தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, February 11, 2016

வேலூரில் சந்தித்த கலந்துரையாடல்!!!




அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! வேலூரில் சென்ற (2014) வருடம் ரமளான் உரைக்காக நாம் சென்றிருந்தபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல் பற்றி உங்களிடம் இந்த பதிவின் மூலம் நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

வேலூரில் சமீப காலமாக குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லக்கூடிய வழிகேடர்கள் அங்கங்கு முளைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களது வழிகெட்ட கொள்கையை ஒடுக்க வேண்டும் என்று அங்குள்ள நம் சஹாக்களில் சிலர்  மிகவும் ஆர்வத்தோடு அவர்களை எதிர்நோக்க காத்து இருந்தனர். மார்க்க சிந்தனை அற்ற நபர்களை சந்தித்து தம் பக்கம் அவர்களை இழுத்துப்போட்டு வழிகேடுப்பதைப் பார்க்கும் போது நம்மில் எவருக்குத்தான் ரோஷம் வராது? ஒருநாள் அந்தக் கொள்கையை பரப்பும் முக்கியமான நபரை சந்திக்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. களத்தில் சந்தித்தோம், அல்லாஹ்வின் அருளால் இறைவனது வேத வசனங்களில் இருந்தே, குர்ஆன் மட்டும் வஹியல்ல மாறாக நபியவர்களின் சுன்னாக்களும் பின்பற்றப்பட வேண்டிய வஹிதான் என்பதை அவரிடம்  எடுத்துரைத்தோம். 

அவரது கையில் ஒரு வித்தியாசமான குர்ஆன் ஒன்று இருந்தது. நாம் எடுத்து வைக்கும் அத்தனை வசனங்களையும் அந்த குர்ஆனின் வாயிலாகத்தான் அவர் பார்வையிட்டார். அவர் வைத்திருந்த குர்ஆனில் அதன் மூல மொழியான அரபி மொழி இல்லை! நாம் வைத்திருக்கும் அரபியுடன் கூடிய தர்ஜுமாவை அவர் பார்க்க விரும்பவும் இல்லை. 

அவர் வைத்திருந்த குர்ஆனில் மூல மொழி அரபு இல்லாததால் அந்தக் குர்ஆனை மொழிப்பெயர்த்துள்ள அவர்களின் கொள்கை சார்ந்த ஒரு அயோக்கியன் தனது சுய சிந்தனைகளை எல்லாம் அந்தக் குர்ஆனில் அள்ளித்தூவி இருந்தான். இதை நாம் அவதூறாக சொல்லவில்லை, அவரோடு வாதம் செய்து கொண்டிருக்கும் போது நாம் முன்வைத்த வசனங்களை அவர் வைத்திருக்கும் குர்ஆனோடு ஒப்பிடுகிறார். எப்படி ஒப்பிடுகிறார் என்றால் அந்த வசனங்களின் அருகில் அதற்கான விளக்கம் கூறப்பட்ட அடிக்குறிப்பு எண் ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த அடிக்குறிப்பை வாசித்து விட்டுத்தான் அவர் எங்களுக்கு பதில் கூறுகிறார். 

உதாரணமாக:
يُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ

"அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் அவர் கற்றுக் கொடுப்பார்" என்ற வசனத்தை நாம் மேற்கோள் காட்டி பேசும்போது அவரது குர்ஆனில் உள்ள அடிக்குறிப்பை பார்த்து விட்டு, இரண்டு வார்த்தைகளும் ஒன்று தான், அதை பிரிக்க முடியாது என்று வாதம் வைத்தார். 

நாம் சொன்னோம் الْكِتَابَ மற்றும் الْحِكْمَةَ என்ற வார்த்தைகளுக்கு இடையில் وَ என்ற இடைச்சொல் வந்துள்ளது. இலக்கண சட்டப்படி இவ்வாறு வந்தால் வேதம் மற்றும் ஞானம் என்றுதான் வரும். ஆகவே இரண்டும் ஒன்றாக வாய்ப்பே இல்லை. இரண்டும் வேறு வேறுதான் என்று நாம் எதிர் வாதம் வைத்தோம். அதற்கு முறையான பதில் சொல்ல அவரால் இயலவில்லை, காரணம் அவருக்கு இலக்கண ரீதியாக பேசும் அளவிற்கு அறிவு இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

இதற்கிடையில் கையில் சரக்கில்லை என்பதை உணர்ந்த அவர் தம்மிடம் இருக்கும் சரக்கை தள்ளிவிட தலைப்பை விட்டு தாவ முற்பட்டார். அதற்கேற்றார் போல் ஒரு விசித்திரமான வாதமும் வைத்தார். முக்கியமான தலைப்பைவிட்டு நீங்கள் தாவுகிறீர்கள் என்பதை அவருக்கு தெரியப்படுத்தி விட்டு, இது ஒரு முறையான ஒப்பந்தம் போடப்பட்ட விவாதம் இல்லை என்பதால் அந்த வாதத்திற்கும் நாம் அவரது பாணியிலேயே பதில் கொடுத்தோம்.

