தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, September 19, 2019

அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்க்கையை தியாகம் செய்த ஜோடிகள்



உள்ளே சொல்லப்படுகின்ற தியாகம் விளங்காமல் மேம்போக்காக வாசிக்கப்படும் செய்திகளில் நாம் கீழே குறிப்பிட்டுள்ள ஹதீஸும் ஒன்று. வாருங்கள் இதன் மூலம் கிடைக்கும் பாடத்தை ஆராய்வோம்.

'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்'.
அறிவிப்பவர் : உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி), நூல் : புகாரீ 88.

நபிதோழர்களது வாழ்வைப் புரட்டும்பொழுது உடம்பெல்லாம் புல்லரித்துப் போகிறது. அவர்களது வாழ்வில் தான் எத்துனை எத்துனை தியாகங்கள். மேற்கண்ட செய்தியிலும் கூட ஒரு மிகப் பெரிய தியாகம் உள்ளடங்கி இருக்கிறது. பால்குடி சகோதரனை அல்லது பால்குடி சகோதரியை ஒரு முஸ்லிம் திருமணம் செய்யக்கூடாது என்கின்ற கட்டளையை உள்ளடக்கிய செய்திதான் இது. இந்த சட்டத்தை ஒரு தாய் திருமணமாகி வாழ்ந்து வருகின்ற தம்பதிகளிடம் போய் சொல்கிறார். அந்த இருவரும் பால்குடி சகோதர சகோதரிகளாவர். ஆனால் அந்த தகவல் அவர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சட்டம் கேட்கும்பொழுது இருவரும் பிரிந்து விட வேண்டும் என சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்ற கேள்வியை ஒரு நொடி உள்ளத்தில் எழுப்புங்கள்????

கணவன் மனைவி என்ற நேசப்போர்வைக்குள் இன்பமாக வாழ்ந்த உறவுகள். அல்லாஹ்வின் கட்டளைப்படி உடனே பிரிந்து விட வேண்டும். சட்டெனப் பிரிந்து போவதற்கும் மறந்து போவதற்கும் திருமண வாழ்க்கை என்பது விளையாட்டான ஒன்றல்ல. இது மிகப்பெரிய சோதனை. தாங்க முடியா பிரிவு, இழப்பு. என்றாலும் அல்லாஹ்வின் கட்டளை இதுதான் என்றால் எனது மனநிலையை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, பூரணமாக அவனது கட்டளைக்கு நான் செவி சாய்க்கிறேன் என்று அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தமது மனைவியை விவாகரத்திட்ட அந்த நபித்தோழரின் தியாகமும், அதற்கு பின் ஏற்படும் சோதனைகளைப் பற்றி துளியும் சிந்தனை செய்து கொண்டிருக்காமல், வரும் சோதனைகளை இறைவனுக்காக எதிர்கொள்வோம் என்று துணிவோடு அந்த விவாகரத்தை ஏற்ற அந்த சஹாபியப் பெண்ணின் தியாகமும் மிகவும் உன்னதமானது. அல்லாஹ்வின் கட்டளை என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்ய சஹாபாக்கள் முன்வந்தார்கள் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

அதே இறைவனையும் தூதரையும் ஏற்று அவர்கள் நம்பிய ஈமானிய நம்பிக்கைகளை உள்ளத்தால் ஏந்தி நிற்கும் நமது வாழ்விலும் அல்லாஹ்வின் கட்டளைகள் முறையாகப் பேணப்படுகிறதா என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதுபோன்ற வேறு ஏதாவதொரு சந்தர்ப்பம் இறைவன் சொன்னதற்கு மாற்றமாக நமது வாழ்வில் அமைந்து விடும்பொழுது, இறைவனுக்காக என்று நாம் நமது நஃப்ஸை கட்டுப்படுத்தி எதையேனும் தியாகம் செய்ய முனைந்திருக்கிறோமா??? முனைவோமா???

அல்லாஹ் அவனது திருமறையில் கூறுகிறான்:
யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம். யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.
திருக்குர்ஆன் (79:37-41).

நமது உள்ளம் இந்த உலகத்தின் பல்வேறு அம்சங்களை விரும்பலாம் ஆனால் நாம் விரும்பிய பாதைகளை எல்லாம் நோக்கி நடைபோட்டு விடக்கூடாது. ஒரு முஃமின் தமக்கென இறைவனால் வரையறுக்கப்பட்ட ஈமானியப் பாதைகளைத்தான் தேர்வு செய்ய வேண்டும். தமது உள்ளம் விரும்புகின்ற பல காரியங்களை இறைவன் தடை செய்திருப்பான். அத்தகைய தருணங்களை சந்திக்கும்போது நமது விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து விடாமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். அத்தகையோருக்குத்தான் சுவர்க்கம் உண்டு என்று இறைவன் மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிடுகிறான்.

இறைவனின் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு தமது குடும்ப வாழ்வைப் பிரித்து தியாகம் செய்த இந்த தம்பதிகளின் (சஹாபாக்களின்) வாழ்வில் நமக்கு சிறந்த படிப்பினையுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் நமது உள்ளங்களையும் சீர்படுத்தி அவனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவனுக்காக எதையும் இழக்கும் நல்லதொரு பக்குவத்தை நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக!

No comments:

Post a Comment