Labels
- அழைப்புப்பணி (3)
- ஆய்வுகள் (20)
- ஆன்ராயடுக்கான இஸ்லாமிய மென்பொருள்கள் (13)
- இறைவசன ஒப்பீடுகள் (3)
- இறைவசனம் & ஹதீஸ் படங்கள் (15)
- கட்டூரைகள் (42)
- கேள்வி & பதில் (4)
- துஆக்கள் (4)
- பயனுள்ள தகவல்கள் (30)
- பயான் அறிவிப்புகள் (2)
- பயான் குறிப்புகள் (4)
- பலவீனமான செய்திகள் (14)
- பிற மதங்கள் (5)
- வீடியோ (62)
தினம் ஒரு நபிமொழி
Wednesday, March 7, 2018
Islamic_Whats_App_Status_Series_24 (Pray_For_Syria)
Tuesday, March 6, 2018
அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் அழகிய திருநாமங்கள்)
இறைவனின் திருநாமம் கொண்டு துவங்குகிறேன்.....!
இறைவன் தமது திருநாமங்களாக அவனது வேதத்தில் பயன்படுத்தியிருக்கும் அஸ்மாவுல்
ஹுஸ்னா (அழகிய திருநாமங்கள்) என்று அழைக்கப்படும் பெயர்கள் பற்றிய தகவல்களை
தொகுப்பாக தொடர்ந்து வழங்கலாம் என்ற முயற்சியை துவங்கி உள்ளேன். எனது நோக்கத்தை
வல்ல நாயன் அழகிய முறையில் நிறைவேற்றித்தரப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
இறைவனை பெரும்பகுதி நாம் அல்லாஹ் என்ற பெயர்கூறியே அழைத்து வருகிறோம். இதேபோல
இறைவனது அழகிய குணாதீசியங்களை பிரதிபலிக்கும் பெயர்களும் இறைவனுக்கு உண்டு. இறைவனது ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான குணங்களை
வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவை அனைத்தையும் ஒருவர் பொருளுணர்ந்து
புரிந்து கொள்வாராக இருந்தால் நிச்சயமாக அவரது வாழ்வில் இறைவனைப்பற்றிய தாக்கம்
அதிகரிக்கும். அதற்கேற்ப தமது வாழ்வில் சிறந்த மாறுதல்களும் உண்டாகும் (இறைவன்
நாடினால்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு
ஒன்று குறைவான பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
அறிவிப்பவர்
: அபூஹூரைரா (ரலி), நூல்: புஹாரி : 6410.
இறைவனது
தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் பொருளுணர்ந்து நம்பிக்கை கொண்டு மனனமிட்டவருக்கு
இறைவன் சுவனத்தை தருவதாக வாக்களிக்கிறான் என்றால் பலனில்லாத ஒன்றுக்கு நிச்சயமாக
அல்லாஹ் இத்தகைய நற்பாக்கியத்தை தர மாட்டான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாடசாலை மாணவனை போன்ற மனனமிடல் இல்லாமல் உளப்பூர்வமாக இறைவனது பண்புகளை புரிந்து
உணர்ந்து மனனமிடுவோரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு
குறிப்பிடுகிறார்கள். இது முதலாவது அம்சம்.
இறைவன்
கற்றுக்கொடுத்த இத்தகைய பெயர்களைக் கொண்டு அடியார்கள் தம்மிடம் பிரார்த்தனை செய்வதை
அல்லாஹ் விரும்புகிறான்.
அல்லாஹ்வுக்கு
அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள். அவனது
பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக
அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். திருக்குர்ஆன் (7:180)
சில
சந்தர்பங்களில் இறைவனது ஏனைய பெயர்கள் கூறி அவனிடம் பிரார்த்தனை செய்வதென்பது மிகவும்
ஏதுவானதாகவும் மன அமைதியைப் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். இது எவ்வாறு
என்பதனை இறைவனது பெயர்களை விவரங்களோடு நாம் அறிய முற்படும்பொழுது இலகுவாக
விளங்கிக்கொள்ள இயலும் இன்ஷா அல்லாஹ்...!
