Labels
- அழைப்புப்பணி (3)
- ஆய்வுகள் (20)
- ஆன்ராயடுக்கான இஸ்லாமிய மென்பொருள்கள் (13)
- இறைவசன ஒப்பீடுகள் (3)
- இறைவசனம் & ஹதீஸ் படங்கள் (15)
- கட்டூரைகள் (42)
- கேள்வி & பதில் (4)
- துஆக்கள் (4)
- பயனுள்ள தகவல்கள் (30)
- பயான் அறிவிப்புகள் (2)
- பயான் குறிப்புகள் (4)
- பலவீனமான செய்திகள் (14)
- பிற மதங்கள் (5)
- வீடியோ (62)
தினம் ஒரு நபிமொழி
Saturday, November 11, 2017
மழலையின் இனிமையான குரலில் இறைவேதவரிகள்- சூரா அல்ஃபுர்கான்
Tuesday, November 7, 2017
உணர்வுகளாலும் தண்டிக்க இயலும்....!!!
நாம் அதிகமாக நேசிக்கும் ஒன்றை இழந்து விட்டால் அதானல்
ஏற்படும் வலி உணர்வுகளை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.
குறிப்பாக நாம், மனிதரக்ளுள் ஒருவர் இன்னொருவரை அளவுக்கதிகமாக நேசித்து
விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அவர்களை பிரிய வேண்டிய சூழல்
ஏற்படுகின்றபொழுது, அந்த வேதனையின் உச்சத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே
புரிந்துகொள்ள இயலும்.
அவ்வாறுதான் இறைவன் உறவுகளுக்குள் பிரிவு என்கின்ற
புறச்சாதனமில்லா வேதனையை வடிவமைத்துள்ளான். இது புறச்சாதனம் மூலம் கொடுக்கும்
வேதனைகளைக் காட்டிலும் கொடியது.
இறைவன் திருமறையில், இலகுவாக சுவனம் சென்று விடலாம் என்று என்னிக்கொண்டீர்களா??? என நம்மைப்பார்த்து கேட்கிறான். அதே இறைவன் இன்னொரு இடத்தில் பிரிவு எனும் சோதனையை
இறைவனுக்காக நீங்கள் பொறுத்தால் உங்களுக்கு சுவனம் உண்டு என்றும் கூறுகிறான்.
ஆம், பிரிவு எனும் சோதனை என்பது இலகுவான ஒன்றல்ல!!! மிகப்பெரும் சோதனைகளில் இதுவும் ஒன்று என்பதனால் தான்
இறைவன் அதற்குண்டான பரிசாக நமக்கு சுவனம் தருவதாக வாக்களிக்கிறான்!!!
பிரிவுகள் கொடிய வேதனை என்றாலும் இறைவனுக்காக அவற்றை
சகித்துக்கொள்ள நாம் பழக வேண்டும்.
இதுபோன்ற எண்ணங்கள் என் உள்ளத்தில் உதிக்கின்றபோழுது என்
ஆழ்மனதில் தோன்றிய சிந்தனை இதுதான்.....
இவ்வுலகில் நாம் அளவுக்கதிகமாக நேசித்த மனிதர்கள், நம்மை வெறுத்தாலோ, மௌனமாக நம்மைக் கடந்து சென்றாலோ, நம்மை காணாததுபோல் வெறுத்து ஒதுங்கி நின்றாலோ
உள்ளம் வெடித்துவிடுவது போன்ற கொடிய உணர்வை நாம் சுகிக்கிறோம்.....
உள்ளம் வெடித்துவிடுவது போன்ற கொடிய உணர்வை நாம் சுகிக்கிறோம்.....
நம்மை படைத்த ரட்சகன், நாளை மறுமையில் சில மனிதர்களை பார்க்க மாட்டான், அவர்களோடு பேசமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்த மாட்டான் என்று நாம் படித்த
இறைவசனத்தையும் நபிமொழிகளையும் கண்முன்னே நிறுத்திப்பார்ப்போம்.
