தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, February 29, 2016

கல்விக்கூடங்கள் எதற்காக???



அன்புள்ள இஸ்லாமிய சொந்தங்களே! நமது பிள்ளைகள் பயிலும் பள்ளிகூடங்கள் மற்றும் கல்லூரிகளின் நிலைப்பற்றி இந்த கட்டூரையின் மூலம் சிறியதொரு நினைவூட்டுதல் வழங்கலாம் என்று நான் விரும்புகிறேன்!

நாம் வாழும் தற்போதைய காலச்சூழலில் எல்லாத்துறைகளும் மிக மோசமானதாகவே சென்று கொண்டிருக்கிறது. இறை நினைவோடு சதா வாழ வேண்டும் என்று எண்ணக்கூடிய ஒரு இறைவிசுவாசி கூட தமது நஃப்சை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டத்தை தம் வாழ்வில் தொடுக்க வேண்டியுள்ளது!!!

நிலைமை இவ்வாறு இருக்க, இதுபோன்ற அனாச்சாரங்களையெல்லாம் பிஞ்சுள்ளங்களில் இருந்து வேரோடு களையெடுத்து, பிற்காலத்தில் சிறந்த மனிதர்களாக நமது குழந்தைகளை உருவாக்க வேண்டிய கடமைபட்ட கல்விக்கூடங்களும் கூட பெரும்பாலும் பிள்ளைகளுக்கு நஞ்சூட்டித்தான் இறுதியில் வெளியேற்றுகின்றனர்.

பாடசாலைகள் என்றால் பிள்ளைகளுக்கு கல்வியோடு வாழ்வியல் ஒழுக்க வழிகாட்டுதலும் கொடுக்கப்படும் இடமாகும். ஆனால் இன்றைய நிலைமை அப்படியல்ல. உலகக் கல்வி என்று முழுக்க முழுக்க பொருளாதாரத்தை எதிர்நோக்கிய கல்வி ஒருபக்கமும், மார்க்க சிந்தனைகளை ஊட்டுவதற்காக மார்க்க கல்வி போதிக்கப்படும் பாடசாலை என்று மற்றுமொரு பக்கமுமாக கல்விகள் பிரிந்து கிடக்கின்றன.

இஸ்லாமியக் கல்விக் கூடங்களில் கூட உலகக் கல்வியின் தரம் மட்டும் தான் பார்க்கப் படுகின்றனவே தவிர, அந்த கல்விக் கூடங்களும் மார்க்க விழுமியங்களை மாணவர்களுக்கு போதிப்பதில்லை. பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதும் இல்லை.

இந்த வேதனையை நாம் எங்கு சொல்வது????

நபிகளார் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்களில் அதிகமானோரும் கல்வி பயின்றவர்கள் தான். ஆனால் அங்கு கல்விகள் பிரிக்கப்பட்டு இருக்கவில்லை. இரண்டும் இணைந்தே இருந்தன. இணைத்தே போதிக்கப்பட்டன!

மார்க்கத்தின் வழிகாட்டலை போதிக்கும் திருமறைக்குர்ஆன், விஞ்ஞானிகளே வியந்துபோகும் எண்ணிலடங்கா உலக இயல்புகளைப் பற்றி பேசுகிறது. இது இஸ்லாம் மனிதர்களுக்கு போடும் அறிவு விருந்து இல்லையா??? இது உலகக் கல்வி இல்லையா???

ஆனால் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? உலகக் கல்விக்கும் மார்க்க கல்விக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்! உலகக் கல்வி ஏறாத கூமுட்டைகளை அள்ளி வந்து மார்க்கம் போதிக்கப்படும் மதரசாக்களில் தள்ளுகிறோம். இதுதான் இந்த கல்விகளைப் பற்றி நாம் வைத்திருக்கும் மடத்தனமான எண்ணங்கள்.

இந்த எண்ணங்களால் தான் வாழ்விற்கு அத்தியாவசிய தேவையான ஒழுக்க விழுமியங்களைப் போதிக்கும் கல்வி நம்மை விட்டும் நம் பிள்ளைகளை விட்டும் வெகு தூரத்திலேயே இருக்கிறது.

