தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, February 11, 2016

வேலூரில் சந்தித்த கலந்துரையாடல்!!!




அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! வேலூரில் சென்ற (2014) வருடம் ரமளான் உரைக்காக நாம் சென்றிருந்தபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல் பற்றி உங்களிடம் இந்த பதிவின் மூலம் நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

வேலூரில் சமீப காலமாக குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லக்கூடிய வழிகேடர்கள் அங்கங்கு முளைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களது வழிகெட்ட கொள்கையை ஒடுக்க வேண்டும் என்று அங்குள்ள நம் சஹாக்களில் சிலர்  மிகவும் ஆர்வத்தோடு அவர்களை எதிர்நோக்க காத்து இருந்தனர். மார்க்க சிந்தனை அற்ற நபர்களை சந்தித்து தம் பக்கம் அவர்களை இழுத்துப்போட்டு வழிகேடுப்பதைப் பார்க்கும் போது நம்மில் எவருக்குத்தான் ரோஷம் வராது? ஒருநாள் அந்தக் கொள்கையை பரப்பும் முக்கியமான நபரை சந்திக்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. களத்தில் சந்தித்தோம், அல்லாஹ்வின் அருளால் இறைவனது வேத வசனங்களில் இருந்தே, குர்ஆன் மட்டும் வஹியல்ல மாறாக நபியவர்களின் சுன்னாக்களும் பின்பற்றப்பட வேண்டிய வஹிதான் என்பதை அவரிடம்  எடுத்துரைத்தோம். 

அவரது கையில் ஒரு வித்தியாசமான குர்ஆன் ஒன்று இருந்தது. நாம் எடுத்து வைக்கும் அத்தனை வசனங்களையும் அந்த குர்ஆனின் வாயிலாகத்தான் அவர் பார்வையிட்டார். அவர் வைத்திருந்த குர்ஆனில் அதன் மூல மொழியான அரபி மொழி இல்லை! நாம் வைத்திருக்கும் அரபியுடன் கூடிய தர்ஜுமாவை அவர் பார்க்க விரும்பவும் இல்லை. 

அவர் வைத்திருந்த குர்ஆனில் மூல மொழி அரபு இல்லாததால் அந்தக் குர்ஆனை மொழிப்பெயர்த்துள்ள அவர்களின் கொள்கை சார்ந்த ஒரு அயோக்கியன் தனது சுய சிந்தனைகளை எல்லாம் அந்தக் குர்ஆனில் அள்ளித்தூவி இருந்தான். இதை நாம் அவதூறாக சொல்லவில்லை, அவரோடு வாதம் செய்து கொண்டிருக்கும் போது நாம் முன்வைத்த வசனங்களை அவர் வைத்திருக்கும் குர்ஆனோடு ஒப்பிடுகிறார். எப்படி ஒப்பிடுகிறார் என்றால் அந்த வசனங்களின் அருகில் அதற்கான விளக்கம் கூறப்பட்ட அடிக்குறிப்பு எண் ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த அடிக்குறிப்பை வாசித்து விட்டுத்தான் அவர் எங்களுக்கு பதில் கூறுகிறார். 

உதாரணமாக:
يُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ

"அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் அவர் கற்றுக் கொடுப்பார்" என்ற வசனத்தை நாம் மேற்கோள் காட்டி பேசும்போது அவரது குர்ஆனில் உள்ள அடிக்குறிப்பை பார்த்து விட்டு, இரண்டு வார்த்தைகளும் ஒன்று தான், அதை பிரிக்க முடியாது என்று வாதம் வைத்தார். 

நாம் சொன்னோம் الْكِتَابَ மற்றும் الْحِكْمَةَ என்ற வார்த்தைகளுக்கு இடையில் وَ என்ற இடைச்சொல் வந்துள்ளது. இலக்கண சட்டப்படி இவ்வாறு வந்தால் வேதம் மற்றும் ஞானம் என்றுதான் வரும். ஆகவே இரண்டும் ஒன்றாக வாய்ப்பே இல்லை. இரண்டும் வேறு வேறுதான் என்று நாம் எதிர் வாதம் வைத்தோம். அதற்கு முறையான பதில் சொல்ல அவரால் இயலவில்லை, காரணம் அவருக்கு இலக்கண ரீதியாக பேசும் அளவிற்கு அறிவு இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

இதற்கிடையில் கையில் சரக்கில்லை என்பதை உணர்ந்த அவர் தம்மிடம் இருக்கும் சரக்கை தள்ளிவிட தலைப்பை விட்டு தாவ முற்பட்டார். அதற்கேற்றார் போல் ஒரு விசித்திரமான வாதமும் வைத்தார். முக்கியமான தலைப்பைவிட்டு நீங்கள் தாவுகிறீர்கள் என்பதை அவருக்கு தெரியப்படுத்தி விட்டு, இது ஒரு முறையான ஒப்பந்தம் போடப்பட்ட விவாதம் இல்லை என்பதால் அந்த வாதத்திற்கும் நாம் அவரது பாணியிலேயே பதில் கொடுத்தோம்.