இறைவனது பெயர்களை
பயன்படுத்தி நாம் இறைவனை அழைத்துப் பிரார்த்தனை செய்வதை இறைவன் விரும்புவதைப்போல, இறைவனால்
அறிவித்துத் தரப்படாத பெயர்களை நாமாக உண்டாக்கிக்கொண்டு இதுவும் இறைவனது பெயர்தான்
என திரித்துக்கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள
வேண்டும். அவ்வாறு செய்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் அதே வசனத்தின்
வாயிலாக சொல்கிறான்.
இன்றைக்கு சில
கூட்டம் இறைவனது தண்டனைக்கு உரிய இதே செயல்பாட்டினை மிகச்சாதாரணமாக செய்து
வருவதைப் பார்க்க முடிகிறது. இறைவனது பெயர்களை வகை வகையாக திரித்து பிரித்து
திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் இறைவனது கோபத்தை தட்டுகின்றனர். இது தவறான
வழிமுறை. எது அனுமதிக்கப்பட்டதோ அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனைய
செயல்களில் உள்ள அதிகப்பிரசங்கித்தனம் மார்க்கத்திலும் இணைக்கப்ப்படுமாக இருந்தால்
செல்லும் இடம் நரமாகிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். இவற்றையும் நாம்
கவணத்தில் கொள்ள வேண்டும்.
துவக்க உரைக்கான
விளக்கமாக இந்த சிறிய விளக்க உரையை அமைத்து, எழுத்துக்களை நீட்டித்து விடாமல்
இயன்றளவு சுருக்கமான விளக்கங்களை இறைவன் உள்ளத்தில் எழுப்பித்தர பிரார்த்தனை செய்து முடிக்கிறேன்.
எந்தவொரு
நன்மையையும் நாம் இழிவாக கருதிவிடக் கூடாது. அனைத்து நன்மைகளிலும் நாம் முன்னின்று செயல்படுவதையே விரும்ப வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அத்தகைய உணர்வுகளை நம்
அனைவருக்கும் தந்தருள்பாளிப்பானாக.....
(அடுத்ததடுத்த
பதிவுகள் வாயிலாக இறைவனது பெயர்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம் இன்ஷா
அல்லாஹ்....)
Monday, March 5, 2018
அளவுகடந்த புகழ்ச்சி அழிவுப்பாதைக்கு வித்திடும்
தம்மோடு வாழும் சக தோழர்களை புகழ்ந்து பேசியே ஆக வேண்டும் எனில் அதற்கென்று
நபியவர்கள் அழகிய வழிகாட்டலை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். புகழ் வல்ல
இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அடிப்படை. என்றாலும் இங்கு மனிதர்கள்
சார்ந்த விஷயத்தில் கூட புகழ் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதற்கான காரணம்
தமிழில் இதனை தெளிவுபடுத்த வேறு வார்த்தை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
புரிந்து கொள்வதற்காகவே சக மனிதர்களை புகழ்தல் என்ற வார்த்தை பிரயோகம்
பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் நம் சிந்தனையில்
"பிறரைப்பற்றிய நல்லவிதமான பேச்சுக்கள்" என்று புரிந்து கொண்டால்
இலகுவாக இருக்கும்.
நபி
(ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து
பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின்
கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே"
என்று பலமுறை கூறினார்கள்.
பிறகு, "உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்று கூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 5727.
மேற்கண்ட இந்த செய்தியில் நபிகளார் (ஸல்) அவர்கள் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி
போதனை செய்துள்ளார்கள்.
முதலாவது அம்சம், தம்மோடு வாழும் சக மனிதர்களை எல்லை தாண்டி புகழ்ந்து
பேசுவதால் நஷ்டம் இரு தரப்பினருக்கும் தான் என்பதை கூறுகிறார்கள்.