எனதருமை சகோதர சகோதரிகளே! கல்விக்கூடங்களில் நாம் நமது பிள்ளைகளை சேர்க்கும்போது, நமது பிள்ளை நன்கு சம்பாதித்து நம்மை கவனிக்க வேண்டும் என்பது மட்டும் நமது நோக்கமாக இருந்து விடக்கூடாது.

அப்படி நமது நோக்கம் இருக்குமாக இருந்தால்...

நாம் கண்கூடாகப் பார்க்கிறோம், எந்தக் கல்வியைப்(மார்க்கக் கல்வியைப்) பற்றி நாம் சிறிதும் அக்கறை கொள்ளாமல்  நமது பிள்ளைகளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைத்தோமோ,

அதன் விளைவு....

பிள்ளை கை நிறைய சம்பாதிக்கிறான்!!!

ஆனால் பொருளாதாரம் வரும் வழியோ ஹராமானவையாக இருக்கின்றன!!!

எந்தக் கல்வியைப்(மார்க்கக் கல்வியைப்) பற்றி நாம் சிறிதும் அக்கறை கொள்ளாமல் நமது பிள்ளைகளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைத்தோமோ,

அதன் விளைவு,

பிள்ளை மருத்துவராகி விட்டான்,

இன்ஜினியராகி விட்டான்,

கலெக்டராகி விட்டான்......

ஆனால்,

எந்த நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க வைத்தனரோ

அந்த நோக்கம் அவனோடு நின்று விட்டது....

பெற்றோர்கள் தங்குவதற்காக புதியதோர் இல்லம் தேடப்படுகிறது.

முதியோர் இல்லங்கள்!!!???

வாடகை வீட்டில் வாடும் எனக்கு எனதருமை மகன் வீடு கட்டிக் கொடுப்பான் என்ற கனவுகள் மண்ணாய் போகிறது.

மண்ணறைக்கு செல்லும் வரைக்கும் மகனுடைய தொடர்பு அறுந்து போய்விடுகிறது!!!!

இந்த நிலை நம் சமூகத்தில் இல்லை என்று கூற முடியுமா என் அன்பு சொந்தங்களே?

இவைதான் நாம் நமக்கும் நமது பிள்ளைக்கு மறுமைக்காக சேமிக்கும் சொத்தா என் அருமை சகோதர சகோதரிகளே???

பிள்ளைகள் இறந்து போன வீடுகளில், வயதான நிலையில் வாடும் பெற்றோர்களை அரவணைக்கத்தான் முதியோர் இல்லங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் இன்றோ, பிள்ளைகளால் விரட்டியடிக்கப்படும் பெற்றோர்களை அரவணைக்க முதியோர் இல்லங்கள் உருவாக்கப்படுகின்றன!

பிள்ளையின் சம்பாத்தியத்தில் தனியொரு முதியோர் இல்லமே அமைத்து விடலாம் என்ற நிலைக்கு பிள்ளையிடம் சொத்துக்கள் இருந்தாலும், பெற்றோர்கள் நாயை விட கேவலமான நிலையில் வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்படுகின்றனர்.

இந்த நிலை உருவாக யார் காரணம்???

உலக நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து பிள்ளைகளை கல்விக் கூடங்களில் சேர்த்து விட்டு மகிழ்வடைந்த நாம் இதற்கு காரணம் இல்லையா???

தொழுகையை கற்றுக் கொடுக்கும் கல்விக் கூடங்களில் கல்வித்தரம் முறையாக இருக்காது, ஜும்ஆ தொழுகைக்கு கூட அனுமதிக்காது விட்டாலும் பரவாயில்லை கல்வித்தரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று கிருத்தவ கல்விக் கூடங்களில் பிள்ளைகளை கையில் பிடித்துக்கொண்டு வரிசையில் நின்ற நாம் இதற்கு காரணம் இல்லையா???