அவர் வைத்த வாதம் என்னவென்றால், நாங்கள் ஏன் தாடி வைப்பதில்லை தெரியுமா? (அவரது கன்னம் வழு வழுவென்று இருந்தது). சாமிரி என்பவன் காளைக் கன்றை செய்து மக்களை வழிகெடுத்த சம்பவத்தில் மூஸா நபியவர்கள் கோபப்பட்டு, தாம் பொறுப்பு சாட்டிச் சென்ற தம் சகோதரர் ஹாரூன் நபி அவர்களது தாடியைப் பிடித்து இழுத்தார்கள். அடிப்பதற்கு எத்தனையோ இடம் இருந்தும் ஏன் தாடியை பிடித்து அவர்கள் இழுக்க வேண்டும். காரணம் அவருக்கு தாடி பிடிக்காது, ஆகவே தான் மூஸா நபியவர்கள் ஹாரூன் நபியின் தாடியைப் பிடித்து இழுத்தார்கள். ஆகவே தான் நாங்கள் தாடி வைப்பதில்லை. இதுதான் அந்த மடத்தனமான விசித்திரமான வாதம்!!!

நாங்கள் திருப்பிக்கொண்டு கேட்டோம், அப்படியென்றால் உங்களுக்கும் இன்னொரு நபருக்கும் சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். எதிர் தரப்பில் இருப்பவர் உங்களது சட்டையை கிழித்து விடுகிறார். இப்போது அவருக்கு கோபம் உங்கள் மீதா அல்லது சட்டை மீதா??? ஒருவர் உங்கள் மீதுள்ள கோபத்தில் சட்டையை கிழிக்கிறார் என்றால் அதற்காக அவருக்கு சட்டை பிடிக்காது ஆகவே தான் சட்டையை அவர் கிழித்தார் என்று சொல்வீர்களா???? அவருக்கு பிடிக்காத ஒன்றை அவர் மட்டும் ஏன் தனது மேனியில் அணிந்துள்ளார்???? இது ஒரு மடத்தனமான வாதமும் விளக்கமும் என்பதை நாம் அவருக்கு சொன்னோம்.

இதற்கும் மழுப்பலே தொடர்ந்தது. தனக்கு தாடி வைக்க விருப்பம் இல்லை என்பதற்காக அல்லாஹ்வின் வேத வசனங்களை எந்த அளவிற்கு இந்த மதியில்லா கூட்டம் திரிக்கிறது பாருங்கள். எதை எதற்கு ஆதாரமாக காட்டுகிறது பாருங்கள்! இந்த வாதத்தையும் அவர் சுயமாக வைக்கவில்லை. அவர் வைத்திருந்த குர்ஆனில் இருந்த அடிக்குறிப்பை மேற்கோள் காட்டித்தான் அந்த வாதத்தை அவர் வைத்தார்.

அதன் பின்னர் இறைவன் திருமறையில் கூறும் நான்கு புனித மாதங்கள் எவை என்று குர்ஆனில் மட்டும் இருந்து நிரூபிக்க சொன்னோம். அவரால் இயலவில்லை. இதுபோன்று இன்னும் சில வாதங்களும் தொடர்ந்தன.

கலந்துரையாடல் இறுதியில் முடிவுக்கு வந்தது. நாம் சந்தித்ததில் இப்படி ஒரு அரைவேக்காட்டை நாம் பார்த்ததில்லை. தேய்ந்து போன ஆடியோ கேசட்டை போல் திரும்ப திரும்ப பேசியதையே பேசி எங்களது ஆரோக்கியத்தை கெடுத்ததுதான் மிச்சம். என்றாலும் எம்மோடு வந்த சஹாக்கள் உண்மையை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியும் ஒரு பக்கம் உற்சாகம் அளித்தது. 

இதுபோன்ற நபர்களைக் களத்தில் சந்திக்கும் போதுதான் அதன் உள்ளார்ந்த நிலைகளை நாம் உணர்கிறோம். நமது ஜமாஅத்தின் மூலம் அசத்தியத்தை நோக்கி தொடுக்கப்படும் விவாதக்களங்களில் அல்லாஹ் நமது அழைப்பளர்களுக்கு ஆரோக்கியம் அளிப்பானாக! 

இறுதியாக நாம் அந்த நபருக்கு சில உபதேஷங்களை கூறி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.