புகழ்ந்தவரை நோக்கி உமக்கு நாசம்தான் என்றும் புகழப்பட்டவரது கழுத்தை நீ
துண்டித்துவிட்டாய் என்றும் கூறுகிறார்கள். இந்த வாசகத்தின் மூலம் புகழ்ச்சியினால்
உண்டாகும் பாதிப்புக்கள் இரு தரப்பினருக்குமே தான் என்பதை மிகத்தெளிவாக
விளங்கிக்கொள்ள முடியும். ஆகவே தம்மை ஒருவர் புகழ்வதில் எல்லை கடக்கிறார் எனில்
கண்டும் காணாது நாம் இருந்து விடக்கூடாது. அதனுடைய பாதிப்பு நம்மையும் நாசத்தில் தள்ளிவிடும் என உணர்ந்துகொண்டு இதுபோன்று
புகழ்பவர்களை இயன்றளவு வாயடைத்து இருக்கச் செய்துவிட முயற்ச்சிக்க வேண்டும். அதுவே
நமக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தரும்.
இரண்டாவது அம்சம், தம்மோடு வாழும் நண்பரது அழகிய செயல்பாடுகளை பார்த்துவிட்டு
புகழ்ந்தே ஆக வேண்டும் என்று உள்ளம் சொல்கிற நிலை இருந்தால் "நான் இன்ன
மனிதரைப்பற்றி இவ்வாறு நல்ல விதமாய் எண்ணுகிறேன்", என்றாலும் அவரது
செயல்பாடுகள் எத்தகையது என்பதை அல்லாஹ் ஒருவனே மிகத்தெளிவாக அறிந்தவன். நான் அதனை
அறிய மாட்டேன்.
இறைவனது விசாரணையில் அவர்குறித்து நான் பேசிய வாசகங்கள் தவறானவையாகக்கூட
மாறிப்போகலாம். காரணம் நான் வெளிப்படையாக அவரைப்பார்த்து புகழ்ந்து பேசும்
செயல்பாடுகள் அவரது உள்ளத்தில் இஃக்லாஸ் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு
இருக்குமேயானால் நிச்சயமாக அவை இறைவனால் அழிக்கப்பட்டுவிடும் என்ற
அடிப்படையில்தான் அவரது புகழ் வார்த்தைகள்கூட அமைந்திருக்க வேண்டும் என்பதே
நபியின் போதனை.
மூன்றாவது அம்சம், நாம் இவ்வாறெல்லாம் பிறரைப்பற்றி இஸ்லாம் கூறும் எல்லைகளோடு புகழும்பொழுது கூட, அதாவது இன்ன மனிதரைப்பற்றி நான் இவ்வாறு எண்ணுகிறேன் என்று
சொல்லும் பொழுதுகூட நாம் சொல்கின்ற அவரது செயல்பாடுகள் அவரிடம் இருந்தால் மட்டுமே
சொல்லப்பட வேண்டும். அவரிடம் இல்லாத ஒன்றை இணைத்து நாம் புகழ்ந்து விடக் கூடாது.
அதாவது இவ்வாறு எண்ணுகிறேன் என்று சொல்லும் சாதாரண எண்ணுதலில் கூட அவரிடம் இல்லாத
ஒரு செயலை இணைத்து இவ்வாறு எண்ணுகிறேன் என்று நாம் சொல்லக்கூடாது என்றும் நபிகளார்
(ஸல்) அவர்கள் தடுக்கிறார்கள்.
இத்தனை வரம்புகளையும் பேணித்தான் நாம் நம்மோடு வாழும் சக மனிதர்களை புகழ
வேண்டும். இவைகளை ஒரு நல்ல சிந்தனையுள்ள முஸ்லிம் சிந்திப்பாரெனில் கண்டிப்பாக
நாம் ஏன் பிறரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இறைவனிடம் மாட்டிக்கொள்ள வேண்டும்
என்றே ஒதுங்குவார்.
மேலே சொல்லப்பட்ட வரம்புகள் பேணப்படும் வகையில் பிறரது நற்செயல்களைப் பற்றி
பேசுதல் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இறைவனை புகழ்கின்ற எல்லையை தொட்டுவிடாத
அளவிற்கு இதனுள் நபியவர்களால் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இவைகளை பேண இயலாத
நபர்கள் வாய் மூடி இருந்துவிட்டு போவதே சிறந்தது ஆகும்.
