தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, April 27, 2015

பேரழிவுகள் கற்றுத்தரும் பாடம்!

بسم اللة الرحمن الرحيم


                         

நாம் வாழக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியும் முன்னேற்றங்களும் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. இது போன்ற வளர்ச்சியினை அடைந்து கொண்ட விஞ்ஞானிகளும், அவர்களின் அறிவை பயன்படுத்தி ஆதாயம் அடையும் சில நாடுகளும் இதைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற கற்பனை மோகத்தில் காலம் கடத்தி வருகின்றனர்.

இந்த அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதிதான், அப்பாவி மக்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு அழித்தொழித்து நாட்டை அபகரிக்க கூடிய கொடூர செயல் ஆகும். இது போன்ற செயல்களின் மூலம் இவர்கள் உணர்த்த வருவது, நம்மை மிஞ்ச எவனுமில்லை என்பதைத்தான்!

ஆனால் இந்த கருத்து வெறும் பகல் கனவு தானே தவிர உண்மை கிடையாது. இதைத் தான் அவ்வபோது நடைபெறும் இயற்கை பேரழிவுகள் நமக்கு உணர்த்துகிறது!

அறிவியல் வளர்ச்சியால் எதையும் சாதிக்க இயலும் என்ற மமதையில் திரியும் நபர்கள் சிந்திக்க வேண்டும். இறைவன் இந்த உலகத்தை படைத்ததிலிருந்து இன்றைய காலம் வரைக்கும் பல சமூகங்களை அல்லது பல ஊர்களை அழித்துள்ளான். அவற்றை அழிக்க அல்லாஹ் பயன்படுத்திய ஆயுதங்களை திருமறை நமக்கு விளக்குகிறது, காற்று, சூடேற்றப்பட்ட கல், பெரும் சப்தம், கடல் சீற்றம், நில அதிர்வுகள் ect., போன்றவற்றால் தான் இறைவன் அழிவை ஏற்படுத்துவதாக திருமறை கூறுகிறது!

ஒரு நாடு இன்னொரு நாட்டால் சந்திக்கும் அழிவுகளை எதிர்கொள்ள இராணுவப்படை, கடற்படை, காலாட்படை என்று பல படைகளும் உள்ளது. அந்த அத்துனை படைகளும் தம்மை அழிக்க வருபவர்களை எதிர்க்கவும் செய்கிறது.

ஆனால், இது போன்ற வீர மிக்க படைகள் இறைவனால் அனுப்பப்படும் இயற்கை சீற்றங்களை கண்டால் எதிர்த்து நிற்கிறதா??? அல்லது ஓட்டமெடுக்கிறதா???

எவ்வளவு சிறந்த உயர்ந்த விஞ்ஞானப் படைப்பாக இருந்தாலும் அவை இறைவனது ஆற்றல்களுக்கு முன்னால் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும். இறைவன் இந்த உலகில் ஏற்படுத்தும் அழிவுகளின் அழிக்கும் முறை என்பது ஒன்று தான்! அவற்றில் அவன் இன்று வரை மாறுபடவில்லை. மனித அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அழிக்கும் செயற்பாடுகளை அவன் மாற்றவுமில்லை. புதிய நவீன கருவிகளால் அழிவை அவன் ஏற்படுத்தவுமில்லை. என்றாலும், அறிவிலும் நவீன கண்டுபிடிப்புக்களிலும் அதீத வளர்ச்சி அடைத்திருக்கும் மனிதர்களுக்கு அதை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. இறைவனின் ஆற்றல் எதனின் ஆற்றலை விடவும் மிகப்பெரியது என்பதைத் தான் இது போன்ற பேரழிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

நவீன கண்டுபிடிப்புகளின் உச்சாணி கோபுரத்தில் இருக்கும் நாடுகள் என்றால் அவற்றில் தவறாமல் ஜப்பான் அமேரிக்காவை நாம் இணைத்து விடுவோம். அந்த ஜப்பானில் சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமி என்ற பேரழிவை ஜப்பான் நாட்டின் அரசாங்கத்தாலோ அறிவியல் வளர்ச்சியாலோ அல்லது இராணுவ படையாலோ தடுத்து நிறுத்த முடிந்ததா?

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புழுதிப்புயலை அமேரிக்கா அரசால் தடுக்க இயன்றதா?

இது போன்று ஏராளம் கூறலாம், இருப்பினும் இவைகள் அனைத்தும் நமக்கு உணர்த்தக் கூடியது ஒன்றைத்தான்! நமக்கு மிஞ்சிய மிகப்பெரிய சக்தி ஒன்று உள்ளது. அவற்றை எதிர்க்க எவராலும் இயலாது. அதுதான் வல்ல இறைவனின் ஆற்றல். அந்த இறைவனை நாம் அஞ்சி நடக்க வேண்டும். அதற்காக தான் அல்லாஹ் தவறுகள் மிகைக்கும் இடங்களில் அவ்வபோது இதுபோன்ற சில பேரழிவுகளை ஏற்படுத்துகிறான். இறைவனை மறந்து வாழும் மக்கள், இந்த அழிவிலிருந்து தப்பித்திருந்தால் அது உங்களது அறிவாலோ ஆற்றலாலோ கிடையாது. மாறாக அல்லாஹ் உங்களுக்கு இவைகளைக் காண்பித்து எச்சரிக்கை செய்கிறான், நீங்கள் திருந்த வேண்டும் என்பதற்காக மீண்டுமொரு வாய்ப்பளித்துள்ளான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

மேலும், இதுபோன்ற அழிவுகளில் சில நல்ல மனிதர்களும் சேர்த்து அழிக்கப்படுகிறார்கள், இதற்கு என்ன காரணம் என்று பலரும் சிந்திக்க வாய்ப்புள்ளது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு நபிமொழி புகாரியில் இடம் பெறுகிறது.

"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!" என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!" என்றார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ,புகாரி 2118. 

இந்த நபிமொழியின் அடிப்படையில் அழிவுகளில் சிக்கும் நல்ல மனிதர்கள் மறுமையில் அவர்களது எண்ணத்திற்கேற்ப கூலி கொடுக்கப்பட்டு விடுவார்கள். மரணம் என்பது எந்நிலையில் வேண்டுமானாலும் நம்மை அணுகலாம், நல்லவர்களுக்கு அது ஒரு பாதிப்பு கிடையாது. அதில் ஒரு வகைதான் இது என்பதை விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.

"வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களை புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா?"
திருக்குர்ஆன் 67:16.

"அவனே சிரிக்க வைக்கிறான். அவனே அழவும் வைக்கிறான்"
திருக்குர்ஆன் 53:43.

No comments:

Post a Comment