தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, April 9, 2017

புறக்கணிக்கப்படும் இறைவனது உபதேசம்!



ஒரு மனிதன் சுவனம் செல்ல வேண்டும் என்றால் அவன் இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சொல்வதென்றால், இதே தமிழகத்தில் இறைவனது சட்டங்களையும் இறைத்தூதரின் வழிமுறைகளையும் பலர் புதுமையாக கருதிக்கொண்டிருந்த நிலையில் அவற்றை மிக வீரியமாக தமது வாழ்வில் நிலைநாட்டி அதற்காக ஏராளமான தொல்லைகளை அனுவித்த ஈமானிய சொந்தங்களை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். காரணம் நமது இலக்கும் இலட்சியமும் சுவனம் ஒன்று தான்.

நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்வோருடன் எங்களது உறவுகள் இவ்வாறுதான் என்று, தாம் நேசித்த நபர்களை கூட இறைவனுக்காக வெறுத்து ஒதுக்கிய ஏகத்துவ புறட்சியை நமது வாழ்நாளில் மறக்க முடியாது.

ஆனால் இன்று சில வேதனையான நிகழ்வை நமது சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பார்க்க முடிகிறது. எந்த நபியின் வழிகாட்டலை தமது வாழ்வில் பேணுவதற்காக பல்வேறு வகையான சோதனை போராட்டங்களை நாம் சந்தித்தோமோ அதே நபியின் வழிகாட்டல்கள் நாம் அறிந்த நிலையில் பல இடங்களில் செத்து மடிந்து கொண்டிருக்கிறது.

ஒரு இஸ்லாமிய குடும்பம் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் அழகிய முறையில் வழிகாட்டி சென்றுள்ளார்கள். அவ்வாறு செயல்பட்டால் தான் அவை இஸ்லாமிய குடும்பம் என்று இறைவனது பார்வையில் அமையும். நான் இங்கு அனைத்தையும் குறிப்பிட்டால் எழுத்து நீண்டு விடும். ஆகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இஸ்லாமிய குடும்பங்கள் வாழும் வீட்டில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு என்று கடுமையாக எச்சரித்து சொன்ன ஒன்றை மாத்திரம் இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.

عن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء!»، فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت» (رواه البخاري ، ومسلم.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர்(ரலி), நூல் : புகாரி 5232.

நமது சகோதரனின் மனைவி அல்லது நமது சகோதரியின் கணவன் அல்லது நமது கணவனின் சகோதரன் அல்லது நமது மனைவியின் சகோதரி  சம்மந்தமாகத்தான் அல்லாஹ்வின் தூதர் இந்த நபிமொழியில் எச்சரிக்கை செய்கிறார்கள். நமது சமூகத்தில் குர்ஆன் சுன்னாஹ்வை பேசக்கூடிய பலரும் பலவீனப்பட்டிருக்கும் இடமும் இந்த இடம்தான்.

ஒரு அன்னியப் பெண் தனிமையில் இருந்தால் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சட்டத்தை நபியவர்கள் மக்களுக்கு சொல்கின்றபொழுது தான் இவற்றை சொல்கிறார்கள். ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் பேண வேண்டிய ஒழுங்குகளை விட நமது சகோதரனின் மனைவியிடமோ அல்லது நமது சகோதரியின் கணவனிடமோ அல்லது நமது கணவனின் சகோதரனிடமோ அல்லது நமது மனைவியின் சகோதரியிடமோ கடுமையான ஒழுகுகளை பேண வேண்டும் என்று நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இத்தகைய உறவு தான் மரணத்திற்கு நிகரான உறவு என்று நபியவர்கள் அந்த அன்சாரித்தோழருக்கு சொன்ன பதிலில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ள முடியும்! நமக்கு முன்னாள் மரணம் என்றால் அதைக்கண்டு எவ்வாறு நமக்கு அச்சம் வருமோ அதுபோன்றுதான் இந்த உறவுகளிடம் நாம் பேசும் போதும் பழகும் போதும் அச்சம் வர வேண்டும். தேவைக்கு அதிகமாக இவர்களிடம் பேசவோ பழவோ ஒரு முஸ்லிமிற்கு அனுமதி இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்க இதுபோன்ற உறவுகளிடம் நமது நடத்தைகள் எவ்வாறு இருக்கிறது என்று உள்ளம் தொட்டு கேளுங்கள்!!!???

கணவனின் சகோதரனோடு சர்வ சாதராணமாக வாகனத்தில் அமர்ந்து உரசிக்கொண்டு நமது பெண்கள் வீதியில் செல்கின்றனர். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்போது கணவனின் சகோதரனோடு ஒரே சீட்டில் பயணம் மேற்கொள்கின்றனர். சர்வசாதராணமாக இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை கேலி கிண்டல் என்ற பெயரில் பேசுகின்றனர். கணவனுக்கு முன்னாள் அல்லது மஹ்ரமான உறவுகளுக்கு முன்னாள் மட்டும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு இவர்களுக்கு முன்னாள் சாதாரணமாக நடமாடுகின்றனர். இவை எல்லாம் எங்கே உள்ள கலாச்சாரம் தோழர்களே???!!!

இவை அனைத்தும் பெற்றோர்களால், சகோதரர்களால், சகோதரிகளால், பிள்ளைகளால் என்று அனைவராலும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அல்லாஹு அக்பர்!!!

என் அன்பு இஸ்லாமிய சொந்தங்களே!!! இதுபோன்ற உறவுகளை சர்வ சாதராணமாக பழக விடுவதால் நிகழும் விளைவுகளை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா என்ன???!!!

தாய், தந்தை, பிள்ளை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி என்ற உறவுகளையெல்லாம் படைத்தவன் இறைவன். யார் யாரிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது அவனுக்குத்தான் முழுமையாக தெரியும் சகோதரர்களே. நாம் சொல்லும் வியாக்கியானங்கள் எல்லாம் காலம் காலமாக இந்த இடத்தில் தோற்றுத்தான் போகிறது என்பதை நாம் ஏன் இன்னும் உணராமல் இருக்கிறோம்???

தனது சொந்த தாயை சந்திக்க சொந்த வீட்டிற்குள் நுழைவதற்குக்கூட ஒரு மூன்று தருணங்களில் மட்டும் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்ற உயரிய கண்ணியமான கொள்கைகளை சுமந்த மார்க்கம் நமது மார்க்கம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாமிய கலாச்சாரங்களை நாம் முழுமையாக பேண பேண அவை அனைத்தும் நம்மை கண்ணியமான இடத்திற்கு உயர்த்துமே அன்றி ஒருபோதும் நம்மை இழிவு படுத்தாது தோழர்களே!

விரல் அசைப்பதற்காக விரல் உடைபட்டோம்.... இறைவனது சட்டங்களையும் இறைத்தூதரின் ஏனைய சுன்னாக்களையும் பேணுவதற்காக உயிர்பறிக்கப்படும் நிலை வரைக்கும் கூட நாம் சோதனைகளை சந்தித்தோம். மறுக்க முடியாது...!!!

ஆனால் அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த "அல்ஹம்வ்" என்ற இந்த சட்டத்தை நமது வீடுகளில் பேணுவதில் மட்டும் நாம் ஏன் பலவீனப்பட்டோம்????!!!

இதற்குமேல் நான் பேச ஒன்றுமில்லை! மாற்றிக்கொள்வோம் இறைவனுக்காக....!

No comments:

Post a Comment