தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, May 1, 2017

இறைவனது உதவி பெற உறுதியான எண்ணம் வேண்டும்!



தமிழகமெங்கும் காணப்படும் வரட்சியாலும் வீதிகளில் நடமாட முடியாத அளவிலான வெப்பத்தாக்கத்தாலும் ஆங்காங்கே நம் மக்கள் மழைத்தொழுகை நடத்தி வருவதை நாம் அறிவோம். நபி வழியில் தான் மழைத்தொழுகை அமைக்கப்பட வேண்டும் என்று தொழுகை நடத்தப்படுவதற்கு முன்னாள் அதன் சட்டங்கள் அனைத்தையும் சொல்லிக்கொடுக்கும் இமாம்கள் பெரும்பாலும் மழைத்தொழுகையில் பங்கேற்கும் மக்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதில்லை என்றே நான் கருதுகிறேன்.

தொழுகை சட்டத்தை அறிந்து வைத்திருப்பதை விட அந்த தொழுகையில் பங்கேற்கும் நபர்களின் எண்ணங்கள் சீர் படுத்தப்படுவதென்பது மிக அவசியமான ஒன்று ஆகும். காரணம் அதிகமான மக்கள் மழைத்தொழுகை என்ற அழைப்பை கேள்வி பட்டதும் ஏதோ ஒரு சடங்குக்காக அதில் பங்கேற்பது போன்று தான் கலந்து கொள்கிறார்கள். இந்த தொழுகையின் மூலம் மழைப்பொழியும் என்பது உறுதி இல்லை என்றாலும் ஒரு கடமைக்கு இதையும் கூடுதலாக நிறைவேற்றி பார்ப்போம் என்ற எண்ணத்தில் தான் கலந்து கொள்கிறார்கள். உண்மையில் இதுபோன்ற எண்ணத்தில் கூட்டப்படும் கூட்டத்தால் இறைவனது உதவி கிடைக்காமல் போவது தான் அதிகம்.

முதலில் நாம் ஏன் மழைத்தொழுகை என்ற பிரார்த்தனையை மேலிட நேரிடுகிறது என்பதை ஒரு முஸ்லிம் சிந்திக்க வேண்டும். மனித சமூகமே ஒன்று திரண்டு முயற்சித்தாலும் தாமாக ஏற்படுத்திக் கொள்ள முடியாத ஒரு அருள் தான் மழை என்பது. அந்த மழை சமீப காலமாக இல்லாத காரணத்தால் எவ்வளவு பெரிய இழப்புக்களை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடருமென்றால் உலகில் ஒவ்வொரு பகுதியாக பல அழிவுகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை பாதுகாக்க எந்த அரசாங்கத்தாலோ மேதையாலோ செல்வந்தனாலோ முடியவே முடியாது. இந்த நிலை நீடிக்காமல் நம்மை இதிலிருந்து பாதுகாக்க இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும். அந்த இறைவனிடம் உதவி தேடத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் இறைவன் மட்டும் உதவி செய்யாமல் விட்டு விடுவான் என்றால் நிச்சயமாக அழிவுகள் பலவற்றை நாம் தொடராக சந்திக்க வேண்டும் என்ற அச்ச உணர்வுகள் தான் நாம் மழைத்தொழுகை நடத்துவதற்கான பிரதான காரணம். ஆகவே இந்த அச்ச உணர்வுகளும், அல்லாஹ் நிச்சயமாக உதவி செய்தே தீருவான் என்ற உறுதியும் மழைத்தொழுகையில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் பலமாக ஆட்கொண்டிருக்க வேண்டும்.

இந்த தருணத்தை எளிய முறையில் விளங்கப்படுத்த திருமறையில் அல்லாஹ் கூறும் அழகிய சம்பவத்தை நினைவு படுத்துகிறேன்.

அல்லாஹ் கூறுகிறான்:

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
திருக்குர்ஆன் 21:87,88.

யூனுஸ் நபியவர்கள் இறைவனை கோபித்து கொண்டு சென்ற போது கடலில் ஒரு மிகப்பெரிய மீனுடைய வயிற்றில் சிக்கிய தருணத்தை அல்லாஹ் முஃமின்களுக்கு நினைவு படுத்துகிறான். 