எல்லைக்கடக்கும்
பட்சத்தில் சிக்குண்டு தவிப்பவர்கள் நாமும், நம் நேசத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மால்
புகழப்பட்ட நம் தோழர்களும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (உலக மோகத்திற்காக
புகழும் அரசியல்வாதிகள் போன்றோரை நாம் இங்கு குறிப்பிடவில்லை)
இறைவன் விதித்த வரம்புகளை பேணி நடக்கும் நற்பாக்கியத்தை வல்ல இறைவன் நம்
அனைவருக்கும் தந்தருல்பாளிப்பானாக....!
Islamic_Whats_App_Status_Series_23 (Pray_For_Syria)
Sunday, March 4, 2018
முஃமினது வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களும் நன்மையானவையே
ஒரு இறைவிசுவாசியை பொருத்தவரை ஏனைய நம்பிக்கை கொண்ட மக்களை போன்று சோதனைகளை
ஒருபோதும் அணுகக்கூடாது. இறைவன் தம்மை நம்பிய மக்களுக்கு சோதனை இல்லாமல் சுவனம்
தரப்போவதில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை.
இதனை ஒரு இறை நம்பிக்கையாளன் தீர்க்கமாக புரிந்து இருந்தால் எந்தவொரு
சோதனையும் நிச்சயமாக அவருக்கு சாதனையாக மாறிப்போகும். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சரியத்தோடு ஒரு செய்தியை மக்களுக்கு
அறிவித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான்
வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே
அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து
கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக
அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக
அமைந்துவிடுகிறது.
அறிவிப்பவர் : சுஹைப் (ரலி), நூல் : ஸஹீஹ்
முஸ்லிம் 5726.
ஒரு முஃமினுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும்
நன்மையாகிறது. துன்பங்களும் நன்மையாகவே அமைந்து விடுகிறது. மகிழ்ச்சி நன்மையை
பெற்றுத்தருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் பலரது உள்ளம் சோதனைகளை நன்மையாக
எடுத்துக்கொள்வதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொன்னார்கள்,
சோதனைகளையும் நன்மைகளாக பொருந்திக்கொள்ளும் உள்ளம் முஃமினுக்கு மட்டுமே
காணப்படும். அது அல்லாத நபர்களால் இவற்றை அடைந்து கொள்ள இயலாது. ஆகவே நாம்
எந்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் ஒருகணம் சிந்தனை
செய்வோம்.
சோதனைகள் கூட ஒரு முஃமினுக்கு நன்மை பயக்கக்கூடியதாக
எவ்வாறு அமைகிறது??? இதற்கான விளக்கத்தை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
ஓரளவு
அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும்,
பலன்களையும் சேதப்படுத்தியும்
நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும்,
அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி
பெற்றோர்.
திருக்குர்ஆன்
(2:155-157).
முஃமினது பண்பானது
இழப்புக்கள் ஏற்படும்பொழுது இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்று இறைவன் கூறுகிறான்.
இந்த உலகத்தில் நாம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு
கொடுத்தவை. அவற்றில் சிலவற்றை இறைவன் நம்மை சோதிப்பதற்காக எடுத்தும் கொள்கிறான்.
நாம் விரும்புகின்ற பல அம்சங்களை நம்மை நெருங்க விடாமல் ஒதுக்கியும் வைத்து விடுகிறான்.
ஒன்றை மட்டும்
நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் தோழர்களே! நம்மை படைத்த இறைவன்
இவ்வுலகத்தில் எவர்களைக் காட்டிலும் நம்மீது இரக்கமுள்ளவன் அன்பானவன். நமக்கு எது
தேவை, எவை நம்மைவிட்டு நீங்கினால் நமது பாதைகள் தெளிவாகும், எது நமக்கு சிறந்தது,
எது நமக்கு ஏற்புடையதல்ல என்பதனை நம்மைக்காட்டிலும் இறைவன் மிகத்தெளிவாக
அறிந்தவன்.
நாம் நேசித்த
ஒன்று நம்மை விட்டும் விலகிச் செல்கின்றதெனில் இது இறைவனது நாட்டப்படி
அமைந்துள்ளது, இதன் மூலம் இறைவன் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கக்கூடும், இதன் மூலம்
இறைவன் ஏதேனும் படிப்பினைத்தரக்கூடும், அல்லது இதைவிட சிறந்ததை இறைவன் தரக்கூடும்
என்று நமது உள்ளங்களை பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு பக்குவப்படுத்துவோரே
இறைநம்பிக்கையாளர்கள் என்று இறைவன் கூறுகிறான்.
