தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, October 18, 2016

நபியவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனைகள் - 1



நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள்

اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي. اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي

அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தாயாய, வ அம்தீ, வ குல்லு தாலிக இந்தீ.

(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து பாவங்களையும் மன்னித் தருள்வாயாக!
அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
நூல்: புஹாரி 6399.

Friday, October 14, 2016

Surah Arrahman Recited By Sister Barah (Dead)

மக்கள் கூடும் இடத்தில் தொழுகை - 1

மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பஜார்களுக்கு செல்கின்ற பொழுது அதிக பட்சமாக அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவது கிடையாது. தொழுகை நேரம் கடந்த பின்னர் மிகவும் உடல் சோர்வோடு அப்படியே வீடு சென்று உறங்கி விடும் நபர்கள் தான் நம்மில் அதிகம் உள்ளனர். 

நமது பலவீனத்தின் காரணத்தினால் இவைகள் ஏற்படுகின்றன என்பது உண்மை. ஆனால் இவற்றை சொல்லி நாம் இறைவனிடம் தப்பிக்க முடியாதல்லவா.

ஆகவே இதற்கான மாற்று வழியை அறிந்து அரபு நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள் தோறும் பாங்கு அழைப்பு கொடுக்கப்பட்டு தொழுகை நடத்தப்படுகிறது. அதிகமான மக்கள் அந்த தொழுகைகளில் கலந்தும் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஏற்பாடுகளை இயன்றால் நாமும் செய்யலாம் என்பது எமது அவா.

Tuesday, August 30, 2016

ஒட்டகம் குர்பானி கொடுப்போருக்கான சிறிய நினைவூட்டல்!



அன்பு இஸ்லாமிய சொந்தங்களே! நமது தமிழகத்தில் வழமையாக ஈதுல் அள்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தன்று வெளி மாநிலங்களில் இருந்து ஒட்டகம் கொண்டு வரப்பட்டு உள்ஹியா (குர்பானி) கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நான் பார்த்த வரையில் ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும் என்ற ஒரு சரியான முறைமை விளங்காமல் தான் மக்கள் பெருமளவில் உள்ஹிய்யா கொடுக்கிறார்கள். ஒட்டகத்தோடு தொடர்புடைய மாநிலமாக நமது மாநிலம் இல்லாமல் இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, இறைவனுக்காக நாம் நிறைவேற்ற இருக்கின்ற இந்த உள்ஹியா என்ற வணக்கம் இறைவன் கட்டளையிட்டதை போன்று தான் நிறைவேற்றப்பட வேண்டும்.

இங்கு உள்ஹியா கொடுப்பது தொடர்பான அனைத்து சட்டங்களையும் நாம் விளக்கப் போவதில்லை. அவைகள் பெரும்பாலான மக்களுக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதிகளவில் நினைவூட்டப்படாத ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும் என்ற சட்டத்தை மட்டும் நான் நினைவூட்ட ஆசைப் படுகிறேன்.

இது தொடர்பாக இறைவனே திருமறையில் தனி ஒரு பாடமாக மக்களுக்கு சொல்லித் தருகிறான். அந்த வசனம் இதோ:

“(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்க) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
திருக்குர்ஆன் (22:37).

மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம் ஒட்டகத்தை நிறுத்தி வைத்துத்தான் அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது.

ஆனால் நான் முன்பு சொன்னதைப் போன்று இந்த சட்டம் பலருக்கும் விளங்காமல், ஒட்டகத்தை தாறுமாறாக கட்டி, அதை தரையில் வீழ்த்தி, பல நபர்கள் சேர்ந்து அதனுடைய நீண்ட கழுத்தை முறுக்கி பிடித்துக்கொண்டு அல்லது கால்களால் அழுத்திக்கொண்டு அறுக்கின்றனர்.

