தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, December 8, 2014

தனிமை-ஓர் சோதனை!



எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகில் தம்மை ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு பலவிதமான சோதனைகளைத் தருகிறான்.
உயிராலும் பொருளாலும் சமூகத்தாலும் இன்னபிறவற்றாலும் இறைவனின் சோதனைகள் நம்மை சூழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இது மட்டுமல்லாமல் அல்லாஹ் மற்றுமொரு முக்கியமான,
பலரும் தோல்வியுற்று போய்விடும் ஒரு வகையான சோதனையையும் முஃமின்களுக்கு திருமறையின் வாயிலாக அறுவுறுத்துகிறான்.

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
திருமறைக் குர்ஆன் 67:12.

அல்லாஹ்வை அனைத்துத் தருணங்களிலும் அஞ்ச வேண்டும் என்றிருந்தாலும்
அல்லாஹ் தனிமையில் அஞ்சுவதை மிகைப்படுத்திக் கூறுவதிலிருந்து,
இதுவும் இறைவனின் சோதனைகளில் மிக முக்கியமான ஒன்று என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இறைவனின் அனைத்து வகையான சோதனைகளிலும் பெரும்பாலும் தோற்றுவிடும் மனிதர்கள்
இந்தச் சோதனையில் உறுதியாகவே தோற்றுக் கொண்டுத்தான் இருக்கிறார்கள் என்று நம்மால் உணர முடிகிறது.
தனிமையை அல்லாஹ் எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று சொல்கிறானோ
அந்த நிலை நம் சமூகத்திடம் பெரும்பாலும் இருப்பதில்லை.
அசிங்கங்களையும் ஆபாசங்களையும் கேவலங்களையும் செய்வதற்கே அதிகமான மனிதர்கள்
தனிமையைப் பயன்படுத்துகிறார்கள்.
வெளிப்படையாக சிலக் கேவலங்களை செய்ய வெட்கப்படுபவர்கள்,
விரைந்து தனிமையை எதிர்பார்க்கிறார்கள்
அந்தக் கேவலத்தை அரங்கேற்றுவதற்காக!
ஆபாசக் காட்சிகளை பிறருக்கு முன்னால் பார்க்க முகம் சுலிப்பவர்கள்,
தனிமையை அதற்கு சாதகமாகப் பயன்படுத்தி விடுகிறார்கள்.
அன்னியப் பெண்களோடு நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வெட்கப்படுபவர்கள்,
தனிமையில் தொலைபேசி மூலமும் இணையதளம் மூலமும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
இவ்வாறு எத்தனையோ வகையான கேவலங்களையும், பாவங்களையும் வெளிப்படையாகச் செய்ய பயப்படுபவர்கள்
தனிமையை அதற்காகப் பயன்படுத்தி விடுகிறார்கள்.
உள்ளம் அதிகமாக தனிமையால் ஏற்படும் இன்பங்களின்பால் தூண்டப்படுகிறது.
இறைவன் இந்த உலகத்தில் விதித்த அனைத்து சோதனைகளும்
இன்பமாகக் காட்டப்படும் என்பது இறைவனின் நியதியே.
அந்த இன்பங்களுக்கு எதிராக உள்ளத்தோடு போர் தொடுத்து
அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் இறைவனின் எதிர்பார்ப்பு.
அவ்வாறு நடப்பவர்களுக்குத்தான் இறைவன் மகத்தான கூலி கொடுப்பதாகக் கூறுகிறான்.
பொருளாதாரம் எப்படி ஒரு சோதனையோ,
அதேபோல தனிமை என்பதும் இறைவனின் சோதனை என்பதை முஃமின்களில் உணர வேண்டும்.
பொருளாதாரம் எப்படி பல தேவையற்ற, மார்க்கம் தடுத்த இன்பங்களை நமக்குள் புகுத்த முயல்கிறதோ
அதேபோல
தனிமை என்பதும் வெளிப்படையாகச் செய்ய கூச்சப்படும் மானக்கேடானக் காரியங்களையும் கூட நமக்குள் புகுத்தி விடுகிறது என்பதை நாம் விளங்க வேண்டும்.
ஒரு முஃமின் மற்ற சோதனைகளை வெல்வதற்காக வாழ்வில் போராடுவதைப் போன்று,
தனிமை என்ற சோதனையில் தவறு செய்வதைத் தவிர்த்து இறைவனை அஞ்சுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட சிறந்தவர்களாக வாழ்வில் மாற்றம் பெற்று,
மறுமையில் இறைவனின் மகத்தான கூலியைப் பெற்றுக் கொள்ளவோமாக!
இறைவன் உதவுவானாக!

No comments:

Post a Comment