அவர் வைத்த வாதம் என்னவென்றால், நாங்கள் ஏன் தாடி வைப்பதில்லை தெரியுமா? (அவரது கன்னம் வழு வழுவென்று இருந்தது). சாமிரி என்பவன் காளைக் கன்றை செய்து மக்களை வழிகெடுத்த சம்பவத்தில் மூஸா நபியவர்கள் கோபப்பட்டு, தாம் பொறுப்பு சாட்டிச் சென்ற தம் சகோதரர் ஹாரூன் நபி அவர்களது தாடியைப் பிடித்து இழுத்தார்கள். அடிப்பதற்கு எத்தனையோ இடம் இருந்தும் ஏன் தாடியை பிடித்து அவர்கள் இழுக்க வேண்டும். காரணம் அவருக்கு தாடி பிடிக்காது, ஆகவே தான் மூஸா நபியவர்கள் ஹாரூன் நபியின் தாடியைப் பிடித்து இழுத்தார்கள். ஆகவே தான் நாங்கள் தாடி வைப்பதில்லை. இதுதான் அந்த மடத்தனமான விசித்திரமான வாதம்!!!

நாங்கள் திருப்பிக்கொண்டு கேட்டோம், அப்படியென்றால் உங்களுக்கும் இன்னொரு நபருக்கும் சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். எதிர் தரப்பில் இருப்பவர் உங்களது சட்டையை கிழித்து விடுகிறார். இப்போது அவருக்கு கோபம் உங்கள் மீதா அல்லது சட்டை மீதா??? ஒருவர் உங்கள் மீதுள்ள கோபத்தில் சட்டையை கிழிக்கிறார் என்றால் அதற்காக அவருக்கு சட்டை பிடிக்காது ஆகவே தான் சட்டையை அவர் கிழித்தார் என்று சொல்வீர்களா???? அவருக்கு பிடிக்காத ஒன்றை அவர் மட்டும் ஏன் தனது மேனியில் அணிந்துள்ளார்???? இது ஒரு மடத்தனமான வாதமும் விளக்கமும் என்பதை நாம் அவருக்கு சொன்னோம்.

இதற்கும் மழுப்பலே தொடர்ந்தது. தனக்கு தாடி வைக்க விருப்பம் இல்லை என்பதற்காக அல்லாஹ்வின் வேத வசனங்களை எந்த அளவிற்கு இந்த மதியில்லா கூட்டம் திரிக்கிறது பாருங்கள். எதை எதற்கு ஆதாரமாக காட்டுகிறது பாருங்கள்! இந்த வாதத்தையும் அவர் சுயமாக வைக்கவில்லை. அவர் வைத்திருந்த குர்ஆனில் இருந்த அடிக்குறிப்பை மேற்கோள் காட்டித்தான் அந்த வாதத்தை அவர் வைத்தார்.

அதன் பின்னர் இறைவன் திருமறையில் கூறும் நான்கு புனித மாதங்கள் எவை என்று குர்ஆனில் மட்டும் இருந்து நிரூபிக்க சொன்னோம். அவரால் இயலவில்லை. இதுபோன்று இன்னும் சில வாதங்களும் தொடர்ந்தன.

கலந்துரையாடல் இறுதியில் முடிவுக்கு வந்தது. நாம் சந்தித்ததில் இப்படி ஒரு அரைவேக்காட்டை நாம் பார்த்ததில்லை. தேய்ந்து போன ஆடியோ கேசட்டை போல் திரும்ப திரும்ப பேசியதையே பேசி எங்களது ஆரோக்கியத்தை கெடுத்ததுதான் மிச்சம். என்றாலும் எம்மோடு வந்த சஹாக்கள் உண்மையை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியும் ஒரு பக்கம் உற்சாகம் அளித்தது. 