இப்படித்தான் அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்லிவிட்டான் என்றால், அதற்கு மாற்றமாக ஒட்டகத்தை நாம் எவ்வாறு அறுத்தாலும் அது இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யும் நிலையை நமக்கு உண்டாக்கி விடும். அதுமட்டுமல்லாமல் நிறுத்தி வைத்துத்தான் ஒட்டகத்தை அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்கிறான் என்றால் அதில் காரணம் இல்லாமல் இறைவன் சொல்ல மாட்டான். இறைவன் சொன்ன முறைமைக்கு மாற்றமாக ஒட்டகமும் செயல்படாது, நாமும் அதற்கு மாற்றமாக செயல்படவும் கூடாது. இறைவன் சொன்ன அடிப்படையில் ஒட்டகத்தை அறுப்பது தான் அந்த ஒட்டகத்திற்கு அமைதியளிப்பதாகும். மாறாக கட்டி வைத்து தாறுமாறாக மண்ணில் புரட்டி அறுப்பதென்பது நிச்சயமாக அந்த ஒட்டகத்திற்கு நோவினை ஏற்படுத்துவதாகும் என்பதை இஸ்லாமிய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் நமக்காகவே இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்துள்ளான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்காக நாம் இது போன்ற பிராணிகளை எப்படி வேண்டுமானாலும் வதை செய்து சாப்பிடலாம் என்று யாரும் எண்ணி விடக்கூடாது. இன்னும் சில நொடிகளில் இறந்து விடத்தானே போகிறது, இதனிடம் இனி தன்மையாக நடந்து என்ன நடக்க போகிறது என்ற எண்ணத்தில் ஆடு மாடுளை அறுக்கும் நபர்கள், மிகவும் கொடூரத் தன்மையோடு அந்த உயிரினங்களிடம் நடந்து கொள்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். இது தவாறான அணுகுமுறை ஆகும்.

உண்மையில் சொல்வதாக இருந்தால் நாம் அறுத்து சாப்பிடும் பிராணிகளை அல்லாஹ் தான் நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். பிராணிகளை அறுத்து சாப்பிடும் மனிதனை விட, பல மடங்கு பலத்தால் உயர்ந்த ஆடும் மாடும் அந்த மனிதனுக்கு பயந்து பணிகிறது என்றால் இதற்கு காரணம் இறைவன் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

பிராணிகளுக்கு அமைதியளிக்கும் வகையில் இலகுவாக அவைகளை கையாண்டு அறுத்து சாப்பிட வேண்டும் என்ற வரையறையை இஸ்லாம் நமக்கு விதித்துள்ளது.

உங்களில் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். (விரைவாக அறுப்பதன் மூலம்) தனது பலிப்பிராணிக்கு நிம்மதியை கொடுக்கட்டும்!
(முஸ்லிம், அபூதாவூத் 2817, திர்மிதி 1409)
ஆகவே இறைவனும் இறைத்தூதரும் பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்களோ, அந்த அடிப்படையில் பிராணிகளை அறுத்து இறைவன் கடமையாக்கிய உள்ஹியா என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுவோமாக! இறைவன் அதற்கு உதவுவானாக!

குறிப்பு: ஒட்டகம் அறுக்க நாடும் நபர்கள் ஒட்டகத்தை நிற்க வைத்து அறுக்க வேண்டும். மற்ற உயிரினங்களுக்கு இவ்வாறுதான் அறுக்க வேண்டும் என்ற சட்டம் சொல்லப்படவில்லை. ஆகவே நாம் இயல்பாக ஆடுகளையும் மாடுகளையும் எவ்வாறு படுக்க வைத்து அறுப்போமோ அவ்வாறே அறுக்கலாம். அறுப்பதற்கு முன்பாக கழுத்து முறிந்து போகும் அளவிற்கு வதை செய்து அறுப்பதை தவிர்த்து தன்மையான முறையில் அறுக்கவும்.

Wednesday, July 20, 2016

அஷ்ஷாமிலா நூலகத்தின் மொழியை அரபாக மாற்றுவது எப்படி?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....!


மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் அல்லது கற்ற மாணவர்களுக்கு மக்தபதுஷ் ஷாமிலா என்ற மென்பொருளை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பிருக்காது என்றே கருதுகிறேன். உலகத்தில் பல லட்சக்கணக்கான உலமாக்களால் மார்க்க அறிவு தேடலுக்காக பயன்படுத்தப்படும் முதன்மையான மென்பொருள் இந்த மக்தபதுஷ் ஷாமிலா என்று சொல்லலாம். மக்தபதுஷ் ஷாமிலா பற்றிய விவரங்களை நாம் பதிவிட வரவில்லை என்பதால் இதைப்பற்றிய விவரத்தை இதோடு நிறுத்திவிட்டு விஷயத்திற்கு வருவோம்.

மக்தபதுஷ் ஷாமிலா பற்றிய விவரம் தெரிந்த பல நபர்கள் அந்த மென்பொருளை தமது கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முனைகின்றபொழுது அதன் மொழி ஏதோ புரியாத வகையில் இருக்கும். அரபி மொழியாக இருக்காது. அரபு மொழியில் இருந்தால் மட்டும் தான் அந்த மென்பொருளை வாசிக்கவும் பயன்படுத்தவும் முடியும். 

