தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, September 4, 2019

இறைவனின் அருட்கொடைகளை முறையாகப் பயன்படுத்துவோம்



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்.
2. ஓய்வு.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி),
நூல் : ஸஹீஹுல் புகாரீ 6412.

இறைவன் நமக்கு வழங்கும் சிறந்த அருட்பாக்கியங்களில் ஒன்று தான் இந்த ஆரோக்கியமும் ஓய்வும் ஆகும். இறைவன் தான் நாடியவர்களுக்கு அதனை  அதிகப்படுத்தியோ குறைத்தோ வழங்கி தமது அடியார்களை சோதிப்பான். அது அவனது அதிகாரத்தில் உள்ள ஒன்று. ஆரோக்கியம் மற்றும் ஓய்வு ஆகிய இந்த இரு அருட்பாக்கியங்களும் எல்லோருக்கும் ஒரே விகிதாசாரத்தில் கிடைப்பதில்லை. அவைகள் யாருக்கெல்லாம் மிகைத்து கிடைத்து விட்டதோ அவர்கள் பெரும்பாலும் அதனை சரியாகப் பயன்படுத்துவதும் இல்லை.

இறைவன் நமக்கு தந்த அருட்கொடைகளுக்காக நாம் அவனுக்கு அதிகம் நன்றி செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக இறைவனுக்கு நன்றி செலுத்த, அவனைத் துதிக்க, அவனைத் தொழ, அவனது தூயப் பாதையில் உடல் உழைப்பு செய்ய, மேலும் ஏனைய எல்லா வணக்கங்களையும் செயல்படுத்த ஏதுவான சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்ற ஒரு அற்புதமான அருள்தான் மனிதனுக்கு கிடைக்கும் ஓய்வும் ஆரோக்கியமும் ஆகும். இது கிடைக்கப்பெற்ற ஒருவன் மேலே நாம் குறிப்பிட்ட இறைப்பாதைகளை மறந்து, உலகப் பொழுதுபோக்கிற்காக வீணான காரியங்களுக்காக அவைகளை முழுதுமாக செலவிட்டு விட்டால் அது அவனுக்கு மிகப்பெரிய நஷ்டமாகும்.

அதிக நேரம் ஓய்வும், எதையும் செய்ய முடியுமான அளவில் திடகாத்திரமான உடல் ஆரோக்கியமும் வழங்கப்பட்ட நபர்கள் அந்த ஓய்வு நேரங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் பயன்படுத்தி இறை நினைவிற்காக, இறை வணக்கத்திற்காக எவ்வளவு நேரங்களை செலவழிக்கிறோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

ஓய்வு நேரங்களை பல மணிநேர சினிமாவிலும், வீணான பொழுதுபோக்கிலும், எந்தப் பலனுமற்ற வீண் பேச்சுக்களிலும் கழிப்பதற்காகவோ மேலும் இளமையில் வழங்கப்பட்ட ஆரோக்கியத்தை முழுதுமாக வீணில் கழிப்பதற்காகவோ ஓய்வையும் ஆரோக்கியத்தையும் இறைவன் அருளாக வழங்கவில்லை என்பதை ஒரு முஃமின் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிடைத்த ஓய்வு நேரங்களை முழுவதுமாக இழந்துவிட்டு ஓய்வே கிடைக்காத ஒரு சூழ்நிலை நமக்கு அமையும்பொழுது அல்லது முதுமையின் காரணத்தால் அதிகமான ஓய்வு கிடைத்தும் அதிகபட்சமாக எந்த நல்ல காரியங்களும் செய்ய இயலாது போகும்பொழுது, இறை வணக்கங்களை அதிகம் செய்ய வேண்டுமே என்று ஆசைப்படுவதில் அர்த்தமில்லை.  அத்தகைய சூழலில் இழந்த ஆரோக்கியம் மீண்டும் கிடைக்கப்போவதுமில்லை. கடந்துபோன காலங்கள் மீண்டும் உதயமாகப் போவதுமில்லை.

ஆகவே இறைவன் வழங்கிய ஆரோக்கியம் மற்றும் ஓய்வு ஆகிய அருட்கொடைகளை நாம் இந்த உலக இன்பத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வீணடித்து விடாமல், இறைவனை சந்திக்கும் உயர்வான நாளில் நம்மை சுவனத்தை நோக்கி நகர்த்தும் ஒப்பற்ற நல்ல காரியங்களை அதிகம் அதிகமாக செய்வதற்காக இறைவனின் அருட்கொடைகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோமாக.... எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள்புரிவானாக....

No comments:

Post a Comment