தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, February 25, 2015

தொழுகை சட்டம் தொடர் - 2




நெஞ்சின் மீது கை வைத்தல்
கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன்' என்று ஹுல்புத்தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதை என்று சொல்லும் போது, வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: அஹ்மத் 20961
தொழும் போது மக்கள் தம் வலக்கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரீ 740
நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது
முன் கை, இடது மணிக்கட்டு, இடது குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: நஸயீ 879
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது... தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 624
கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தொப்புளுக்குக் கீழே கையை வைப்பது நபிவழி என்று அலீ (ரலி) அறிவிப்பதாக அபூதாவூத் (645) உள்ளிட்ட சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து அறிவிப்புக்களும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்கூஃபி என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகின்றன. இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், புகாரீ, அபூஸுர்ஆ, அபூஹாத்தம், அபூதாவூத் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் சிலர் நெஞ்சின் இடது புறம் கைகளை வைக்கிறார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

No comments:

Post a Comment