இறைவன் இவ்வாறு செய்வதற்கான காரணம் இந்த நிலையை அடைந்த
நபர்களுக்கு வேதனையளிக்கவே என்பது ஒருபுறம் இருந்தாலும்,
ஒரு நல்ல இறைவிசுவாசி தாம் செய்த குற்றத்தால் இந்த நிலையை
அடைந்து விடுவாராயின் ஏனையை வேதனைகளைவிட இதுவே அவரது வேதனையின் உச்சகட்டமாக
இருக்கும்.
இறைவனை நேசிக்க தெரியாதவனுக்கோ இறைவனது புறக்கணிப்பு ஓர்
பொருட்டல்ல. அவன் தமக்கு ஏற்படப்போகும் வேதனைகளை குறித்து மட்டுமே அஞ்சுவான்
கவலைப்படுவான் கைசேதப்படுவான்.
ஆனால் இறைவனை நேசித்து வாழும் ஒரு இறைனம்பிக்கையாளரை
பொறுத்த வரையில், இறைவனது மௌனத்தையோ, இறைவனது புறக்கணிப்பையோ அவரால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள
முடியாது.
இறைவன் தரப்போகும் உடல் சார்ந்த வேதனைகள் ஒன்றாகவும், இறைவன் தம்மை புறக்கணித்து விட்டான் என்ற உள்ளம் சார்ந்த
வேதனை ஒன்றாகவும், மொத்தம் இருவகையான தண்டனைகளை இறைவனை நேசித்து
வாழ்ந்த மனிதன் மட்டுமே அந்த இடத்தில் உணருவான்....
இத்தகைய நிலையில் இருந்து அல்லாஹ் நம்மை அவனது கருனைமூலமாக
பாதுகாக்க வேண்டும்.....
இறைவன் மறுமையில் எதுபோன்ற பாவிகளை பார்க்க மாட்டன், அவர்களோடு பேசமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்த மாட்டன் என்ற மார்க்க விளக்கத்தை
ஒரு முஃமின் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் அறியாமல்கூட
அவற்றில் விழுந்து விடாமல் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
நேரம் கிடைக்கின்றபொழுது இறைவனும் இறைத்தூதரும் சொல்லும்
இத்தகைய தண்டனைக்குரியோர் யார் என்பதை தொடராக பதிவிடுவோம்....! இனஷா அல்லாஹ்....!
Monday, November 6, 2017
இறைவனது சந்திப்பிற்கு நாம் தயாரா???
ஒரு மனிதன் இறைவனை சந்திக்க வேண்டும் என்றால் அதற்குண்டான வழிமுறை நமது வாழ்வு
முடிவுக்கு வர வேண்டும் என்பதே ஆகும். நம்மில் எவரும் மரணம் என்ற வழியின் மூலமாகவோ
அல்லது யுகமுடிவு நாளின் மூலமாகவோ அன்றி தமது ரப்பின் சந்திப்பை அடைந்துகொள்ள
முடியாது.
இறைவனது சந்திப்பு நிச்சயமாக நிகழும். இதைப்பற்றி நாம் சிந்திக்கின்றபொழுது
நாம் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்தால் தான் இறைவனது சந்திப்பை பெற முடியும்
என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆனால் நம்மில் பெரும்பான்மை மக்களுக்கு மரணம் என்றாலே ஒருவிதமான பயஉணர்வு.
யாராக இருந்தாலும் மரணம் பற்றிய பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு
இறைவிசுவாசியின் மரண பயத்திற்கும் இறைமறுப்பாளனின் மரண பயத்திற்கும் ஆகப்பெரிய
வித்தியாசம் உண்டு. என்றுமே இறைமறுப்பாளர்கள் அஞ்சுவதை போன்று மரணத்தை எண்ணி ஒரு
இறைவிசுவாசி அஞ்சிவிடக்கூடாது.