நாங்கள் வைக்கும் வாதங்களுக்கு நீங்கள் பதில் அளிக்க முற்படும்போது, நீங்கள் வைத்திருக்கும் குர்ஆனில் உள்ள விளக்கங்களை முன்வைத்து தான் பதில் அளிக்க முயற்சி செய்தீர்கள். தாடியைப் பற்றியெல்லாம் கூட அதிலுள்ள விளக்கத்தை எடுத்துதான் விசித்திரமாக பேசினீர்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எவனோ ஒரு மடையன் இறைவனின் வார்த்தைகளில் சிலவற்றிற்கு  விளக்கமாக எழுதிய விளக்கெண்ணை விரிவுரைகளை கண்மூடிக் கொண்டு பின்பற்றுகிறீர்கள், பரப்புகிறீர்கள். ஆனால் அல்லாஹ்வின் வஹியை சுமந்த, அவனோடு நேரடி தொடர்பில் இருந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கங்களை (ஹதீஸ்களை) ஏற்க மாட்டோம், அது அவசியமல்ல, குர்ஆன் மட்டுமே போதும் வழிகாட்டுவதற்கு என்கிறீர்கள்! இது எந்த விதத்தில் நியாயம்????

குர்ஆன் மட்டும் போதும் என்றால் நீங்கள் வைத்திருக்கும் குர்ஆனிற்கு ஏதோ ஒரு மடையன் எழுதிய விளக்கங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்???? அல்லாஹ்வின் தூதரை விட இந்த மடையன் சிறந்தவனா???? என்ற ஆலோசனையை அவருக்கு முன்வைத்தோம்! 

உண்மை என்னவென்றால் அந்த குர்ஆனை மொழிப்பெயர்த்த மடையனுக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட இந்த நபர் அல்லாஹ்வின் தூதருக்கு கொடுக்கவில்லை. அவ்வாறுதான் இந்த மடையர்  கூட்டத்தில் இருக்கும் அனைவரும் பயிற்றுவிக்கப் படுகின்றனர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!

அது மட்டுமல்லாமல் இவர்கள் வைத்திருக்கும் குர்ஆனில் மூல மொழியே இல்லை. ஆகவே தான் அதில் தனது மனோ இச்சைக்கேற்ப  மொழியாக்கம் செய்துள்ளனர். அல்லாஹ் திருமறையை பாதுகாக்கிறான் என்பதால் எல்லா காலத்திலும் இந்த வழிகேட்டை எளிமையாக நாம் கண்டறிந்து விட முடியும். ஆனால் அரபு அறிவு அறவே இல்லாத நபர்களிடம் தான் இந்தக் கொள்கையை இவர்கள் மேலேடுத்து செல்கின்றனர் என்பதையும் நாம் இந்த கலந்துரையாடல் மூலமாக அறிந்து கொண்டோம். 

நம்மில் பலரும் பெரும்பாலும் அரபு அறிவு இல்லாதவர்கள் என்பதை மறுக்க முடியாது. என்றாலும் இது தொடர்பாக பேசுவதற்கு பரந்த அரபு அறிவு தேவையில்லை. இதுபோன்ற வழிகேட்டை நாம் புரிந்து கொள்ள, இந்த வழிகேட்டில் இருக்கும் நபர்களுக்கு எடுத்துரைக்க சில எளிமையான வாசகங்களை பொருளோடு கற்றுக் கொண்டாலே  போதுமானது. கற்றுக்கொள்ள முற்படும் நபர்களுக்கு நமது அழைப்பாளர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் சிறந்த பலன்களும் முடிவுகளும் நம்மை சூழ வரும்.

இதுபோன்ற விஷக்கிருமிகள் பரவக்கூடிய இடங்களில், அதுசார்ந்த பிரச்சாரக் கலங்கள் அதிகம் அமைக்கப்பட்டு வழிகேடுகள் வந்த வழியே ஓடிவிட நாம் அதிகம் முயற்சிக்க வேண்டும் என்ற எமது ஆலோசனையோடு இந்த தகவல் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கிறேன்!

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

Sunday, February 7, 2016

தொழுகையாளிக்கு கிடைக்கும் சிறந்த கூலிகள்!



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன.

அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. 

இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 412.

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நம்மில் எத்துனை நபர்களுக்கு இந்த செய்தி தெரியும்????

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இந்த பாக்கித்தை தொழுகையாளியைத் தவிர வேறு ஒருவர் பெற முடியாது, என்றாலும் அந்த தொழுகையில் நாம் போடும்போக்காகத்தான் இருக்கிறோம். இதுபோன்ற அளப்பரிய நன்மைகளை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். காரணம் தொழுகையால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் சரியாக அறிந்து கொள்ளவில்லை.

வேதனை, திருமண மண்டபத்தில் போடப்படும் ஆஃபர் பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்து செல்லும் இஸ்லாமிய பெண்கள் கூட்டத்தை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் மிக மிக சிறியதொரு வணக்கத்திற்கு இறைவன் அள்ளித்தூவும் நன்மைகளை அள்ளிக் கொள்ள ஏன் என் இஸ்லாமிய பெண்களுக்கு மனம் வருவதில்லை????