இப்படி சிக்கல் ஏற்படும் போது என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதனால் பயனுள்ள இந்த மென்பொருளை பயன்படுத்த முடியாமல் நிறைய நபர்கள் தவிப்பதுண்டு. கவலை வேண்டாம். 

நாம் கீழே பதிவேற்றி இருக்கும் படங்களை அப்படியே பார்த்து உங்களது கணினியில் மாற்றம் செய்யுங்கள். அரபு மொழியாக மாற்றப்பட்ட ஷாமிலா உங்களது கணினியில் இலகுவாக கிடைத்துவிடும்.

செய்ய வேண்டியவை:

STEP 1:




STEP 2:


STEP 3:


STEP 4:


STEP 5:


STEP 6:


STEP 7:

அவ்வளவுதான் விஷயம்....

Saturday, June 11, 2016

நோன்பு தொடர்பான பலவீனமான செய்தி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரொருவர் ரமழான் மாதத்தில் தக்க காரணமின்றி ஒரு நோன்பை விடுகின்றாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அவர் (விட்ட) அந்த நோன்புக்கு (சிறப்புக்கு) அது ஈடாகாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
நூற்கள்: அபூதாவுத் 2396, இப்னு மாஜா 1672).

இந்த இரண்டு அறிவிப்புகளிலும் அபுல் முதவ்விஸ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். காரணம் இவரையும் யாரென்று தெரியாது, இவரது தந்தையையும் யாரென்று தெரியாது என ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
மீஸானுல் இஃதித்தால் (574/4).

இமாம் அஹ்மத் அவர்கள் இவரை யாரென்றே தெரியாது என்று குறிப்பிடுகிறார்கள்.
தஹ்தீபுத் தஹ்தீப் 12/ (1081).

இதே தகவல்களோடு இமாம் அல்பானி அவர்கள் தமது லஈஃப் அபூதாவுதில் (273/2)-ம் பக்கத்தில் இது பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.


Tuesday, June 7, 2016

மறதி இறைவனது அருட்கொடை!




இந்த உலகில் மனிதன் உணர்ந்து கொள்ளாத எண்ணற்ற இறைவனது அருட்கொடைகள் உள்ளன. அவற்றில் பிரதானமான ஒன்று தான் மறதி ஆகும். பொதுவாகவே மறதி என்ற பண்பை பொருத்தவரைக்கும் நாம் அதை ஒரு பலவீனமான நிலையாகத்தான் பார்க்கிறோம். காரணம் உண்மையில் மறதி என்ற பண்பால் நமது வாழ்வில் ஏராளமான நஷடன்களை நாம் அடைந்திருக்கிறோம், இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.

உதாரணமாக, சிறு வயதில் தாய் ஒரு வேலை சொல்லி கடைக்கு அனுப்ப, விளையாட்டு மோகத்தில் அந்த வேலையை மறந்துவிட்டு பலமணி நேரம் கழித்து அந்த வேலையை முடிக்காமலேயே வீடு வந்து, அதனால் தாயிடம் செமத்தியாக அடி உதைகளை வாங்கி இருப்போம்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கொடுத்த வீட்டுப்பாடத்தை முறையாக செய்யாமல் மறந்து விட்டு, அடுத்த நாள் பள்ளி ஆசிரியையிடம் அடி வாங்கி இருப்போம்.

கல்லூரியில் நடக்கும் பிராக்டிக்கல் பரீட்சைக்காக தயார் செய்ய வேண்டிய பிராக்டிக்கல் நோட்டு புத்தகத்தை சரியான நேரத்திற்குள் தயார் செய்யாமல் மறந்து விட்டு, கடைசி நேரத்தில் தேர்ச்சியா தோழ்வியா என்ற பதட்டத்தோடு ஆசிரியை முன்னாள் நின்றிருப்போம்.
வேலை நிமித்தமாக இன்டர்வியூ செல்ல நேரிடும்போது ஏதாவது முக்கியமான பிரதிகளை நாம் எடுத்துச்செல்ல மறந்திருப்போம். அந்த ஒரு காரணத்தால் நமக்கு அத்தகைய சிறந்த வேலை கிடைக்காமல் போயிருக்கலாம். இன்னும் பல....