இறைமறுப்பாளனின் பயமோ இவ்வுலக வாழ்வை சார்ந்து இருக்கும். ஆனால் ஒரு
இறைவிசுவாசியின் மரண பயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கோர் முன்மாதிரியாக
நபியவர்களின் காலத்தில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள்!!!
நபி(ஸல்)
அவர்கள் 'அல்லாஹ்வை
தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை
தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்' என்று
கூறினார்கள். அப்போது 'ஆயிஷா(ரலி)
அவர்கள்' அல்லது 'நபி(ஸல்)
அவர்களின் துணைவியரில் ஒருவர்' 'நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்' என்று
கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்)
அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு
இறப்பு நேரம் வரும்போது, அவரைப்
பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கெளரவிப்பதாகவும் அவருக்கு
நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட
விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க
விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான்.
இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை
குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப்
பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன்
அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள்
பாலி)ப்பதை வெறுப்பான்' என்று
(விளக்கம்) சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபாதத்திப்னுஸ் ஸாமித் (ரலி), நூல் : புகாரீ 6507.
இறைஅச்சத்திற்கு முன்மாதிரிகளாக விளங்கிய நபித்தோழர்களின் மரண பயத்தை
நபியவர்கள் எவ்வாறு விளக்குகிறார்கள் என்று பாருங்கள். ஆயிஷா (ரலி) அவர்கள்,
இறைவனது சந்திப்பை தாம் விரும்புகிறோம் ஆனால் மரணம் என்றால் பயம் அல்லாஹ்வின்
தூதரே! அவ்வாறாயின் நாங்கள் இறைவனது சந்திப்பை வெறுத்தவர்கள் ஆகிவிடுவோமோ என்று
நபியிடம் கேள்வி எழுப்ப, ஒரு முஃமினுக்கு மரண வேளையில் பயம் தோன்றினாலும் அந்த
பயத்திலிருந்து அல்லாஹ் அவர்களை மீட்டுவான். சுவனம் குறித்த நன்மாராயம் அவருக்கு
கூறப்படும். இறைவனது நன்மாராயத்தை பெற்றுக்கொண்ட ஒரு முஃமின் இவ்வுலகில் இருக்க
விரும்ப மாட்டான். தமது இறைவனை உடனே சந்திக்க வேண்டும் என ஆசை கொள்வான். அவ்வாறே
இறைவனும் அந்த அடியானை சந்திக்க ஆசை கொள்வான் என்று நபியவர்கள் அழகியதொரு
விளக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அளிக்கிறார்கள்.
இங்கு நாம் சிந்திக்க
வேண்டியது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மரணம் குறித்த பயம் ஏற்பட்டாலும் மரணத்தை
அடையும் இறுதியான கட்டத்தில் ஒரு முஃமினுக்கு நிகழ்பவைகளைப் பற்றி நபியவர்கள்
எடுத்து சொன்னதும் அழகிய முறையில் அவர்கள் சாந்தமானார்கள்.
இதுபோன்ற சந்தர்ப்பத்தில்
நமது நிலை என்னவாக இருக்கும்????
மரணத்திற்கும் பயம்!!!!
மரணவேளையை அடைந்தால்
நபிகளார் சொன்ன இந்த நன்மாராயங்கள் எமக்கு கிடைக்குமா என்பதை எண்ணியும் பயம்!!!!
நம் வாழ்க்கைதான் நமது
மறுமை வாழ்வை பற்றி இப்பொழுதே பேசுகிறதே.......
மரணம் என்ற இறைவனது
அழைப்பு! அது எந்த நொடியில் எம்மை சந்தித்தாலும் அதை இன்முகத்தோடு நான் ஏற்கத்
தயார் என்ற வாழ்வாக நமது வாழ்வு மாற வேண்டும். நாம் எவ்வாறு வாழ்ந்தால் அப்படியான
ஒரு தருணம் நமது வாழ்வில் குடிகொள்ளும் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அதற்குண்டான போராட்டம் நம் வாழ்வில் எப்பொழுதும் தொய்வடைந்து விடக்கூடாது.
