தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, October 29, 2017

ஈமானை பொறுத்தே சோதனைகள் அமையும்



ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல்வேறு வகையான சோதனைகளை சந்தித்து தான் இவ்வுலகில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனை பொறுத்தவரை சோதனைகள் ஏனைய நபர்களை போன்று அவருக்கு இருக்காது.

அதிகமான அளவிலும் தொடராகவும் நான் சோதிக்கப்படுவது எனது வாழ்வின் தோழ்வியை தான் எனக்கு உணர்த்துகிறது, சோதனைகள் குறைவாக வழங்கப்படும் நபர்கள் நிம்மதியான வாழ்வை எட்டி விட்டார்கள் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் நினைப்பதுண்டு. ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளன் இவ்வாறு சிந்திப்பதென்பது மிக மிக தவறான சித்தாந்தம் ஆகும். இறைவனது நியதியை சரியாக புரிந்து கொண்ட ஒரு முஃமின் ஒருக்காலும் இவ்வாறு சிந்தித்து தனது ஈமானிய உணர்வுகளை பலவீனப்படுத்தவே மாட்டான்.

நாம் எந்தளவிற்கு ஈமானிய உறுதியோடு செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு அதிகமாக சோதிக்கப்பட்டே தீருவோம் என்பது இவ்வுலகில் முஃமின்களுக்கு இறைவன் விதித்த நியதி ஆகும். ஆகவே தான் ஒரு சந்தர்ப்பத்தில் கூட ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரிடம் "உலகில் அதிகமாக சோதிக்கப்படும் நபர்கள் யார்" என்று கேட்டபொழுது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நபிமார்கள் என்று பதில் சொன்னார்கள்.

இறைவனது அன்பையும் அருளையும் உறுதியாகவே பெற்றுக்கொண்ட சிறந்த மனிதர்கள் தான் இறைத்தூதர்கள். ஈமான் எனும் அடிப்படையை மனித சமூகத்திற்கே செயல்வடிவின் மூலமாக அடையாளப்படுத்தும் உயர்ந்த ஈமானுக்கு சொந்தக்காரர்கள். நமது சிந்தனையின் பிராகாரம் இவர்களை அனுகுவோமாக இருந்தால் நிச்சயமாக இறைத்தூதர்கள் சோதனைகளே இன்றி வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் பல இறைத்தூதர்கள் அவர்களது சமூகத்தாலேயே கொலை செய்யப்பட்டும் உள்ளதாக இறைவன் திருமறையில் கூறுகிறான்.

ஆகவே ஒரு இறை நம்பிக்கையாளன் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம், ஒரு முஃமினுக்கு அவனது ஈமானிய உறுதியை பொறுத்து மடைதிறந்த வெள்ளம்போல சோதனைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும். இது இறைவன் முஃமின்களுக்கு விதித்த விதியாகும்.

ஒரு முஃமின் சோதனைகள் இன்றி அமைதியான வாழ்வை எட்டும் நேரம் என்பது இவ்வுலக வாழ்வில் என்றுமே கிடைக்காது, முஃமினுக்கு அமைதியான வாழ்வின் திறவுகோல் அவனது மரணம் தான். அவனது மரணம் வரை போராட்டங்கள் தொடரவே செய்யும்.

ஆகவே தான் நபிகளார் (ஸல்) அவர்கள் கூட தாம் கேட்ட அதிகமான பிரார்த்தனைகளில் "இறைவா! எல்லா வகையான சோதனைகளை விட்டும் எனக்கு மரணத்தின் மூலம் ஓய்வை கொடு!" என்ற இந்த வாசகத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள்.
« وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ»  رواه مسلم‏.

ஒரு முஃமினுக்கு சோதனைகள் அற்ற நிம்மதியான வாழ்க்கை என்பது மறுமையின் வாழ்வு தான் என்பதை ரத்தினச்சுருக்கமாக தமது பிரார்த்தனையின் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுப்பதை இந்த செய்தியின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

எத்துனை சோதனைகள் நம்மை கடந்து சென்றாலும் அவைகளின் மூலம் ராஹத்தான நிரந்தர வாழ்வொன்றை இறைவன் நமக்காக வைத்திருக்கிறான் என்ற சிந்தனையோட்டத்தை நாம் இழந்து விடக்கூடாது

அதனை பெற வேண்டும் என்றால் விரைவில் முடிந்துபோகும் இவ்வுலக வாழ்வின் சோதனைகளை நாம் பொருந்தியே வாழ வேண்டும். அவற்றைக்கண்டு ஒருபோதும் நாம் சளைத்துவிடக்கூடாது.

இத்தகைய சிறந்த ஈமானை இறைவன் அனைவருக்கும் நல்க வேண்டும் என பிரார்த்தித்தவனாக முடிக்கிறேன்....!
---------------------------------------------------------------------------------------------------------
விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.
திருக்குர்ஆன் (22:11).

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம்.  பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் (2:155,156,157).

No comments:

Post a Comment