10 நிமிட வணக்கத்திற்கு இறைவன் வழங்கும் மிக உயர்ந்த பாக்கியங்களை அடைந்துகொள்ள, ஒரு 10 நிமிடம் இறைவனை நினைவுகூர ஏன் வியாபாரிகளுக்கு மனம் வருவதில்லை????

உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்திருப்பது, நீங்கள் எதனை திரட்டுவதற்காக அற்ப 10 நிமிடம் கூட  இறைவனை நினைவுகூர மறக்கிரீர்களோ அதைவிட அற்பமானதா???? 

இல்லை என் அன்பு இஸ்லாமியர்களே! இறைவன் வாக்களிக்கும் ஒவ்வொன்றும் இந்த உலகிலுள்ள எதனோடும் ஒப்பிட முடியாதவைகளாகும். இந்த உலகின் அற்ப இலாபத்திற்காக நிலையான மறுமை வாழ்வை இழந்து நிற்காதே தோழா! 

எழுந்து வா! இறைவனின் பக்கம் மீண்டுவிடு!

Tuesday, February 2, 2016

சூரா பகரா பற்றிய பலவீனமான செய்தி - 2



ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ، وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ، وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ»

உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்கவேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரில் வைத்து அவரது தலைமாட்டில் சூரத்துல் பாத்திஹாவையும், கால்மாட்டில் பகரா சூராவின் கடைசியையும் ஒதுங்கள்.  
(தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்) 

இதில் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் இடம் பெறுகின்றார், இவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார்மேலும் இதன் தொடரில் வரும் முதல் அறிவிப்பாளரான யஹ்யா என்பவர் பலவீனமானவராவார்
(ஸில்ஸிலதுல் லஈபா)

Wednesday, January 27, 2016

சூரா பகரா பற்றிய பலவீனமான செய்தி - 1



من قرأ سورة البقرة؛ توج بتاج في الجنة


யார் ஒருவர் சூரத்துல் பகராவை ஓதுகின்றாரோ அவருக்கு சுவனத்தில் கிரீடம் அணிவிக்கப்படும். இந்த செய்தி பைஹகீ இமாமின் ஷுஅபுல் ஈமான்எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் ‘முஹம்மதிப்னுல் ளவ்ஃ’ என்பவர் பொய்யன் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முஹ்ம்மதிப்னு மஹ்தீ என்பவர் நிரகரிக்கப்பட்ட செய்திகளை அறிவிக்கும் மிகப் பலவீனமான நபர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (ஸில்ஸிலதுல் லஈபா)

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்!

Saturday, January 16, 2016

மத வெறியன் உமா சங்கருக்கு பதில் - தொடர் 3



Pon Jesly Engineering College - ல் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியில், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக சதா இஸ்லாத்தை தொடர்பு படுத்தியே அவதூறுகளை அள்ளி வீசிய மட சாம்பிராணி  உமா சங்கருக்கு நாம் தொடராக பதில் அளித்து வருகிறோம்.

இந்த தொடரில், உமா சங்கர் குறிப்பிட்ட ஈராக்கில் ஜிஹாதிஸ்துகள் வெளியிட்ட ஃபத்வாவைப் பற்றி அலசுவோம். தெளிவாக சொல்வதென்றால் "Genital Mutilation Of Women" பெண்களின் மறை உறுப்புத் துண்டை வெட்டி எடுத்தல் (கத்னா செய்தல்) என்பதை ஈராக்கை சார்ந்த ஒரு சாரார் மார்க்க சட்டமாக வெளியிட்டு அமல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது மார்க்கத்தை முன்வைத்து செயல்படுத்தப்படுகிறது. இது கொடுமையில்லையா? இப்படி ஒரு மார்க்கம் கட்டளையிடுவது தகுந்ததா? இப்படி கூறும் மார்க்கத்தை நாம் பின்பற்றுவதா? என்பதுதான் இந்த மூடனின் வாதம். விவரமறியா இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் இதுபோன்ற அர்த்தமற்ற வாதங்களுக்கு எந்த எதிர்ப்பும் கூறாமல் அந்த சபையில் அமைதி காத்து விட்டனர். 

சரி, வைக்கப்பட்ட வாதத்திற்கு வருவோம்! இஸ்லாமிய ஜிஹாதிஸ்துகள் என்போர் யார் என்று உலகில் வாழும் இஸ்லாமியர்களான எங்களுக்கே தெரியாது. காரணம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு அவர்கள் ஒன்றும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் கிடையாது. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையே இறைவனின் வேதமான திருமறைக்குர்ஆனும், அவனால் நபியாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டும் தான். இவை அல்லாத எந்தவொரு வழிகாட்டலும் மார்க்கத்தின் பெயரால் கூறப்பட்டால் அவை தெளிவான வழிகேடு ஆகும். அதை நாம் பின்பற்றக்கூடாது. இதுதான் இஸ்லாத்தின் கொள்கை. 

