தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, January 5, 2016

பெண் வீட்டு விருந்து அனுமதிக்கப்பட்டதா?



இறைவனால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஒரு இன்றியமையாத கடமை தான் திருமணம். இந்த திருமணம் உலகில் வாழும் பலதரப்பட்ட மக்களால் பலவகைகளில் செயல்படுத்தப்பட்டாலும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்ற மக்கள் திருமணம் என்ற உறவை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியான வரையறைகளை இஸ்லாம் வகுத்துள்ளது. அந்த வகையில் தான் ஒரு முஸ்லிம் திருமணம் செய்தல் வேண்டும். இறைவனுக்கு கட்டுப்படும் ஒரு முஸ்லிம் “நான் அவ்வாறு செய்யாமல் என் விருப்படி செய்தால் என்ன?” என்ற கேள்வியை எழுப்ப மாட்டான். காரணம் இந்த கேள்வி அர்த்தமற்றது என்பது அவர்களுக்கே விளங்கும். அந்த அடிப்படையில் திருமணம் குறித்த ஏராளமான சட்டங்கள் இறைவனாலும் இறைத்தூதராலும் சொல்லப்பட்டிருந்தாலும், நாம் இந்த இடத்தில் திருமணத்தின் மூலம் வைக்கப்படும் ஒருவகை விருந்தை பற்றியே கூற நாடுகிறோம்.

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரை ஒரு தம்பதியினர் திருமணம் செய்கின்றனர் என்றால், அவர்களில் மணமகன் தன்னால் இயன்ற அளவில் எளிமையான விருந்து கொடுக்க வேண்டும். அதற்கு வலீமா என்றழைக்கப்படும். விருந்து என்றவுடன் தடபுடலாக சிந்தித்து விட வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் திருமணம் செய்யும் போது மிகவும் எளிமையான முறையில் விருந்து கொடுத்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421.

மேற்கண்ட நபிமொழிகள் அல்லாஹ்வின் தூதர் திருமணத்தின் போது செயல்படுத்திக் காட்டிய விருந்தினை நமக்கு அழகிய முறையில் விளக்குகின்றது. நபியவர்கள் திருமண விருந்தாக அதிகபட்சம் கொடுத்ததே ஒரு ஆடு அறுத்து கொடுக்கப்பட்ட விருந்துதான். ஆகவே இயன்றளவு எளிமையாக திருமணத்தை முடிக்க வேண்டும். 

அதற்கான காரணம்,
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388.

தம்பதியர் இறைவனின் பரக்கத் பொருந்த வாழ வேண்டும் என எண்ணுவோர் குறைந்த செலவிலேயே திருமணத்தை நடத்துவர். இதுதான் திருமண விருந்து குறித்து இஸ்லாம் கூறுபவை.

ஆனால் தற்போதைய சூழலை நாம் பார்க்கும்போது, அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ வழிகாட்டாத பெண் வீடு சார்ந்த தடபுடலான விருந்தும் திருமணத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது. மணமகன் ஒருபக்கமும் மணப்பெண் வீட்டார் ஒருபக்கமும் விருந்து கொடுக்கின்றனர்.

சில வீடுகளில் பெண் வீட்டு தரப்பினர் இத்தனை நபர்களுக்கு கட்டாயம் விருந்து கொடுக்க வேண்டும் அல்லது அதற்கான செலவீனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மணமகன் வீட்டு தரப்பினரால் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுவும் ஒரு வகை வரதட்சணையே ஆகும். வரதட்சனை என்ற பெயரை குறிப்பிட்டு வாங்கினால் மட்டும் தான் வரதட்சனை என்று ஆகும் என்பது கிடையாது. மாறாக பெண்ணினது வீட்டில் எதை நாம் நிர்பந்தித்து வாங்க முற்பட்டாலும் அது வரதட்சனை என்ற அடிப்படையில் தான் அடங்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சில வீடுகளில் மணமகன் பெரிய அளவில் விருந்து கொடுக்க முடியாத நிலையில் இருப்பார். ஆகவே நீங்கள் விட்டு விடுங்கள் அந்த விருந்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று ஆணை வாய் மூட வைத்துவிட்டு, பெண் வீட்டார் பிரமாண்டமான விருந்து கொடுக்கின்றனர். திருமணத்தின்போது கட்டாயம் பிரமாண்டமான விருந்து கொடுத்தாக வேண்டும் என்ற நியதியை தமக்குத்தாமே ஏற்படுத்திக் கொண்ட காரணத்தினால் தான் இதுபோன்ற நிலைகள் நம் சமூகத்தில் நீடிக்கிறது.

மொத்தத்தில் எந்தவகையான காரணங்களைக் கூறிக்கொண்டு பெண் வீட்டு தரப்பின் மூலம் திருமணத்தின்போது விருந்து கொடுத்தாலும், அது வலிமா விருந்தாக இருக்கவே முடியாது. நபியின் வழிமுறைக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒரு விருந்தாகவே அந்த விருந்து அமையும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைத் தான் வலீமா கொடுக்குமாறு ஏவினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், 'என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!' எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), 'உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!' எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!" என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!" என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: புகாரி  2049.

இந்த செய்தியின் மூலம் வலீமா விருந்தென்பது ஆண்களை நோக்கி சொல்லப்படும் கட்டளை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அல்லாஹ்வின் தூதர் செய்த அத்தனை திருமணத்திற்கும், தான் ஏழ்மையாக இருந்தபோதிலும் அவர்கள் தான் வலீமா கொடுத்துள்ளார்கள்.

