தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, March 4, 2018

முஃமினது வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களும் நன்மையானவையே




ஒரு இறைவிசுவாசியை பொருத்தவரை ஏனைய நம்பிக்கை கொண்ட மக்களை போன்று சோதனைகளை ஒருபோதும் அணுகக்கூடாது. இறைவன் தம்மை நம்பிய மக்களுக்கு சோதனை இல்லாமல் சுவனம் தரப்போவதில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை.

இதனை ஒரு இறை நம்பிக்கையாளன் தீர்க்கமாக புரிந்து இருந்தால் எந்தவொரு சோதனையும் நிச்சயமாக அவருக்கு சாதனையாக மாறிப்போகும். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சரியத்தோடு ஒரு செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
அறிவிப்பவர் : சுஹைப் (ரலி), நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5726.

ஒரு முஃமினுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் நன்மையாகிறது. துன்பங்களும் நன்மையாகவே அமைந்து விடுகிறது. மகிழ்ச்சி நன்மையை பெற்றுத்தருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் பலரது உள்ளம் சோதனைகளை நன்மையாக எடுத்துக்கொள்வதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொன்னார்கள், சோதனைகளையும் நன்மைகளாக பொருந்திக்கொள்ளும் உள்ளம் முஃமினுக்கு மட்டுமே காணப்படும். அது அல்லாத நபர்களால் இவற்றை அடைந்து கொள்ள இயலாது. ஆகவே நாம் எந்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் ஒருகணம் சிந்தனை செய்வோம்.

சோதனைகள் கூட ஒரு முஃமினுக்கு நன்மை பயக்கக்கூடியதாக எவ்வாறு அமைகிறது??? இதற்கான விளக்கத்தை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் (2:155-157).

முஃமினது பண்பானது இழப்புக்கள் ஏற்படும்பொழுது இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்று இறைவன் கூறுகிறான். இந்த உலகத்தில் நாம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு கொடுத்தவை. அவற்றில் சிலவற்றை இறைவன் நம்மை சோதிப்பதற்காக எடுத்தும் கொள்கிறான். நாம் விரும்புகின்ற பல அம்சங்களை நம்மை நெருங்க விடாமல் ஒதுக்கியும் வைத்து விடுகிறான்.

ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் தோழர்களே! நம்மை படைத்த இறைவன் இவ்வுலகத்தில் எவர்களைக் காட்டிலும் நம்மீது இரக்கமுள்ளவன் அன்பானவன். நமக்கு எது தேவை, எவை நம்மைவிட்டு நீங்கினால் நமது பாதைகள் தெளிவாகும், எது நமக்கு சிறந்தது, எது நமக்கு ஏற்புடையதல்ல என்பதனை நம்மைக்காட்டிலும் இறைவன் மிகத்தெளிவாக அறிந்தவன்.

நாம் நேசித்த ஒன்று நம்மை விட்டும் விலகிச் செல்கின்றதெனில் இது இறைவனது நாட்டப்படி அமைந்துள்ளது, இதன் மூலம் இறைவன் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கக்கூடும், இதன் மூலம் இறைவன் ஏதேனும் படிப்பினைத்தரக்கூடும், அல்லது இதைவிட சிறந்ததை இறைவன் தரக்கூடும் என்று நமது உள்ளங்களை பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு பக்குவப்படுத்துவோரே இறைநம்பிக்கையாளர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

இழப்பின்பொழுது மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று கூற வேண்டும். நாமே ஒருநாள் இறைவனால் அழைக்கப்பட்டுவிடுவோம் எனும்பொழுது நாம் நேசிக்கிற நாம் அனுபவிக்கிற இவைகளெல்லாம் எம்மாத்திரம்???!!! என்ற உணர்வு நிச்சயமாக நம் உள்ளத்தை சாந்தப்படுத்தும்.

அதோடு மாத்திரம் இறைவன் நிறுத்திக்கொள்ளாமல் இதுபோன்ற நேரங்களில் பொறுமையோடு சகித்து கொள்வோருக்கு சுவனம் என்ற சிறந்த நற்செய்தியை அறிவிக்கிறான். மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்ற வார்த்தைகளைக் கூறுவோர் தான் நேர்வழி பெற்றோர் என்றும், அவர்களுக்குத்தான் இறைவனின் அன்பும் அருளும் உண்டு என்றும் இறைவன் அறிவிக்கிறான்.

ஆக ஒரு முஃமின் தனது வாழ்வில் அவர் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களுமே நன்மையானவை தான். அவைகள் ஆழ்ந்த சோகங்களை தந்தாலும் இறைவனது அன்பையும் அருளையும் பெற்றுத்தரக்கூடியவை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. கவலைகளால் உள்ளங்கள் கனத்திருந்தாலும் அவைகளை இயல்பு நிலைக்கு மாற்ற வல்ல நாயன் போதுமானவன். உள்ளங்களின் அதிபதி அவன் தான். துக்கங்களை மகிழ்வாக்க அவனால் மட்டுமே இயலும். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவனையே சார்ந்திருப்போமாக!!!

என் இறைவா! கவலைகளால் உள்ளங்கள் சோர்ந்து போவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!!!

No comments:

Post a Comment