இழப்பின்பொழுது
மனமுவந்து "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று கூற வேண்டும். நாமே ஒருநாள் இறைவனால் அழைக்கப்பட்டுவிடுவோம்
எனும்பொழுது நாம் நேசிக்கிற நாம் அனுபவிக்கிற இவைகளெல்லாம் எம்மாத்திரம்???!!!
என்ற உணர்வு நிச்சயமாக நம் உள்ளத்தை சாந்தப்படுத்தும்.
அதோடு மாத்திரம்
இறைவன் நிறுத்திக்கொள்ளாமல் இதுபோன்ற நேரங்களில் பொறுமையோடு சகித்து கொள்வோருக்கு
சுவனம் என்ற சிறந்த நற்செய்தியை அறிவிக்கிறான். மனமுவந்து "நாங்கள்
அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்ற வார்த்தைகளைக் கூறுவோர் தான் நேர்வழி பெற்றோர் என்றும்,
அவர்களுக்குத்தான் இறைவனின் அன்பும் அருளும் உண்டு என்றும் இறைவன் அறிவிக்கிறான்.
ஆக ஒரு முஃமின்
தனது வாழ்வில் அவர் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களுமே நன்மையானவை தான். அவைகள்
ஆழ்ந்த சோகங்களை தந்தாலும் இறைவனது அன்பையும் அருளையும் பெற்றுத்தரக்கூடியவை
என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. கவலைகளால் உள்ளங்கள் கனத்திருந்தாலும்
அவைகளை இயல்பு நிலைக்கு மாற்ற வல்ல நாயன் போதுமானவன். உள்ளங்களின் அதிபதி அவன்
தான். துக்கங்களை மகிழ்வாக்க அவனால் மட்டுமே இயலும். ஆகவே எந்தவொரு
சந்தர்ப்பத்திலும் நாம் அவனையே சார்ந்திருப்போமாக!!!
Wednesday, February 28, 2018
சிரிய தேச எம் சொந்தங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
ஒவ்வொரு கால சூழலிலும் ஏதாவதொரு மூலைகளில் இஸ்லாமிய உறவுகள் மதச்சாயம்
பூசப்பட்டு அழிக்கப்படும் நிகழ்வுகள் சதாவும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. தற்போதைய
சூழலில் கூட எம் சிரிய தேசத்து உறவுகள் அநியாயமான முறையில் கொன்றொழிக்கப்படும்
நிகழ்வுகளை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.
இரட்டை வேடமிடும் மீடியாக்கள் மூலமாக இதுபோன்ற அநியாயமான நிகழ்வுகள் உலகிற்கு
காட்டப்படாமல் மறைக்கப்பட்டாலும் இறைவன் அவற்றை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டு தான்
இருக்கிறான்.
ஒன்றும் அறியா பச்சிளம் சிறார்கள் கொடூர அணு ஆயுதங்களுக்கு இறையாக சிதரிக்கிடப்பதை
பார்க்கின்றபொழுது கற்பாறை உள்ளங்கள் கூட கனிந்து ஓடும் அளவிற்கு கவலையால் உள்ளம்
பாதிப்படைகிறது. இதுபோன்ற சூழலை ஒரு இறை விசுவாசி எவ்வாறு எடுத்துக்கொள்ள
வேண்டும்.
சிலரது பதிவுகளை பார்க்கும்பொழுது இறைவன் இவை அனைத்தையும் கண்டும் காணமல்
இருப்பது போன்றும் நம் மக்கள்தான் இறைவனுக்கு இவைகளை நினைப்பூட்டுவதைப் போன்றும்
அமைந்திருப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
முதல் அடிப்படையை இஸ்லாமிய சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு முஃமினை
பொறுத்தவரையில் தம் வாழ்வில் பல்வேறு வகையான சோதனைகளை சந்தித்துத்தான் இவ்வுலகில்
வாழ முடியும். இவை இறைவனது வழிமுறையால் விதியாக்கப்படவை ஆகும்.
