தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, March 6, 2018

அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் அழகிய திருநாமங்கள்)



இறைவனின் திருநாமம் கொண்டு துவங்குகிறேன்.....!

இறைவன் தமது திருநாமங்களாக அவனது வேதத்தில் பயன்படுத்தியிருக்கும் அஸ்மாவுல் ஹுஸ்னா (அழகிய திருநாமங்கள்) என்று அழைக்கப்படும் பெயர்கள் பற்றிய தகவல்களை தொகுப்பாக தொடர்ந்து வழங்கலாம் என்ற முயற்சியை துவங்கி உள்ளேன். எனது நோக்கத்தை வல்ல நாயன் அழகிய முறையில் நிறைவேற்றித்தரப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இறைவனை பெரும்பகுதி நாம் அல்லாஹ் என்ற பெயர்கூறியே அழைத்து வருகிறோம். இதேபோல இறைவனது அழகிய குணாதீசியங்களை பிரதிபலிக்கும் பெயர்களும் இறைவனுக்கு உண்டு. இறைவனது ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான குணங்களை வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவை அனைத்தையும் ஒருவர் பொருளுணர்ந்து புரிந்து கொள்வாராக இருந்தால் நிச்சயமாக அவரது வாழ்வில் இறைவனைப்பற்றிய தாக்கம் அதிகரிக்கும். அதற்கேற்ப தமது வாழ்வில் சிறந்த மாறுதல்களும் உண்டாகும் (இறைவன் நாடினால்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல்: புஹாரி : 6410.

இறைவனது தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் பொருளுணர்ந்து நம்பிக்கை கொண்டு மனனமிட்டவருக்கு இறைவன் சுவனத்தை தருவதாக வாக்களிக்கிறான் என்றால் பலனில்லாத ஒன்றுக்கு நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய நற்பாக்கியத்தை தர மாட்டான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாடசாலை மாணவனை போன்ற மனனமிடல் இல்லாமல் உளப்பூர்வமாக இறைவனது பண்புகளை புரிந்து உணர்ந்து மனனமிடுவோரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். இது முதலாவது அம்சம்.

இறைவன் கற்றுக்கொடுத்த இத்தகைய பெயர்களைக் கொண்டு அடியார்கள் தம்மிடம் பிரார்த்தனை செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். திருக்குர்ஆன் (7:180)

சில சந்தர்பங்களில் இறைவனது ஏனைய பெயர்கள் கூறி அவனிடம் பிரார்த்தனை செய்வதென்பது மிகவும் ஏதுவானதாகவும் மன அமைதியைப் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். இது எவ்வாறு என்பதனை இறைவனது பெயர்களை விவரங்களோடு நாம் அறிய முற்படும்பொழுது இலகுவாக விளங்கிக்கொள்ள இயலும் இன்ஷா அல்லாஹ்...!

இறைவனது பெயர்களை பயன்படுத்தி நாம் இறைவனை அழைத்துப் பிரார்த்தனை செய்வதை இறைவன் விரும்புவதைப்போல, இறைவனால் அறிவித்துத் தரப்படாத பெயர்களை நாமாக உண்டாக்கிக்கொண்டு இதுவும் இறைவனது பெயர்தான் என திரித்துக்கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் அதே வசனத்தின் வாயிலாக சொல்கிறான்.

இன்றைக்கு சில கூட்டம் இறைவனது தண்டனைக்கு உரிய இதே செயல்பாட்டினை மிகச்சாதாரணமாக செய்து வருவதைப் பார்க்க முடிகிறது. இறைவனது பெயர்களை வகை வகையாக திரித்து பிரித்து திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் இறைவனது கோபத்தை தட்டுகின்றனர். இது தவறான வழிமுறை. எது அனுமதிக்கப்பட்டதோ அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனைய செயல்களில் உள்ள அதிகப்பிரசங்கித்தனம் மார்க்கத்திலும் இணைக்கப்ப்படுமாக இருந்தால் செல்லும் இடம் நரமாகிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். இவற்றையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.

துவக்க உரைக்கான விளக்கமாக இந்த சிறிய விளக்க உரையை அமைத்து, எழுத்துக்களை நீட்டித்து விடாமல் இயன்றளவு சுருக்கமான விளக்கங்களை இறைவன் உள்ளத்தில் எழுப்பித்தர பிரார்த்தனை செய்து முடிக்கிறேன்.

எந்தவொரு நன்மையையும் நாம் இழிவாக கருதிவிடக் கூடாது. அனைத்து நன்மைகளிலும் நாம் முன்னின்று செயல்படுவதையே விரும்ப வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அத்தகைய உணர்வுகளை நம் அனைவருக்கும் தந்தருள்பாளிப்பானாக.....

(அடுத்ததடுத்த பதிவுகள் வாயிலாக இறைவனது பெயர்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....)

No comments:

Post a Comment