தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, November 23, 2014

உயிரைக் கைப்பற்றும் வானவர் யார்???



بسم الله الرحمن الرحيم


மார்க்கத்தின் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான மூல ஆதாரங்களைக் கொண்டுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தனி மனிதன் தனக்கென்று வடிவமைத்துப் பேணுபவை எல்லாம் மார்க்கத்தின் கொள்கை என்று ஆக்கிவிட முடியாது. உதாரணமாக ஒரு முஸ்லீம் திருடுகிறான் என்பதற்காக திருட்டை இஸ்லாம் ஆதரிக்கிறது என்று கூற முடியாது, அப்படி கூறுவோரும் யாரும் கிடையாது. காரணம் திருட்டை அல்லாஹ் பெரும்பாவம் என்று திருமறையில் போதிக்கிறான். ஆகவே எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும் அவற்றை இஸ்லாத்தோடு ஒப்பிட வேண்டுமாயின், அவை அல்லாஹ்வினாலோ அல்லது அவனது தூதராலோ கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும். அவைதான் இஸ்லாமியக் கொள்கைகளாக இருக்க முடியும். இந்த அடிப்படையான விஷயத்தை முதலில் தெரிந்து கொள்வேம்!

இஸ்லாமிய சமூதாயத்தில் சிலர், ஒரு மனிதன் மரணிக்கும்போது அவனது உயிரைக் கைப்பற்ற ‘இஸ்ராயீல்’ என்ற வானவர் வருவார் என்றும் மேலும் அந்த ஒரே வானவர்தான் உலகில் பிறக்கும் அனைவரின் உயிரையும் கைப்பற்றக் கூடியவர் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது நாமாக கற்பனையில் உண்டாக்கிய நம்பிக்கைதானே தவிர அல்லாஹ்வோ அவனது தூதரோ இவ்வாறு நமக்கு காட்டித்தரவில்லை. மாறாக அல்லாஹ் வேறுவிதமாகத்தான் தனது திருமறையில் கூறுகிறான். அந்தத் தகவலை அறிவதற்கு முன் இது நம்பிக்கைத் தொடர்புடைய செய்தி என்பதால் அதைப் பற்றியும் நாம் சற்று விளங்கிக் கொள்ள வேண்டும். வானவர்களையும் அவர்களைப்பற்றி இறைவன் கூறிய செய்திகளையும் நம்பிக்கை கொள்வது ஈமான் என்ற அடிப்படைக் கொள்கையின் ஒரு பகுதி. ஈமான் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கும் ஏதாவதொரு நம்பிக்கையில் ஒருவன் மாற்றமானக் கருத்து கொண்டிருந்தால் அவன் முஃமின்(நம்பிக்கை கொண்டவன்) என்ற வட்டத்திற்குள் வர மாட்டான், அதே நிலையில் அவன் மரணித்தால் அவனது மறுமை வாழ்வு நரக வாழ்வாகிவிடும். ஆகவே ஈமான் சார்ந்த விஷயங்களை திருக்குர்ஆன் மற்றும் நபியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தெரிந்து வைத்திருப்பது அனைத்து முஸ்லிமின் மீதும் கடமையாகும். காரணம் இதை சாதரணமாக எண்ணி அறிந்து கொள்ளாமலேயே மரணமானால் நமது மறுமை வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தனது திருமறையில் உயிரைக் கைப்பற்ற தான் படைத்திருக்கும் வானவரைப்பற்றி மிகத் தெளிவாகவே கூறுகிறான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ (616:)

எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். திருக்குர்ஆன் 6:61...

அல்லாஹ்வின் இந்த வார்த்தையில் நாம் கோடிட்டிருக்கும் வாசகத்தை நன்றாக கவனியுங்கள். உலகிலுள்ள அனைவரின் உயிரையும் ஒரே இஸ்ராயீல் என்ற வானவர்தான் கைப்பற்றுகிறார் என்று இருக்குமேயானால், அல்லாஹ் ஏன் தூதர்கள் என்று பன்மையாக கூற வேண்டும்? அல்லாஹ் தூதர்கள் என்று பன்மையாக கூறுவதின் மூலமாக உயிரைக் கைப்பற்றும் வானவர் இஸ்ராயீல் என்ற ஒருவர்தான் என்ற நம்பிக்கை தகர்க்கப் படுகிறது. 

மேலும் இன்னும் தெளிவாக அல்லாஹ் கூறுகிறான்;

قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ (1132:)

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 32:11.

மேற்கண்ட வசனத்தின் மூலமாக, ஒவ்வொருவருக்கும் அவர்களது உயிர்களைக் கைப்பற்ற தனித்தனி வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். ஆக ஒரே வானவரைக் கொண்டு எல்லா உயிர்களையும் கைப்பற்றும் அமைப்பு இறைவனின் ஏற்பாட்டில் இல்லை.

மேலும் உயிரைப் பறிக்கவரும் வானவரின் பெயரை பொதுவாக மரணத்தின் வானவர் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். இஸ்ராயீல் என்று அல்லாஹ்வோ அவனது தூதரோ எங்குமே கூறவில்லை என்பதை விளங்கி, இறைவன் கற்றுத் தந்ததன் அடிப்படையில் நம்பிக்கை கொள்வோமாக!

No comments:

Post a Comment