எவரும் பாவங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த அறிவுரையை எம் தோழர்களுக்கு எழுதுகின்ற வேளையில் என்
உள்ளமும் சொல்கிறது நானும் அந்த மரணத்தை சந்திக்க இன்னும் தயாராகவில்லை என்று.....
எதுவாக இருந்தாலும் இறைவனது வெறுப்பை பெற்ற நிலையில்
நமது உயிர் இவ்வுலகைவிட்டு பிரித்துவிடக் கூடாது. கருணையாளன் அல்லாஹ் நமது பிழைகளை
பொருந்திக்கொண்டு வெற்றியாளர்களாக இறுதி நேரத்தில் நம்மை அரவணைப்பானாக....!!!
Thursday, November 2, 2017
இறைவனுக்கு ரோஷம் எப்பொழுதும் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா????
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி)
இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5223.
நூல் : புகாரி 5223.
கோபம், ரோஷம் இரண்டிற்கும் நுணுக்கமான வித்தியாசங்கள் உள்ளன. கோபம்
மடத்தனமானது, இறைவன் வெறுக்கக்கூடிய ஒரு குணமும் ஆகும்.
ஆனால்
ரோஷம் என்பது கோபத்தை போன்றதல்ல. கோபத்தோடு இணைந்து ஏற்படும் ஒருவகை உணர்வு. இது
பெரும்பாலும் காரண காரியத்தோடு ஏற்படக்கூடியது. பலத்தருனங்களில் இறைவன் தனது
அடியார்களிடம் விரும்புகின்ற ஒரு குணமும் கூட.
இன்னும்
கூடுதலாக சொல்வதாக இருந்தால் கோபம் என்பது நாம் சந்திக்கின்ற அனைவரின்மீதும்
சட்டென ஏற்பட்டு விடும்.
ஆனால்
நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, யார்மீது
அதிக அக்கறையும் கவனமும் உரிமையும் எடுத்துக் கொள்கிறோமோ அவர்கள் மீது மட்டும்
தான் ரோஷம் என்ற குணம் வெளிப்படும்.
நாம்
மேலே சுட்டிக்காட்டிய ஹதீஸ் இறைவனின் கோபத்தை பற்றிப் பேசவில்லை. ரோஷத்தை பற்றி
பேசுகிறது. இறைவன் பொதுவாகவே இறை நம்பிக்கையாளர்களை நேசிக்கிறான்.
ஆகவே
தன்னை நம்பி அழகிய முறையில் நன்மையில் ஈடுபட்டு வரும் ஒரு இறை நம்பிக்கையாளன், தான் தடுத்த ஒன்றை துணிந்து செய்கின்றபொழுது அந்த அடியான்
மீது இறைவன் ரோஷப்படுகிறான்.
இறைவனது
கோபம் மட்டுமல்ல, அவனது ரோஷமும் நம்மை பாவங்களில் இருந்து
திருத்த வேண்டும். நாம் நன்மையில் இருக்க வேண்டும் தீமையை நோக்கி செல்லக்கூடாது
என்பதற்காவே இறைவன் நம்மீது ரோஷப்படுகிறான். அன்பு கலந்த கோபம் என்றும் இதனை
சொல்லலாம்.
அன்பு
கலந்த கோபம் ஏராளமான நபர்களை மாற்றி இருக்கிறது. அதற்கு உதராணமாக கணவன் மனைவி
உறவுக்குள் ஏற்படும் ரோஷ உணர்வுகளை சொல்லலாம்.
நாம்
இறைவனது நேசத்தை விரும்புகிறோம் என்றால் அவனது ரோஷத்தை தட்டாமல் இவ்வுலகில் வாழ
கற்றுக்கொள்ள வேண்டும்.