பெண்கள் கத்னா செய்து கொள்ளல் என்ற குழப்பம் ஈராக்கில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சில பகுதிகளில் வழிகேடர்களால் சொல்லப்படுகின்றன. ஈராக்கில் உள்ளவர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள எவர் இஸ்லாமியக் கொள்கை சம்மந்தமாக சொன்னாலும், அது நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள இரண்டு அடிப்படை அம்சங்களில் இருந்து தான் வர வேண்டும். அப்படி இல்லாமல் தன்னிச்சையாக தானே ஒன்றை உருவாக்கி அதை இஸ்லாத்தோடு ஒருவர் தொடர்பு படுத்தினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம், எதிர்ப்போம். காரணம் அன்று முதல் இன்று வரை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இறைவனால் பாதுகாக்கப்படும் தூய்மையான வேதம் திருக்குர்ஆனே எங்களது வேதம்! அதில் புதிதாக ஒன்றை செருகவோ நீக்கவோ முடியாது. கண்டவர்களும் புகுத்திவிட்டு செல்ல, சூழலுக்கு ஏற்ப நீக்கல் செருகல் செய்யப்படும் மூல மொழி அழிந்துபோன பைபிளல்ல எங்கள் வேதம்.  

இந்த அடிப்படையில் பெண்கள் கத்னா செய்தல் என்பது இஸ்லாம் கூறாத ஒரு நடைமுறையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த எந்த ஒரு பெண்ணும் அவ்வாறு செய்யவும் இல்லை. தமிழக இஸ்லாமியர்களால் இந்த செயல் எதிர்க்கப்படுகிறது எனபதும் குறிப்பிடத்தக்கது. 

எங்கோ ஒரு இஸ்லாம் விளங்கா மடையன் வெளியிட்ட ஃபத்வாவை படித்து விட்டு ஊழையிடும் உமா சங்கர், இயன்றால் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில் இருந்து இதை எடுத்துக் காட்டி நிரூபிக்கட்டும்.

அடுத்ததாக தர்க்க ரீதியான பதிலுக்கு வருவோம். இஸ்லாத்தை சார்ந்த ஒரு பகுதியினர் ஒன்றை இஸ்லாம் என்று கூறி செய்து விட்டாலே அது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று ஒருவன் கூறினால் அது மடத்தனத்திலும் மடத்தனமாகும். உதாரணத்திற்கு நாம் கிருஸ்துவத்தை பற்றி பேசுகிறோம் என்றால் அதற்கு பைபிளைத் தான் ஆதாரமாக கொண்டு பேச வேண்டும். அது அல்லாமல் தானாக ஒன்றை பிரச்சாரம் செய்து கொண்டு இது கிறிஸ்த்துவத்தில் உள்ளதுதான் என்றால் அது மடமையாகும். 

இன்னும் தெளிவாக விளங்க, அமெரிக்க கிருத்துவ பெண்கள் பெரும்பாலும் தமது தொப்புல்களிலும், தமது மார்புகளிலும், தமது மறை உறுப்புகளிலும் வளையம் பதித்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இந்த செயலை கிருத்தவம் தான் சொல்கிறது என்று அந்த கிருத்தவ பெண்கள் சொன்னால், இதை ஏனைய கிருத்தவர்கள் எப்படி அணுகுவீர்கள்? கிருத்தவத்தவக் கூட்டம் சொன்னாலே அது உணமையான கருத்துதான் என்பீர்களா? அல்லது உண்மை கிறித்தவக் கோட்பாடோடு ஒப்பிட்டு பார்ப்பீர்களா?

இதே நிலைப்பாட்டைத்தான் இஸ்லாத்தோடும் ஒப்பிட்டு பேச வேண்டும். சில கிருத்துவ சபை, பைபிளில் உள்ளதாக சொல்லி ஆணும் ஆணும் திருமணம் செய்வதை அனுமதிக்கிறது. மேலை நாடுகளில் இந்த கேடுகெட்ட செயல் பரவ கிருத்தவ தேவாலயங்களே பெரிதும் காரணமாக திகழ்கின்றன. இந்த கேடுகெட்ட செயலும் கிருத்துவ மதத்தின் பெயரால்தான் பரப்பப்படுகின்றன. 



இது உண்மையில் பைபிளில் கூறப்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறு பதிவில் பார்ப்போம். என்றாலும் நாம் கேட்க விரும்புவது, இதுபோன்று மதத்தின் பெயரால் எவன் எதை பரப்பினாலும் அது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்வது அறிவுடைமையா??? அல்லது அதுபற்றி அந்த மதத்தின் மூல அடிப்படைகளில் ஆய்வு செய்து உண்மையை அறிவது அறிவுடைமையா??? 