இப்படியாக நமது வாழ்வில் சிறு வயது முதல் பெரிய வயது வரைக்கும் அந்தந்த பருவத்திற்கு ஏற்றவாறு மறதியால் பல சோதனைகளை நாம் கண்டிருப்போம். ஆகவே மறதி என்றாலே அது ஒரு பெரிய சோதனை என்பது மட்டும் தான் நமது நினைவில் பெரும்பாலும் நிற்கும்.

ஆம்! மறதி என்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒருவகையான சோதனைதான். என்றாலும் இது மனிதனுக்கு அருட்கொடையாகவும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மனிதன் சிந்திப்பதில்லை.

மறதி என்ற ஒரு பண்பு மட்டும் நமது வாழ்வில் இல்லையென்றால், நாம் இழந்த இழப்புக்களை மறந்துவிட்டு இயல்பு வாழ்வில் ஒருபோதும் செயல்பட முடியாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே தான் இயற்கையாகவே சில நாட்களில் மறந்துபோகும் இழப்புக்களின் நினைவுகளை, சில நபர்கள் தொடர்ந்து நியாபகப்படுத்திக் கொண்டே இருந்து இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். பொறுமையோடு இருந்தால் இழப்புக்கள் மறைந்து போகும். இவ்வாறு உள்ளத்தில் பெரும் பாரமாக இருக்கும் இழப்புக்கள் மறந்து போவதற்கு எல்லாம் வல்ல இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் பேரருள் மறதி ஆகும். இந்த வகையில் மறதி என்பது இறைவனின் மிகப்பெரிய அருளாகவும் மாறிவிடுகிறது.

ஆசையோடு ஈன்றெடுத்து பாசத்தையும் நேசத்தையும் அதனின் மீது பொழிந்து வளர்க்கப்படும் தமது ஆருயிர் குழந்தை இறைவன் நாட்டமிருந்தால் மரணித்து விடும். தொடைக்குழியை அடைத்துக் கொள்ளும் மிகப்பெரிய துக்கம் இது. பெற்றோர்களால் சகித்துக் கொள்ள முடியாத மிகப்பெரிய வேதனை இது. ஆகவே தான் அல்லாஹ் இதுபோன்ற சூழலில் பொறுமை காக்கும் நல்லுள்ளங்களுக்கு பரிசாக சுவர்க்கத்தை அறிவிக்கிறான். இப்படிப்பட்ட சூழலை இந்த உலகில் சந்தித்த பல கோடி பெற்றோர்கள் உண்டு. சில நாட்கள் கடந்த பின்னர் அந்த துக்கத்தை எல்லாம் மறந்துவிட்டு இயல்பு வாழ்வில் செயல்பட்டு கொண்டிருக்கும் பெற்றோர்களை நாம் காண்கிறோமே! இவைகள் நமக்கு உணர்த்துவது என்ன???
(இதுபோன்ற இழப்புக்களை சொல்ல ஏராளமான உதாரணங்கள் உள்ளன, எழுத்து அதிகமாவதால் சுருக்கிக் கொள்கிறேன்).

ஒரு மனிதன் என்னதான் சோதனையில் சிக்கித் தவித்தாலும் பொறுமையோடு அதனை சகித்துக் கொண்டால், அந்த சோதனைகளை அல்லாஹ் அவனது உள்ளத்தில் மறதி என்ற குணத்தின் மூலம் அப்புறப்படுத்துகிறான் என்ற விவரத்தை புரிகிறோம் அல்லவா???

எனதருமை சகோதர சகோதரிகளே! மறதியும் ஒரு வகையில் இறைவனின் அருள் தான் என்பதை நம்மில் சிலர் இன்றைக்குத்தான் புதுமையாக கேள்வி பட்டிருக்கக்கூடும். இது போன்ற எண்ணிலடங்கா இறைவனது அருட்பாக்கியங்கள் நம்மை சூழ இருக்கின்றன. ஆனால் அவற்றையும் நாம் முறையாக உணராமல் தான் வாழ்ந்து வருகிறோம்!

அல்லாஹ் நமது இந்த மோசமான நிலையை மாற்ற வேண்டும். இறைவனது அருள்களை முழுமையாக சிந்தித்து உணர்ந்து, சதாவும் அவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய நற்சிந்தனையுடைய உள்ளங்களை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள வேண்டும் என பிரார்த்தித்து முடிக்கிறேன்.

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ண முற்பட்டால் அதை உங்களால் எண்ணி முடிக்க முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.
சூரா இப்ராஹீம் 14:34.