இறைவனை
நேசிக்கும், இறைவனது நேசத்தை
நேசிக்கும் எல்லா இறை நம்பிக்கையாளர்களுக்கும்
எனது பிரார்த்தனையை சமர்ப்பித்தவனாக.......!
எனது பிரார்த்தனையை சமர்ப்பித்தவனாக.......!
Sunday, October 29, 2017
ஈமானை பொறுத்தே சோதனைகள் அமையும்
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல்வேறு வகையான சோதனைகளை சந்தித்து தான்
இவ்வுலகில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனை
பொறுத்தவரை சோதனைகள் ஏனைய நபர்களை போன்று அவருக்கு இருக்காது.
அதிகமான அளவிலும் தொடராகவும் நான் சோதிக்கப்படுவது எனது வாழ்வின் தோழ்வியை
தான் எனக்கு உணர்த்துகிறது, சோதனைகள் குறைவாக வழங்கப்படும் நபர்கள் நிம்மதியான
வாழ்வை எட்டி விட்டார்கள் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் நினைப்பதுண்டு. ஆனால்
ஒரு இறை நம்பிக்கையாளன் இவ்வாறு சிந்திப்பதென்பது மிக மிக தவறான சித்தாந்தம்
ஆகும். இறைவனது நியதியை சரியாக புரிந்து கொண்ட ஒரு முஃமின் ஒருக்காலும் இவ்வாறு
சிந்தித்து தனது ஈமானிய உணர்வுகளை பலவீனப்படுத்தவே மாட்டான்.
நாம் எந்தளவிற்கு ஈமானிய உறுதியோடு செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு அதிகமாக
சோதிக்கப்பட்டே தீருவோம் என்பது இவ்வுலகில் முஃமின்களுக்கு இறைவன் விதித்த நியதி
ஆகும். ஆகவே தான் ஒரு சந்தர்ப்பத்தில் கூட ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரிடம்
"உலகில் அதிகமாக சோதிக்கப்படும் நபர்கள் யார்" என்று கேட்டபொழுது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நபிமார்கள் என்று பதில் சொன்னார்கள்.
இறைவனது அன்பையும் அருளையும் உறுதியாகவே பெற்றுக்கொண்ட சிறந்த மனிதர்கள் தான்
இறைத்தூதர்கள். ஈமான் எனும் அடிப்படையை மனித சமூகத்திற்கே செயல்வடிவின் மூலமாக
அடையாளப்படுத்தும் உயர்ந்த ஈமானுக்கு சொந்தக்காரர்கள். நமது சிந்தனையின் பிராகாரம்
இவர்களை அனுகுவோமாக இருந்தால் நிச்சயமாக இறைத்தூதர்கள் சோதனைகளே இன்றி
வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் பல இறைத்தூதர்கள் அவர்களது சமூகத்தாலேயே
கொலை செய்யப்பட்டும் உள்ளதாக இறைவன் திருமறையில் கூறுகிறான்.
ஆகவே ஒரு இறை நம்பிக்கையாளன் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம், ஒரு முஃமினுக்கு
அவனது ஈமானிய உறுதியை பொறுத்து மடைதிறந்த வெள்ளம்போல சோதனைகள் தொடர்ச்சியாக
வந்துகொண்டே இருக்கும். இது இறைவன் முஃமின்களுக்கு விதித்த விதியாகும்.
ஒரு முஃமின் சோதனைகள் இன்றி அமைதியான வாழ்வை எட்டும் நேரம் என்பது இவ்வுலக
வாழ்வில் என்றுமே கிடைக்காது, முஃமினுக்கு அமைதியான வாழ்வின் திறவுகோல் அவனது
மரணம் தான். அவனது மரணம் வரை போராட்டங்கள் தொடரவே செய்யும்.