இஸ்லாத்தின் மீதுள்ள கால்புணர்வில் ஏதோ ஒரு பகுதி மக்கள் செய்யும் மடத்தனத்தை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி விமர்சிக்கும் விஞ்ஞானி உமா சங்கரே, ஓரினச்சேர்க்கையை கிருத்துவம் தான் சொல்கிறது என்று சில கிருத்துவ பாதிரிகள் கூறும் கருத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்...! உங்கள் சபைகளில் இதை மக்களுக்கு ஆர்வப்படுத்துங்கள்...! செய்வீர்களா??? அதை எப்படி கிருத்துவத்தோடு தொடர்பு படுத்த முடியும் என்று சொல்வீர்கள் என்றால், இதே நிலைப்பாட்டை அனைத்து மதத்திற்கும் கொடுத்து விட்டு மூடிக்கொள்ளும் உமது திருவாயை.

அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே! நான் வைத்திருக்கும் இந்த பதில் வாதத்தைப் படிக்கும் நபர்கள் நிச்சயம் எதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன், உமா சங்கர் தனது மதத்தை மக்களுக்கு மேன்மையாக காட்டுவதற்காக, கைகளில் கிடைக்கும் ஆதாரமற்ற தகவல்களை எல்லாம் சொல்லி இன்னபிற மதங்களை கொச்சைப்படுத்தும் ஒரு கள்ளக்கிருத்து ஆவார். இன்னும் இதுபோன்று எவர் தவறாக விமர்சிப்பது நமது காதுகளுக்கு எட்டினாலும் அவர்களுக்கு இறைவனின் அருளால் சாட்டையடி(பதில்)கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை தெரியப்படுத்தி இந்த பதில் பதிவை மூடுகிறோம்....!

என் அன்பு இஸ்லாமிய சகோதரிகளே!!!



என் அன்பு இஸ்லாமிய சகோதரிகளே!!!
நீங்கள் அணிகின்ற பல இறுக்கமான ஃபர்தாக்கள்...
(சொல்வதற்கு தயக்கப்படுகிறேன்)
உங்களின் உள்ளாடைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
இதை அறிந்து தான் நீங்கள் உபயோகிக்கிறீர்களா???
ஒழுக்க மாண்புகளை உலகிற்கு கற்றுத் தரும் ஆடையல்லவா ஃபர்தா என்பது. தோளோடு இணைந்திருக்கும் அல்லாஹ்வின் சட்டமல்லவா ஃபர்தா என்பது.
அற்ப உலகில் சில நாட்கள் அனுபவிக்கும் அற்ப அழிந்து போகும் ஆசைகளுக்காக, 
அல்லாஹ்வின் சட்டத்தை இழிவுபடுத்த துணிவதா என் அன்பு சகோதரிகளே???

உள்ளம் வேதனைப் படுகிறது, வேலியே பயிரை மேய்வதனால்.....!

Tuesday, January 12, 2016

ஏசுவுக்கு முன்னாள் ஏது கிருத்துவம்???



உலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கையைத்தான் மக்களுக்கு போதனை செய்தார்கள். உலகில் முதலில் தோன்றிய கொள்கையும் மார்க்கமும் இஸ்லாம் மட்டுமே. என்றாலும் இந்த வாதத்தை மறுக்கும் கிருத்தவ போதகர்கள் அறியாத பாமரர்களை ஏமாற்றுவதற்காக ஒரு வரட்டு வாத்தத்தை தயார் செய்து வைத்துள்ளனர். அந்த வாத்தத்தைப் பற்றி பார்ப்போம்.

கிருத்தவர்களின் வாதம்:
உலகில் தோன்றிய முதல் மதம் கிருத்தவம் தான். இஸ்லாமியர்கள் சொல்வதைப்போல இஸ்லாம் முதலில் தோன்றிய மார்க்கமல்ல. ஆப்ரஹாம் (இப்ராஹீம் (அலை)) என்ற தீர்க்கதரிசியின் ஒரு சந்ததியான இஸ்மவேல் (இஸ்மாயில் (அலை)) என்பவர் மூலமாகத்தான் இஸ்லாம் என்ற மார்க்கமே உருவானது. அவருடைய சந்ததிகள் தான் இஸ்லாமியர்கள். அதற்கு முன்னாள் வாழ்ந்த ஏனைய தீர்க்கதரிசிகள் கிருத்துவத்தை தான் போதித்தார்கள். இதுதான் இவர்களின் வாதம். இந்த வாதம் சில கிருத்துவர்களுக்கே தெரியாமலும் கூட இருக்கலாம். ஆழமாக தோண்டும்போது வெடிக்கும் நீர்வீழ்ச்சிகள் போன்றதுதான் இவைகள்.