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய நாம், ஆண் பெண் வித்தியாசம் பாராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழாக்கள் என்ற பெயரில், விபச்சாரத்தை சமூகத்திற்கு போதிக்கும் சினிமா கூத்தாடிகளின் சாயலை பிள்ளைகளுக்கு பூசி மேடையில் ஆடவிட்டு மகிழ்ந்த நாம் இதற்கு காரணம் இல்லையா???

இதுபோன்று ஏராளம் கூற முடியும். சுருங்க சொல்வதென்றால், உலகத்தின் மோகத்தை மட்டுமே உள்ளத்தில் ஆழப்பதித்து செயல்பட்ட நாம் தான் இதற்கு முதற்காரணமும் முக்கிய காரணமும்.....

நாம் விதைக்கும் வித்துக்கள் நமக்கு பலனளிக்க வேண்டும் என்றால் முறையான உரம் போடப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். விஷம் கலந்த உரம் தூவி விதைக்கப்படும் வித்துக்கள் விஷமாகத் தான் வளரும்.

உலகக் கல்வியை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் மறுமையில் வெற்றி பெற முடியாது. இவ்வுலக தற்காலிக வாழ்கை வசதிகளுக்காக மறுமையை நாம் இழந்து விடக்கூடாது.

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கொடுக்கும் சொத்துக்களில் மிக உயர்ந்த, உன்னதமான, விலை மதிப்பில்லாத சொத்து ஒன்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? 

இதோ கேளுங்கள்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதன் இறந்த பின்னும் அவரை பின்தொடரும் நன்மைகளின் பட்டியலில் ஒன்றாக சொன்னார்கள்:

ولد صالح يدعو له

தனது பெற்றோருக்காக சாலிஹான பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனை(இறந்துபோன பெற்றோரை வந்தடைந்து கொண்டே இருக்கும்).

அழிந்துபோகும் உலகத்தின் இன்பங்களை விடவும் நாம் இறந்த பின்னும் மறுமை வரைக்கும் நமது பிள்ளைகள் சேர்த்து கொடுக்கும் இந்த சொத்தல்லவா உன்னதமானது. 

இதை இழப்பவன் துர்பாக்கியசாலி அல்லவா?

பெற்றோரை உதாசீனப்படுத்தி விரட்டும் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கு செய்யும் உபகாரம் நமக்கு சுவர்க்கத்தை பெற்று தரும் என்று செயல்படும் பிள்ளைகளுக்கும் ஆகப் பெரிய வித்தியாசம் உண்டல்லவா?

இந்த இரண்டு நிலையில் எது நமக்கு தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆசிரியரை கத்தி எடுத்து குத்திய மாணவனைப் போன்றோ, 
ஆசிரியரோடு காதல் செய்து ஊரை விட்டு ஓட்டமெடுத்த மாணவனைப் போன்றோ, 
உலகமே காரி உமிழும் கேவலத்தை சுமக்கும் புகைக்கும் மதுவிற்கும் விபச்சாரத்திற்கும் அடிமையாகிக் கிடக்கும் மாணவர்களைப் போன்றோ,
சுருங்கச் சொல்வதென்றால், அல்லாஹ்வின் அதிருப்தியை பெற்ற மாணவனாகவோ 
நமது பிள்ளைகள் உருவாகி விடக்கூடாது.

விழிப்போடு செயல்படுங்கள்...!

உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும் போதிக்கப்படும் பாடசாலைகளை தேடுங்கள்.

கிடைக்கவில்லையானால் இருக்கும் இஸ்லாமிய பாடசாலைகளை அந்த நிலைக்கு உருவாக்க போராடுங்கள்.

நமது எண்ணம் வெற்றியடைய அல்லாஹ் போதுமானவன்!!!

லுக்மான் என்ற சிறந்த மனிதர் தமது மகனுக்கு செய்த உபதேசம்:

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).
வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக அல்லாஹ் பயன்படச் செய்ததையும், தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் காணவில்லையா? அறிவு, நேர்வழி, ஒளிவீசும் வேதம் எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்வோரும் மனிதர்களில் உள்ளனர்.
"அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா?
நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.
சூரா லுக்மான் (31 : 16 - 22).

No comments:

Post a Comment