சுகபோக வாழ்வோடுதான் நம் வாழ்க்கை நிறைவுபெற வேண்டும் என்று நாம் சிந்திப்போமாக
இருந்தால் ஒன்றோ தவறான சிந்தனை என்பதை உணர்ந்து அதற்கேற்ப நம் வாழ்வை
பக்குவப்படுத்த வேண்டும். அல்லது நம் வாழ்வு ஈமானியப்பாதைகளில் இருந்து தடம்புரள
வேண்டும். நமது உயிர் பிரிந்து செல்லும் வரை ஈமானுக்கும் நமக்கும் உண்டான சோதனை
போர்கள் தொடந்து கொண்டே தான் இருக்கும் என்பதை முதன்மை அடிப்படையாக
ஆழப்பதியவைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக இதுபோன்ற அநியாயமான நிகழ்வுகளின் பொழுதெல்லாம் கீழ்கண்ட இறைவனது
வார்த்தைகள் தான் நமது சிந்தனையின் உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
அநீதி இழைத்தோர் செய்து
கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி
நிற்கும் ஒரு நாளுக்காகவே1 அவர்களை அல்லாஹ்
தாமதப்படுத்தியிருக்கிறான்.
(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு
ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது.
அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.
மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
(அந்நாளில்) "எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக!
உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அநீதி
இழைத்தோர் கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள்
சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின்
குடியிருப்புகளில் நீங்களும் குடியிருந்தீர்கள். அவர்களை எவ்வாறு நடத்தினோம்
என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பல (முன்) உதாரணங்களையும் உங்களுக்கு
எடுத்துக் கூறினோம். (என்று அவர்களுக்குக் கூறப்படும்)
அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின்
சூழ்ச்சி மலைகளைப் புரட்டுவதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அல்லாஹ்விடமே
உள்ளது.
தனது தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை அல்லாஹ்
மீறுபவன் என்று நீர் எண்ணாதீர்! அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு
வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய
அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
அந்நாளில் குற்றவாளிகள்
சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருப்பதை நீர் காண்பீர்!
அவர்களின் சட்டைகள் தாரினால் தயாரிக்கப்பட்டவை.
அவர்களின் முகங்களை நெருப்பு மூடிக் கொள்ளும்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பட்டதற்கேற்ப
அல்லாஹ் கூலி கொடுப்பான். அல்லாஹ் விரைவாக விசாரிப்பவன்.
இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன்
ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர்
சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) திருக்குர்ஆன் (14: 42 - 52)
இறைவனது வார்த்தைகளோ வாக்குறுதிகளோ பொய்யானவை அல்ல. அதை
ஏற்றுக்கொண்ட ஒரு முஃமினுடைய நாவோ உள்ளமோ இதற்கு மாற்றமாக ஒருபோதும் செயல்படாது
சிந்திக்காது.
அநீதிகள் எங்கு நிகழ்ந்தாலும் அவற்றை இறைவன் கண்காணித்துக்
கொண்டுதான் இருக்கிறான். அநீதம் இழைக்கப்பட்டோரின் உள்ளங்கள் குளிர்ந்துபோகும்
அளவிற்கு அநீதம் இழைத்த குற்றவாளிகளை இறைவன் தண்டிக்கவும் செய்வான். ஆனால்
மனிதனின் அவசர சிந்தனைகளை இறைவன் கொண்டிருந்தால் என்றோ உலகம் அழிந்துபோய்
இருக்கும். அனைத்திலும் இறைவன் அவகாசம் எடுத்து செயல்படுத்தக்கூடியவன்.