பதில்:
உண்மையில் இவர்கள் கூறுவது போன்று தான் இஸ்லாம் உருவானதா என்றால், இப்படி அவர்கள் கூறுவதற்கு எந்த வகையான சான்றுகளும் அவர்களிடம் இல்லை என்பதே உண்மை. இஸ்மாயில் (அலை) அவர்களுடைய சந்ததியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த மார்க்கம் அன்றைக்குத்தான் ஆரம்பமாகிறது என்பது தவறான புகுத்தல் ஆகும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கனவே இருந்த சத்திய கொள்கையை மீட்டு நினைவூட்டவே வந்தார்களே அன்றி, புதுமையான கொள்கையாக இஸ்லாத்தை கூற வரவில்லை. அதற்கு மிகப்பெரிய சான்று நபிகள் நாயகத்தின் தந்தை.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்த காலகட்டம் அவர்களது 40 –வது வயதாகும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான்.
நூல் : புகாரி 4685.

நபிகளார் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே நபியின் தந்தை இறந்து விட்டார். இதை நாம் கூறுவதற்கு காரணம், நபியின் தந்தை பெயர் “அப்துல்லாஹ்”!. அப்துல்லாஹ் என்ற அரபிப் பெயருக்கு அல்லாஹ்வின் அடிமை என்று அர்த்தம். நன்றாக சிந்தித்து பாருங்கள்! நபியின் பிறப்பிற்கு முன்னரே இறந்துவிட்ட அவரது தந்தையின் பெயர் அல்லாஹ்வின் அடிமை என்று உள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றியும், அல்லாஹ்வைப் பற்றியும் அறிமுகம் செய்வதற்கு முன்னரே, அந்த சமூக மக்கள் அல்லாஹ்வை நம்பித்தான் வாழ்ந்துள்ளார்கள் என்று தெளிவாக விளங்குகிறது.

என்றாலும் அந்த சமூகம் ஏராளமான வழிகேடுகளிலும் மானக்கேடான விஷயங்களிலும் தொடராக ஈடுபட்ட காரணத்தினால் தான், அந்த சமூகத்தை மீண்டும் சீர்படுத்த நபிகள் நாயகம் இறைவனால் தூதராக தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் வரட்டு வாதம் வாயடைத்துப் போக இதுவும் ஒரு முக்கியமான சான்றாகும்.

மேலும், கிருத்தவர்கள் அதிகம் கண்டுகொள்ளாத பழைய ஏற்பாடு நெடிகிழும் நாம் தேடிப்பார்த்தால், அதில் கூறப்படுகின்ற அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே இறைவனான கர்த்தரையே வணங்க வேண்டும், அவருக்கு உருவங்களை சமைக்க கூடாது, அவருக்கு இணையாக வானிலோ, பூமியிலோ, நீரிலோ எதையும் ஒப்பிடக் கூடாது என்றே மக்களுக்கு எத்தி வைத்துள்ளனர் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். திரித்துவக் கொள்கையோ, அல்லது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பலவகை வேறுபாடுகள் கொண்ட கிருத்துவக் கொள்கையோ பழைய ஏற்பாட்டில் கூறப்படவில்லை. இவற்றை அடித்து நொறுக்கும் ஓரிறைக் கொள்கையே கூறப்பட்டுள்ளது. இதே கொள்கையைத்தான் இயேசுவாகிய ஈஷா (அலை) அவர்களும் சொன்னார்கள். அவர்களைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னார்கள்.

ஆனால் கிருத்துவம் என்ற கொள்கைதான் இயேசுவுக்கு பின்னால், இயேசுவை அடையாளப்படுத்தி பவுல் என்ற நபரால் உருவாக்கப்பட்ட மதம் ஆகும். இந்த மதத்திற்கும் இயேசுவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை நாம் ஏதோ இவர்களைப் போன்று சான்றுகள் இல்லாமல் முன்வைக்கவில்லை.  இவர்கள் எதை வேதமென்று நம்பியுள்ளார்களோ அதிலிருந்தே சான்றுகளை சமர்ப்பிக்கிறோம்.

இயேசுவின் கொள்கைக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் எதிரியாக இருந்து கொண்டு அவர்களைத் துன்புறுத்திய பவுல் என்பவர், பின்னாளில் தான் மனம் திரும்பியதாகவும் தனக்கு கடவுளிடமிருந்து செய்தி வந்ததாகவும் கூறி அதனடிப்படையில் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர்.  (அப்போஸ்தலர்  9: 1-9). 