ஆழமான கடல் அதில் வாழும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் ஒருவர் சிக்கினால் உண்மையில் அவருக்கு உதவி செய்ய எவராலும் முடியாது இறைவன் ஒருவனைத் தவிர. அந்த நிலை தொடருமென்றால் சில மணி நேரங்களில் அவர் இறந்துபோக வேண்டும் என்பது நியதி. ஆனால் யூனுஸ் நபியவர்கள் தமக்கு இறைவனைத்தவிர வேறு எவராலும் உதவ முடியாது என்பதை உணர்ந்து, எவராலும் செவியுற முடியாத ஒரு இடத்தில் இருந்து இறைவனை அழைக்கிறார். இறைவன் பதில் சொல்கிறான் நாம் அவரது அழைப்பை ஏற்று அவருக்கு உதவி செய்தோம் என்று!

அதுமட்டுமல்ல இறைவன் இந்த வசனத்தின் இறுதியில் சொல்கிறான், இவ்வாறு தான் நம்பிக்கை கொண்டோரை நாம் காப்பாற்றுவோம் என்று.

நம்பிக்கை கொண்ட ஒரு அடியான் தமக்கு யாராலும் உதவி செய்ய முடியாது என்ற ஒரு சூழலில் சிக்கி இருக்கின்ற பொழுது அவர் இறைவனது உதவிகளை கண் முன்னே காண வேண்டும் என்றால் யூனுஸ் நபியவர்கள் அந்த நேரத்தில் கொண்டிருந்த முக்கியமான நம்பிக்கை நமது உள்ளத்திலும் துளி அளவு மாற்றம் இல்லாமல் நிறைந்து காணப்பட வேண்டும்.

அதாவது இந்த உலகில் எவராலும் உதவ முடியாத ஒரு சூழலை நாம் அடைந்தாலும் எனது இறைவனால் இந்த சூழலிலும் உதவி செய்ய முடியும் என்ற சிந்தனை இருக்க வேண்டும். சிந்தனையோடு மட்டும் நின்று விடாமல் இறைவன் எனக்கு உதவி செய்தே தீருவான் என்ற எந்தவிதமான சந்தேகமும் இல்லாத கலப்பற்ற பிரார்த்தனை இறைவனை நோக்கி முன்வைக்கப்பட வேண்டும்.

இதைத்தான் யூனுஸ் நபியவர்கள் கையாண்டார்கள். இறைவனது உதவியை கண் முன்னே கண்டார்கள். இறைவன் யூனுஸ் நபிக்கு மாத்திரமல்ல இதுபோன்று அனைத்து முஃமீன்களுக்கும் உதவி செய்வதாக வாக்குறுதியும் அளிக்கிறான்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது......

மழைத்தொழுகைகள் பரவலாக நடத்தப்பட்டும் கூட ஏன் நமது ஊர்களில் மழை இல்லை?????

இறைவனது வாக்குறுதி பொய்யானதா????

அல்லது

நாம் தொழுத மழைத்தொழுகையிலும் நமது எண்ணத்திலும் பிழை உள்ளதா????

நிச்சயமாக இறைவனது வாக்குறுதி பொய்க்காது. அதை தேடும் வழிகளில் நாம் தான் குறைவுடையவர்களாக இருக்கிறோம் என்பதே உண்மை.

எனவே அன்பு இஸ்லாமிய சொந்தங்களே! மழைத்தொழுகை என்ற அழைப்பை கேட்டவுடன் சடங்குக்காக நாம் அதில் பங்கேற்று விடாமல் நாம் மேலே குறிப்பிட்ட உறுதியான நம்பிக்கைகளோடு அந்த தொழுகைகளில் கலந்து கொள்ளுங்கள்.

அழைப்பாளர்கள் மழைத்தொழுகை நடத்தப்படும் நாட்களுக்கு முன்னதாகவே இந்த சிந்தனைகளை ஒரு பயானாக ஜும்ஆ மேடைகளிலோ அல்லது உள்ளரங்கு நிகழ்ச்சிகள் வாயிலாகவோ மக்களுக்கு போதனை செய்து அவர்களது உள்ளங்களை பக்குவப்படுத்துங்கள்.

சீரிய சிந்தனையோடும் உறுதியான உள்ளத்தோடும் நாம் அணுகும் அனைத்திலும் இறைவனது உதவி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ் நமது பிழைகளை பொருந்தி நமக்கு உதவி செய்வானாக!

مشارق بن نينار علي 

No comments:

Post a Comment