இதுபோன்ற நபர்களைக் களத்தில் சந்திக்கும் போதுதான் அதன் உள்ளார்ந்த நிலைகளை நாம் உணர்கிறோம். நமது ஜமாஅத்தின் மூலம் அசத்தியத்தை நோக்கி தொடுக்கப்படும் விவாதக்களங்களில் அல்லாஹ் நமது அழைப்பளர்களுக்கு ஆரோக்கியம் அளிப்பானாக! 

இறுதியாக நாம் அந்த நபருக்கு சில உபதேஷங்களை கூறி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.

நாங்கள் வைக்கும் வாதங்களுக்கு நீங்கள் பதில் அளிக்க முற்படும்போது, நீங்கள் வைத்திருக்கும் குர்ஆனில் உள்ள விளக்கங்களை முன்வைத்து தான் பதில் அளிக்க முயற்சி செய்தீர்கள். தாடியைப் பற்றியெல்லாம் கூட அதிலுள்ள விளக்கத்தை எடுத்துதான் விசித்திரமாக பேசினீர்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எவனோ ஒரு மடையன் இறைவனின் வார்த்தைகளில் சிலவற்றிற்கு  விளக்கமாக எழுதிய விளக்கெண்ணை விரிவுரைகளை கண்மூடிக் கொண்டு பின்பற்றுகிறீர்கள், பரப்புகிறீர்கள். ஆனால் அல்லாஹ்வின் வஹியை சுமந்த, அவனோடு நேரடி தொடர்பில் இருந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கங்களை (ஹதீஸ்களை) ஏற்க மாட்டோம், அது அவசியமல்ல, குர்ஆன் மட்டுமே போதும் வழிகாட்டுவதற்கு என்கிறீர்கள்! இது எந்த விதத்தில் நியாயம்????

குர்ஆன் மட்டும் போதும் என்றால் நீங்கள் வைத்திருக்கும் குர்ஆனிற்கு ஏதோ ஒரு மடையன் எழுதிய விளக்கங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்???? அல்லாஹ்வின் தூதரை விட இந்த மடையன் சிறந்தவனா???? என்ற ஆலோசனையை அவருக்கு முன்வைத்தோம்! 

உண்மை என்னவென்றால் அந்த குர்ஆனை மொழிப்பெயர்த்த மடையனுக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட இந்த நபர் அல்லாஹ்வின் தூதருக்கு கொடுக்கவில்லை. அவ்வாறுதான் இந்த மடையர்  கூட்டத்தில் இருக்கும் அனைவரும் பயிற்றுவிக்கப் படுகின்றனர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!

அது மட்டுமல்லாமல் இவர்கள் வைத்திருக்கும் குர்ஆனில் மூல மொழியே இல்லை. ஆகவே தான் அதில் தனது மனோ இச்சைக்கேற்ப  மொழியாக்கம் செய்துள்ளனர். அல்லாஹ் திருமறையை பாதுகாக்கிறான் என்பதால் எல்லா காலத்திலும் இந்த வழிகேட்டை எளிமையாக நாம் கண்டறிந்து விட முடியும். ஆனால் அரபு அறிவு அறவே இல்லாத நபர்களிடம் தான் இந்தக் கொள்கையை இவர்கள் மேலேடுத்து செல்கின்றனர் என்பதையும் நாம் இந்த கலந்துரையாடல் மூலமாக அறிந்து கொண்டோம். 

நம்மில் பலரும் பெரும்பாலும் அரபு அறிவு இல்லாதவர்கள் என்பதை மறுக்க முடியாது. என்றாலும் இது தொடர்பாக பேசுவதற்கு பரந்த அரபு அறிவு தேவையில்லை. இதுபோன்ற வழிகேட்டை நாம் புரிந்து கொள்ள, இந்த வழிகேட்டில் இருக்கும் நபர்களுக்கு எடுத்துரைக்க சில எளிமையான வாசகங்களை பொருளோடு கற்றுக் கொண்டாலே  போதுமானது. கற்றுக்கொள்ள முற்படும் நபர்களுக்கு நமது அழைப்பாளர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் சிறந்த பலன்களும் முடிவுகளும் நம்மை சூழ வரும்.

இதுபோன்ற விஷக்கிருமிகள் பரவக்கூடிய இடங்களில், அதுசார்ந்த பிரச்சாரக் கலங்கள் அதிகம் அமைக்கப்பட்டு வழிகேடுகள் வந்த வழியே ஓடிவிட நாம் அதிகம் முயற்சிக்க வேண்டும் என்ற எமது ஆலோசனையோடு இந்த தகவல் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கிறேன்!

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

No comments:

Post a Comment