இந்த அநீதங்கள் குறித்து அவைகள் நடந்தேறும் பொழுது என்ன
உணர்வலைகள் உள்ளத்தை அடைந்திருந்ததோ அதே உணர்வுகளோடு இறைவன் விசாரித்து நியாய
தீர்ப்பு வழங்கும் நாள் ஒன்று உள்ளது. அந்த நாளுக்காகவே தாம் இவற்றை எல்லாம்
தாமதப்படுத்துவதாக இறைவன் நமக்கு போதனை செய்கிறான். அந்த தீர்ப்புநாளை சந்திக்கும்
வரை நாமும் சில விஷயங்களில் பொறுமை காக்கவே வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் எமது இஸ்லாமிய உறவுகள் எத்தகைய சோதனைகளில்
சிக்கித் தவித்தாலும் அவர்களுக்காக நாம் ரப்பிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்
என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தம் சகோதர முஸ்லிமின் சோதனை நீங்குவதற்காக
நாம் கேட்கும் பிரார்த்தனை என்பது மிகச் சிறப்பான நன்மைகளை நமக்கு
பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். அந்தப் பிரார்த்தனை உளத்தூய்மையோடு அமைந்துவிடுமாக
இருந்தால் நிச்சயமாக இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்பதையும் நாம் நபியவர்கள்
கற்றுத்தந்த ஒரு பொன்மொழி மூலமாக விளங்கிக்கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் தமது சகோதர முஸ்லிமிற்காக தனிமையில்
அமர்ந்து பிரார்த்திக்கிறாரோ அவருக்காக ஒரு வானவர் "உமக்கும் அவ்வாறு
உண்டாகட்டுமாக" என்று பிரார்த்திக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம் 2732 (அரபு இலக்க எண்).
வானவர்களை பொறுத்தவரை இறைவனது அனுமதி இல்லாமல் எந்த ஒரு
வேலையையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்யவும் அவர்களால் இயலாது.
மேற்கண்ட ஹதீஸை கவணியுங்கள். நாம் பிறருக்காக தனிமையில் பிரார்த்தனை செய்யும்போது
வானவர் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றால் அந்த வானவர் இறைவனால் அனுப்பி
வைக்கப்படுகிறார் என்பதை முதல் பகுதியாக விளங்க வேண்டும்.
இரண்டாவது பகுதி, இறைவன் வானவர்களை அனுப்பி வைக்கிறான்
என்றால் நாம் பிறருக்காக கேட்கும் பிரார்த்தனை என்ற சமூக உணர்வை இறைவன் உயர்வாக
கருதுகிறான் என்பதாகும்.
மூன்றாவது பகுதி, இவ்வாறு பிரார்த்திப்போருக்கு அந்த வானவர்
உமக்கும் அதுபோன்று உண்டாவதாக என பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் அந்த
நபருக்கு உதவுவதற்காக உத்தரவாதம் கொடுத்துவிட்டான் என்பதாகும். ஏனெனில் ஒரு
வானவரின் பிரார்த்தனை என்பது இறைவனின் கட்டளை மூலம் வெளிப்படுவதாகும். இறைவன்
நிச்சயமாக இந்த செயல் உடையோருக்கு உதவப்போகிறான் என்பதனால்தான் தமது அடியார்களான
வானவர்களிடம் இந்த நபருக்காக இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கட்டளையிட்டு
அனுப்பி வைக்கிறான்.
இந்த சிறப்பான அம்சங்களை ஒரு இறைவிசுவாசி முறையாக
விளங்கிக்கொண்டால் பிறரின் சுமைகளை தமதாக எண்ணி அவருக்காக பிரார்த்தனை செய்வதை
ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். அவ்வாறு ஒரு இறைவிசுவாசி செயல்படுவதின்மூலம், நாம்
யாருக்காக பிரார்த்தனை செய்தோமோ அவரைப்போன்ற சோதனைகள் இறைவன் நாடி நாளை நமக்கு
ஏற்படும்போது, வானவர் நமக்காக கேட்ட பிரார்த்தனையின் மூலம் இறைவனது உதவி அப்போது
நமக்கு கிடைக்கும்.
இன்று சிரிய தேசத்து மக்கள் அனுபவிக்கும் சோதனை நாளை
நமக்கும் வரலாம். அந்த சந்தர்ப்பத்தில் இறைவனது உதவி நமக்கு மிக அவசியமான
ஒன்றாகும். ஆகவே அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய மறவாதீர்கள் அவை நமக்கும்
பலன்தரும் ஒன்றாகும்.
இச்சிறிய உபதேசத்தை கனத்த உள்ளத்தோடு முதலில்
தமக்குரியதாக்கி நிறைவு செய்கிறேன்....!
Subscribe to:
Posts (Atom)