இந்த சட்டங்களை நாம் முன்வைக்கும்போது நம்மை நோக்கி சில மார்க்க மேதைகள் விசித்திரமான ஆய்வுக் கேள்விகளை கேட்கின்றனர். அதன் மூலம் இந்த பெண் வீட்டு விருந்து அனுமதிதான் என்று கூறி நபியவர்கள் காட்டித்தராத ஒன்றை நோக்கி மக்களை ஆர்வப்படுத்தவும் செய்கின்றனர்.

நாம் மேலே சுட்டிக்காட்டிய அப்துர்ரஹ்மான் இப்னு அஃப் (ரலி) செய்தியை இவர்கள் சுட்டிக்காட்டி, இந்த சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது ஆகும். இஸ்லாத்தில் சொல்லப்பட்ட சட்டத்திட்டங்களை பொருத்தவரைக்கும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே. திருக்குர்ஆனில் அல்லாஹ் பல சட்டங்களை ஆண்களை நோக்கி பேசுவது போன்றுதான் பேசுகிறான், ஆனால் அது இருபாலாரையும் குறிக்கும் என்பது தான் உண்மை. அதன் அடிப்படையில் அப்துர்ரஹ்மான் இப்னு அஃப் (ரலி) அவர்களுக்கு சொல்லப்பட்ட கட்டளை பெண்களுக்கும் பொருந்தும். அந்த இடத்தில் அவரது மனைவி வந்திருந்தால் அவர்களுக்கும் இதே கட்டளையைத் தான் அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள் என்பதுதான் இவர்களின் வாதம்.

மிகச்சாதாரண மார்க்க அறிவு உள்ளவர் கூட இந்த வாதம் அடிப்படை அற்றது என்பதை புரிந்து கொள்வார். இறைவன் திருமறையில் ஆண்களை நோக்கித்தான் பல கட்டளைகளை இடுகிறான் அது பெண்ணிற்கும் பொதுவானது என்பதை நாமும் ஏற்றுத்தான் இருக்கிறோம். ஆனால், ஆணைப் பார்த்து பேசப்படும் அனைத்து கட்டளைகளுமே பெண்ணிற்கும் பொருந்தும் என்பது மடத்தனமான வாதமாகும். 

உதாரணத்திற்கு அல்லாஹ் திருமறையில் ஆணை நோக்கி நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்குகிறான். இந்த சட்டத்தை பெண்ணிற்கும் பொருத்தமானதே என்று யாராவது பேசுவோமா? ஆக ஆணை நோக்கி கூறப்படும் அனைத்துமே பெண்ணிற்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. சில கட்டளைகள் ஆணுக்கு மட்டுமே கூறப்பட்டதாகவும் இருக்கும். அதனை நபியின் சுன்னாஹ்வின் மூலம் தான் நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை இவர்கள் வைக்கும் வாதம் உண்மையாக இருக்குமேயானால், நபியவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் திருமணம் செய்தனர். அவர்களில் ஒருவரது திருமணத்தில் கூட ஏன் மணப்பெண் விருந்து வைத்ததாகவோ அல்லது மணப்பெண்ணை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கட்டளையிட்டதாகவோ ஒரு தகவல் கூட இல்லை???

நபியவர்கள் கட்டளையிடாத ஒன்றை, இவ்வாறு நடந்திருந்தால் இவ்வாறு கட்டளையிட்டிருப்பார்கள் என்று யூகித்து சட்டம் வழங்குவதென்பது நபியின் மீது பச்சையாக இட்டுக்கட்டுவதாகும். ஒன்றை யூகித்து முடிவெடுக்கும் அளவிற்கு மார்க்கம் ஒன்றும் மறைக்கப்பட்டதல்ல. அனைத்தைக் கொண்டும் பூரணமாக பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கம் இஸ்லாம்.

திருமண விருந்தென்பது ஆணுக்கு சொல்லப்பட்ட கட்டளைதான் என்பதை நபியின் கட்டளையும் நபியவர்களது செயல்முறையும் தெள்ளத் தெளிவாக கூறுகின்றன. நபியின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றில் இல்லாத ஒன்றை யூகத்தின் பெயரால் வேண்டுமென்றே மார்க்கத்தில் புகுத்துவது வழிகேடாகும்.  இதேபோன்ற அறிவற்ற யூகத்தின் மூலமும் வாதத்தின் மூலமும் தான், இஸ்லாத்தின் பெயரால் பல புதுமைகள் உண்டாகிக் கிடக்கின்றன. அவைகளையெல்லாம் எதிர்க்கக் கூடிய சில கூட்டமும் கூட, இந்த பெண் வீட்டு திருமண விருந்து விஷயத்தில் தடம்புரளுகின்றனர். சலஃபுகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளக் கூடிய கூட்டத்தில் சிலர் இதை எதிர்க்கின்றனர், சிலர் இதை ஆதரிக்கின்றனர். இன்னும் சிலர் எதிர்த்துக் கொண்டே பெண் வீட்டு விருந்தில் வயிற்றையும் நிறைத்து கொள்கின்றனர்!

எது எப்படியாக இருந்தாலும், திருமணத்தின் போது பெண் வீட்டுத் தரப்பால் வலீமா கொடுக்கப்படுவதென்பது, அல்லாஹ்வாலும் அல்லாஹ்வின் தூதராலும் வழிகாட்டப்படாத ஒன்றாகும். ஆகவே பெண் வீட்டு விருந்தென்ற வழக்கம் மார்க்கத்தில் இல்லை. இதை நாம் புறக்கணிக்க வேண்டும்! 

பதிந்தவர்,
N.முஹம்மது மஷாரிக்.

No comments:

Post a Comment