்" என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, "முஹம்மதே! காற்றுகறுப்புக்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!" என்று கூறினார்கள்.

(
இதைக் கேட்ட) ளிமாத், "நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், "நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது "உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் "என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)" என்று கூறினார்.

பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், "இதோ இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?" என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், "(ஆம்) நான் ஒரு தண்ணீர் குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்" என்றார். அதற்கு "அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள். (ளிமாத் அளித்துள்ள உறுதிமொழியின் கீழ் இவர்கள் அபயம் பெற்றவர்கள்)" என்று கூறினார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் தமிழ் இலக்கம் 1576, அரபு இலக்கம்  868.

இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது நமக்கு தோன்றுவதெல்லாம் மார்க்க விஷயங்களை அறிந்த எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் இறைவன் நாடினால் மட்டுமே நேர்வழி!!!!

எத்துனை அறிவுப்பூர்வமான ஆதாரங்களை அள்ளி வீசினாலும் ஈமானின் சுவடுகூட படியாத உள்ளங்களும் உண்டு. வெறும் இன்னல்ஹம்துலில்லாஹ் என்று ஆரம்பிக்கும் வாசகம் கேட்டு ஈமானின் பக்கம் மீண்டுக்கொண்ட உள்ளங்களும் உண்டு!!! அனைத்தின் அதிகாரமும் அல்லாஹ் ஒருவனின் கரத்தில் என்பதே நிதர்சனம்.
இஸ்லாமிய கொள்கைகளை எத்தி வைக்கும் இடத்தில் "நாம் தான், நம்மால் தான், நாம் இல்லை என்றால்" என்பன போன்ற சகட்டுப்பெருமைகள் தோன்றுமாக இருந்தால், நமது எதார்த்த நிலை என்ன என்பதை செவிட்டில் அடித்தாற்போல உணர்த்தும் செய்திதான் நபியின் காலத்தில் நடந்த இந்த நெகிழ்வூட்டும் சம்பவம்.
நபியின் தந்தையின் சகோதரர் அபூதாலிப், மக்காவின் ஆரம்ப கட்டத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபிக்கு உறுதுணையாக நின்று உதவிய மனிதர். அபூதாலிப் அவர்களின் உள்ளம் இஸ்லாத்தின்பால் திரும்ப வேண்டும் என்பதற்காக அவரது மரண வேளையில் நபியவர்கள் ஏகத்துவக்கொள்கையை கண்ணீர்மல்க எடுத்துரைத்தும் அவர் இஸ்லாமை ஏற்காமல் மரணித்துப்போனதும், அபூபக்கர் (ரலி) அவர்களின் வயது முதிர்ந்த தந்தை அபூகுஹாபா அவர்களுக்கு நபியவர்கள் சில நிமிடங்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்ய அதே இடத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்றமையும் நமக்கு எதை உணர்த்துகிறதோ அதை நோக்கியே அழைப்பாளர்கள் உள்ளத்தை பக்குவப்படுத்த வேண்டும்.

ஈமானிய மாற்றங்கள் இறைவனால் மட்டுமே!!!! எந்த தலைசிறந்த அழைப்பாலராலும் கிடையாது!!! இன்னல்ஹம்தலில்லாஹ் என்று ஆரம்பிக்கும் வாசகத்தால் கூட இறைவன் நாடினால் நேர்வழி கிடைக்கும்!!!! புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டுமாக!!!

No comments:

Post a Comment