ஆகவே தான் நபிகளார் (ஸல்) அவர்கள் கூட தாம் கேட்ட அதிகமான பிரார்த்தனைகளில் "இறைவா!
எல்லா வகையான சோதனைகளை விட்டும் எனக்கு மரணத்தின் மூலம் ஓய்வை கொடு!" என்ற
இந்த வாசகத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள்.
« وَاجْعَلِ الْمَوْتَ
رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ» رواه
مسلم.
ஒரு முஃமினுக்கு சோதனைகள் அற்ற நிம்மதியான வாழ்க்கை என்பது மறுமையின்
வாழ்வு தான் என்பதை ரத்தினச்சுருக்கமாக தமது பிரார்த்தனையின் மூலம் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுப்பதை இந்த செய்தியின் மூலமாக அறிந்து கொள்ள
முடிகிறது.
எத்துனை சோதனைகள் நம்மை கடந்து சென்றாலும் அவைகளின் மூலம்
ராஹத்தான நிரந்தர வாழ்வொன்றை இறைவன் நமக்காக வைத்திருக்கிறான் என்ற சிந்தனையோட்டத்தை நாம் இழந்து விடக்கூடாது.
அதனை பெற வேண்டும் என்றால் விரைவில் முடிந்துபோகும் இவ்வுலக வாழ்வின் சோதனைகளை நாம் பொருந்தியே வாழ வேண்டும். அவற்றைக்கண்டு ஒருபோதும் நாம் சளைத்துவிடக்கூடாது.
அதனை பெற வேண்டும் என்றால் விரைவில் முடிந்துபோகும் இவ்வுலக வாழ்வின் சோதனைகளை நாம் பொருந்தியே வாழ வேண்டும். அவற்றைக்கண்டு ஒருபோதும் நாம் சளைத்துவிடக்கூடாது.
இத்தகைய சிறந்த ஈமானை இறைவன் அனைவருக்கும் நல்க வேண்டும் என
பிரார்த்தித்தவனாக முடிக்கிறேன்....!
---------------------------------------------------------------------------------------------------------
விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும்
மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான்.
அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.
திருக்குர்ஆன் (22:11).
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம்
உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள்
அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.
அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் (2:155,156,157).
Sunday, October 8, 2017
இஸ்லாத்தில் இணைந்த அபூஹுரைரா(ரலி)வின் தாய்!!!
Saturday, October 7, 2017
இறைவன் வெறுக்கும் பொறாமைகளும், அங்கீகரித்த பொறாமைகளும்!!!
இவ்வுலக வாழ்வில் எந்தவொரு மனிதனும் இன்னபிற மனிதன்மீது பொறாமை கொள்ளக்கூடாது என இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டுகிறது. மனிதனின் பொறாமைக் குணத்திற்கு அளவுகோல் வடிக்கவே முடியாத அளவிற்கு எதை எடுத்தாலும் அதில் பிறரோடு பொறாமை கொண்டு தீங்கு செய்வதை பரவலாக காண முடிகிறது.
இறைவன் இது பற்றி திருமறையில் கூறுகின்றபொழுது, "பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!" (113:5) என நபிக்கு இறைவன் கூறுகிறான். இதற்கான காரணம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மீது கொள்ளும் போட்டி பொறாமையால் உயிர் இழப்புக்கள் கூட இன்று சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.