கடவுளிடமிருந்து செய்தி வந்தது என்பதும் பவுல் தன்னைப் பற்றித் தரும் சுய அறிக்கை மட்டுமே! அவரது பிரச்சாரங்கள் நியாயப் பிரமாணங்களை மறுக்கும் விதமாகவும் இயேசுவின் நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது!
கடவுளுக்காகத் தான் பொய் சொல்வதாகவும்,  தூய ஆவியால் அவர் தூண்டப்படுகிறார் என்பதற்கும் அவரது மனச்சான்று மட்டுமே போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்!    (உரோமையர் 3:7,  9:1).  

பவுல் உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது! அது பின்னாளில் கிறிஸ்தவம் என்றும் அதைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதே உண்மை!
இயேசுவின் பெயராகிய கிறிஸ்து என்ற வார்த்தையுடன் சேர்த்து  பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே கிறிஸ்தவம் என்பதை பைபிளின் புதிய ஏற்பாடே ஒப்புக்கொள்கிறது!

அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
(திருத்தூதர் பணிகள் 11 : 26).

இப்போது நமக்கு விளங்கும் எது ஆதியில் தோன்றிய மார்க்கம், எது பாதியில் புகுத்தப்பட்ட மதம் என்று.

மேலும் இஸ்மவேலிளிருந்து பிரிந்ததுதான் இஸ்லாம் என்ற இவர்களின் வாதத்தை பைபிளே உடைக்கிறது பாருங்கள்!

யோவான் 14 அதிகாரம்
16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

17.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.


26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். 

இந்த வசனங்கள் கூறும் அந்த தேற்றவாளன் யார்???

இயேசு சொன்ன ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு போதித்து, இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட, நேசிக்கப்பட்ட ஒரு இறைத்தூதர் என்பதை அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவ்வாறு நம்பாதவர் முஸ்லிமாக முடியாது, ஒரே இறைவனாகிய கர்த்தரை நம்பிக்கை கொண்டவராக முடியாது என்று உலகிற்கு போதனை செய்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். அவர் தான் இயேசு சொன்ன அந்த தேற்றவாளன் என்று நாம் சொல்கிறோம். இதற்கு இன்னும் கூடுதலான தகவலையும் தருகிறோம்.

இந்த வசனங்களில் இடம்பெறும் தேற்றவாளன் என்ற சொல் கிரேக்க மொழியில்  "Peryklytos"  பெரிக்லிடோஸ் என்று இடம்பெறுகிறது. தமிழ் மொழிப்பெயர்ப்பு மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பைபிளைக் காட்டிலும் கிரேக்க மொழியில் உள்ள பைபிள் தான் முதன்மைப் படுத்தப்படும் என்பது கிருத்துவர்களுக்கு தெரியும். காரணம் அதுதான் மூல மொழியிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டதாக கிருத்துவர்களால் கூறப்படும்.

கிரேக்க மொழி பைபிளில் இடம்பெறும் "Peryklytos"  பெரிக்லிடோஸ் என்ற வார்த்தைக்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு கொடுத்தால் "Admirable one"  (புகழுக்குரியவர்) என்ற அர்த்தம் வரும். 

அதே "Peryklytos"  என்ற வார்த்தையை அரபியில் மொழிப்பெயர்த்தால் அஹ்மது என்ற சொல் வரும். இதற்கும் அதே அர்த்தம்தான், அதுமட்டுமல்லாமல் இது நபிகள் நாயகத்தின் மற்றுமொரு பெயரும் கூட!!!

அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் இயேசுவாகிய ஈஷா (அலை) கூறியதாக கூறுகிறான்:

"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர்.
திருக்குர்ஆன் (61:6).

ஆகவே இயேசுவால் முன்னறிப்பு செய்யப்பட்ட அந்த தேற்றவாளன் அஹ்மது எனப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்பது மிகவும் உறுதியாகிறது. இயேசு முன்னறிவிப்பு செய்த தேற்றவாளன் இயேசு எத்திவைத்த மார்க்கத்தையே மக்களுக்கு போதிப்பார். அதற்கு மாற்றமாக ஒருக்காலும் போதிக்க மாட்டார்.

காரணம், இயேசுவே கூறுகிறார், நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்....

அப்படியென்றால், நபிகள் நாயகம் போதித்த மார்க்கம் இஸ்லாம். இயேசு போதித்த மார்க்கமும் இஸ்லாம் தான் என்பது விளங்குகிறதா????

கிருத்தவம் என்பது அனைத்து தீர்க்க தரிசிகளும் போதித்த மார்க்கமான இஸ்லாமிய கொள்கைக்கு எதிரியான பவுலால் உண்டாக்கப்பட்ட புதிய கொள்கை, அதற்கும் இயேசுவுக்கும் சம்மந்தமில்லை என்று விளங்குகிறதா???

இதற்குமேல் என்ன சொல்ல என் அன்பு பாமர கிருத்துவ நண்பர்களே?????

சிந்தித்து தெளிவு பெறுங்கள்....! நேரிய பாதையை நோக்கி வாருங்கள்....!