தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, March 5, 2018

அளவுகடந்த புகழ்ச்சி அழிவுப்பாதைக்கு வித்திடும்



தம்மோடு வாழும் சக தோழர்களை புகழ்ந்து பேசியே ஆக வேண்டும் எனில் அதற்கென்று நபியவர்கள் அழகிய வழிகாட்டலை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். புகழ் வல்ல இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அடிப்படை. என்றாலும் இங்கு மனிதர்கள் சார்ந்த விஷயத்தில் கூட புகழ் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதற்கான காரணம் தமிழில் இதனை தெளிவுபடுத்த வேறு வார்த்தை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

புரிந்து கொள்வதற்காகவே சக மனிதர்களை புகழ்தல் என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் நம் சிந்தனையில் "பிறரைப்பற்றிய நல்லவிதமான பேச்சுக்கள்" என்று புரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே" என்று பலமுறை கூறினார்கள்.

பிறகு, "உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்று
கூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.

அறிவிப்பவர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 5727.

மேற்கண்ட இந்த செய்தியில் நபிகளார் (ஸல்) அவர்கள் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி போதனை செய்துள்ளார்கள்.

முதலாவது அம்சம், தம்மோடு வாழும் சக மனிதர்களை எல்லை தாண்டி புகழ்ந்து பேசுவதால் நஷ்டம் இரு தரப்பினருக்கும் தான் என்பதை கூறுகிறார்கள்.

புகழ்ந்தவரை நோக்கி உமக்கு நாசம்தான் என்றும் புகழப்பட்டவரது கழுத்தை நீ துண்டித்துவிட்டாய் என்றும் கூறுகிறார்கள். இந்த வாசகத்தின் மூலம் புகழ்ச்சியினால் உண்டாகும் பாதிப்புக்கள் இரு தரப்பினருக்குமே தான் என்பதை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். ஆகவே தம்மை ஒருவர் புகழ்வதில் எல்லை கடக்கிறார் எனில் கண்டும் காணாது நாம் இருந்து விடக்கூடாது. அதனுடைய பாதிப்பு நம்மையும் நாசத்தில் தள்ளிவிடும் என உணர்ந்துகொண்டு இதுபோன்று புகழ்பவர்களை இயன்றளவு வாயடைத்து இருக்கச் செய்துவிட முயற்ச்சிக்க வேண்டும். அதுவே நமக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தரும்.

இரண்டாவது அம்சம், தம்மோடு வாழும் நண்பரது அழகிய செயல்பாடுகளை பார்த்துவிட்டு புகழ்ந்தே ஆக வேண்டும் என்று உள்ளம் சொல்கிற நிலை இருந்தால் "நான் இன்ன மனிதரைப்பற்றி இவ்வாறு நல்ல விதமாய் எண்ணுகிறேன்", என்றாலும் அவரது செயல்பாடுகள் எத்தகையது என்பதை அல்லாஹ் ஒருவனே மிகத்தெளிவாக அறிந்தவன். நான் அதனை அறிய மாட்டேன்.

இறைவனது விசாரணையில் அவர்குறித்து நான் பேசிய வாசகங்கள் தவறானவையாகக்கூட மாறிப்போகலாம். காரணம் நான் வெளிப்படையாக அவரைப்பார்த்து புகழ்ந்து பேசும் செயல்பாடுகள் அவரது உள்ளத்தில் இஃக்லாஸ் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு இருக்குமேயானால் நிச்சயமாக அவை இறைவனால் அழிக்கப்பட்டுவிடும் என்ற அடிப்படையில்தான் அவரது புகழ் வார்த்தைகள்கூட அமைந்திருக்க வேண்டும் என்பதே நபியின் போதனை.

மூன்றாவது அம்சம், நாம் இவ்வாறெல்லாம் பிறரைப்பற்றி இஸ்லாம் கூறும் எல்லைகளோடு புகழும்பொழுது கூட, அதாவது இன்ன மனிதரைப்பற்றி நான் இவ்வாறு எண்ணுகிறேன் என்று சொல்லும் பொழுதுகூட நாம் சொல்கின்ற அவரது செயல்பாடுகள் அவரிடம் இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும். அவரிடம் இல்லாத ஒன்றை இணைத்து நாம் புகழ்ந்து விடக் கூடாது. அதாவது இவ்வாறு எண்ணுகிறேன் என்று சொல்லும் சாதாரண எண்ணுதலில் கூட அவரிடம் இல்லாத ஒரு செயலை இணைத்து இவ்வாறு எண்ணுகிறேன் என்று நாம் சொல்லக்கூடாது என்றும் நபிகளார் (ஸல்) அவர்கள் தடுக்கிறார்கள்.

இத்தனை வரம்புகளையும் பேணித்தான் நாம் நம்மோடு வாழும் சக மனிதர்களை புகழ வேண்டும். இவைகளை ஒரு நல்ல சிந்தனையுள்ள முஸ்லிம் சிந்திப்பாரெனில் கண்டிப்பாக நாம் ஏன் பிறரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இறைவனிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்றே ஒதுங்குவார்.

மேலே சொல்லப்பட்ட வரம்புகள் பேணப்படும் வகையில் பிறரது நற்செயல்களைப் பற்றி பேசுதல் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இறைவனை புகழ்கின்ற எல்லையை தொட்டுவிடாத அளவிற்கு இதனுள் நபியவர்களால் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இவைகளை பேண இயலாத நபர்கள் வாய் மூடி இருந்துவிட்டு போவதே சிறந்தது ஆகும். 

எல்லைக்கடக்கும் பட்சத்தில் சிக்குண்டு தவிப்பவர்கள் நாமும், நம் நேசத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மால் புகழப்பட்ட நம் தோழர்களும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (உலக மோகத்திற்காக புகழும் அரசியல்வாதிகள் போன்றோரை நாம் இங்கு குறிப்பிடவில்லை)

இறைவன் விதித்த வரம்புகளை பேணி நடக்கும் நற்பாக்கியத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருல்பாளிப்பானாக....!

No comments:

Post a Comment