தான் விரும்பிய ஒரு பெண் தன்னை விரும்பவில்லை இன்னொருவனை நேசிக்கிறாள் என்பதை ஒருவன் பார்க்கும்பொழுது அவனுக்குள் எழுகின்ற பொறாமை எனும் கொடிய தீ அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்யத்தூண்டுகிறது. (ஹலாலான உறவு அல்லாமல் அந்நியர்களை காதலித்தல் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது, உதாரணத்திற்காகவே இவை கூறப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்)
அதேபோன்ற செல்வத்தில், அழகில், குணத்தில், பலத்தில் என்று எல்லா வகையிலும் பொறாமை வளர்கிறது. வளர்வதற்கேற்ப பொறாமைக் குணத்தை உள்ளத்தில் வளர்த்துவரும் நபர்களிடம் ஏதோ ஒரு வகையில் கெடுதல் செய்யும் குணமும் கூடவே வளர்ந்து வருகிறது. இதுபோன்று நாமாக வளர்த்துக்கொள்ளும் பொறாமை எனும் கொடிய குணத்தால் சம்மந்தமில்லாது ஒரு நபர் பாதிப்படைந்து நிற்பதை இறைவன் ஒருபோதும் ஏற்க மாட்டான்.
ஆகவே தான் பொறாமை கொள்ளும் நபர்களின் தீங்கிலிருந்து எம்மிடம் நீங்கள் பாதுகாப்பு தேடுங்கள், நாம் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் எனும் அடிப்படையில் பொறாமைக்காரனுக்கு எதிராக இறைவனே பொறுப்பேற்பதை நாம் இந்த வசனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஆக ஒரு மனிதன் தமக்கு இறைவன் அளித்தவைகளைக் கொண்டு திருப்தியடைந்து கொள்ள வேண்டுமே தவிர, பிறருக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளை பார்த்து பொறாமை எனும் கொடிய வியாதியை நமது உள்ளத்தில் வளர்த்துக்கொள்ள கூடாது. அது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் பாவம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் அடிப்படையாக புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு பொறாமை அறவே கூடாது என்று நமக்கு கட்டளையிட்ட இறைவன், ஒரு இரண்டு விஷயங்களில் மட்டும் நீங்கள் பொறாமை கொள்ள அனுமதி உண்டு என தம் தூதர் மூலமாக இந்த சமூகத்திற்கு கற்றுக்கொடுக்கிறான்.
இந்த இரண்டு விஷயங்களை பொருத்தவரைக்கும் பொறாமை என்ற குணத்தை நிச்சயமாக இவற்றோடு பொரும்பாலும் உரசவிட்டிருக்க மாட்டோம் என்று தான் நான் சொல்வேன். இவற்றிற்காக நம் சமூகத்தில் பொறாமை கொள்ளும் மக்கள் விரல்களால் எண்ணி முடிக்க முடியுமான அளவே இருக்கக்கூடும்!!! (அல்லாஹ் மிக அறிந்தவன்) அவைகள் இரண்டும் எவை என்பதை நபியவர்கள் கூறுகிறார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை
கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை
அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர்
அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 5025.
ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்குகிறான், அதைகொண்டு அவர் இரவில் ஓதுகிறார் என்பதோடு நபியவர்கள் நிறுத்தவில்லை, மாறாக அதனை ஓதி அதன்மூலமாக வழிபடுகிறார் என்று சொன்னார்கள். அதாவது வேதத்தை படித்து அதன் அடிப்படையில் செயல்படும் ஒரு சிறந்த வணக்கசாலியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார்கள்.
இதுபோன்றதொரு மனிதரை நாம் பார்க்கின்ற பொழுது நாமும் இவர் போன்று செயல்பட வேண்டும் அல்லது இவரை மிஞ்சுகின்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற பொறாமை உணர்வு இந்த விஷயத்தில் உண்டாக வேண்டும் என்பதே இறைவனது விருப்பம்.
ஆனால் இதுபோன்ற நபர்களை பார்க்கும் பொழுது நமக்குள் பொறாமை சிந்தனைகள் உதித்ததுண்டா???? இவற்றை சிந்தனைக்கே எடுக்காத நபர்கள் தான் நம்மில் அதிகம்.
உலகாதாய சிந்தனைகளில் ஒருவருக்கொருவர் முந்துவதற்காக பெரும்பகுதி போட்டி போடுகிறோம். நம்மைவிட அதிக இறைவசனம் தெரிந்த ஒரு நபரை பார்க்கும்பொழுது இவரை மிஞ்சும் வகையில் இவரைக்காட்டிலும் அதிக இறைவசனங்களை நான் மனனம் செய்வேன் என்ற போட்டி உணர்வு உதித்ததுண்டா????
சிறு வயது வாலிபன் அழகிய முறையில் மார்க்க அழைப்புப்பணியில் செயல்படுவதைப் பார்த்து இதைவிட அழகிய அழைப்பாளனாக எனது பிள்ளையை நான் உருவாக்க போகிறேன் என்று பொறாமை கொண்டதுண்டா????
இதுபோன்று ஏராளம் சொல்லலாம் தோழர்களே! நாம் இதில் பலவீனர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் நபியவர்கள் சொன்னார்கள், ஒருவருக்கு அதிகமான செல்வம் வழங்கப்பட்டு அதைக்கொண்டு இறைவழிப்பதையில் அவர் இரவு பகலாக சதாவும் தர்மம் செய்கிறார். இவரைப் போன்றோரை நீங்கள் பார்க்கும்பொழுது இதுபோன்றோ அல்லது இதைவிடவும் அதிகமாகவோ தாமும் தர்மம் செய்ய வேண்டும் என பொறாமை கொள்வதற்கு இறைவன் அனுமதிக்கிறான்.
ஒரு சதவீதம்கூட முழுமையாக இதற்காக பொறாமை கொள்ளும் இஸ்லாமிய சமூகத்தை நாம் பார்க்க இயலாது. சில ஏழைகள் இதுபோன்று செல்வத்தை அல்லாஹ் தமக்கு தந்தால் தாமும் தர்மம் செய்வோம், நாங்கள் ஏழ்மையை உணர்ந்தவர்கள் என்றெல்லாம் எண்ணுவார்கள். இறைவன் சோதனைக்காக சில சந்தர்ப்பங்களில் அந்த ஏழையை மிகப்பெரிய செல்வந்தனாகவும் மாற்றிவிடுவான். இப்படி இறைவன் சோதித்து பார்த்த நிறைய ஏழைகளும் தமது கோரிக்கையில் பொய்யர்களாக மாறிவிடுகின்றனர். இறைவனது சோதனையில் தோற்றும் விடுகின்றனர்.
செல்வத்தை சேர்ப்பதில் தான் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டும் போட்டிபோட்டுக் கொண்டும் திறம்பட செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அந்த செல்வம் இறைவன் கொடுத்தவை, அவற்றில் இறைவனது பணிக்காக ஒதுக்கப்பட வேண்டிய பகுதிகள் உண்டு. அவை நமக்கு சொந்தமானவை இல்லை என்பதையெல்லாம் பெரும்பாலும் மறந்து இந்த உலக இனபங்களையும் ஆடம்பர வாழ்வையும் நோக்கி வீரியமாக எதைப்பற்றியும் கவலை இல்லாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இறைவன் பாதுகாக்க வேண்டும்!!!
பொறாமை என்னும் குணம் எவற்றில் இருந்தால் நமது இம்மை மறுமை வாழ்வு செழிப்பாகும் என்று இறைவன் நமக்கு கற்றுக்கொடுத்தானோ அவற்றில் மாத்திரம் அளவுக்கதிகமாக பொறாமை கொள்வோம்!!!
இறைவன் தடுத்திருக்கும் ஏனைய பொறாமைக் குணங்களை விட்டும் நமது வாழ்வை தூய்மைப்படுத்துவோம்!!!
எல்லாம் வல்ல இறைவன் அதற்குண்டான அனைத்து பாதைகளையும் நமக்கு எளிதாக்கி தருவானாக என்று பிரார்த்தித்தவனாக இந்த சிறிய அறிவுரைக்கு திரையிடுகிறேன்!!!
Subscribe to:
Posts (Atom)



